முன்னோக்கு

வாக்காளர்கள் ட்ரம்பை நிராகரிக்கையில் பைடென் குடியரசுக் கட்சியினரிடம் “ஐக்கியத்திற்கு” அழைப்புவிடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமை மாலை, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஒரு வெற்றுத்தனமானதும் உள்அர்த்தமுமற்ற வெற்றி உரையை நிகழ்த்தினார். இதன் முக்கிய செய்தி ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குடியரசுக் கட்சியினருடன் ஒன்றிணைவது அவசியம் என்பதே.

வியாழக்கிழமை காலை டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பைடென் பதவியேற்றார் என்று முக்கிய செய்தி வலைப்பின்னல்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது உரை வெளிவந்தது. இந்தத் தேர்தல், டொனால்ட் ட்ரம்ப்பிற்கும், இதுவரை அரை மில்லியன் அமெரிக்கர்கள் உயிரை இழந்துள்ள தொற்றுநோயை அவர் பேரழிவுகரமான முறையில் கையாண்டமைக்குமான பாரிய மக்கள் நிராகரிப்பாகும்.

சனிக்கிழமையன்று, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ட்ரம்ப் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர், தங்களது வீடுகளின் ஜன்னல்களில் இருந்து கூச்சலிட்டு மற்றும் ட்ரம்பின் நிர்வாகத்தின் நாசவேலைக்கு மத்தியிலும் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை விநியோகித்த பெருமைக்குரிய அஞ்சல் சேவை ஊழியர்களை உற்சாகப்படுத்தினர். ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் டெலவாரின் வில்மின்டனில் 7, சனிக்கிழமை 2020 உரையாற்றுகிறார் (AP Photo/Andrew Harnik)

பெருநிறுவன ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியும் யதார்த்தநிலைமையுடன் எவ்வித தொடர்புமற்ற ஒரு பொய்யான கதையாடல்களை உருவாக்க வேகமாக செயல்படுகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கதையாடல் முதலாவதாக கூறுவது என்னவென்றால், அமெரிக்க மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் பாசிச ட்ரம்புடன் குடியரசுக் கட்சியின் கூட்டாளிகளுக்கும் இடையே “ஐக்கியத்தை” விரும்புகிறார்கள்.

தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில், பைடென் பின்வருமாறு அறிவித்தார்: "பிளவுபடாமல் ஒன்றிணைக்க முற்படும் ஜனாதிபதியாக இருக்க நான் உறுதியளிக்கிறேன்." அவர் மேலும் கூறியதாவது: “நான் ஒரு பெருமைமிக்க ஜனநாயகவாதி, ஆனால் நான் ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சி செய்வேன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் கடினமாக உழைப்பேன். நாங்கள் ஒத்துழைக்க வேண்டாம் என்று முடிவு செய்ய முடியுமானால், நாங்கள் ஒத்துழைக்கவும் முடிவு செய்யலாம். இது அமெரிக்க மக்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையின் ஒரு பகுதி என்று நான் நம்புகிறேன்.”

ஒரு சனிக்கிழமை காலை CNN இன் வட்டமேசை நிகழ்ச்சி குடியரசுக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கனலுக்கு இருப்பதாக கூறப்படும் அதிகாரத்தை காட்டி, பைடென் நிர்வாகத்தின் அமைச்சரவை நியமனங்கள் மீது அவருக்கு "வீட்டோ அதிகாரம்" இருப்பதாக அவர்கள் அறிவித்தனர். முதலாளித்துவ பத்திரிகை பைடெனுக்கும் மெக்கனலுக்கும் இடையிலான நெருங்கிய தனிப்பட்ட உறவைப் பற்றிய பரபரப்பாக்கும் கருத்துக்ளால் நிரம்பியிருந்தன. அதாவது 75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பைடெனுக்கு வாக்களித்தது மிட்ச் மெக்கனெல் (செனட்டில் மீண்டும்

தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வெறும் 1.2 மில்லியன் வாக்குகளை வென்றவர்) ஜனாதிபதியாவதற்கே! என்றன.

கதையாடலின் இரண்டாவது வகை என்னவென்றால், இன அடையாளம் என்பது வாக்களிக்கும் முறைகளை தீர்மானிக்கிறது என்பதாகும். பெருநிறுவன ஊடகங்கள் ஒரு இனவாத கதையாடலை முன்னெடுத்து வருகின்றன. அதாவது பொதுவாக "வெள்ளை மக்கள்" மற்றும் குறிப்பாக "வெள்ளை தொழிலாளர்கள்"தான் தேர்தல் எதிர்பார்த்ததை விட நெருக்கமாக இருந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றன. கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக பணியாற்றிய முதல் ஆபிரிக்க-அமெரிக்க மற்றும் இந்திய-அமெரிக்க பெண்மணியாவார் என்ற உண்மையின் “வரலாற்று” இயல்பின் தவிர்க்க முடியாத அறிவிப்புகளுடன், இது இன அடிப்படையில் விளக்கப்படுத்தப்படுகின்றது.

உண்மையில், வழமையாக ஊடகங்களின் குத்துப் பையாக உள்ள: “வெள்ளை மக்கள்,” “வெள்ளை ஆண்கள்” மற்றும் “கல்லூரி பட்டங்கள் இல்லாத வெள்ளை மக்கள்” ஆகியவற்றில் ட்ரம்ப் எதிர்ப்பு உணர்வு கணிசமான அதிகரித்திருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் பகுப்பாய்வு செய்துள்ளபடி, தேர்தலின் முடிவை நிர்ணயித்தது சமூக-பொருளாதார காரணிகளே, இனம் அல்ல. 2016 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 6.4 மில்லியன் அதிகமான வெள்ளை மக்கள் —பெரும்பாலும் தொழிலாளர் திரட்டு— பைடெனுக்கு வாக்களித்தனர். இது கிட்டத்தட்ட பரந்த வாக்கு வித்தியாசத்திற்கு காரணமாகும். இதற்கு மாறாக, ட்ரம்ப் ஆபிரிக்க அமெரிக்கர்களிடமிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும், பெண்களிடம் இருந்து 5.5 மில்லியன் வாக்குகளையும் அதிகமாக வென்றார், இருப்பினும் இரு பிரிவுகளிலும் பெரும்பான்மையானவர்கள் பைடனை ஆதரித்தனர்.

கதையாடல்களின் மூன்றாவது பகுதி என்னவென்றால், ஜனநாயகக் கட்சியை சோசலிசத்துடன் இணைத்தமை அதன் வேட்பாளர்களுக்கு மில்லியன் கணக்கான வாக்குகளை இழக்க காரணமாக இருந்தது என்பதாகும்.

பைடெனுக்கு ஒப்புதல் அளித்த முன்னாள் ஓஹியோ குடியரசுக் கட்சியின் ஆளுநரும் மற்றும் அமைச்சரவை பதவிக்கான குறுகிய பட்டியலில் உள்ளவருமான ஜோன் காசிச், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசியபோது நேற்று CNN இடம், “இப்போது ஜனநாயகக் கட்சியினருக்கான நேரம் இது, ஜோ பைடென் இதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அதாவது நாட்டின் பிற பாதி சொல்வதைக் கேட்கத் தொடங்குங்கள். ஜோ பைடெனில் எந்த சோசலிசமும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார். "தீவிர இடதுசாரிகள் அவரை அவர்கள் விரும்பும் அளவுக்கு கடினமாக தள்ள முடியும். மேலும் வெளிப்படையாக ஜனநாயகக் கட்சியினர் தீவிர இடதுசாரிகளுக்கு அவர்கள்தான் தேர்தலில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பிற்கு இட்டுச் சென்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்”.

ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பெண்மணி Abigail Spanberger (அபிகெய்ல் ஸ்பான்பேர்கர்) இன் கருத்துக்களை ஜோன் காசிச் சாதகமாக மேற்கோள் காட்டினார். வியாழக்கிழமை ஜனநாயகக் கட்சியினர் "ஒருபோதும் சோசலிச அல்லது சோசலிசம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது" என்று அவர் கூறினார். பைடெனின் "வரலாற்று" தேர்தல் தொடர்பாக அனைத்து ஊடகங்களின் மத்தியில் புகழுரை காணப்படுகையிலும் ஆளும் வர்க்கம் முன்னோடியில்லாத வகையில் சமூக, பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

முதலில், பதவியேற்புக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது. ட்ரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார் மற்றும் வாக்கெடுப்பு மீதான தனது ஆதாரமற்ற போலி-சட்ட சவால்களைத் தொடர்கிறார். அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டால், தேர்தல் திருடப்பட்டது என்று ஒரு கதையாடலை உருவாக்குவதே அவரது நோக்கம். எவ்வாறாயினும், நெருக்கடி தீர்க்கப்பட்ட பின்னர், இது அரசியல் ஸ்தாபகத்தை மேலும் வலதிற்கு திருப்புவதற்குகான அடிப்படையாக இருக்கும்.

ஜனநாயகக் கட்சியும் பெருநிறுவன ஊடகங்களும் பைடெனின் தேர்தலை அமெரிக்க ஜனநாயகத்திற்கான ஒரு "புதிய விடியலாக" முன்வைக்கின்றன. "நாட்டின் ஜனநாயக அஸ்திவாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை தடுக்க ஜனாதிபதி தனது சிறந்த முயற்சியைச் செய்தார்" என்று நியூயோர்க் டைம்ஸ் நேற்று வெளியிட்ட தலையங்கத்தில் எழுதியது. "அவை உலுக்கப்பட்டன, ஆனால் அவை உடைக்கப்படவில்லை... இந்த அஸ்திவாரங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், நமது ஜனநாயகம் மற்றும் நம்மீது நம்பிக்கையை மீட்டெடுக்க உதவுவதற்கும், அமெரிக்காவை முன்பை விட பெருமைமிக்கதாக மாற்றுவது இப்போது திரு. பைடெனின் பொறுப்பாகும்” என்றது.

நான்சி பெலோசி சனிக்கிழமை அறிவித்தார், "இன்று அமெரிக்காவிற்கு ஒரு புதிய நம்பிக்கை நாளின் தொடக்கத்தைக் குறிக்கிறது." டானா மிலிபேங்க் வாஷிங்டன் போஸ்ட்டில் "எங்கள் நீண்ட தேசிய கொடுங்கனவு முடிந்துவிட்டது" என்ற தலைப்பில் ஒரு பதிப்பை எழுதினார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, குடியரசுக் கட்சியினரிடமிருந்து ஜனநாயகக் கட்சியினருக்கு அதிகாரம் மாற்றப்பட்ட ஒவ்வொரு முறையும் அமெரிக்கர்கள் அதே பல்லவியைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் பைடென் வாக்குறுதியளித்தபடி, "எதுவும்" எப்போதும் "அடிப்படையில் மாறாது."

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட பண்புகளிலிருந்து எழவில்லை. மாறாக, ட்ரம்ப் முதலாளித்துவத்தின் மிகவும் ஆழமான நோயின் வெளிப்பாடாகும்.

அமெரிக்காவிலும் உலகிலும் ஆதிக்கம் செலுத்தும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு வழியைத் தேடுகிறார்கள். ஒரு தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறுகிறது, பாரிய வேலையின்மை, முடிவில்லாத போர், சர்வாதிகார மற்றும் பாசிசத்தின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியனவே இந்த நெருக்கடிகளாகும்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் ஜாக்கோபின் பத்திரிகை போன்ற குழுக்கள் கூறுவது போல் இது ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள் நடக்க முடியாதது. ஜாக்கோபின் இன் டேவிட் சிரோட்டா வெள்ளிக்கிழமை பின்வருமாறு எழுதினார், பைடெனின் வெற்றி "மறுக்கமுடியாத நல்ல செய்தி" என்றும், "முற்போக்குவாதிகளிடமிருந்து அழுத்தத்தை" பயன்படுத்துவதன் மூலம் "நாங்கள் எமது வேலையை செய்வோமானால், விஷயங்கள் சிறப்பாக மாறக்கூடும்" என்பதையும் இது அடையாளம் காட்டியுள்ளது”.

பைடென் நிர்வாகம் சமூக சீர்திருத்தங்களுக்கு "இடத்தை" உருவாக்கும் என்ற கூற்று பொய்யாகும். பைடென் நிர்வாகம் சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத்தின் நிர்வாகமாக இருப்பதுடன், குடியரசுக் கட்சியுடன் இணைந்து இயங்கி மற்றும் தீவிர வலதுசாரிகளின் மேலதிக வளர்ச்சிக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்கும். நிதியப் பிரபுத்துவத்தின் இரு கட்சிகளுக்கும் எதிராக அனைத்து இனங்களையும் தேசியங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்றிணைப்பதன் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் நிர்வாகத்திற்கு எதிராகவும் சுயாதீனமாகவும் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading