ட்ரம்ப் தேர்தல் குழு மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்குவதற்கான கோரிக்கைகளுக்கு அழுத்தமளிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனநாயக உரிமைகள் மீதான அதன் பகிரங்கமான தாக்குதலின் மேலதிக தீவிரப்படுத்தலில், ட்ரம்பை மீண்டும் பதவியில் நிறுத்துவதற்கான தேர்தல் குழு, அரை டஜன் மாநிலங்களில் ட்ரம்புக்கு மக்கள் வாக்குகள் கிடைக்கும் விதத்தில் இப்போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடெனுக்கான மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்க கோரி வருகிறது.

இத்தகைய கோரிக்கைகள், நவம்பர் 3 இல் பைடெனின் வெற்றியை ஒப்புக் கொள்ள ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருவது அமெரிக்க மக்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்ச்சியின் பாகமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதன் பக்கவாட்டில் கொரோனா வைரஸ் பேரழிவு குறித்து அவர் தொடர்ந்து பேணி வரும் மவுனத்துடன் சேர்ந்து —ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் நோய்தொற்றுக்கு ஆளாகி உள்ளதுடன் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளையில் கடந்த எட்டு நாட்களில் ட்ரம்ப் எதுவுமே கூறவில்லை— அவர் தேர்தலைக் களவாடுவதற்கான ஒரு முயற்சியில் பாசிசவாத சக்திகளை முடுக்கி விட்டு வருகிறார்.

தேர்தல் குழுவின் நிலைப்பாட்டில் மிக முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில், அதுவும் ட்ரம்ப் தேர்தல் குழு பைடென் வெற்றிகளை மாற்றுவதற்கு முயன்று வருகின்ற ஆறு மாநிலங்களில் இம்மாநிலம் மிக அதிக மக்கள் வாக்குகளைக் கொண்டுள்ளதால், ட்ரம்பின் பிரத்தியேக வழக்குரைஞர் ரூடி கிலானி அம்மாநிலத்தின் இரண்டு மிகப்பெரிய நகரங்களான பிலடெல்பியா மற்றும் பீட்ஸ்பேர்க்கில் 650,000 "சட்டவிரோத வாக்குகள்" செலுத்தப்பட்டு எண்ணப்பட்டிருப்பதாக வாதிட்டார்.

அம்மாநிலம் முழுவதும் 900,000 “கள்ள வாக்குகள்", தேர்தலில் வாக்களிக்கப்பட்ட 6.8 மில்லியன் வாக்குகளில் அண்மித்து 15 சதவீத வாக்குகள் இடப்பட்டிருப்பதாக அவர் Fox News க்குத் தெரிவித்தார். இந்த வாக்கு மோசடி குறித்து நிச்சயமாக கிலானி எந்த ஆதாரமும் வழங்கவில்லை என்பதுடன், சொல்லப் போனால் ட்ரம்ப் தேர்தல் குழுவுக்காக அரசு வழக்குரைஞர்கள் குறிப்பிடும் விதிமுறைமீறல்கள், அம்மாநிலத்தில் பைடென் பெற்ற 50,000 க்கும் அதிக வாக்கு வித்தியாசத்தை விட மிகவும் குறைந்த வெறும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான வாக்குகளுக்கு நிகராக உள்ளன.

ஒப்பீட்டளவில் பைடென் அதிக வித்தியாசத்தில், 148,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மிச்சிகனில், ட்ரம்ப் தேர்தல் குழு "தவறான" வழியில் வாக்களித்திருப்பதற்காக மக்களில் பெரும் எண்ணிக்கையினரது வாக்குகளைச் செல்லாத ஆக்கும் முயற்சியில் பல சட்டவழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.

மிச்சிகனின் மேற்கு மாவட்டமான லான்சிங்கில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு டெட்ராய்ட் நகரம் உள்ளடங்கலாக அம்மாநிலத்தின் அதிக மக்கள் நிறைந்த வாய்னே உள்ளாட்சி; வாஷிட்னவ் உள்ளாட்சி (அன் ஆர்பர்), இன்ஹாம் உள்ளாட்சி (லான்சிங் மற்றும் கிழக்கு லான்சிங்) ஆகியவற்றில் இடப்பட்ட ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் செல்லாததாக அறிவிக்க கோரியது. இது மலைப்பூட்டும் அளவுக்கு மொத்தம் 12 மில்லியன் வாக்குகளாகும், அல்லது அம்மாநிலத்தின் 5.4 மில்லியன் வாக்குளில் அண்மித்து ஒரு கால்வாசி வாக்குகளாகும். இந்த வாக்குகளைக் கணக்கிலிருந்து நீக்குவது அம்மாநிலத்தின் எஞ்சிய இடங்களில் ட்ரம்புக்கு 300,000 வாக்கு வித்தியாசத்தை வழங்கும் மற்றும் மிச்சிகனில் 16 தேர்தல் குழு வாக்குகளை வழங்கும்.

வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட்ட குடியரசுக் கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக பேசப்பட்டதாகவும் அல்லது சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டதாகவும், உண்மையில் தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்குகளைப் பிரித்து அவற்றை தொகுக்கையில் அவர்களிடம் இருந்து ஆறு அடிக்கும் அதிக தூரத்தில் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதே அந்த வழக்கின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. உண்மையிலேயே சட்டவிரோத வாக்களிப்பு அல்லது வாக்குச்சீட்டு மோசடி மீது எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்பதோடு, “நிபுணர்களின் அறிக்கைகள்" அடிப்படையிலும் தரவு பகுப்பாய்வு அடிப்படையிலும் மட்டுமே அவை குறிப்பிடப்பட்டன.

“சட்டவிரோதமாக கள்ள வாக்கு இடுதல், வாக்குச்சீட்டுக்கள் பறிப்பு, இன்னும் இதர சட்டவிரோத வாக்குப்பதிவுகள் ஆகியவற்றுக்கான ஆதாரங்களுடன் சேர்ந்து, இறந்தவர்களின் வாக்குகள், இடம் பெயர்ந்தவர்களின் வாக்குகள், அல்லது நவம்பர் 3 ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியிழந்தவர்களின் வாக்குகள் என பல வாக்குகள் பதிவு செய்து சட்டவிரோதமாக வாக்களித்தவர்களை, தகவலின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும், வல்லுனர் அறிக்கை அடையாளம் காணும்,” என்று அந்த சட்டவழக்கு குறிப்பிடுகிறது.

இந்த இற்றுப்போன அடிப்படையைக் கொண்டு நான்கு வழக்காளிகள் 1.2 மில்லியன் மக்களின் வாக்குகளைச் செல்லாததாக ஆக்க முன்மொழிகிறார்கள், ஏனென்றால் அந்த இடங்களில் "போதுமான சட்டவிரோத வாக்குகள் இடப்பட்டிருந்தன", இந்த தாக்கம் மற்ற உள்ளாட்சிகளது மக்களின் வாக்குப்பதிவை "நீர்த்துப் போக" செய்ததாக அவர்கள் வாதிட்டனர்.

வெய்னே உள்ளாட்சி மற்றும் டெட்ராய்ட் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வெய்னே உள்ளாட்சி சுற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது சட்டவழக்கு ஒன்று, ஒட்டுமொத்தமாக மிச்சிகன் வாக்குகளை முடக்கும் விதத்தில் செல்லாததாக ஆக்குவதில் இன்னும் அதிக போலியான செயல்பாடுகளை முன்மொழிந்தது, அது முற்றிலும் ஒரு புதிய தேர்தலை நடத்த மாநிலத்திற்கு உத்தரவிடக் கோரியது.

இந்த சட்டவழக்குகளின் சட்டத்தீர்ப்புகள் என்னவாக இருந்தாலும் —நீதிமன்றங்களால் மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் ஒவ்வொரு சட்டவழக்கும், பென்சில்வேனியாவில் ஒரேயொரு தொழில்நுட்ப கோளாறால் ஒரு சில நூறு வாக்குகளை பாதித்த சம்பவம் தவிர— வாக்குகளைச் செல்லாததாக அறிவிக்க முன்மொழியப்பட்ட பெரும் அளவானது மூச்சடைக்க வைக்கிறது. உண்மையில் ட்ரம்ப் தேர்தல் குழு என்ன அர்த்தப்படுத்துகிறது என்றால் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பதே சட்டவிரோதமானது என்கிறது.

மக்கள் வாக்குகளில் பைடெனினது வெற்றியின் அளவு முன்பினும் அதிக தெளிவாக ஆகத் தொடங்கியுள்ள போதினும் கூட இந்த சட்டவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு அளவீட்டின்படி, அதாவது பைடெனை ஆதரிக்கும் தகுதியுடைய வாக்காளர்களின் பங்கின் அடிப்படையில் பார்த்தால், மக்கள் வாக்களிப்பு விகிதத்தில் ஒரு நூற்றாண்டில் முன்கண்டிராத அளவை 2020 வாக்குப்பதிவு எட்டிவிட்டது என்கின்ற நிலையில், பைடென் பிரமாண்ட வெற்றி பகுதியை எட்டியுள்ளார்.

ஒரு கணக்கீட்டின்படி, வாக்குகளில் பைடெனின் தற்போதைய 50.8 சதவீதத்தில், அவர் 34.04 சதவீதம் தகுதியுடைய அனைத்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 1972 இல் ஜோர்ஜ் மெக்கொவர்னுக்கு எதிராக ரிச்சர்ட் நிக்சனின் 49 மாநில பிரமாண்ட வெற்றிக்குப் பிந்தைய மிகப்பெரும் எண்ணிக்கையாகும். இந்த சதவீதம் 51 அல்லது 52 என்று அதிகரித்தால், பலமான ஜனநாயகக் கட்சி பகுதியான மேற்கு கடற்கரைப்பகுதியில் தபால் வாக்குக்கள் இன்னும் எண்ண வேண்டியிருப்பதால் இதுவும் அனேகமாக சாத்தியமாகலாம் என்கின்ற நிலையில், பேரி கோல்டுவாட்டரைத் தோற்கடிப்பதில் லிண்டே ஜோன்சன் எட்டிய தகுதியுடைய வாக்காளர்களின் 34.17 சதவீதத்திற்கு நிகராக அவர் நிற்பார்.

மக்கள் வாக்குகளில் பைடென் ஐந்து மில்லியன் முன்னணியில் உள்ள அதேவேளையில், அரிசோனாவில் 12,000 க்கு சற்று குறைவான வாக்குகளில் இருந்து மிச்சிகனில் 148,000 வாக்குகள் வரையில், போட்டி மிகுந்த ஆறு மாநிலங்களில் அவர் ஓரளவுக்கு முன்னிலையிலேயே உள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் நடத்தப்பட்ட அனைத்து மாநிலந்தழுவிய மறுவாக்கு எண்ணிக்கை மீதான ஓர் ஆய்வின்படி, அதிகபட்ச வாக்கு வித்தியாசம் 2,600 வாக்குகளுக்கும் குறைவாக இருந்துள்ளது, சராசரி வித்தியாசம் வெறும் 430 வாக்குகளாக இருந்துள்ளது.

இத்தகைய புள்ளிவிபரங்கள் இருக்கையில், தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதும் மற்றும் அவர் தேர்தல் குழு மோசடியென குற்றஞ்சாட்டுவதும் இன்னும் அதிக ஆத்திரமூட்டலாக ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) எச்சரித்ததைப் போல, “வலதுசாரி மற்றும் நவ-பாசிசவாத சூழ்ச்சியைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் மீது தொழிலாள வர்க்கம் அலட்சியமாக இருந்துவிட முடியாது.”

தேர்தலை மதிப்பிழக்கச் செய்வதற்கும் மற்றும் பைடென் நிர்வாகத்தைச் சட்டபூர்வமற்றதாக ஆக்குவதற்குமான ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் எந்தளவுக்கு செல்லலாம் என்பதன் மீது வியாழக்கிழமை குடியரசுக் கட்சிக்குள் பிளவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. பைடென் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட ஓஹியாவின் ஆளுநர் மைக் டிவைன் தான் ட்ரம்ப் ஜெயித்த ஒரு மாநிலத்தின் முதல் குடியரசுக் கட்சி ஆளுநராக இருந்தார். மேரிலாந்து, மாசசூசெட்ஸ் மற்றும் வேர்மாண்ட் போன்ற ஜனநாயகக் கட்சி ஜெயித்த மாநிலங்களின் குடியரசு கட்சி ஆளுநர்கள் மட்டுமே இதற்கு முன்னர் அதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் அதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர் என்றாலும், பைடெனின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ள குடியரசுக் கட்சி செனட்டர்களின் எண்ணிக்கை நான்காக மட்டுமே இருந்தது — நெப்ராஸ்காவின் மிட் ரோம்னி, பென் சாஸே, மைனின் சூசன் கொலின்ஸ் மற்றும் அலாஸ்காவின் லிசா முர்கொவ்ஸ்கி ஆகியோர்.

எவ்வாறிருப்பினும் குடியரசுக் கட்சி செனட்டர்களின் ஒரு சிறிய குழு, தனித்தனியாக பேசுகையில், ஜனாதிபதியின் அன்றாட விஷயங்களைக் குறித்த சுருக்கவுரை, உளவுத்துறை தொகுப்பு, மற்றும் ஜனாதிபதி பதவியைக் கைமாற்றுவதற்கு அவசியமான ஏனைய ஆவணங்களை பைடென் அணுக அனுமதிப்பது என இதுபோன்ற ஒருசில அடையாள நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆதரவை அறிவித்தனர்.

பைடென் வெள்ளை மாளிகையில் நுழைகையில், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை யாரைக் கொல்ல, யாரைக் கவிழ்க்க அல்லது யாரைப் பதவியிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது என்பதைக் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும், ஆகவே தொடர்ச்சியான செயல்பாடுகளில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டி, அவர்கள் "தேசிய பாதுகாப்பு" கவலைகளைக் குறிப்பிட்டனர்.

அங்கே ட்ரம்புடன் பகிரங்கமாக மோதியுள்ள Fox News வசமிருந்து மட்டுமல்ல குடியரசுக் கட்சி ஊடகங்களின் இன்னும் சில பிரிவுகளிடமிருந்தும் பைடென்-ஆதரவு சமிக்ஞைகள் வந்துள்ளன, ட்ரம்ப் ஆதரவாளர் பில்லியனர் ஷெல்டன் அடெல்சனுக்குச் சொந்தமான லாஸ் வேகாஸ் பத்திரிகை ட்ரம்ப் அவரின் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி ஒரு தலையங்கம் பிரசுரித்தது, இன்னும் பல குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் பண்டிதர்களும் இதை குறிப்பிட்டிருந்தனர்.

பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலொசி கேபிடல் ஹில்லில் வியாழக்கிழமை நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் ட்ரம்பின் முயற்சிகளை "கேலிக்கிடமான சூழ்ச்சித்தனம்" என்பதாக உதறித் தள்ளிய நிலையில், தேர்தல் முடிவை ட்ரம்ப் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் முக்கியத்துவத்தை முன்னணி காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து குறைத்துக் காட்டி வருகின்றனர்.

செனட் சபையின் சிறுபான்மையினர் அணி தலைவர் சக் ஷுமர், அதே பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், ட்ரம்ப் மற்றும் காங்கிரஸ் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினரைக் குறித்து ஒரு நீண்ட விமர்சனம் வைத்தார் என்றாலும் பரந்தளவில் எந்த அரசியல் தீர்மானங்களையும் வழங்கவில்லை.

“இந்த காலை வேளையில் செனட் சபையின் குடியரசுக் கட்சியினருக்கு என்னிடம் ஓர் எளிய சேதி உள்ளது,” என்று கூறிய அவர், “தேர்தல் முடிந்துவிட்டது, அது முடிவாகவில்லை. ட்ரம்ப் தோற்றுவிட்டார், ஜோ பைடென் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஆவார், கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் அடுத்த துணை ஜனாதிபதியாக இருப்பார். செனட் சபை குடியரசுக் கட்சியினரே யதார்த்தத்தை மறுப்பதை நிறுத்துங்கள். நமது ஜனநாயக நிகழ்ச்சிப்போக்குகள் மீது வேண்டுமென்றே சந்தேகங்களை விதைப்பதை நிறுத்தி விட்டு, கோவிட் மீது கவனம் செலுத்த தொடங்குங்கள்,” என்றார்.

அமெரிக்க மக்களின் முகத்திற்கு முன்னால், ட்ரம்பும் அவர் ஆதரவாளர்களும் ஜனநாயகத்தின் மீது ஒரு நேரடியான தாக்குதலை தொடுத்துள்ளனர் என்ற வெளிப்படையான உண்மையைக் குறித்து எதுவும் கூறாமல், “நாட்டை ஒன்றுபடுத்தி விஷயங்களை செய்து முடிப்போம்,” என்றவர் நிறைவாக கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டில் இருந்து, சவால் விடுக்கப்பட்ட மாநிலங்களின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தலையீடு முக்கிய நகர்வாக இருக்கும், ஏனென்றால் ஆறில் ஐந்து மாநிலங்கள் குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தின் தேர்தல் குழு வாக்குகளைத் திருட நடவடிக்கை எடுக்கலாம். பைடென் ஜெயித்துள்ள இரண்டு மிகப் பெரிய "கடும் போட்டி நிலவிய" மாநிலங்களான பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற தலைவர்கள் குறுக்கிட போவதில்லை என்று தெரிவித்துள்ளனர் என்றாலும் அவர்களின் மாநில அரசியல் அரங்கிற்குள் ட்ரம்பின் பலமான விசுவாசிகள் அவர்களைச் சவால்விடுக்கக்கூடும்.

ஓர் அரசியல் சதிக்கு ட்ரம்ப் தயாரிப்பு செய்து வரும் நிலைப்பாட்டிலிருந்து, இராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகளின் மனோபாவம் உறுதியான முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வார ஆரம்பத்தில், பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர் மற்றும் இன்னும் மூன்று அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கிய ட்ரம்ப், அவர்களை அதிவலது விசுவாசிகளைக் கொண்டு பிரதியீடு செய்தார்.

வியாழக்கிழமை, இந்த பணிநீக்க நடவடிக்கைகள் உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டது, இருப்பினும் இங்கே இந்த பிரச்சினை வாக்கு மோசடி குறித்த ட்ரம்பின் வாதங்களை யாரெல்லாம் கீழறுத்தார்களோ அவர்களுக்கு எதிரான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே இருந்தது. உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் இணையவழி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு பிரிவு (CISA) இன் இணையவழி பாதுகாப்புக்கான துணை இயக்குனர் பிரைன் வேர் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார், மற்றும் CISA இன் இயக்குனர் கிறிஸ் கிரெப்ஸ் தானும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.

முக்கிய மாநிலங்களின் தேர்தல் எண்ணிக்கைகளின் போது மொத்த வாக்கு எண்ணிக்கையை "மாற்றுவதற்கு" சூப்பர் கணினிகள் பயன்படுத்தப்பட்டு இருந்ததாக இணையம் சம்பந்தமான பொய் வாதங்களை CISA உறுதியாக எதிர்த்திருந்தது. “வாக்கு எந்திரங்கள் ஜனாதிபதியாலேயே செய்யப்பட்டிருந்தாலும் கூட, அவற்றைக் குறித்து அடித்தளமற்ற கூற்றுக்களை" பகிர்ந்து கொள்ள வேண்டாமென மக்களை எச்சரித்த தேர்தல் தொழில்நுட்ப நிபுணரின் கருத்தை வியாழக்கிழமை கிரெப்ஸ் மீண்டும் ட்வீட் செய்திருந்தார்.

Loading