மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தியாவின் தலைநகரும் பெருந்திரளான நகர்புற மக்கள் தொகையை கொண்ட டெல்லியின் புறநகரில் நூறாயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு இருப்பதுடன் மேலும் அதி வலது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தின் வேளாண் வணிகசார்பு “சீர்திருத்த” சட்டங்களை எதிர்க்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு மேலாக கூடியிருக்கின்றனர்.
விவசாயிகள் நவம்பர் 26 அன்று டெல்லி சலோ (டெல்லிக்கு செல்வோம்) என்ற அவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார்கள். அதே சமயத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் “முதலீட்டாளர் சார்பு” பொருளாதார கொள்கைளுக்கு எதிரான ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கோவிட்-19 தொற்று நோய் பரவல் இருந்த நேரத்தில் வருமானங்களை இழந்திருக்கும் நூறு மில்லியன் கணக்கிலிருக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் மற்றும் உழைப்பாளர்களுக்கும் உதவியளிக்கவேண்டும் என்று கோரினார்கள்.
நவம்பர் 27 அன்று மோடியும் மற்றும் ஹரியானா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய பாஜக தலைமையிலான மாநில அரசாங்கங்களும் டெல்லி சலோ ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டபடி நாட்டின் தலைநகரை சென்றடையாமல் தடுப்பதற்கு தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான துணை இராணுவ படைகள், தண்ணீரை பீச்சியடிக்கும் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை ஆகியவற்றை பயன்படுத்தியிருந்தன.ஆனால் அரசாங்கத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் டெல்லியின் எல்லையிலுள்ள அரை டசன் பெரும் நெடுஞ்சாலைகளில் முகாம்களை அமைத்து பதிலடி கொடுத்தனர்,
செப்டம்பரில் மோடி அரசாங்கம் தேசிய பாரளுமன்றத்தினூடாக மூன்று வேளாண் “சீர்திருத்த” சட்டங்களைக் கொண்டுவந்து மோதலை உருவாக்கியுள்ளது. பெருநிறுவன வணிகங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த இந்த சட்டங்கள் இந்திய விவசாயிகளின் இழப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வேளாண் வணிகங்களுக்கு ஊக்கமளிக்கும். இந்திய விவசாயிகளில் பெரும்பான்மையோர் இரண்டு ஹெக்டர்கள் (5 ஏக்கர்) அல்லது குறைவான சிறிய நிலங்களை மட்டுமே கொண்டிருக்கின்றனர். .
பாஜக வின் வேளாண் சீர்திருத்தம் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மீது நடத்தும் மிக அதிகளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாகும். வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய இதே பாராளுமன்ற பருவகால கூட்டத்தொடரின்போது ஒப்பந்த தொழிலாளர்முறையை ஊக்குவிக்கவும், அனைத்து வேலைநிறுத்தப் போராட்டங்களை சட்டவிரோதமாக்கவும் மற்றும் தொழிலாளர்களை விருப்பப்படி பணிநீக்கம் செய்ய பெரிய முதலாளிகளுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய ஒரு தொழிலாளர் சரத்தை திருத்தியுள்ளது.
மேலும் அடக்குமுறை அச்சுறுத்தல்கள் மற்றும் வேளாண் மசோதாக்களுக்கு சிறிய, பெரும்பாலும் ஒப்பனை மாற்றங்களை வழங்குவதன் மூலம் விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தைத் தணிப்பதற்கு மோடி அரசு முயன்றுள்ளது. பரவலான மக்கள் ஆதரவால் ஈர்க்கப்பட்ட விவசாயிகள், குளிர்கால காலநிலை, கோவிட்-19 இன் அச்சுறுத்தல் மற்றும் ஏராளமான உடல்நலம் மற்றும் பிற சவால்களையும் தாங்கி மூன்று சட்டங்களையும் இரத்து செய்வதற்கான கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இருக்கும் பொதுமக்களின் ஆதரவைக் பலவீனப்படுத்தும் முயற்சியாகவும் மேலும் அவர்களை வன்முறைகொண்டு வெளியேற்றுவதற்கு அரசு பாதுகாப்பு படைகளை அணிதிரட்டுவதற்காக ஒரு அரசியல் அடித்தளத்தை அமைக்கும் நோக்கிலும் அரசாங்கம் அவர்களை அவதூறாக பேசிவருகிறது. விவசாயிகள் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னால் சீனாவும் பாகிஸ்தானும் இருக்கிறது என்றும் இது நக்சலைட்டுகள் (மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள்) மற்றும் காலிஸ்தானியர்கள் (ஒரு தனி சீக்கிய அரசை அமைப்பதற்கான ஆதரவாளர்கள்) ஊடுருவியிருக்கிறார்கள் என்றும் பாஜக அமைச்சர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
கைவிடும்படி விவசாயிகளை சம்மதிக்கவைக்க அரசாங்கம் தவறியதை அடுத்து போராட்டப் பகுதிக்கு செல்லும் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது, அது சுகாதாரக் கழிவு அபாயங்களை உருவாக்கி உள்ளது. சோதனையான உடல் நிலைமைகள் மற்றும் போக்குவரத்து விபத்துகளின் விளைவாக ஒரு மாத காலமாக நீட்டிக்கும் கிளர்ச்சி போராட்டத்தில் குறைந்தது 30 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.
விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டமானது மோடியின் அரசாங்கத்தையும் மற்றும் ஒட்டுமொத்த இந்திய ஆளும் மேற்தட்டுகளையும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் ஒர் பரந்த தொழிலாள வர்க்க தலைமையிலான இயக்கத்தை தூண்டிவிடும் என்ற பெரும் அச்சம் அவர்களுக்கு இருக்கிறது, அந்த இயக்கம் வெறும் மோடியையும் அவருடைய இந்து மேலாதிக்கவாத பாஜகவை மட்டுமல்லாமல் கடந்த மூன்று தசாப்தங்களாக ஒவ்வொரு இந்திய அரசாங்கமும் பின்பற்றி வந்த வலதுசாரி, முதலாளித்துவ சார்பு திட்டத்தையும் சவால் செய்யும்.
வேளாண் சட்டங்களை அவரது அரசாங்கம் ரத்து செய்யப்போவதில்லை என்ற மோடி திரும்ப திரும்ப கூறும் சூளுரையை பெருநிறுவன ஊடகங்கள் வலுவாக ஆதரிக்கின்றன. விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்திற்கு முன்னே அரசாங்கம் பின்வாங்குவதாக காணப்படுமாயின் அது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பெருமளவிலான எதிர்ப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் சீனாவுக்குப் பதிலாக மலிவு கூலி உற்பத்திக்கான பகுதியாக இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் திட்டங்கள் ஆபத்துக்குள்ளாகும் என பெரு வணிகங்கள் அஞ்சுகின்றன.
இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டக்கூடிய வன்முறை மோதலுக்கான ஆபத்தை விளைவிப்பதை விட தற்போது, பேச்சுவார்த்தைகளுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் போராட்டக்காரர்களை களைப்படைய செய்வதன் மூலமும் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை அவதூறுகள் மூலம் கீழறுத்தும் பிற வஞ்சகத்தனமான சூழ்ச்சிகளின் மூலமும் கையாள முற்படும் அரசாங்கத்திற்கு பெருநிறுவன தட்டுக்கள் அனுசரனையாக இருக்கின்றன.
டிசம்பர் 18 அன்று விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக இந்தியாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின் முக்கியத்துவமாக இருக்கிறது. எதிர்ப்பு போராட்டத்தினால் டெல்லிக்கு வெளியேயும் உள்ளேயும் பிரதான நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்துகளுக்கு இடையூறாகவும் மற்றும் பெரும்பாலான சமயங்களில் தடுக்கப்பட்டும் இருந்த காரணங்களினால் விவசாயிகளின் போராட்டத்தை சட்டவிரோதமானதாக அறிவிக்க கோரி பல மனுக்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீருக்கு எதிரான கடந்த ஆண்டின் அரசியலமைப்பு சதி முதல் இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தின் இடத்தில் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலைக் கட்டுவது வரை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மோடி அரசாங்கத்தின் மிகவும் ஆக்ரோசமான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் சிலவற்றுக்கு பலமுறை சட்டபூர்வ ஆதாரம் வழங்கியிருக்கிறது.
இருப்பினும் அதன் டிசம்பர் 18 தீர்ப்பில், வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு “எதிர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒரு அடிப்படை உரிமை இருக்கிறது” என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அந்த உரிமையை “சமநிலைப்படுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது ” குறித்த “எந்த கேள்வியும் இல்லை” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்துள்ளார்.
ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணுமாறு அரசாங்கத்தையும் மற்றும் விவசாயிகளின் அமைப்புகளையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது மேலும் இந்த சர்ச்சைக்கு நடுவராக உதவுவதற்கும் முன்வந்துள்ளது. ஆனாலும், எதிர்காலத்தில் விவசாயிகளின் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவிப்பதற்கும் மற்றும் அதன் மீதான அரசின் அடக்குமுறைக்கு பச்சை கொடி காட்டுவதற்கும் அதனுடைய கதவை அகலமாகத் திறந்துவைத்திருக்கிறது. போராட்டக்காரர்களால் அல்லது காவல்துறையினரால் “விவசாயிகளின் போராட்டம் தடையின்றி மற்றும் எந்தவொரு அமைதியையும் மீறாமல் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “இந்த கட்டத்தில் எங்களின் பார்வை இது தான்.”
விவசாயிகள் போராட்டங்களை நிறுத்தவேண்டும் என்று அவர்களின் அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மோடி அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றது. நேற்று, அரசாங்க பிரதிநிதிகளுக்கும் மற்றும் 41 விவசாய சங்கங்களுக்குமிடையில் நடந்த ஆறாவது வட்டமேசை பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டு பிரச்சனைகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது: விவசாயிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சார விலை உயர்வுகள் பற்றியும் மற்றும் அறுவடை செய்தபின் இருக்கும் அரிதாள் கட்டைகளை எரித்ததற்காக அபராதம் விதித்ததற்காகவும் முறையீடு செய்தார்கள். எவ்வாறாயினும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் மீதோ மற்றும் அடிப்படை ஆதார விலை அமைப்பு பராமரிக்கப்படும் என்ற ஒரு சட்ட பாதுகாப்பு விடயத்தில்லோ எந்த இணக்கமும் ஏற்படவில்லை. இரு தரப்பினரும் மீண்டும் ஜனவரி 4 அன்று சந்திப்பதற்கு உடன்பட்டனர்.
சமீபத்திய வாரங்களில், இந்த பகட்டுடன் சேர்ந்து மோடி தன்னைத் தானே “விவசாயிகளுக்கு ஆதரவான” ஒரு தலைவர் என்று முன் நிறுத்த முயற்சிசெய்துவந்திருக்கிறார். டிசம்பர் 25 அன்று ஒரு நிகழ்வில், அரசாங்கத்தின் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் அடுத்த தவணையை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் 6,000 ரூபாய் (சுமார் 82 அமெரிக்க டாலர்) வருடத்திற்கு குறைந்தபட்ச வருமான உதவி கிடைக்கும். விவசாயிகளைத் தூண்டுவதாகவும் மற்றும் “தவறாக வழிநடத்துவதாகவும்” மோடி எதிர்கட்சிகளை குற்றஞ்சாட்டியதுடன் அவற்றின் மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் பிற பிராந்திய மற்றும் சாதிய எதிர்கட்சிகள் பாஜகவின் வேளாண் சட்டங்களை “எதிர்ப்பதும்” மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டங்களை ”ஆதரிக்கும்” பேச்சுக்கள் முற்றிலும் இழிவானவை மற்றும் பாசாங்குத்தனமானவையாக இருக்கிறது. இத்தகைய கட்சிகள் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் மோடி மற்றும் பாஜகவை விட எவ்விதத்திலும் குறைவானவானவர்களாக இருக்கவில்லை. இந்திய முதலாளித்துவத்தின் விருப்பப்பட்ட அரசாங்க கட்சியாக சமீபகாலம்வரை இருந்த காங்கிரஸ், 1991 இல் தொடங்கி மற்றும் அடுத்த கால் நூற்றாண்டின் பெரும்பகுதிவரை இந்தியாவை பூகோள மூலதனத்திற்கான மலிவான தொழிலாளர் கூடமாகவும், வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளியாகவும் மாற்றும் செயல்முறையை முன்னெடுத்திருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் இதைப்போன்ற வேளாண் வணிக சார்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிசெய்தன ஆனால் மக்கள் எதிர்ப்பின் அச்சம் காரணமாக பின்வாங்கின என்று மோடி கூறினார், இதில் ஒரு தடவை, பாஜக தலைவர் உண்மை கூறியுள்ளார்.
பிரதான ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை மோடியின் “முதலாளித்துவ சார்பு” சீர்திருத்தங்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தின் அரசியல் தலைமையாக எழுச்சி பெறுவதிலிருந்து தொழிலாள வர்க்கத்தை தடுப்பதற்கு அயராமல் உழைத்துகொண்டிருக்கிறார்கள்.
நவம்பர் 26 மற்றும் ஜனவரி 8 இல் நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்ட அலைகள் மற்றும் பணிநீக்கம், குறைவான ஊதியம், வேலையை அதிவேகப்படுத்துதல் மற்றும் பற்றாக்குறையான தனிமனித பாதுகாப்பு உபகரணங்களுக்காக (PPE) சுகாதார பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்புக்கான தொழிலாளர் போராட்டங்களில் வெகுஜனங்கள் அதிகமாக பங்குபற்றியதன் மூலம் அத்தகைய இயக்கத்திற்கு புறநிலை நிலைமைகள் சாதகமாக இருக்கின்றன என்பதை எடுத்துகாட்டியுள்ளன.
ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிட தொழிலாள வர்க்கத்திற்காக போராடுவதற்கு பதிலாக, ஸ்ராலினிஸ்டுகளின் முக்கிய குறிக்கோள் காங்கிரஸ் கட்சி மற்றும் பிற வலதுசாரி எதிர்க்கட்சிகளின் அரசியல் அதிகாரத்தை உயர்த்துவதாக இருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் முழுவதிலும் சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டுவருகின்றன, “ஆதரவு என்ற கூட்டறிக்கைகளை வெளியிடுகின்றன மேலும் விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மோடிக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஒரு மோசமான கையாளாக இருக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்திக்க எதிர்கட்சிகளின் தலைவர்களின் கூட்டுக்குழுவையும் கூட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
கடந்த வாரம், இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மேற்கு வங்காளத்தில் சிபிஎம், சிபிஐ மற்றும் அவர்களுடைய இடது முன்னணியுடன் சேர்ந்து வரப்போகும் மாநிலத் தேர்தலில் தாங்கள் போட்டியிடப்போவதாக காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தை ஒரு பக்கம் வைத்துக்கொண்டிருக்கும் அதேவேளை, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக இருக்கும் நிலமற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் கிராமப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் இயக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்ராலினிஸ்டுகள் எதுவும் செய்யவில்லை.
மோடி அரசாங்கத்துடன் ஒரு சமரசத்தை அடைவதற்கு விவசாயிகளை தள்ளுவதற்கு சிபிஎம் தலைமையிலான அனைத்திந்திய கிஷான் சங்கம் (All India Kisan Sabha – AIKS) மற்றும் பிற சங்கங்களூடாக விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் இருக்கும் தங்களுக்குள்ள செல்வாக்கைப் ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத் தொடக்கத்தில் சிபிஎம் மத்தியகுழு உறுப்பினரும் AIKS இன் பொதுச் செயலாளருமான ஹன்னன் மொல்லா “அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் ஒரு தீர்வினை பெறமுடியாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாஜக அரசாங்கத்தை கலைப்பதற்கான இலட்சியத்துடன் விவசாயிகளின் போராட்டத்தில் ஸ்ராலினிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற மோடியின் கூற்றை அவர் மறுத்து பதிலளித்துள்ளார். இந்த நிகழ்வுப்போக்கில் அதன் முதலீட்டாளர் கொள்கைகள் மற்றும் நிறுவப்பட்ட அரசியல்களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தை தக்கவைக்க சிபிஎம் உறுதியாக உள்ளது என்று மொல்லா தெளிவுபடுத்தியுள்ளார். “இயக்கம் குறித்த ஒரு நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதற்கு பாஜக மும்முரமாக உள்ளது, தொடக்கத்திலிருந்தே அது நம்முடையதாக இருக்கவில்லை. விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 500 அமைப்புகளில் சுமார் 10-11 தான் இடது பக்கம் சாய்ந்ததாக இருக்கும்” என்று மொல்லா கூறியுள்ளார்.
மேலும் படிக்க
- இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயமும்
- விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை தூண்டக்கூடும் என்று இந்திய அரசாங்கமும் பெருவணிகங்களும் அஞ்சுகின்றன
- இந்திய விவசாயிகள் வேளாண் வணிக சார்பு “சீர்திருத்தத்திற்கு” எதிராக போராட்டத்தை முடுக்கிவிடும் நிலையில், பரந்தளவிலான அடக்குமுறைக்கு மோடி தயாராகிறார்
- வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது
