ட்ரம்ப் “சோசலிசத்திற்கு" எதிராக சீறுவதுடன், பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் திருடப்பட்ட தேர்தல் பொய்யை இரட்டிப்பாக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம் பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல்முறையாக பொதுவெளியில் தோன்றிய டொனால்ட் ட்ரம்ப், புளோரிடாவின் ஓர்லாந்தோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (Conservative Political Action Conference - CPAC) சிறப்புரையாற்றினார். அந்த நான்கு நாள் நிகழ்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளிலும் அவரின் பாசிசவகை ஆத்திரமூட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்ததுடன், அந்த முன்னாள் ஜனாதிபதி குடியரசுக் கட்சியின் மீதும் அதன் அதிகரித்தளவிலான பாசிசவாத நோக்குநிலை மீதும் தொடர்ந்து மேலாளுமை செலுத்தி வருகிறார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அந்நிகழ்வு முன்னணி குடியரசுக் கட்சி அதிகாரிகளையும், அதிவலது தீவிரவாதிகள் மற்றும் ட்ரம்ப் சார்பு வெறியர்களையும் ஒன்றாகக் கொண்டு வந்திருந்தது.

2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்காக, ஜனவரி 6 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதில் உச்சக்கட்டத்தை எட்டிய ஒரு சதித்திட்டமான, ட்ரம்பை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரியாக நிறுவுவதற்கான சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அந்த பழம்பெரும் கட்சியின் (GOP) சட்ட வல்லுனர்களும் பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஜனவரி 6 இல் ஜனாதிபதி தேர்வுக் குழு வாக்குகள் அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியிலும், ட்ரம்புக்கு ஆதரவாக காங்கிரஸ் சபை மீதான தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அதிவலது குழுக்களுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்குவதிலும், தலைமை வகித்த செனட்டர்கள் டெட் குரூஸ் மற்றும் ஜோஸ் ஹவோலி ஆகியோரும் அதில் உள்ளடங்கி இருந்தனர்.

ட்ரம்ப் மீதான பதவிநீக்க குற்றவிசாரணைக்கு வாக்களித்த காங்கிரஸ் சபையின் 10 GOP உறுப்பினர்களில் ஒருவரும், வலதுசாரி போர் வெறியரும் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மூன்றாம் தரவரிசை குடியரசுக் கட்சியாளருமான லிஸ் ஷென்னியைத் தாக்குவதில், தனது உரையின் பெரும்பகுதியை அர்ப்பணித்திருந்த டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் அந்த இடத்திற்குப் பெருமை சேர்த்தவர்களில் இருந்தார்.

பொலிஸ் படுகொலைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு நாடெங்கிலும் கடமையிலிருக்கும் துருப்புகளை அணித்திரட்டவும் மற்றும் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பிரயோகிக்கவும் ட்ரம்ப் ஜூன் 1 இல் ரோஸ் கார்டனில் அச்சுறுத்திய மூன்று நாட்களுக்குப் பின்னர், நியூ யோர்க் டைம்ஸில் ஒரு துணை-தலையங்கத்தைப் பிரசுரித்த அர்கன்சாஸ் செனட்டர் டாம் காட்டனும் அந்நிகழ்வில் ஒருவராக பங்கெடுத்திருந்தார். ட்ரம்ப் அவர் அச்சுறுத்தலை நிறைவேற்றி நடைமுறையளவில் இராணுவச் சட்டத்தை விதிக்க வேண்டுமென காட்டன் அவர் கட்டுரையில் ட்ரம்பை வலியுறுத்தி இருந்தார்.

ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து வெறும் ஒரு சில மணிநேரங்களிலேயே, ஜனாதிபதி தேர்வுக்குழு வாக்குகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு எதிராக வாக்களித்த பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினரில் ஒருவரான பிரதிநிதி போல் கோசர், வெள்ளிக்கிழமை இரவு, வேறொரு நிகழ்வில் ஆனால் அதேபோன்ற நிகழ்வான அமெரிக்கா முதலில் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (America First Political Action Conference) உரையாற்றினார். அந்த மாநாட்டை அவபெயரெடுத்துள்ள வெள்ளை மேலாதிக்கவாதியும் யூத-எதிர்ப்புவாதியுமான நிக் ஃபியூண்டஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனவரி 6 கிளர்ச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்த "தேர்தல் திருட்டை நிறுத்துவோம்" பிரச்சாரத்தில் கோசர் ஒரு முக்கிய நபராக இருந்தார். கோசர் பேசிய பின்னர் உரையாற்றிய ஃபியூண்டஸ், ஜனவரி 6 தாக்குதலை "அருமையானது" என்று குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் "வெள்ளை இன மக்கள் மையத்தைப்" பாதுகாக்க கோரினார்.

முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அந்த மாநாட்டில் பேசுவதற்கான அழைப்பை ஏற்கக்கூடாது என்ற முடிவிலும், செனட் சபையின் சிறுபான்மை அணித் தலைவர் மிட்ச் மெக்கொன்னல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான ட்ரம்பின் தூதர் நிக்கி ஹேலி கலந்து கொள்ளாததன் மீதும் குடியரசுக் கட்சிக்குள் பதட்டங்களும் பிளவுகளும் பிரதிபலித்தன. ஆனால், அக்கட்சியின் பெரும்பான்மையினரைப் பொறுத்த வரையில், அரசியலமைப்பை அகற்றுவதற்கான கடந்த மாத முயற்சியை ஒழுங்கமைத்தவர் பின்னால் அணி திரண்டுள்ளது.

குடியரசுக் கட்சியிலிருந்து பிரிந்து தனது சொந்தக் கட்சியை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியான முந்தைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ட்ரம்ப் அவரின் 90 நிமிடம் நீண்ட சுற்றி வளைத்த உரையில், சிறிது நேரத்தைத் தான் வீணடித்தார். அந்த கூட்டம் “அமெரிக்கா! அமெரிக்கா!" என்று குரைத்த போது, கட்சி மீது அவர் தலைமையை உறுதிப்படுத்த அவர் உத்தேசித்திருப்பதாக அறிவித்த அவர், 2024 இல் வெள்ளை மாளிகைக்கு அவர் போட்டியிடக்கூடும் என்பதைக் சுட்டிக்காட்டி, ஜனாதிபதியாக அவர் பின்பற்றிய அதிவலது திட்டநிரலின் ஒரு நீட்சியை விவரித்தார்.

"தீவிர எதிர்ப்பு கொள்கை" மற்றும் "சோசலிசம்" இவற்றை எதிர்த்துப் போராடுவதே அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, இவை தவிர்க்கவியலாமல் "கம்யூனிசத்திற்கு" வழிவகுப்பதாக தெரிவித்த அவர், அபத்தமாக இந்த திட்டநிரலை ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் வெள்ளை மாளிகை மீது சாட்டினார், இவர்கள் "எந்தவொரு அமெரிக்க நிர்வாக ஆட்சியின் மோசமான முதல் மாதத்தை விடவும் மோசமானதை" பதிவு செய்திருப்பதாக அவர் கண்டனம் செய்தார்.

பின்னர் அவர் அவரின் நிலையான வலதுசாரி உதிரித்திட்டங்களின் பட்டியலுக்கு வந்தார்: அதாவது புலம்பெயர்ந்தோர் விரோத இனவாதம், பொருளாதார தேசியவாதம், சீன-விரோத வெறுப்பூட்டல், சட்டம் ஒழுங்கு, துப்பாக்கி உரிமைகள், கருக்கலைப்புக்கு விரோதமான வாய்வீச்சு ஆகியவை இதில் இருந்தன. “அமெரிக்கா இரத்து செய்யப்படவில்லை" (America Uncanceled) என்ற CPAC மாநாட்டின் தலைப்புக்கு இணங்க, “பெரும் தொழில்நுட்ப" ஏகபோகங்கள் "பழமைவாத இயக்கத்தை" தணிக்கை செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுடன் முறித்துக் கொள்ள அழைப்பு விடுத்த அவர், ஸ்தாபக தந்தைகள், லிங்கன் மற்றும் பிற அமெரிக்க வரலாற்று தலைவர்கள் மீதான இனவாத தாக்குதல்களைக் கண்டித்தார், ஆனால் இதை அவர் வரலாற்று உண்மையின் நிலைப்பாட்டிலிருந்து செய்யவில்லை மாறாக வெறித்தனமான அமெரிக்க தேசியவாதத்தின் அடிப்படையில் செய்தார்.

பரந்த போர் எதிர்ப்பு உணர்வை சுரண்டும் முயற்சியில், ட்ரம்ப், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதற்கான அவர் நடவடிக்கைகளை மாற்றியமைக்க தயாரிப்பு செய்வதற்காக பைடெனைக் கண்டித்தார்.

தடுப்பூசிகள் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருந்ததாக கூறி, தனது தடுப்பூசி உற்பத்தி திட்டத்தைப் பாராட்டும் கருத்துகளில் பெரும்பகுதியைச் செலவிட்ட ட்ரம்ப், பள்ளிகளை மீண்டும் திறக்க பைடென் போதுமானளவுக்கு வேகமாக நகரவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

ஜனவரி 6 கிளர்ச்சியைத் தூண்டிவிட்டதற்காக அவர் மீது பதவிநீக்க குற்றவிசாரணை கொண்டு வர வாக்களித்த பிரதிநிதிகள் சபையின் 10 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரைக் குற்றவாளியாக அறிவிக்க வாக்களித்த ஏழு செனட்டர்கள் ஆகியோரின் பெயர்களை ஒரு கட்டத்தில் சுட்டிக் காட்டிய ட்ரம்ப், அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து குடியரசுக் கட்சி அவர்களைத் தடுக்க வேண்டுமென கோரினார்.

அவர் உரையின் பெரும்பகுதி "திருடப்பட்ட தேர்தல்" என்ற அவரது பொய் கூற்றுக்களை மறுசுழற்சி செய்வதிலேயே அர்பணிக்கப்பட்டிருந்தது. இந்த கருத்துரு தான், பைடென் ஏறக்குறைய கூடுதல் வித்தியாசத்தில் பைடென் ஜெயித்திருந்த தேர்தல் முடிவை மாற்றுவதற்கான அவரது முயற்சியில் அதிவலது சக்திகளை அணித்திரட்ட பயன்படுத்தப்பட்டது.

ட்ரம்ப் அவரின் இந்த போலியான சொல்லாடலை இரட்டிப்பாக்குவதற்காக, அம்மாநாடு முழுவதுமான உரைகள் மற்றும் குழு விவாதங்களில் இதையே எதிரொலித்தார், அங்கே "சீர்குலைக்கப்பட்ட தேர்தல்" மற்றும் சட்டவிரோத பைடென் நிர்வாகம் என்ற கூற்றுக்கள் பரவலாக இருந்தன.

அந்த நிகழ்வில் மற்ற பேச்சாளர்களைப் போலவே, ட்ரம்பும் காங்கிரஸ் சபை மீதான ஜனவரி 6 பாசிசவாத தாக்குதலைக் குறித்து எதையும் குறிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டார், அவ்விதத்தில் அதற்கு மறைமுகமான ஒப்புதல் அளித்ததுடன், அந்த கும்பல் பிணைக் கைதிகளைப் பிடிப்பதிலும் மற்றும் பைடெனின் வெற்றிக்கு ஒப்புதல் அளிப்பதிலிருந்து காங்கிரஸ் சபையைத் தடுக்க சட்ட வல்லுனர்களைப் படுகொலை செய்திருக்கக் கூடிய சாத்தியக்கூறிலும் ஜெயித்திருந்தால், குடியரசுக் கட்சி அந்த கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்திருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகத்தை விட்டு வைக்கவில்லை.

"சுதந்திரமான மற்றும் நியாயமான" தேர்தல்களை உறுதி செய்யும் பெயரில், குடியரசுக் கட்சி வாக்குரிமைகள் மீது பாரியளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கோரினார். தபால்-வழி வாக்குச்சீட்டு முறையை நடைமுறையளவில் நீக்குவதற்கும், வாக்குப்பதிவின் போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடியுரிமை ஆதாரங்களின் அவசியத்தைக் கடுமையாக்குவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார். இத்தகைய நடவடிக்கைகள் வறிய மற்றும் தொழிலாள வர்க்க வாக்காளர்களையே இலக்கில் வைக்கின்ற நிலையில், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பல மாநிலங்கள் ஏற்கனவே இவற்றை நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ட்ரம்பின் பேச்சையும் மற்றும் ஒட்டுமொத்தமாக CPAC மாநாட்டையும் தொழிலாள வர்க்கம் ஒரு கூர்மையான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். "ஒற்றுமைக்காக" என்று மன்றாடுவதன் மூலம், "வலுவான குடியரசுக் கட்சிக்கு" அழைப்பு விடுப்பதன் மூலமும், நிதியியல் தன்னலக் குழு, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்குள் இருக்கும் சக்திகளும், GOP உம் அந்த பாசிசவாத ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் உடந்தையாய் இருந்ததை மூடிமறைக்க செயலாற்றி வருவதன் மூலமும், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சி தலைமையானது ட்ரம்பையும் அவரது சக குடியரசுக் கட்சி சதிகாரர்களையும் பலப்படுத்தி உள்ளனர்.

ட்ரம்பின் உரை செனட் சபையின் பதவிநீக்க குற்றவிசாரணை வழக்கில் ஜனநாயகக் கட்சியினர் சரணடைந்து வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வந்தது, தேர்வுக் குழு வாக்குகள் அங்கீகரிப்பை முடக்க வாக்களித்த குரூஸ் மற்றும் ஹவோலி போன்ற செனட்டர்கள், மற்றும் தேர்தல் மோசடி குறித்த ட்ரம்பின் பொய்களுக்கு மதிப்பளித்த செனட் சபையின் பெரும்பான்மை அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் உட்பட GOP வகித்த பங்கை மூடிமறைக்க வடிவமைக்கப்பட்ட விதத்தில் அந்த வழக்கு விசாரணையை ஜனநாயகக் கட்சியினர் நடத்தி இருந்தனர்.

பிப்ரவரி 13 இல், செனட் சபை விசாரணையின் கடைசி நாளில், பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள், வெள்ளை மாளிகையின் அழுத்தத்தின் கீழ், வாஷிங்டன் மாநில குடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஜெய்ம் ஹெர்ரெரா பெய்ட்லெரை சாட்சி அளிக்க அழைக்க மறுத்தனர், இவர் கிளர்ச்சியாளர்களுக்கு ட்ரம்பின் ஆதரவை நிரூபிக்கும் விதத்தில் அத்தாக்குதல் நாளில் நடந்த ஒரு தொலைபேசி உரையாடல் குறித்து சாட்சியளிக்க அவரின் விருப்பத்தை அறிவித்திருந்தார். அந்த கும்பலைத் திரும்ப பெறுமாறும் நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்புப் படைகளை அனுப்புமாறும் பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை அணி தலைவர் கெவின் மெக்கார்த்தி ட்ரம்பிடம் மன்றாடியதையும், அதற்கு ஜனாதிபதி இந்த கும்பல் "தேர்தலைக் குறித்து உங்களை விட அதிகமாக உடைந்து போயிருக்கிறார்கள்" என்று மட்டுமே கூறியதையும் கேட்டதாக அப்பெண்மணி பத்திரிகைகளுக்குக் கூறியிருந்தார்.

உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 7 இல் எச்சரித்தது போல:

இங்கே ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஏற்பட முடியும் என்பது மட்டுமல்ல. இங்கே அது ஜனவரி 6, 2021 மதியம் நடந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, அந்த ஆரம்ப முயற்சி அதன் இலக்கை அடைவதில் சிறிய இடைவெளியில் தோல்வி அடைந்திருந்தாலும் கூட, அது மீண்டும் நடக்கும்.

குடியரசுக் கட்சியிலும் அதைச் சுற்றியும் பாசிசவாத சக்திகளின் வளர்ச்சியை எதிர்ப்பதற்கு பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியை நம்பியிருப்பது, மற்றும் அதிகரத்தளவில் சர்வாதிகாரத்தை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளை நோக்கி திருப்புவதும், ஒரு பேரழிவுகரமான தவறாக இருக்கும்.

பழம்பெரும் கட்சியைப் (GOP) போலவே ஜனநாயகக் கட்சியும் வோல் ஸ்ட்ரீட், இராணுவம் மற்றும் சிஐஏ ஆகியவற்றின் கட்சியாகும். முக்கியமாக, பெருநிறுவன உயரடுக்கிற்கு இலாபங்களை உருவாக்குவதற்காக பள்ளிகளை மீண்டும் திறப்பதையும் மற்றும் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்குத் தொழிலாளர்களை நிர்பந்திப்பதையும் மையப்படுத்தி, ட்ரம்ப் மேற்கொண்ட சமூக நோயெதிர்ப்பு பெருக்கும் அதே மனிதப்படுகொலை கொள்கையையே ஜனநாயகக் கட்சியும் பின்தொடர்கிறது. அது குடியரசுக் கட்சியுடன் நல்லிணக்கத்திற்கு முறையிடுவதுடன், தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு எதிராக ஒரு பொதுவான முன்னணியை உருவாக்கும் நோக்கில் குடியரசுக் கட்சியின் பாசிசவாத அரசியலைக் குறைத்து காட்டுகிறது.

Loading