முன்னோக்கு

புதிய ஆய்வு உலகளாவிய கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கலாம் என மதிப்பிடுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட உலகளவில் 6.93 மில்லியன்கள் மற்றும் அமெரிக்காவில் மட்டும் 905,000 என இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) இன் புதிய ஆய்வு கூறுகின்றது.

இந்த புதிய புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை IHME ஆல் "அதிகப்படியான இறப்பு" பற்றிய பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டன. முக்கியமாக, இந்த ஆய்வில் கோவிட்-19 இனால் குறைவாக மதிப்பிடப்பட்ட அறிக்கைகள் மட்டுமே உள்ளடக்குகின்றது. மேலும் தொற்றுநோயுடன் தொடர்புபட்ட பிற காரணங்களினால் ஏற்பட்ட இறப்புகளை விலக்குகின்றன. இதில் தொற்றுநோயினால் தூண்டப்பட்ட சமூக நெருக்கடியுடன் தொடர்புபட்ட தாமதமான மருத்துவ பராமரிப்பு மற்றும் தற்கொலைகள் அல்லது அதிகப்படியான மருந்துகள் போன்ற “விரக்தியின் மரணங்கள்” கணக்கில் உள்ளடக்கப்படவில்லை.

2021 மே 7 வெள்ளிக்கிழமை, நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்கு அருகிலுள்ள மயானம் ஒன்றில் கோவிட் -19 இறந்தவர்களின் உடல்களுக்கு அருகே ஒரு குடும்ப உறுப்பினர் இறுதி அஞ்சலிசெய்கிறார்[நன்றி: AP Photo/Niranjan Shrestha]

இந்த ஆராய்ச்சி தொற்றுநோயின் இழப்பின் அழிவுகரமான விவரணத்தை முன்வைப்பதுடன் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதான ஒரு குற்றச்சாட்டு ஆகும். இதுதான் இந்த அளவில் மரணம் ஏற்பட அனுமதித்தது. பிரிட்டிஷ் மருத்துவ இதழான BMJ இன் வார்த்தைகளில், கிட்டத்தட்ட 3.3 மில்லியன் இறப்புகள் “சமூகக் கொலை” என்றால், இந்த இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுவது எதனைக் குறிக்கிறது?

எந்தவொரு அளவீட்டிலும், இது அமெரிக்காவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பொது சுகாதார பேரழிவாகும். இத்தொகை நாட்டின் இரத்தக்களரி மோதலான அமெரிக்க உள்நாட்டுப் போரில் நடந்த அனைத்து மோதலில் மற்றும் நேரடியாக மோதலில் தொடர்புபடாத இறப்புகளையும் விட இந்த 905,000 இறப்புகள் அதிகம். அமெரிக்காவில் ஒவ்வொரு 367 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஒருவரை இந்த 905,000 இறப்புகள் குறிக்கின்றன. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் வியட்நாம் போர் உட்பட 1898 இல் ஸ்பானிய-அமெரிக்கப் போருக்கு பின்னர் நடந்த அனைத்து அமெரிக்கப் போர்களின் மரணங்களை விட 905,000 பேரின் மரணங்கள் இருமடங்கு அதிகமாகும்.

இந்த புதிய மதிப்பீடுகள் முக்கியமாக ஊடகங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பது வியக்க வைக்கிறது. IHME ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை பற்றிய அரை-உத்தியோகபூர்வ கணிப்புக் குழுவாக பயன்படுத்தப்படுகிறது. இது பற்றி நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பலரால் பல முறை குறிப்பிட்டு காட்டப்பட்டது.

இதுபோன்ற பாரிய உயிர் இழப்பை பற்றிய இந்த அறிக்கையை புதைக்க ஊடகங்கள் எடுத்த முயற்சிகள் எதுவாக இருந்தாலும், அவை மிக நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. இது அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் முழு உலகின் முதலாளித்துவ அரசாங்கங்களின் மீதான ஒரு கொடூரமான குற்றச்சாட்டாகும்.

இத்தகைய பாரிய மரணம் ஒரு விபத்து அல்ல, மாறாக வேண்டுமென்றே செய்யப்பட்ட கொள்கையின் விளைவாகும். உலகின் ஆளும் உயரடுக்கு வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நன்கு அறிந்திருந்தபோதும், ஆனால் எச்சரிக்கை எழுப்ப மறுத்துவிட்டது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "இது ஒரு கொடிய விடயம்" என்பதை அறிந்திருந்தாலும் வைரஸை "குறைத்துக்காட்ட" முயன்றபோதும் காங்கிரசும் ஊடகங்களும் அதிகரிக்கும் பேரழிவின் அளவு குறித்து பல விளக்கங்களையும் நேர்காணல்களையும் பெற்றன.

ஆயினும் மார்ச் வரை வெள்ளை மாளிகையோ அல்லது ஊடகங்களோ எந்த எச்சரிக்கையும் எழுப்பவில்லை. அதற்கு பதிலாக, மனித உயிர்களை அல்லாது உலக சந்தைகளை பாதுகாக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், டிரில்லியன் கணக்கான டாலர்களும் யூரோக்களும் நிதிச் சந்தைகளில் செலுத்தப்பட்ட அதே நேரத்தில், அப்போதே ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கு எதுவும் அர்ப்பணிக்கப்படவில்லை.

தொற்றுநோயை அடக்குவதற்கு பதிலாக, ஆளும் வர்க்கங்கள் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற கொள்கையை ஊக்குவித்தன. அதாவது நோய் கட்டுப்பாடில்லாமல் பரவுவதை சமுதாயத்திற்கு அனுமதிப்பது நல்லது என்றனர்.

இந்த கொள்கை மார்ச் 14 அன்று பிரிட்டனில் பகிரங்கமாகக் அறிவிக்கப்பட்டது. அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் சேர் பாட்ரிக் வலன்ஸ் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அடுத்தபடியாக நின்று கொரோனா வைரஸை "அனைவருக்கும் பெறுவதை நிறுத்துவது" விரும்பத்தக்கது அல்ல என்று அறிவித்தார். ட்ரம்ப் நிர்வாக ஆலோசகர் போல் எலியாஸ் அலெக்சாண்டர் ஜூலை 4 ம் தேதி கூறியபோது, “குழந்தைகள், சிறுவர்கள், பதின்மவயதினர், இளைஞர்கள், வயது முதிராதவர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு பூஜ்ஜியத்திலிருந்து சிறிய ஆபத்தும் இல்லை… எனவே சமூகதொற்றை வளர்ப்பதற்கு அவர்களை பயன்படுத்துகிறோம் ... அவர்கள் தொற்றுக்குள்ளாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை குறிப்பாக சுவீடனில் உள்ள குழந்தைகள் தொடர்பாக அரச தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் இனால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. மார்ச் 14 அன்று ஒரு மின்னஞ்சலிலும், “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அடைவதற்கு பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்” என்றார்.

பல்வேறு பிணை எடுப்புக்கள் பாதுகாக்கப்பட்டவுடன், பூட்டுதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான உலக அரசாங்கங்களின் தொனியில் ஒரு திட்டவட்டமான மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 இல் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக ஏராளமான தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் தூண்டப்பட்டன. மீண்டும் திறக்கும் அழைப்புகளில் முதன்மையானது ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து, "சிகிச்சை, நோயை விட மோசமாக இருக்க முடியாது" என்று வலியுறுத்தி வெளிவந்தது.

இந்த படுகொலைக் கொள்கைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து வெளிவந்த எதிர்ப்புக்குரல்கள் அவமதிக்கப்பட்டன. பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஏப்ரல் 8 அன்று “மழை பெய்கிறது. நாங்கள் ஈரமாக போகிறோம். மேலும் சிலர் மழையில் மூழ்கப் போகிறார்கள்” என அறிவித்தார். ஜேர்மன் பாராளுமன்றத் தலைவர் வொல்ப்காங் ஷொய்பிள இதேபோல் ஏப்ரல் 26 அன்று "உயிர்களை பாதுகாக்க முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கேள்விப்படும்போது, இது ஒரு முழுமையான அர்த்தத்தில் சரியல்ல என்று நான் கூற வேண்டும்" என்று கூறினார்.

போரிஸ் ஜோன்சன் அண்மையில் அறிவிப்பால் இந்த கண்ணோட்டம் சுருக்கமாக எடுத்துக்காட்டப்படுகின்றது. அக்டோபர் 30 அன்று, “இனிமேல் வீணாய்ப்போன பூட்டுதல்கள் இல்லை, ஆயிரக்கணக்கான உடல்கள் குவிந்து போகட்டும்!” என்றார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான உலக அரசாங்கங்களின் "மோசமான புறக்கணிப்பால்" ஏற்பட்ட மனித துயரம் ஒரு புள்ளிவிவரத்தில் தெளிவாக உள்ளதை மீண்டும் குறிப்பிடுவது பிரயோசனமானது: ஒரு தடுக்கக்கூடிய கொடிய நோயினால் 6.93 மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு ஆண்டுக்கு சற்று அதிகமான காலத்தினுள் இறந்துவிட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது, ஜோ பைடெனின் கீழ், பள்ளிகள் நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இது தேசிய அளவில் நோயின் பெரிய எழுச்சியை அச்சுறுத்துகிறது. பைடென் 2021 ஜனவரி 22 அன்று “அடுத்த பல மாதங்களில் தொற்றுநோயின் பாதையை மாற்ற நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று அறிவித்து, பூட்டுதல்களை திட்டவட்டமாக நிராகரித்து நோயால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மீண்டும் அனுப்புகின்றனர். இதன் விளைவாக மிச்சிகன், புளோரிடா, பென்சில்வேனியா, இல்லினோய் மற்றும் பிற இடங்களில் தொற்றுக்கள் கணிசமாக அதிகரித்தன.

இப்போது, முகக்கவசம் அணியவேண்டும் என்ற ஆணைகள் மற்றும் சமூக விலகியிருத்தல் நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 2 ம் தேதி பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் "நாங்கள் வைரஸுடன் வாழப் போகிறோம்" என்று பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்கு கூறப்பட்டது இப்போது அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களிடம் கூறப்படுகிறது.

அத்தகைய கண்ணோட்டத்தினால் விளையும் ஆபத்துக்களை மிகைப்படுத்த முடியாது. ஏற்கனவே, தொற்றுநோய் பூமத்திய ரேகை பகுதிகள் மற்றும் உலகத்தின் தெற்கில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவு, தொற்றுநோயின் பல எழுச்சி பெற்று வரும் நோய்களில் மிக மோசமானது. அங்கு உத்தியோகபூர்வ எண்ணிக்கையான 238,000 உடன் ஒப்பிடும்போது 654,000 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக IHME மதிப்பிடுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் 1 மில்லியன் பேர் இறந்துவிடுவார்கள் என்று கணித்துள்ளது.

ஏப்ரல் 21, 2021 அன்று தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்ட உரையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான மரணத்தைத் தடுப்பதற்கு எதிர்கால பூட்டுதல்கள் தேவையில்லை என தெளிவுபடுத்தினார். அவர், "இன்றைய சூழ்நிலையில், நாட்டை பூட்டுவதிலிருந்து காப்பாற்ற வேண்டும்" என அறிவித்தார், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நிதிய தன்னலக்குழுவின் பொருளாதார நலன்கள் எத்தனை உயிர்களை இழந்தாலும் "பாதுகாக்கப்பட வேண்டும்".

மனித வாழ்க்கையைப் பற்றிய இத்தகைய கடுமையான புறக்கணிப்பு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியை மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. கடந்த ஆறு மாதங்களில் புதிய மாறுபாடுகள் தோன்றியதன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளபடி, கொரோனா வைரஸ், புதிய மற்றும் அதிக தொற்றக்கூடிய வடிவங்களாக மாற்றும் திறன் கொண்டது. இது பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபாடுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த நாடுகளில் தொற்றுக்கள் மற்றும் இறப்புகளில் சமீபத்திய எழுச்சிக்கு காரணமாக நம்பப்படுகின்றது.

மேலும், அமெரிக்காவில் வைரஸ் நிறுத்தப்பட்டாலும் கூட, இந்தியா அல்லது பிரேசில் அல்லது பிற இடங்களில் பரவுகின்ற மாறுபாடுகள் அமெரிக்காவை சுற்றிக் கொண்டு மீண்டும் தொற்றுக்குள்ளாக்கலாம். இதில் வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாதுபோக செய்யும் மாறுபாட்ட வடிவங்களும் அடங்கும். அதன் இயல்பினால், தொற்றுநோய் என்பது ஒரு உலகளாவிய நிகழ்வு மற்றும் உண்மையான சர்வதேச பிரதிபலிப்பினால் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

எவ்வாறாயினும், அத்தகைய பிரதிபலிப்புகள் தற்போதுள்ள ஆளும் வர்க்கங்களிலிருந்து வராது. ட்ரம்ப், ஜோன்சன், போல்சனாரோ, மக்ரோன், மோடி, பைடென் மற்றும் அவர்களைப்போன்ற அனைவருமே உலகப் போர்களுக்குப் பின்னர் காணப்படாத அளவிலான இந்த “சமூகக் கொலைக்கு” பொறுப்பாளிகள். அவர்கள் தமது போக்கை மாற்ற மாட்டார்கள். இந்த நபர்கள் அனைவராலும் பாதுகாக்கப்படும் முதலாளித்துவ இலாப நோக்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கம்தான் உலக மக்கள் மீது அவர்கள் ஏற்படுத்திய பாரிய மரணம் மற்றும் துன்பங்களுக்கு இந்த குற்றவாளிகளை பொறுப்பேற்க வைக்க முடியும்.

Loading