“எங்களுக்கு ஐக்கியம் தேவை”: வேர்ஜீனியாவில் உள்ள வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் UAW காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை தோற்கடிக்கத் தயாராகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி (NRV) ஆலையில் சாமானிய வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள், நிறுவன சார்பு தொழிலாளர் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கம் (UAW) மேற்கொண்ட இரண்டாவது முயற்சியைத் தோற்கடிப்பதற்கான உந்துதலை அதிகரித்து வருகின்றனர். முதல் ஒப்பந்தத்தை 91 சதவிகிதத்தால் நிராகரித்த கிட்டத்தட்ட 3,000 தொழிலாளர்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கும் கூட்டத்தில் UAW ஆதரவு ஒப்பந்தத்தின் மீது வாக்களிப்பார்கள்.

டெட்ரோய்டில் உள்ள UAW சர்வதேச தலைமையகம், டென்னசியில் பிராந்தியம் 8 மற்றும் டப்ளினில் உள்ள உள்ளூர் 2069 ஆகியவற்றின் தொழிற்சங்க அதிகாரிகள் இந்த புதிய ஒப்பந்தத்தை வெறுமனே முதல் ஒப்பந்தத்தின் மறுபரிசீலனை செய்த வடிவம் என்று கண்டனம் செய்த தொழிலாளர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பை எதிர்கொண்டனர். ஆறு ஆண்டுகாலத்திற்கான ஒப்பந்தமானது, வெறுக்கப்பட்ட பல அடுக்கு ஊதிய மற்றும் சலுகை முறையை பராமரிக்கவும், உண்மையான ஊதியங்களின் குறைப்பைத் தொடரவும், அதிக மருத்துவ செலவுகளை திணிக்கவும், புதிய 10 மணி நேர வேலைநாளை விதிக்கவும், ஓய்வூதிய சலுகைகளை மேலும் குறைக்கவும் வழிவகுக்கும்.

நியூ ரிவர் வலி ஆலையில் தொழிலாளர்கள் (ஆதாரம்: Volvo Group)

UAW அதிகாரிகளிடமிருந்து பொய்களைத் தவிர வேறொன்றையும் கேட்கமாட்டோம் என்று உறுதியாக நம்பிய வொல்வோ தொழிலாளர்கள், நகரசபை கூட்டங்கள் என்று அழைக்கப்படுவதை பெரும்பாலும் புறக்கணித்தனர். அங்கு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தொழிற்சங்க அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை திணிக்க முயன்றனர். "நாங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதையே செய்யப் போகிறார்கள் - தொழிலாளர்களும் தாங்கள் செய்ய வேண்டியதைத்தான் செய்யப் போகிறார்கள் என்று உணர்வதாக" ஒரு வொல்வோ தொழிலாளி WSWS இடம் கூறினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த தொழிலாளர்கள் உடன்படிக்கையை காட்டிக்கொடுத்தது மற்றும் முழு முன்மொழிவையும் வெளியிட மறுத்தது குறித்து UAW லோக்கல் 2069 தலைவர் மாட் ப்ளாண்டினோ மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரிகளை ஆத்திரத்துடன் எதிர்கொண்டனர். UAW அதிகாரிகள் ஒப்பந்தத்தை ஆதரித்ததுடன் மற்றும் கீழ்நிலை தொழிலாளர்களை ஆறு ஆண்டுகளுக்குள் வேகமாக உயர்ந்த ஊதிய அளவிற்கு கொண்டு வர பணம் இல்லை என்ற நிர்வாகத்தின் கூற்றுக்களை எதிரொலித்தனர். ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், நிறுவனம் ஒரு மோசமான முன்மொழிவுடன் திரும்பி வரலாம் என்றும் தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுவீடனை தளமாகக் கொண்ட வொல்வோ குழுமம் 1 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டியுள்ளது. இது கனரக வாகனங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களின் அதிகரித்த விநியோகங்களின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு முன்னர் 560 மில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும். முதல் காலாண்டு இலாப வரம்பு 2020 இல் 8.1 சதவீதத்திலிருந்து 12.8 சதவீதமாக உயர்ந்தது. வங்குரோத்தாக செல்வதாக கூறியபோதும், வொல்வோ தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் லுண்ட்ஸ்டெட்டுக்கு கடந்த ஆண்டு 5.2 மில்லியன் டாலர்களை செலுத்தியது. இது புதிதாக பணியமர்த்தப்பட்ட வொல்வோ பொருத்தும்மேடை தொழிலாளியை (assembly worker) விட 153 மடங்கு அதிகமாகும்.

வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு "இது ஒரு தொழிலாளர் ஒப்பந்தம் அல்ல, ஆனால் ஆறு ஆண்டுகால தொழில்துறை அடிமைத்தனத்திற்கான விற்பனை ஒப்பந்தம்" என்று கூறி அதற்கு "இல்லை" என்று வாக்களிக்குமாறு ஒரு அறிக்கையை வினியோகிக்கிறது. ஒரு ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது இதில் பல அடுக்கு முறையை ஒழித்தல், 25 சதவிகித ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உதவி, எட்டு மணி வேலைநேர பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு திட்டம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளில் வெட்டுக்கள் இல்லை என்பவை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

ஒப்பந்தத்தை நிராகரித்தால் நீண்ட, பயனற்ற வேலைநிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் தொழிலாளர்களை UAW அச்சுறுத்துவதற்கான முயற்சிகளை இந்த குழு எதிர்க்கிறது.

தொழிலாளர்கள் ஒரு தீவிரமான போராட்டத்திற்குத் தயாராக உள்ளனர். ஆனால் அத்தகைய போராட்டத்தை UAW மற்றும் AFL-CIO ஆல் தனிமைப்படுத்தவோ அல்லது தோல்விக்கு இட்டுச்செல்லவோ விடமுடியாது. ஒரு போராட்டத்தை நடத்தி வெற்றிபெற, தொழிலாளர்கள் UAW இன் 790 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியில் இருந்து முழு ஊதியம் பெற்ற வேண்டும். மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் தகமை மற்றும் பென்சில்வேனியா மற்றும் மேரிலாந்தில் உள்ள மக்-வொல்வோ ஆலைகள் மற்றும் பிற தொழிலாளர்கள் பகுதிகளுக்கு போராட்டத்தை பரப்பவும் வேண்டும்.

ஏப்ரல் 30 ம் தேதி இரண்டு வார வேலைநிறுத்தத்தை UAW திடீரென நிறுத்தியமை நிறுவனம் 2,000 வாகனங்களை சேமித்து வைக்க அனுமதித்துள்ளது. "நிறுவனம் ஒரு புயலுக்கு தயாராகி வருகிறது" என்று ஒரு வொல்வோ தொழிலாளி WSWS இடம் கூறினார்.

"இது நடைபெறும் வரை நாங்கள் வெளியே இருக்க தயாராக இருக்கிறோம்," என்று மற்றொரு வொல்வோ தொழிலாளி கூறினார். “அவர்களை பாதிக்கச்செய்ய இரண்டு வாரங்கள் போதாது. ஆனால் வேலைநிறுத்தத்தில் இருக்க, நாங்கள் வேலைநிறுத்த நிதியை பெறவேண்டும். மக்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி நீண்டகாலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனுமதிக்க வேலைநிறுத்த ஊதியம் வாரத்திற்கு 750 டாலராக உயர்த்தப்பட வேண்டும்.

“வேலைநிறுத்த நிதியைக் கட்டுப்படுத்துவதால் தேசிய தொழிற்சங்கமே எங்கள் மீது தாக்கத்தை கொடுக்கின்றதே தவிர நிறுவனம் அல்ல. நம்மில் சிலர் நீண்ட வேலைநிறுத்தத்திற்காக சேமித்துள்ளோம். ஆனால் பலர், குறிப்பாக இளைய தொழிலாளர்கள் மாதாந்த சம்பள காசோலையை நம்பி வாழ்கின்றனர். எங்களுக்கு ஐக்கியம் தேவை. அதாவது தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட போதுமான வேலைநிறுத்த ஊதியம் கிடைக்க வேண்டும்."

வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவின் அறிக்கைகள் மற்றும் WSWS இன் கட்டுரைகள் ஆலையில் பரவலாக பரப்பப்பட்டு, தொழிலாளர்களின் ஆதரவையும், UAW இன் விரோதத்தையும் பெற்றுள்ளன. "UAW இற்கான பகிரங்க கடிதத்தையும் மற்றும் உங்கள் செய்திமடல்களையும் நான் படித்திருக்கிறேன். ஏனெனில் தொழிலாளர்கள் அவற்றை ஓய்வெடுக்கும் அறைகளின் மேசைகளில் விட்டுவிடுகிறார்கள்" என்று ஆலையில் 15 ஆண்டுகள் பணிபுரியும் ஒரு தொழிலாளி கூறினார்.

உங்களை “அவர்கள் ஒரு தொழிற்சங்க உடைப்பு கூட்டம்” என்று தொழிற்சங்கம் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், UAW இரண்டு அடுக்கு ஊதியங்களை ஏற்றுக்கொண்டபோது தொழிற்சங்கத்தை உடைத்தது. தொழிற்சங்கம் தன்னைத்தானே உடைத்துக் கொண்டது. உங்கள் செய்திமடல் அதன் அனைத்து ஆராய்ச்சிகளிலும் எங்களுக்கு உதவும் ஒரு அற்புதமான வேலையைச் செய்கிறது” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக UAW வாக்குச்சீட்டுக்களால் நிரப்பும் சாத்தியம் குறித்து தனது சக ஊழியர்களை எச்சரித்த அவர், “ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் தங்களின் 'இல்லை' என்ற வாக்களிப்பு சீட்டை படம் எடுக்கும்படி நான் தொழிலாளர்களிடம் கூறுகிறேன். எனவே UAW இனால் அதன் மோசடியை நிறைவேற்ற முயற்சிக்கமுடியாது. இதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகக் கூறிய ஒரு நபரருடனும் கூட நான் பேசவில்லை. என்னை கோபப்படுத்துவது இந்த இரண்டு அடுக்கு முறையாகும். UAW இதை இல்லாமல் செய்துவிட்டதாக கூறுகிறது, ஆனால் நீங்கள் ஒப்பந்தத்தின் அடுத்த பக்கத்தினை திருப்பும்போது எல்லா அடுக்கு முறைகளையும் காணலாம்.

"நான் பணியமர்த்தப்பட்டபோது, உயர்மட்ட ஊதியத்தை அடைய இரண்டு ஆண்டுகள் ஆனது. பின்னர் அது மூன்று ஆண்டுகள் ஆனது, இப்போது இது ஆறு ஆண்டு நீண்ட ஒப்பந்தமாக இருக்கும். சிலர் அதை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள். தங்களுக்கு அடுத்தபடியாக வேலை செய்யும் நபரை விட 10 டாலர் குறைவாக சம்பாதிக்கும் போது யாராவது தங்கள் வேலையைப் பற்றி கவனம்செலுத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வேறெங்கும் இங்கு இருந்ததைவிட சிறப்பாக வேலை செய்ய முடியாது. 1980 களில், வொல்வோவில் வேலைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புக்காக மக்கள் வெளியே தூங்கினர். இப்போது அவர்கள் விரும்புவது உங்களிடமிருந்து அதிக வேலையை செய்விக்க வேண்டும், உங்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது. முன்னேற நான் யாருடைய கழுத்தையும் அறுக்க விரும்பவில்லை. எல்லோரும் சமமாக இருக்க வேண்டும், ஒரே ஊதியம் பெறவேண்டும். ஒரு தொழிற்சங்கம் செய்ய வேண்டியது இதுதான்."

ஃபோர்டில் 1941 ஆம் ஆண்டின் கடுமையான வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் வென்ற எட்டு மணி வேலைநேரத்தை UAW கைவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். "அவர்கள் ஏற்கனவே வர்ணம் பூச்சு செய்யும் இடத்தில் 10 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்கள் 10 மணிநேர, வாரத்திற்கு நான்கு நாள் அட்டவணையை கொண்டு வருகிறார்கள். எனவே அவர்கள் எட்டு மணி நேரத்திற்குப் பின்னர் மேலதிகநேர ஊதியத்தை செலுத்த வேண்டியதில்லை. ஒரு வாரத்தில் 40 மணித்தியாலத்திற்குப் பின்னர் மட்டுமே இது கிடைக்கும். ஆனால் வேலைக்குப் பின்னரும் எனக்கு ஒரு வாழ்க்கை உள்ளது.

"ஒரு வேலைநிறுத்தம் உதவும். நமக்குத் தேவையானதைப் பெறுவதற்கு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட அதில் ஈடுபட நான் தயாராக இருந்தேன். எங்களிடம் இப்போது அதிக திறன் உள்ளது. நாங்கள் அவற்றை மூடிவிட்டால், நிறுவனம் நுண்சில்லுகளை (microchips) பெறுவதற்காக வரிசையில் பின்வரிசையில் நிற்க வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே இதற்கான பற்றாக்குறை உள்ளது.”

Loading