"ஆய்வக கசிவு" ஆதரவாளர் நிக்கோலஸ் வேட் அவரின் 2014 நூலில் இனவாத போலி-விஞ்ஞானத்தை முன்நகர்த்தினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம் நெடுகிலும், நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என இவை அனைத்துமே சீனாவின் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து தான் கோவிட்-19 வெளியிடப்பட்டது என்ற கோட்பாட்டின் "நம்பகத்தன்மையை" அங்கீகரித்து தலையங்கங்களும் மற்றும் வாசகர் தலையங்கங்களையும் (op-eds) பிரசுரித்தன.

இந்த தலையங்கங்கள் மற்றும் வாசகர் தலையங்கங்களில் பெரும்பாலானவை முன்னாள் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையாளரான நிக்கோலஸ் வேட் எழுத்துக்களை மேற்கோளிடுகின்றன, அவர் மே 5 இல் அணுசக்தி விஞ்ஞானிகள் தகவலேட்டின்  (Bulletin of the Atomic Scientists) ஒரு கட்டுரையில், அப்பட்டமான அரசியல் புரளியாக தொடங்கிய ஒரு விஷயத்தைப் போலி-விஞ்ஞான மொழிகளில் மாற்றுகிறார்.

வௌவால் வைரஸ்கள் மீதான சீனாவின் முன்னணி நிபுணர் ஷி ஜெங்-லி (Shi Zheng-li), விலங்கியல் வல்லுனர் பீட்டர் தாஸ்ஸாக்குடன் (Peter Daszak) இணைந்து, வௌவால் கொரோனா வைரஸ்களை மரபணுரீதியில் மாற்றுவதற்காக தேசிய சுகாதார அமைப்புகளிடமிருந்து (National Institutes of Health) நிதி பெற்றதாகவும், அவ்விதத்தில் SARS-CoV-2 ஐ உருவாக்கி, வூஹான் நகருக்குள் அது வெளிப்பட அனுமதிக்கப்பட்டதாகவும் வேட் வாதிட்டார்.

Nicholas Wade in 2005 (Photo: Jane Gitschier / Creative Commons) and the cover of his 2014 book, "A Troublesome Inheritance'

ஆனால் வேட் தொடர்ச்சியான ஜோடிப்பாளராக அறியப்படுகிறார் என்பதையும், இனவாத போலி-விஞ்ஞானத்திற்கு இவர் முன்னணியில் வக்காலத்து வாங்குபவர் என்பதையும், இனங்களுக்கு இடையே நிலவும் அறிவுஜீவித வேறுபாடுகளுக்கு மரபணுவே அடித்தளமென வாதிட்ட இவரது 2014 நூல், யாருடைய ஆராய்ச்சிகளை அவர் மேற்கோளிட்டாரோ, அந்த விஞ்ஞானிகளாலும், அத்துடன் ஏனைய 140 க்கும் அதிகமான முன்னணி மனித வளர்ச்சித்துறை உயிரியல் நிபுணர்களாலும் கண்டிக்கப்பட்டது என்பதையும் அந்த கட்டுரைகளில் எதுவும் குறிப்பிடவில்லை.

Ku Klux Klan அமைப்பின் முன்னாள் பெருந்தலைவர் டேவிட் டியூக்கும் —ஏனைய நவ நாஜிக்களும்— வேட் இன் நூலை "யூத மேலாதிக்கவாதிகளுக்கு" எதிரான ஓர் அடியென்று பாராட்டியதையும் அவை குறிப்பிடவில்லை.

கடந்த மாதத்தில், வேட்டின் எழுத்துக்கள் பின்வரும் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, கோவிட்-19 வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற அவற்றின் கூற்றுகளுக்கு அவை அவரின் வாதங்களை அச்சாணியாக பயன்படுத்தின:

• "இந்த பெருந்தொற்றின் தோற்றுவாய்கள் மீது இரண்டு சாத்தியமான கோட்பாடுகள் ஏற்புடையதாக உள்ளன. உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தலைப்பில், வாஷிங்டன் போஸ்ட் மே 17 இல் ஒரு தலைங்கம் வெளியிட்டது:

ஆராய்ச்சியின் துணைவிளைவாக ஏதேனும் கசிவு ஏற்பட்டதா, அல்லது தொழிலாளர்களின் கவனக்குறைவால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதா? அந்த ஆராய்ச்சி, மிகவும் பாதுகாப்பான BSL-4 ஆய்வகங்களுக்குப் பதிலாக பாதுகாப்பு குறைவான BSL-2 ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டதா? விஞ்ஞானத்துறை எழுத்தாளரான நிக்கோலஸ் வேட் அணுசக்தி விஞ்ஞானிகள் தகவலேட்டில் (Bulletin) குறிப்பிட்டதைப் போல, மனித செல்களில் தொற்றுத்தன்மையை அதிகரிக்கும் மரபணு அம்சங்களைச் சேர்க்கும் விதத்தில், டாக்டர் ஷி அந்த ஆய்வகத்தில் வைரஸை வெற்றிகரமாக மாற்றியமைத்தாரா?

• "வூஹான் ஆய்வக கசிவு கோட்பாடு திடீரென்று எப்படி நம்பகமானதாக மாறியது" என்று தலைப்பிட்டு, வாஷிங்டன் போஸ்ட் மே 25 இல் "உண்மை சரிபார்ப்பு" கட்டுரை ஒன்றை வெளியிட்டது:

முன்னாள் நியூ யோர்க் டைம்ஸ் விஞ்ஞானத்துறை நிருபர் நிக்கோலஸ் வேட், அணுசக்தி விஞ்ஞானிகளின் தகவலேட்டில் எழுதுகையில், ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து, ஆய்வக-கசிவு கோட்பாட்டுக்கு ஒரு வலுவான விசயத்தை உருவாக்குகிறார்.

• "ஆய்வக கசிவு கோட்பாடு ஏன் முக்கியம்" என்ற தலைப்பில், மே 29 இல் Ross Douthat நியூ யோர்க் டைம்ஸ் இன் வாசகர்-தலையங்க பக்கத்தில் எழுதினார்:

நுண்மரபணு பரவல்-சார் ஆராய்ச்சி (gain of function research) என்றழைக்கப்படுவதில், அதிகளவில் பரவக்கூடிய உயிராபத்தான வைரஸாக கோவிட்-19 வைரஸ் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பாக உண்மையாக இருக்கலாம், இப்பத்திரிகையின் முன்னாள் விஞ்ஞானத்துறை எழுத்தாளர் நிக்கோலஸ் வேட் இந்த சாத்தியக்கூறை முன்வைத்தார்.

• "Media Groupthink நிறுவனமும், ஆய்வக-கசிவு கோட்பாடும்" என்ற தலைப்பில், நியூ யோர்க் டைம்ஸின் மே 31 வாசகர்-தலையங்கத்தில் பிரெட் ஸ்டீபன்ஸ் எழுதினார்:

கோவிட் "இயற்கையாக தோன்றியது" என்று உத்வேகத்தோடு வலியுறுத்தி, 27 விஞ்ஞானிகள் கையொப்பமிடப்பட்ட, லான்செட் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பெப்ரவரி 2020 கடிதத்தை அங்கீகரித்து ஏற்பது விஞ்ஞானத்துறை நிருபர்களுக்குப் புத்திசாலித்தனமாக இருக்குமா? அல்லது அந்த கடிதத்தின் தலைமை எழுத்தாளருக்கும் வூஹான் ஆய்வகத்திற்கும் இடையிலான உறவுகளை (விஞ்ஞானத்துறை எழுத்தாளர் நிக்கோலஸ் வேட் அணுசக்தி விஞ்ஞானிகள் தகவலேட்டின் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரையில் சுட்டிக்காட்டுவதைப் போல, இந்த உண்மை தான் பல மாதங்களாக பகிரங்க புரிதலாக இருந்துள்ளது) அந்த நிருபர்கள் ஆராயாமல் இருந்தால் புத்திசாலித்தனமாக இருக்குமா?

• "அந்த வைரஸ், ஆய்வகத்திலிருந்து அல்ல, இயற்கையாக வெளிப்பட்டது என்ற கருத்து சிதைந்து வருகிறது" என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்டில் Marc A. Thiessen ஜூன் 3 இல் ஒரு வாசகர்-தலையங்கம் எழுதினார்:

விஞ்ஞானம், இயற்கை குறித்தும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸிலும் அண்மித்து 50 ஆண்டுகளாக விஞ்ஞானத்துறை எழுத்தாளராக இருந்து வரும் நிக்கோலஸ் வேட், SARS1 தொற்றுநோயின் போது, அணுசக்தி விஞ்ஞானிகள் தகவலேட்டில் அவரின் விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார், இடைப்பட்ட நோய்பரப்பு உயிர்கள் (அதாவது, மனித நுகர்வுகளுக்காக வளர்க்கப்படும் வளர்ப்பு பூனைகள்) வெறும் நான்கு மாதங்களில் அடையாளம் காணப்பட்டது.

• "சீனா, பௌசி மற்றும் கோவிட் தோற்றுவாய்கள்" என்ற தலைப்பில், ஜேம்ஸ் ஃப்ரீமன் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் மே 7 வாசகர்-தலையங்கத்தில் பின்வருமாறு எழுதினார்:

அணுசக்தி விஞ்ஞானிகள் தகவலேடு இவ்வாரம் வெளியிட்ட வைரஸ் சாத்தியக்கூறுகள் குறித்த ஒரு முழுமையான கணக்கில், சீன ஆய்வகம் தான் இந்த உலகளாவிய வேதனைக்கு ஆதாரமாக இருக்கக்கூடும் என்று நிக்கோலஸ் வேட் வாதிடுகிறார்.

ஓர் இடர்பாடான மரபுரிமை: மரபணுக்கள், இனம் மற்றும் மனித வரலாறு என்ற இந்த தலைப்பில் மே 6, 2014 இல் வேட் ஒரு நூல் வெளியிட்டார். நியூ யோர்க் டைம்ஸில் டேவிட் டாப்ஸ்திறனாய்வின்படி, "மூன்று முக்கிய இனங்கள்," ஆபிரிக்கர்கள், காகாசியர்கள் மற்றும் கிழக்கு ஆசியர்கள், இவர்கள் தான் மரபணுரீதியில் பெரும்பாலான உட்கிளை உயிரனங்களாக பிரிந்த, தனித்துவமான இனங்கள், அவர்களின் மரபணு வேறுபாடுகள் "மேற்கத்திய வளர்ச்சியின்" அடியிலிருப்பதை நவீன மரபணுவியல் எடுத்துக்காட்டுவதாக அந்நூல் கூறுகிறது.

"இதற்கு சான்றாக, ஆபிரிக்க-அமெரிக்கர்களிடம் அவநம்பிக்கை மற்றும் அதிக வன்முறையை உருவாக்கும் குறிப்பிட்ட மரபணு வகைகளை பற்றியும்", நவீன பொருளாதார அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை அவர்கள் எதிர்ப்பதை விளக்குவதாகவும்" வேட் கூறுவதாக அந்த நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

“அவர் இம்மாதிரியான விஷயத்தைத் தான் மீண்டும் மீண்டும் செய்கிறார்: அதாவது, அவர் எப்போதும் தொலைதூர விஷயங்களையும், ஊகங்களையும், பொருத்தமற்ற கருத்துக்களையும் சேகரிக்கிறார், பின்னர் அவை அவரது விஷயத்தை உறுதிப்படுத்துவதாக அறிவிக்கிறார் … இதன் விளைவு ஆழமாக குறைபாடுள்ள, ஏமாற்றும் தன்மையிலான மற்றும் அபாயகரமான நூலாக வந்து முடிகிறது,” என்று அறிவித்து, அது அவருடைய போலி-விஞ்ஞான அணுகுமுறையை அப்பட்டமாக தோலுரிக்கிறது.

Scientific American பத்திரிகையில் எழுதிய எரிக் மைக்கல் ஜோன்சன், "வெள்ளையின பலத்தின் தோற்றுவாய்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் இதே போன்ற விமர்சனங்களை முன்வைத்தார், இது வேட் நூல் மீது கடுமையான ஒரு விமர்சனத்தை வழங்குகிறது:

நிக்கோலஸ் வேட் ஓர் இனவாதி இல்லை. ஓர் இடர்பாடான மரபுரிமை என்ற அவரின் புதிய நூலில், நியூ யோர்க் டைம்ஸின் அந்த முன்னாள் விஞ்ஞானத்துறை எழுத்தாளர் இதை வெளிப்படையாக குறிப்பிடுகிறார். “இனவாத வகைப்பாடுகளை ஒரு சாத்தியமான விளக்கக் காரணியாக பரிசீலிப்பதானால், தன்னியல்பான இனவாதி என்றொருவர் இல்லை.” பின்னர் அவர், வெள்ளை இனத்தவர்கள் அவர்களின் மரபணுக்களுக்காக சிறந்தவர்கள் என்று விளக்குகிறார்.

Scientific American கட்டுரை வேட் புத்தகத்திலிருந்து பின்வரும் பத்திகளைச் சுட்டிக் காட்டுகிறது:

எஸ்கிமோவின் உடலமைப்பைப் பார்க்கையில், ஓர் ஆர்க்டிக் சூழலில் உயிர்வாழத் தக்க மனித வடிவத்தை ஏற்படுத்தி உள்ள ஒரு பரிணாம நிகழ்வுபோக்கு வேலையைச் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. திபெத்தியர்களைப் போல, உயரமான இடங்களில் வாழும் மக்கள், வேறு விதத்தில் கடுமையான சூழல்களுக்குத் தகவமைத்துக் கொள்கிறார்கள்; இந்த விஷயத்தில், இரத்த அணு நிகழ்முறையில் நடக்கும் மாற்றங்கள் குறைவாகவே தெரியும் என்றாலும் மரபணுரீதியில் இவை அடையாளம் காணப்பட்டுள்ளன. யூதர்களை முதலாளித்துவத்திற்கு தகவமைத்தமை அத்தகைய மற்றொரு பரிணாம நிகழ்வுபோக்காகும். (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).

இந்த பத்திக்காகவும் மற்றும் வேறு சில பத்திகளுக்காகவும், வேட் இன் நூல் முன்னணி வெள்ளையின மேலாதிக்கவாதிகள் மற்றும் யூத-எதிர்ப்புவாதிகளால் பாராட்டப்பட்டது, அதை "யூத மேலாதிக்கவாதிகள் விஞ்ஞானபூர்வ விவாதத்தின் வாயில்களை எவ்வாறு காவல் செய்ய முயல்கிறார்கள் என்பது மீதான அருமையான ஆய்வு" என்று வரவேற்ற டேவிட் டியூக்கின் வலைத் தளமும் அதில் உள்ளடங்கும்.

The fascist Daily Stormer praised Wade's book

வேட் யாரை தவறாக பொருள்படுத்தினாரோ அந்த விஞ்ஞானிகள் நியூ யோர்க் டைம்ஸிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் அவரின் புத்தகத்திற்குக் கண்டனம் தெரிவித்தனர், “மனித சமூகங்களிடையே நிலவும் வேறுபாடுகள் பற்றிய அவரது வாதங்களை ஆதரிப்பதற்காக எங்கள் துறை ஆராய்ச்சியை அவர் தவறாக கையாள்வதாக" அவர்கள் கண்டித்தனர்.

மனித மரபணு வேறுபாடுகள் குறித்த எங்கள் ஆராய்ச்சியின் ஒரு முழுமையற்ற மற்றும் தவறான விபரங்களை ஊகங்களுடன் சேர்த்து வேட் அடுத்தடுத்து முன்வைக்கிறார், இயற்கை சூழல் ஒத்திசைவு பற்றிய அவரின் சமீபத்திய கருத்துக்கள் உலகளவில் சமயோசித அறிவு (I.Q.) சோதனை முடிவுகளிலும், அரசியல் அமைப்புகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியிலும் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. எங்கள் கண்டுபிடிப்புகள் அவரின் அனுமான வேலைகளை உறுதிப்படுத்துவதாக, வேட் கூறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம். அவை அவ்வாறு இல்லை… மக்கள் மரபணுவியல் துறையில் வேட் கருத்துக்களுக்கு எந்த ஆதரவும் இல்லை என்பதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்.

அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த மூன்று முன்னணி சக-நிபுணர்களுடன் மக்கள் மரபியல் மற்றும் பரிணாம உயிரியல் துறையின் மொத்தம் 143 கல்வித்துறைசார் உறுப்பினர்களும் இணைந்தனர்.

வேட் எழுத்துக்களை மேற்கோளிட்டு நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் டஜன் கணக்கான பக்கங்களில், வெள்ளை மேலாதிக்கவாத போலி-விஞ்ஞானத்தைப் பலமுறை இட்டுக்கட்டி வழங்கியவராக அவரது பாத்திரம் குறித்து ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை.

இது ஒரு வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது: அமெரிக்காவின் மூன்று முன்னணி செய்தித்தாள்கள் பயன்படுத்தப்படும் "உண்மை சரிபார்ப்பு பகுதி" மூலம் ஒரு முன்னணி வெள்ளையின மேலாதிக்கவாத சிந்தனையாளரும் மற்றும் தொடர் பொய்யருமான ஒருவர் எவ்வாறு மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறார்?

ஆனால் இதற்கு முரண்பாடாக, "வேறெந்த வம்சாவழியை விடவும் அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்களுக்கு சராசரி சமயோசித புத்தி (I.Q.) அதிகமாக உள்ளது, இதற்கு நம்பகமான புள்ளிவிபரங்கள் உள்ளன" என்று அறிவித்த Gregory Cochran, Jason Hardy மற்றும் Henry Harpending ஆகியோரின் 2005 ஆய்வறிக்கையிலிருந்து நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பிரெட் ஸ்டீபன்ஸ் மேற்கோளிட்ட போது, இதே நியூ யோர்க் டைம்ஸ் தர்மசங்கடத்துடன் அதை திரும்ப பெறுவதாக அறிவிக்க நிர்பந்திக்கப்பட்டு, அது பின்வருமாறு அறிவித்தது:

பிரெட் ஸ்டீபன்ஸ் கட்டுரையின் சென்ற பதிப்பு 2005 ஆய்வறிக்கையிலிருந்து புள்ளிவிபரங்களை மேற்கோளிட்டது, அந்த ஆய்வறிக்கை அஷ்கெனாசி யூதர்களிடையே வம்சாவழியாக வரும் அறிவுஜீவித அடித்தளத்தின் புனைவுகோள்களை முன்வைத்தது. அதை வெளியிட்டதற்குப் பின்னர் தான், திரு. ஸ்டீபன்ஸூம் மற்றும் அவரது பதிப்பாசிரியர்களும், 2016 இல் மரணமடைந்த, அந்த ஆய்வறிக்கை எழுத்தாளர்களில் ஒருவர், இனவாத கண்ணோட்டங்களை ஊக்குவித்திருந்ததை அறிந்தனர். திரு. ஸ்டீபன்ஸ் அந்த ஆய்வையோ அல்லது அதன் ஆசிரியர்களது கருத்துக்களையோ ஆமோதிக்கவில்லை என்றாலும், அதை விமர்சனமின்றி மேற்கோளிடுவது தவறாகும்.

ஆனால், “யூத மரபணுக்களுக்கும் அறிவுஜீவிதத்திற்கும் இடையிலான தொடர்புகளைத் தோண்டி எடுக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஒரேயொரு தீவிர முயற்சி" என்பதாக, அந்த ஆய்வறிக்கையின் சுருக்கவுரையை வேட் அவரின் 2014 நூலில் முழுமையாக தழுவி இருந்தார்.

நியூ யோர்க் டைம்ஸ் திறனாய்வாளர் 2014 இல் வேட் இன் எந்தவிதமான வாதமுறையைக் கண்டித்தாரோ துல்லியமாக, வேட், "வூஹான் ஆய்வகம்" சதிக் கோட்பாட்டை ஆதரிக்கும் அவரின் வாதங்களில், அதையே பயன்படுத்துகிறார்: அதாவது, "அவர் எப்போதும் தொலைதூர விஷயங்களையும், ஊகங்களையும், பொருத்தமற்ற கருத்துக்களையும் சேகரிக்கிறார், பின்னர் அவை அவர் விஷயத்தை உறுதிப்படுத்துவதாக அறிவிக்கிறார்.”

ட்விட்டரில் உலக சோசலிச வலைத் தளம் வினவிய கேள்விக்குப் பதிலளித்த ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக நுண்கிருமியியல் துறை டாக்டர் ஏஞ்சலா ராஸ்முசென், வேட் இனது "மனித மரபுவழி பற்றிய நூல், சொல்லப் போனால், இனவாத போலி-விஞ்ஞான கண்ணாடியின் வழியாக பார்க்கப்பட்டு சிதைவுற்ற, மரபுவழி அடித்தள அறிவுஜீவிதம் பற்றிய அவரின் உச்சபட்ச நம்பிக்கையாக உள்ளது,” என்று நிறைவு செய்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், "ஆகவே வைரஸ் தோற்றுவாய்கள் குறித்து ஒரே மாதிரியான இனவாத அடித்தளத்தில் கட்டப்பட்ட புனைவுகோள்களை அவர் முன்வைக்கும் போது, இனம் & அறிவுஜீவிதத்திற்கும் இடையே நடப்பில் இல்லாத மரபுவழி தொடர்புகளைக் குறித்த அறிவுகெட்ட நூல்களுக்குத் துணை நிற்பவரான அவரின் முன்தவறுகளை" பிரதான பத்திரிகைகள் "கவனத்தில் கொள்ளவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அனைத்து மூன்று முன்னணி அமெரிக்க பத்திரிக்கைகளும் பல மதிப்புக்கேடான இட்டுக்கட்டுக்களைச் செய்த ஒருவரை, வூஹான் ஆய்வக "கோட்பாட்டை" ஊக்குவிப்பதற்கான அவற்றின் முயற்சிகளில் அந்த இனவாத போலி-விஞ்ஞான ஊக்குவிப்பாளரைச் சார்ந்திருப்பது அனேகமாக எதை கணக்கில் கொண்டு வரும்?

விமர்சனத்திற்குட்படுத்தாமல் வேட் கருத்துக்களை மேற்கோளிடுவதையும் மற்றும் அதைச் சார்ந்திருப்பதையும் குறித்து விளங்கப்படுத்துவதானால், அந்த "கோட்பாடு" ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரு பொய் என்பதே உண்மையாகும். அந்த பொய்யை ஆதரிப்பவர்கள் எந்தவொரு கூற்றையும் —அது எந்தளவுக்கு அருவருப்பாக மதிப்புகேடாக இருந்தாலும் கவலையின்றி— கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாரியளவிலான இறப்புகள் மற்றும் துயரங்களுக்குப் பொறுப்பான கொள்கைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி, அதை சீனாவுக்கு எதிரான தேசியவாத வெறுப்பாகவும் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவமாகவும் மாற்றும் அவர்களின் முன்கருதிய நோக்கங்களுக்காக கூடுதலாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

Loading