பைடென் ஜி7 மாநாட்டில் சீன-விரோத திட்டநிரலை முன்னெடுப்பதுடன், பிரெக்ஸிட் பணிக்கு ஜோன்சனை அழைத்துச் செல்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்தில் நடக்க உள்ள இவ்வார இறுதி ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் சீன-விரோத அச்சை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் ஆதிக்கம் செலுத்த இருக்கும்.

கடந்த சனிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை ஒன்றில், பைடென் குறிப்பிடுகையில், "வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் 21ஆம் நூற்றாண்டு விதிகளைச் சீனாவோ அல்லது வேறெந்த நாடோ அல்ல [அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளுமே] எழுதும்" இதை உறுதிப்படுத்துவதே அவர் திட்டம் என்றார். அவர் கருத்துக்கள், இந்த ஏப்ரலில், காங்கிரஸ் சபையில் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்த அவரின் ஓர் உரையை எதிரொலிக்கின்றன, அப்போது அவர் கூறினார், “21ஆம் நூற்றாண்டை வெல்வதற்காக சீனா மற்றும் பிற நாடுகளுடன் நாம் போட்டியில் உள்ளோம்." வர்த்தக மற்றும் இராணுவ மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான தயாரிப்பில், செவ்வாய்கிழமை, அமெரிக்க செனட் 250 பில்லியன் டாலர் "சீனா உடனான போட்டித்திறன் மசோதாவை" (China competitiveness bill) நிறைவேற்றியது.

இந்த மூலோபாயத்திற்கு ஐரோப்பிய சக்திகளின் ஆதரவைப் பெறுவது முக்கியமாக உள்ளது. புளூம்பேர்க்கின் ஒரு கருத்துரையில், முன்னாள் நேட்டோ தலைவரும் அமெரிக்க கடற்படை அட்மிரலுமான ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் குறிப்பிடுகையில், "வளர்ந்து வரும் இந்த பனிப்போர் ஒருங்கிணைப்பில் ஒரு நம்பகமான சமபலத்தை எட்டுவதற்கான அமெரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஐரோப்பாவிடம் மட்டுமே மக்கள்தொகையும், புவி அமைப்பும், மதிப்புகள் மற்றும் —அனைத்திற்கும் மேலாக—பொருளாதார பலமும் உள்ளது...” என்றார்.

"சீன அச்சுறுத்தலை எதிர்த்து நிற்க தேவைப்படும் அந்தளவிலான பெருமதிப்புகளும், பொருளாதாரம், இராணுவ ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் சங்கமத்தை அமெரிக்காவினால் ஐரோப்பாவில் மட்டுமே காண முடியும்."

50 ஆண்டுகால மூத்த அரசியல் அனுபவஸ்தரான பைடென், ட்ரம்பின் வெறித்தனமான சீன-விரோத கொள்கை நடைமுறைகளை ஒரு நீண்டகால மூலோபாயமாக மாற்றி வருவதுடன், கூட்டாளிகளை ஒரு புதிய "பனிப்போருக்குள்" இழுத்து வருகிறார், இது முன்பு போலவே சர்வாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டமாக கட்டமைக்கப்படும்.

பிரிட்டனில் RAF மில்டன்ஹால் நகரில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தில், ஜனாதிபதியாக அவரின் முதல் உரையில் பைடென் அறிவித்தார், “அமெரிக்கா மீண்டும் வந்து விட்டது, உலக ஜனநாயகங்கள் ஒன்றாக நிற்கின்றன… நாங்கள் வலிமையுடன் வழிநடத்த பொறுப்பேற்றுள்ளோம் என்பதை தெளிவுபடுத்தப் போகிறோம்."

பத்து "சந்தை ஜனநாயகங்களின்" விரிவாக்கப்பட்ட "D-10" குழுவிற்கான முன்மொழிவுகளை சமிக்ஞை காட்டும் விதமாக, இந்த திட்டநிரலை கூடுதலாக விரிவாக்க, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் இந்தியாவையும் இந்த உச்சி மாநாட்டுக்கு அழைத்துள்ளார்.

சீனா தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நிறைய இடைவெளியை அரசியல் விமர்சகர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர். .ஐரோப்பிய சக்திகள் அவற்றுக்கென சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளன, அவற்றை அவை முற்றிலுமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக தியாகம் செய்ய விரும்பாது. சீனா கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்காவை முந்திச் சென்றது, இங்கிலாந்தின் மிகப்பெரிய இறக்குமதி சந்தையாகவும் ஜேர்மனியின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் சீனா விளங்குகிறது.

ஆனாலும் இன்னும் அதிக போர்க்குணமிக்க சீன-விரோத நிலைப்பாட்டை நோக்கிய போக்கு தெளிவாக உள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தும் தென் சீனக் கடலில் அமெரிக்க ஆத்திரமூட்டல்களில் பங்கேற்க போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. வீகர் மக்கள் பிரச்சினையில் ஐரோப்பிய ஒன்றியம் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதித்த பின்னர், அது சீனாவுடனான ஒரு மிகப் பெரிய முதலீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.

ஜி7 உச்சிமாநாடு இந்த அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்படும். வெளியில் கசிய விடப்பட்ட அதன் வரைவு கூட்டறிக்கை, வீகர் மக்களைப் பெய்ஜிங் கையாளுவது சம்பந்தமாக அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கையெழுத்து கோருவது மட்டுமல்ல, கோவிட்-19 வைரஸ் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து தான் வெளிப்பட்டது என்ற கேடுகெட்ட பொய்யை ஊக்குவித்து, அந்த வைரஸின் தோற்றுவாய்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) புதிய விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதையும் மையமாக கொண்டுள்ளது.

நேற்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த நச்சார்ந்த போர் பிரச்சாரத்திற்கு அதன் ஆதரவை சமிக்ஞை செய்தது, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் கூறினார், "இந்த தொற்றுநோயின் மூலத்தை உண்மையாகவே கண்டறிய என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ அவை விசாரணையாளர்களுக்கு முழுமையாக கிடைப்பது அவசியம்,” என்றார்.

சீனாவின் ஒரே பாதை ஒரே இணைப்பு முன்முயற்சியை (Belt and Road initiative) தடுக்க ஜி7 தலைமையிலான உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டத்திற்கும் பைடென் அழுத்தம் கொடுக்க உள்ளார். அடுத்த வார அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில், "5ஜி, மின்னணு செமிகண்டக்டர்கள், விநியோக சங்கிலிகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப விதிகள் மற்றும் தரமுறைகள் மீது ஒருங்கிணைப்பை அதிகரிக்க", பைடெனும் அவரது ஐரோப்பிய சமபலங்களும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலுக்கான திட்டங்களையும் விவாதிப்பார்கள் என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. இது, உறுப்பினர்கள் கூட்டாக சீனாவை எதிர்த்தாலும் அதேவேளையில் அவர்களின் எதிரெதிரான பொருளாதார அபிலாஷைகளைப் பின்தொடர அவற்றுக்கான ஒரு கட்டமைப்பை ஸ்தாபிக்கும்.

இங்கிலாந்தும் அமெரிக்காவும் கூட்டுப் பாதுகாப்பு, ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், இணையவழி தாக்குதல்களைக் கையாளுதல் மற்றும் நியாயமான வர்த்தக முறையை வலுப்படுத்துதல் உட்பட எட்டு துறைகளில் ஒத்துழைப்பை அமைப்பது தொடர்பான "அட்லாண்டிக் சாசனம்" ஒன்றையும் அறிவித்துள்ளன. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில், "சீனாவுக்கு ஒரு முடிவுப் புள்ளியை அனுமானிப்பது நியாயமற்றதல்ல," என்றார்.

இந்த உடன்படிக்கைகள் போர்நாடும் இராணுவவாதத்தை அடித்தளத்தில் கொண்டுள்ளன. பிரிட்டனில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களுக்கு பைடென் ஆற்றிய உரையில், “நீங்கள் தான் அமெரிக்காவின் உறுதியான எஃகில் ஆன முதுகெலும்பு, உங்களைச் சுற்றித் தான் கூட்டணிகள் கட்டமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகின்றன,” என்றார். அமெரிக்காவின் ஆயுதப் படைகளைத் "தயார் செய்வதும் பலப்படுத்துவதும்" அதன் "நிஜமான புனிதக் கடமை" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இந்த கடமையைச் சிறப்பாகச் செய்வதற்காகவும், சீனாவுக்கு எதிரான இந்த கூட்டணியின் போர் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும், திங்கட்கிழமை பைடென் புருசெல்ஸில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார். திங்களன்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டினுடனான ஒரு சந்திப்பில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறுகையில், இந்த அமைப்பு “வளர்ந்து வரும் உலகளாவிய போட்டிக்கு நமது விடையிறுப்பை அதிகரித்து வருகிறது” என்றதுடன், ரஷ்யாவும் சீனாவும் “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு எதிராக ஓர் எதேச்சதிகார பின் அழுத்தம் கொடுப்பதாக" அவர் குற்றஞ்சாட்டினார்.

ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல்கள் ஓரளவிற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன, இதனால் சீன எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவதில் பைடென் கவனம் செலுத்த முடியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டநிரலில் மாஸ்கோவின் இடத்தை ஜனாதிபதி அதற்கு நினைவுபடுத்தினார். உற்சாகத்திற்கும் கைதட்டலுக்கும் இடையே, அவர் தனது மில்டன்ஹால் உரையில் கூறுகையில், “அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேனோ அதை அவர் தெரிந்து கொள்வதற்காக…" அடுத்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கப் போவதாகவும், "ரஷ்ய அரசாங்கம் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அமெரிக்கா வேகமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் விடையிறுக்கும்,” என்றார்.

ஜி 7 கூட்டறிக்கையின் வரைவு, ரஷ்யாவின் எல்லைகளுக்குள் இருக்கும் இணையவழி குழுக்களைக் கையாள அதற்கு அழைப்பு விடுக்கிறது.

பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் உலக அரங்கில் பிரிட்டனின் அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு வழிவகையாக, பிரிட்டன் இந்த உச்சி மாநாட்டை நடத்துவதைப் பயன்படுத்திக் கொள்ளும் என்ற ஜோன்சனின் நம்பிக்கை அந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே தகர்ந்து போனது. ஐரோப்பிய ஒன்றியத்தை உடைக்கும் ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலின் அடிப்படையில், ட்ரம்ப் பிரெக்ஸிட்டை தழுவியிருந்த நிலையில், ஐரோப்பாவில் அமெரிக்காவின் கட்டளைகளைப் பிரிட்டன் முன்னெடுக்க முடியும் என்றால் மட்டுமே அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான "சிறப்பு உறவு" பயனுள்ளதாக இருக்குமென பைடென் கருதுகிறார்.

பைடென் அங்கே வந்திறங்குவதற்கு முன்னரே, அவரும் அவரது முன்னணி அதிகாரிகளும் வடக்கு அயர்லாந்து எல்லை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும் அதன் சச்சரவுக்காக பிரிட்டனைக் கடுமையாக கண்டித்தனர். ஜனாதிபதி வந்த விமானத்திலேயே BBC இக்கு வழங்கிய ஒரு பத்திரிகை குறிப்பில், அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறினார், “புனித வெள்ளி உடன்படிக்கையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும் அல்லது சேதப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அமெரிக்கா வரவேற்காது.”

பில் கிளின்டனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கத்தால் பேரம்பேசி முடிக்கப்பட்ட 1998 புனித வெள்ளி உடன்படிக்கை, வடக்கில் பெருநிறுவன முதலீட்டுக்காக இன்னும் நிலையான பொருளாதார சூழலை உருவாக்குவதற்காக வடக்கு அயர்லாந்தில் மூன்று தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.

"ஜனாதிபதி அச்சுறுத்தல்களையோ அல்லது இறுதி எச்சரிக்கையையோ விடுக்கவில்லை [!]," ஆனால் "அந்த உடன்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்," இதையும் சுலிவன் சேர்த்துக் கொண்டார்.

சுலிவனின் கருத்துக்கள், அமெரிக்க வெளியுறவு திட்ட விவகாரத் தூதர் யேல் லெம்பேர்ட் (Yael Lempert) மற்றும் பிரிட்டனின் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் லார்ட் ஃப்ரோஸ்ட் (Lord Frost) ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து கூறப்பட்டிருந்தன. அந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுமாறு லெம்பேர்ட் கூறியிருந்தார். டைம்ஸ் செய்தியின்படி, “பிரிட்டனுக்கான அமெரிக்க மிக மூத்த தூதர் யேல் லெம்பேர்ட் [பிரிட்டனின் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர்] லார்ட் ஃப்ரோஸ்டுக்குக் கூறுகையில்… அரசாங்கம் அம்மாகாண துறைமுக பரிசோதனைகளுக்கு அதன் எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் பதட்டங்களைத் "தூண்டி" வருகிறது,” என்றார்.

லெம்பேர்ட் இலண்டனுக்கு ஒரு வெளியுறவு விவகார கண்டன அறிவிக்கை (demarche), அதாவது உத்தியோகப்பூர்வ இராஜாங்க கண்டனம் வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தார், அறிவிக்கப்பட்ட கூட்டாளிகளுக்கு இடையே இவ்வாறான ஒன்று இதுவரையில் ஒருபோதும் கையாளப்பட்டதில்லை. ஜூன் 3 கூட்டத்தில், “ஃப்ரோஸ்டின் பதட்டமான எதிர்ப்பு நிலைப்பாடு மீது பைடெனின் 'பெரும் கவலை" குறித்து அவருக்குக் கூறப்பட்டது, அதில் லெம்பேர்ட் [வாஷிங்டனின்] அறிவுறுத்தல்களை நிதானமாகவும், கடுமையாகவும், உரக்கவும் கூறுமாறு கூறப்பட்டிருந்தார்,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

வடக்கு அயர்லாந்து சம்பந்தமான சச்சரவான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனிடம் இருந்து விட்டுக்கொடுப்புகளைக் கோருகின்ற நிலையில், பைடென் நிர்வாக தலையீடுகள் சரியான நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.

அயர்லாந்து தீவுக்குக் ஒரு கடுமையான எல்லை அவசியமில்லையென கூறும், வடக்கு அயர்லாந்து நெறிமுறையின் சில பகுதிகளை ஜோன்சன் தற்காலிகமாக ஒருதலைப்பட்சமாக நீக்கினால், வர்த்தகத் தடையாணைகளைக் கொண்டு பதிலடி கொடுக்க புருசெல்ஸ் சூளுரைத்துள்ளது. பிரிட்டனில் இருந்து ஐரிஷ் கடல் வழியாக வடக்கு அயர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் குளிர் இறைச்சிகளுக்கு ஜூன் 30 இல் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு இணக்கமாக வணிகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த கெடுவைப் ஒருதலைபட்சமாக நீடிக்க பிரிட்டன் அச்சுறுத்தி உள்ளது — இந்த விதிகள் குளிர்ந்த இறைச்சிகளின் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

புதன்கிழமை நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டத் தவறினர். ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் Maroš Šefčovič கூறுகையில், "வரவிருக்கும் வாரங்களில் இங்கிலாந்து கூடுதலாக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தால், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சர்வதேச சட்ட கடமைகளுக்கு இங்கிலாந்து இணங்குவதை உறுதி செய்ய விரைவாகவும், உறுதியாகவும், தயக்கமின்றியும் எதிர்வினையாற்ற வெட்கப்படாது," என்றார்.

Loading