“இது நாம் அகற்ற வேண்டிய ஒரு வைரஸ்"—டாக்டர் தீப்தி குர்தாசனி "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளைக் கண்டிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தீப்தி குர்தாசினி கோவிட்-19 சம்பந்தமான உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராவார். ”பாரிய நோய்தொற்று மூலமாக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கையை ஓர் 'அபாயகரமான மற்றும் நெறியற்ற பரிசோதனை' என்று குறிப்பிட்டு இங்கிலாந்து அரசாங்கம் அதை ஊக்குவிப்பதைக் கண்டித்த பிரித்தானிய மருத்துவ இதழின் கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் அவரும் ஒருவராவார்.

மருத்துவத் தொற்றுநோயியல் மற்றும் புள்ளிவிபரவியல் மரபணுத்துறை (clinical epidemiology and statistical genetics) பின்னணியுடன், டாக்டர் குர்தாசனி இந்தியாவின் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அவரின் உடலியல் மருந்துவதுறைக்கான மருத்துவ பட்டம் பெற்றார். 2013 இல் நிறைவடைந்த அவரது முனைவர் பணி மரபணு ரீதியாக வேறுபட்ட மக்களது நோயுடன் சம்பந்தப்பட்ட மரபணு காரணிகளை ஆய்வுக்குட்படுத்தியது. குறிப்பாக, அவர் மிகப் பெரியளவிலான மருத்துவ தரவு தொகுப்புகள் மீது இயந்திரவழி-கற்றல் வழிமுறைகளை உருவாக்கினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது, டாக்டர் குர்தாசனி அந்த பெருந்தொற்று குறித்து இன்றியமையா தகவல்களையும் பொது கருத்துரைகளையும் வழங்கி, அரசாங்கத்தின் மீதும் பொது சுகாதார நெருக்கடிக்கு அவர்கள் காட்டிய குற்றகரமான விடையிறுப்பு மீதும் ஒரு கடுமையான விமர்சகராக இருந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கையும் ஊடகங்களையும் பயன்படுத்தி அபிவிருத்தி அடைந்து வந்த நிலைமைகள் மீது தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சமூக பரவலுக்கும் பள்ளி வயது குழந்தைகளுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவதிலும் மற்றும் நீண்டகால கோவிட் அதிகரிப்பு சம்பவம் மீதான ஆராய்ச்சியிலும் அவரின் பணி மகத்தான பொதுச் சேவையாக இருந்துள்ளது. கோவிட்-19 ஐ அகற்றுவதற்காகவே அமைக்கப்பட்ட திட்டக்குழுவினது உலகளாவிய பல்துறை வல்லுனர்களின் வலையமைப்பான கோவிட் நடவடிக்கை குழுவுடனும் அவர் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில், டாக்டர் குர்தாசனி நமது அழைப்பை ஏற்று இந்த பெருந்தொற்று நிலை பற்றி கலந்துரையாட ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த கலந்துரையாடலின் இரண்டு பாக அறிக்கையில் இது முதல் பாகமாகும்.

டாக்டர் தீப்தி குர்தாசினி. ஆதாரம் WSWS

பென்சமின் மாத்தேயுஸ்: இந்த பெருந்தொற்று பற்றிய உங்களின் சமூக ஊடக எழுத்துக்களையும், குழந்தைகள் மற்றும் பள்ளிகளைச் சார்ந்துள்ள பிரச்சினைகள் மீதான உங்கள் ஆலோசனைகளையும் நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு முன்னோக்கை கொடுக்க முயற்சிப்பதில் அவை மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் ஆசிரியர் சங்கங்கள், அரசு அதிகாரிகள், பிரௌன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எமிலி ஓஸ்டர் போன்றவர்கள், உங்களுக்கு அவரைத் தெரியுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை...

டாக்டர். தீப்தி குர்தாசனி: ஆம், எமிலி ஓஸ்டர் பற்றி நான் அறிவேன். [அழுத்தம் சேர்க்கப்பட்டது.]

மாத்தேயுஸ்: ஆகவே, பள்ளி குழந்தைகளுக்கும் மற்றும் சமூகத்திற்கும் இந்த வைரஸைச் சிறிய ஆபத்தாக குறிப்பிட்டு, அவர்களை நேரடி வகுப்புகளுக்குத் திரும்ப அவர் அழைப்பு விடுக்கிறார். இந்த பொய்யை மறுத்தளித்து, நீங்கள் வழங்கியுள்ள தகவல் மிகவும் முக்கியமானவை.

அது குறித்து கூறுவதற்கு முன்னர், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், கோவிட் நடவடிக்கை குழுவில் எவ்வாறு சம்பந்தப்பட்டீர்கள் என்று கூறி தொடங்க முடியுமா?

தீப்தி: நான் தீப்தி குர்தாசனி, பின்னணியில் ஒரு மருத்துவர். நான் தொற்றுநோயியலில் பயிற்சி பெற்றேன் என்றாலும், பின்னர் இயந்திர கற்றல் துறையில் (machine learning) நுழைந்தேன். வெவ்வேறு நிலைமைகளிலும் முன்நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஏற்படும் விளைவைக் கணிப்பதன் மீது கவனம் செலுத்தும் ஒருவித பணி என்னுடையது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் இருந்து, உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தலையீடுகள் எவ்வாறு இந்த பெருந்தொற்று போக்கில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும், [இந்த பெருந்தொற்று சம்பந்தமாக] ஆதாரபூர்வமான கொள்கைக்கு ஆலோசனை வழங்கவும் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்து ஒருங்கிணைப்பதிலும் நான் அதிக ஆர்வமாக இருந்தேன்.

கோவிட் நடவடிக்கை குழுவின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் யானீர் பர்-யாம் என்னைச் சந்தித்தார். இந்த பணி ஏற்கனவே நான் ஈடுபட்டிருந்த வேலையுடன் பொருந்தியதால் நான் இதில் சம்பந்தப்பட்டேன். தற்போதைய பெருந்தொற்றுக்காக, நாம் கொள்கையில் விஞ்ஞானத்தைக் கொண்டு வந்து, உண்மையிலேயே மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினால், நாம் பல பங்குதாரர்களுடன் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கே தெரியும், விஞ்ஞானத்துறையின் ஒரு பகுதி ஆலோசனை வழங்குவதுடன், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவ முன்வருவதுடன் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தும் ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பவர்கள் மீது இன்றியமையா விதத்தில் செல்வாக்குச் செலுத்தி மாற்றதை ஏற்படுத்த உதவுவதுமாகும்.

மாத்தேயுஸ்: சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை என்ற வார்த்தை பலவழிகளில் பயன்படுத்தப்படுகின்றது, ஆனால் புரிந்து கொள்ள கடினமான கருத்தாக உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம் என்ற வார்த்தையின் தோற்றுவாயையும் மற்றும் அது தொற்றுநோயியலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் விளக்க முடியுமா? குறிப்பாக, மிகவும் வேகமாக பரவுவதுடன் அனேகமாக மிகவும் நோயெதிர்ப்பு சக்தியையே மீறி வரும் கொரோனா வைரஸின் இந்த மாறிவரும் மாறுபாடுகளின் உள்ளடக்கத்தில் இது எவ்வாறு பொருந்துகிறது?

தீப்தி: இந்த வார்த்தை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிலிருந்து நடைமுறைக்கு வந்தது. பின்னர், தடுப்பூசி போட்டிராத அல்லது நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு முன்பு எத்தனை சதவீதத்தினருக்கு தடுப்பூசியிலிருந்து நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே பெரிதும் நோய் தடுப்பாற்றல் என்ற உள்ளடக்கத்திலிருந்தே தொற்றுநோயியலில் இந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த உடல் தகுதியற்றவர்கள் அல்லது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசியினால் போதுமான பலனைப் பெற முடியாதவர்களை பாதுகாப்பதற்காக, மக்களிடையே நோயெதிர்ப்பு அளவை எட்டும் வரையில், பொதுவாக தடுப்பூசி மூலமாவே, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கருத்தோ அல்லது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவதற்கான உச்ச வரம்போ இன்றியமையாததாக உள்ளது. இதன் அர்த்தம் மக்கள்தொகையில் நூறு சதவிகிதத்தினருக்கும் நோயெதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்பதில்லை, ஏனென்றால் [மக்களிடையே இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி] சில மட்டத்தில் நோய்தொற்றைப் பரப்பாது. அது வெளியிலிருந்து வந்தாலும் கூட, மக்களிடையே இந்த நோயெதிர்ப்பு தடைச்சுவர் இருப்பதால் நோய் பரவுவதற்கேற்ற போதுமான [பலவீனமான] மக்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அதுவே அழிந்து போகிறது.

ஆகவே, புள்ளிவிபரத்துறை வார்த்தைகளில் கூறுவதானால், சமூக நோய் எதிர்ப்பு சக்தி என்பது மறு உற்பத்தி எண்ணிக்கைக்கு நோய் எதிர்ப்பு சக்திகொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகையின் விகிதமாகும். அதாவது தொற்றுநோயின் அதிகரிப்பு விகிதத்தை 1சதவீதத்திற்கு குறைவாக வைத்திருப்பதாகும். இதன் அர்த்தம் என்னவென்றால் இந்த பெருந்தொற்றைத் தடுக்க வெளியிலிருந்து அவசியப்படும் நடவடிக்கைகளோ அல்லது தலையீடுகளோ இல்லாமலேயே இந்த பெருந்தொற்றோ அல்லது நோய்தொற்று பரவலோ அது தானே குறைந்துவிட தொடங்குகிறது.

மாத்தேயுஸ்: பாதிக்கப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விகிதம் கணிசமானளவுக்கு ஒன்றோடொன்று கலந்து இருக்கலாம் என்பதுடன் இது தெளிவின்றி இருக்கும் தற்போதைய நிலைமைக்கு இது எவ்வாறு பொருந்தும்? அதாவது, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக எடுத்துக்கொள்வோமானால், தடுப்பூசி போடப்படாத மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பெரும் தொகையானோர் எஞ்சியிருப்பர்.

தீப்தி: தெளிவாக கூறுவதானால், SARS-CoV-2 க்கு எந்த நாடும் சமூக நோயெதிர்ப்பு சக்தியை எட்டிவிடவில்லை. நிச்சயமாக, தடுப்பூசி இடுவதில் நாடுகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. அதாவது, சில நாடுகளில் அதன் மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இயற்கையாகவே மிக அதிக விகிதத்தில் நோய்தொற்றுக்கு உள்ளாகக் கூடிய கொண்ட நாடுகளும் உள்ளன. ஆனால் அது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வந்துவிடவில்லை. அதற்குப் பிறகும் தொடர்ந்து அது அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம். இது பல அம்சங்களை எடுத்துக்காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

ஒன்று காலப்போக்கில் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி குறையலாம் என்று நினைக்கிறேன். நோயெதிர்ப்பு சக்தியின் காலம் அசல் நோய்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்ததென நினைக்கிறேன். நோய்த்தொற்றுகள் லேசானவும் மற்றும் அறிகுறியின்றியும் இருக்கும் போது, குறைந்தபட்சம் நோயெதிர்ப்பான்களை சமநிலைப்படுத்தும் அளவையும் மற்றும் அது குறைந்து வரும் நோயெதிர்ப்பு சக்தியுடன் எவ்வளவு தொடர்புடையது என்பதையும் மதிப்பிடலாம். இருப்பினும் இது நமக்குத் தெரியாது, ஆனால் அதே வைரஸ் வகை மூலமாகவோ அல்லது வேறு வைரஸ் வகை மூலமாகவோ மீண்டும் நோய்தொற்று ஏற்படுவது நாம் நிஜத்தில் கருதியதை விடவும் மிகவும் அடிக்கடி நிகழும் என்பது நமக்குத் தெரியும். பாதுகாப்பு இருந்தாலும் கூட, நீண்ட கால ஓட்டத்தில் பார்த்தால், அது முழுமையானதல்ல.

இரண்டாவது விஷயம், காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல புதிய வகைகள் உருவாகி உள்ளன, அவை முந்தைய நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் அளவைக் காட்டியுள்ளன, அதாவது நீங்கள் வைரஸின் முந்தைய வகைக்கு எதிராக நோயெதிர்ப்பு கொண்டிருந்தாலும், அது அவசியம் நீங்கள் ஒரு புதிய வகை திரிபுக்கு எதிராக நோயெதிர்ப்பு கொண்டவர் என்று அர்த்தப்படுத்தாது. இதன் அர்த்தம் என்னவென்றால், முந்தைய வகைகளுக்கு எதிராக உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அளவு இருந்தாலும், இந்த வைரஸ் தொடர்ந்து பரிணமித்து வருவதால், உங்களுக்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி வரம்பை எட்டுவது சாத்தியமில்லாமல் போகலாம்.

நோயெதிர்ப்பு சக்தியின் வரம்பு பற்றிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அது பெரிதும் பரவும் வேகத்தைச் சார்ந்துள்ளது. ஒரு வைரஸ் அதிகமாக பரவக்கூடியதாக இருந்தால், அது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் பெரியளவிலான நோயெதிர்ப்பு சுவர் அவசியம், அதாவது அந்த வரம்பை எட்டக்கூடிய அளவுக்கு இன்னும் நிறைய பேர் நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும். சான்றாக, மிகவும் வேகமாக தொற்றும் நோய்கிருமியான தட்டம்மை நுண்கிருமிக்கு சமூக நோயெதிர்ப்பு சக்தியின் வரம்பு 95 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

துரதிருஷ்டவசமாக, முந்தைய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வந்த தருணத்திலேயே புதிய வகை வைரஸ்கள் வந்துள்ளன, அவை தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் மட்டத்தில் உள்ளன, அதாவது நோய்தொற்று பரவலைத் தடுப்பதில் முந்தைய வகை வைரஸ்கள் மீது செயல்பட்ட அளவுக்கு இவை புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்பட முடியவில்லை.

இவையெல்லாம் சேர்ந்து சமூக நோயெதிர்ப்பு சக்தியை அடைவதை மிகவும் கடினமாக்கி உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் மேலோங்கி வருகின்ற தற்போதைய இந்த வகையை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் இது மிகவும் பரவுக் கூடியதாக உள்ளது, மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் நோயெதிர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டியுள்ளது, தடுப்பூசி போடவில்லை என்றாலும், நோயெதிர்ப்பு ஆற்றல் அடிப்படையில் மற்றவர்களுக்கு பரவ முடியாதளவில் இருக்க வேண்டும். இப்போது, தடுப்பூசிகள் அவசியப்படும் 85 சதவீத செயல்திறனை வழங்குவதாக நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் 100 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி போட்டிருந்தாலும், இந்த பெருந்தொற்று தானாகவே அழிந்துவிடும் அந்த மட்டத்தை, அதாவது இன்றியமையா சமூக நோயெதிர்ப்பு சக்தி வரம்பை, நீங்கள் எட்ட முடியாமல் போகலாம்.

இது தான் இதை மிகவும் சிக்கலாக்குகிறது. இது குறித்து ஓரளவுக்கு நேர்மையான நிலைப்பாடு இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். புதிய வகைகளுக்கு எதிராக திறம்பட செயல்படும் அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் அபிவிருத்தி செய்யப்படும் தான், இருந்தாலும் அவற்றை அபிவிருத்தி செய்யாமல், இந்த வரம்பை தடுப்பூசி மூலமாக அடைந்து விடலாம் என்பதோ அல்லது தடுப்பூசி மூலமாக மட்டுமே இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தி விடலாம் என்பதோ சாத்தியமில்லை. ஆனால் புதிய வகைகள் பரிணமிப்பதைத் தடுக்காத வரை வைராஸின் பரிணாமத்தினை சமாளிப்பது சாத்தியமில்லை.

தற்போதைய இந்த தலைமுறை தடுப்பூசிகளைக் கொண்டு நோய்தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய நோயின் தீவிரத்தைக் குறைப்பதை நோக்கி வேண்டுமானால் நகரலாம். ஆனால் நமக்கு நீண்ட கால முதலீடும் மற்றும் உள்வாழுமிட சூழல்களில் காற்றோட்டம் போன்ற விஷயங்களும் தேவைப்படுகின்றன. அரசாங்கங்கள், இது குறித்து மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் தற்போது நம்மிடமிருக்கும் தடுப்பூசிகளை வைத்துக் கொண்டு மட்டுமே சமூக நோயெதிர்ப்பை எட்டிவிட முடியாது என்பதில் விஞ்ஞானிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாகி வருகிறது.

மாத்தேயுஸ்: நீங்களும் போரிஸ் ஜோன்சனின் அரசாங்கமும் பத்திரிகைகளில் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன். இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளுக்கு ஏன் கவனம் செலுத்துவதில்லை என்று நினைக்கிறீர்கள்? உண்மையில், மிகவும் கொள்கைரீதியான விஞ்ஞானிகள் பலர் தாக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அல்லது இழிவுபடுத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். தமது மக்களின் நலனுக்காக, தமது மக்களைப் பாதுகாப்பதற்காக, ஒப்படைக்கப்பட்ட இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அவர்களுக்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள்.

தீப்தி: பல காரணிகள் இங்கு பங்குவகிப்பதாக நினைக்கிறேன்; மதிப்புகள் விளையாடுகின்றன, சித்தாந்தங்கள் விளையாடுகின்றன, பொதுமக்களின் நலன் மீது கவனம் இல்லாத நம் அரசாங்கங்கள் மீது தெளிவாக செல்வாக்கு செலுத்தும் சுயநலன்கள் உள்ளன.

நாம் மதிப்புகளைக் குறித்து பேசும்போது, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் இரக்கவுணர்வு கொண்ட மதிப்புகளை விட, பல அரசாங்கங்கள் குறுகிய கால பொருளாதார ஆதாயங்களைக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன், மேலும் துரதிருஷ்டவசமாக பொது சுகாதாரமும் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தவை இல்லை என்பதை அவை உணரவில்லை. மேலும் இந்த வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பொருளாதாரங்களைப் பாதுகாக்க முடிந்தவற்றால் தான் வைரஸிற்கு எதிராக நின்று அதை கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது.

இரண்டாவது விஷயம், சித்தாந்தம் என்று நினைக்கிறேன். சுதந்திரவாத சித்தாந்தம் கொண்ட அரசாங்கங்கள், குறிப்பாக மேற்கில், நிறைய இருப்பதாக நினைக்கிறேன். நாம் படிப்பினைகளை எடுத்திருக்கக் கூடிய உலகின் பல பாகங்களில் இருந்து படிப்பினைகளை எடுக்க மறுக்கும் குறிப்பிட்ட பிடிவாதமும் இருக்கிறது, பிரத்தியேகவாத நிலைப்பாடுகளும் இருக்கிறது. இந்த பெருந்தொற்றில் நம்மை விட ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டவை மிகச் சிறப்பாகவே விடையிறுத்துள்ளன.

சொல்லப் போனால் தவறான தகவல் பரப்பும் குழுக்களும் மற்றும் சுயநலவாதிகளும் இருப்பதாக நினைக்கிறேன். சான்றாக, கடந்தாண்டு வாக்கில் வெளியான கிரேட் பாரிங்டன் பிரகடனம் இங்கிலாந்து உட்பட உலகின் பல்வேறு வெவ்வேறு பாகங்களில் பாரியளவில் கொள்கை மீது செல்வாக்கு செலுத்தியதைப் பார்த்தோம், நமது மூத்த அதிகாரிகள் கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் ஆதரவாளர்களைச் சந்தித்தனர். அது குறித்து பரிச்சயமில்லாதவர்களைப் பொறுத்த வரையில், இயல்பான நோய்தொற்று மூலமாக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவதற்காக பாதிக்கப்படக்கூடியவர்களை ஏதோவிதத்தில் பாதுகாத்து மற்றவர்களுக்கு அந்த வைரஸ் பரவ செய்வதில் ஒருமுனைப்பட்ட ஒரு கருத்தை அவர்கள் இன்றியமையாததாக ஊக்குவித்தார்கள். இது வெளிப்படையாகவே விஞ்ஞானப்பூர்வமானதில்லை என்பதோடு முற்றிலும் நெறியற்றது. அது இப்போது உண்மையான உலக அனுபவத்தில் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அது கருத்து ஸ்வீடன் உட்பட பல நாடுகளின் நனவிலும் கொள்கையிலும் வியாபித்திருந்தது, நெதர்லாந்து என்று நினைக்கிறேன், மேலும் நிச்சயமாக இங்கிலாந்து மற்றும் மேற்கின் பெரும்பான்மையும் இதில் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதைப் பார்க்கிறோம். ஏனெனில் நாம் ஆரம்பத்திலேயே பின்பற்றி இருந்தால் மிகவும் நேர்மறையான உதாரணங்கள் இருந்திருக்கும். அந்த எடுத்துக்காட்டுக்களைப் பின்தொடர்வது இப்போதும் கூட கால தாமதமாக இருக்காது.

மாத்தேயுஸ்: அந்த வைரஸ் தவிர்க்கவியலாமல் தீர்க்க முடியாத தொற்றுநோயாக மாறிவிடும் என்று பத்திரிகைகள் அதை தீர்க்க முடியாத நோயாக பேசி வருகின்றன. அது ஊக்குவிக்கப்பட்டு வரும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையிலேயே மிகவும் கபடத்தனமான மூலோபாயங்களில் ஒன்றாகும், அதன் அர்த்தம் நாம் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பதாகும். எவ்வளவு விரைவில் அதை ஏற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. இதுபோன்று பரப்பப்பட்டு வரும் ஒரு மூலோபாயம் குறித்து உங்களின் கவலைகள் என்ன?

தீப்தி: தீர்க்கவியலாத தொற்றுநோய் என்பது ஏதோவிதத்தில் தீர்க்கவியலாத தொற்றுநோய் நல்லதே என்று கூறும் பல விஞ்ஞானிகளால் மிகவும் மோசமாக பயன்படுத்தப்படும் மிகவும் மோசமாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகளில் ஒன்றாகும். மலேரியா உட்பட இப்போது நாம் பார்க்கும் பல நோய்களுக்கு தீர்க்கவியலாத நோய்கள் என்பது இன்றியமையா வார்த்தையாக உள்ளது. மலேரியா மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று வருகிறது.

தீர்க்கவியலா நோய்தொற்று (Endemicity) என்பது நோய்த்தொற்றுகள் வெளியிலிருந்து வராமலேயே நோய்தொற்று அல்லது நோய் பரவல் தொடரும் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் பல்வேறு மட்டங்களில் நோய்தொற்று அல்லது பரவலைப் பார்ப்பீர்கள் ஏனென்றால் அங்கே ஒருவர் மற்றவருக்கு பரப்புவார் அந்த பரவல் அதிகரிக்கும் இவ்விதமாக ஒருவித நிலையான தீர்க்கவியலா நோய்தொற்று உள்ளது. அது துடைத்தழிக்கப்படாது. இந்த தீர்க்கவியலா நோய்தொற்று அதிகளவில் இருக்கும் காலகட்டங்களும் உண்டு, அப்போது அதிகளவிலான நோய்தொற்றுக்கள் இருக்கும். அது SARs-CoV-2 போன்ற கடுமையான வைரஸாகவும் இருக்கலாம், இவை நீண்டகால நோயை உண்டாக்குகின்றன. இவை கடுமையான பாதிப்பை உண்டாக்குவதுடன் உயிரையே பறித்துவிடக் கூடும்.

இந்த வைரஸுடன் வாழ்வது மற்றும் தீராநோய் பற்றிய கருத்து நாம் ஏற்கனவே பார்த்துள்ளதைப் போல நிச்சயமாக இந்த வைரஸ் பரிணமிக்க புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் அதிக பரவல் ஏற்படுகிறது, அதிக உருமாற்றம் ஏற்படுகிறது. பகுதியாக நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், இந்தளவுக்கு அதிகளவிலான உருமாற்றம் தடுப்பூசிக்கு எதிரான ஓரளவுக்கு பகுதியான பாதுகாப்பையும் கூட பாதிக்கும், அதாவது தடுப்பூசி அடிப்படையிலான நோயெதிர்ப்பு சக்தி அல்லது இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியிலிருந்தே தப்பிக்கக்கூடிய உருமாறிய வைரஸ்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதே இதன் அர்த்தமாகும்.

இவ்விதமாக தான் வைரஸ் உடலுக்குள் உள்நுழைந்து, தடுப்பூசிகளில் இருந்து தப்பித்து, நாம் பார்த்துள்ளதைப் போல இன்னும் அதிகமாக பரவக்கூடிய மற்றும் இன்னும் கடுமையான புதிய வகைகளை உருவாக்குகின்றன. தீராநோய் குறித்து பேசுபவர்கள் பெரும்பாலும் பெரும் அபாயமற்ற வைரஸ்கள் அல்லது காலப்போக்கில் தீங்கற்றதாக மாறும் வைரஸைக் குறித்து பேசுகிறார்கள், அதாவது நம்முடனே இருக்கும் சளிக் காய்ச்சல் போன்றவை, இது பருவக் காலத்தில் வருகிறது, ஏற்றுக் கொள்ளலாம் என்பதைப் போல, ஒரு சில ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று விடுகிறது. ஆனால், யதார்த்தத்தில், SARS-COV-2 பற்றிய தன்மை மிகவும் வித்தியாசமானதாக தெரியலாம். இந்த வைரஸ் தொடர்ந்து தகவமைத்துக் கொண்டு, அனேகமாக, நமது தடுப்பூசிகளே கூட அதைத் தாக்குப் பிடிக்க முடியாதளவில் பெரிதும் தீராநோய் சூழ்நிலையாக அது இருக்கலாம். அப்படி இருந்தால் நமக்கு ஏற்கனவே கிடைத்துள்ள ஆதாயங்களில் பெரும்பான்மையை நாம் இழக்க வேண்டியிருக்கும். இது ஒருவித பெருந்தொற்று மற்றும் தீராநோய்தொற்று சுழற்சிகளுக்கு இட்டுச் செல்லும்.

இது நிறைய பேரை நீண்ட கால நோயால் இயலாமையானவர்களாக்கும். அதாவது நான் அர்த்தப்படுத்துவது என்னவென்றால், இது மூளையில் நுழைந்து, நீண்ட கால நரம்பியல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும், சுவை, நுகர்வுணர்ச்சி மற்றும் நினைவகத்துடன் தொடர்புடைய மூளையின் பாகங்களைச் சுருங்க செய்ய முடியும் என்பது நமக்கு தெரியும். மிதமான நோய்தொற்று இருப்பவர்களுக்கும் கூட இது வேறு வேறு உடல் அங்கங்களைப் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.

[இந்த வைரஸால்] நாள்பட்ட நோய் ஏற்படுவது அரிதானதல்ல என்பதும் நமக்குத் தெரியும். இது காய்ச்சல் போன்றதல்ல, அது தீங்கற்றதல்ல. இந்த வைரஸ் ஏதேனும் விதத்தில் தற்போது தடுப்பூசிகளில் இருந்து குறைவாகவே தப்பிக்கக்கூடிய வகையில் அல்லது குறைவாகவே பரவக்கூடிய வகையில் அல்லது கடுமை குறைந்து வரும் விதத்தில் பரிணமித்து வருகிறது என்பதற்கு முற்றிலுமாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த வைரஸ் நம் சமூகங்களில் பரவி தீராநோய்தொற்றாக மாறாமல் இருக்க நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது, கவலைப்பட வேண்டியுள்ளது. இதனுடன் சேர்ந்து வாழக்கூடிய வைரஸ் இதுவல்ல அல்லது இதனுடன் வாழ விரும்பவும் கூட முடியாது. இது அகற்றப்பட வேண்டிய வைரஸ். ஆனால் அதற்கு ஓர் உலகளாவிய ஒருங்கிணைப்பு அவசியப்படுகிறது. இதற்கு பொது சுகாதார நலன்களில் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் என்ன செய்ய வேண்டுமோ நாடுகள் அதை செய்ய வேண்டும். இதற்கு விஞ்ஞானத்துறை சமூகமும் ஒருங்கிணைந்து வர வேண்டும் மற்றும் ஆதாரத்தினை அடிப்படையாக கொள்ளாத 'பிரத்தியேகவாத' நிலைப்பாடுகளை எடுக்கக்கூடாது.

தொடரும்

Loading