பாதுகாப்பற்ற பள்ளிகளை எதிர்க்கும் அக்டோபர் 15 உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பீர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்து பெற்றோர் லீசா டியஸ் பாதுகாப்பற்ற பள்ளிகளை எதிர்த்துப் போராட இரண்டாவது பள்ளி வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்த வேலைநிறுத்தம் அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது, இதற்கு உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) மற்றும் சர்வதேச அளவில் சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) ஆதரவளிக்கின்றன.

இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள விகானைச் சேர்ந்த லீசா இரண்டு குழந்தைகளின் தாய் ஆவார், மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி (Safe Education for All) பிரச்சாரக் குழுவின் ஒரு உறுப்பினராவார். இவர் அக்டோபர் 1 உலகளாவிய முதல் பள்ளி வேலைநிறுத்தத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

WSWS ஆதரவளிக்கும் இந்த வேலைநிறுத்தத்திற்கு சர்வதேச அளவில் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆதரவை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர், பலர் குறுங் காணொளிகளை வெளியிட்டுள்ளதுடன், #SchoolStrike2021, #SittingDucks மற்றும் #October1st போன்ற ஹேஸ்டாக்குகளில் பகிர்ந்துள்ளனர்.

இரண்டாவது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கும் அக்டோபர் 9 ட்வீட்டில், தொற்றுநோயின் உலகளாவிய தன்மை மற்றும் குழந்தைகளுக்கு இந்த நோய் எவ்வளவு அபாயகரமானது என்பதை வலியுறுத்தும் கடுமையான புள்ளிவிபரங்களை லீசா வெளியிட்டார். மேலும், “அமெரிக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 3 குழந்தைகள் வீதம் கோவிட் தொற்றுநோயால் இறக்கின்றனர். பிரேசிலில் குழந்தைகள் இறப்பதற்கான முக்கிய காரணமாக இது உள்ளது. இந்தோனேசியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 700 குழந்தைகள் இதனால் இறந்துள்ளனர். இந்நிலையில், #October15 அன்று @SafeEdForAll_UK குழுவுடன் மற்றொரு உலகளாவிய #SchooStrike2021 ஐ நடத்துவதற்கான நேரமிது. இனி #SittingDucks!! இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பெற்றோர் லீசா டியஸ் அவரது அக்டோபர் 9 காணொளியில் இரண்டாவது பள்ளி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறார்

பாதுகாப்பற்ற பள்ளிகள் குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான குறுங் காணொளிகளை லீசா பதிவிட்டுள்ளார். கூட்டாக, இவை இலட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்திற்கான காணொளி அழைப்பு ஏற்கனவே 50,000 முறை பார்க்கப்பட்டுள்ளது, 1,200 முறை விருப்பம் தெரிவிக்கப்பட்டு, 600 க்கும் அதிகமான முறை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது, இது குழந்தைகள் மத்தியில் பாரியளவில் நோய்தொற்று பரவுவது குறித்த பரந்துபட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்புணர்வை பிரதிபலிக்கிறது.

“இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளில் கோவிட் நோய்தொற்று வெடித்து பரவ அனுமதிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அதாவது, சராசரியாக 14 மேல்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு ஒருவர் வீதம் தற்போது கோவிட் உள்ளது. மேலும் இது குழந்தைகளுக்கு தீங்கானதே. முழு தொற்றுநோய் காலத்தில் கோவிட் காரணமாக 94 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிட் நோய்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்தில் 53,000 குழந்தைகள் லோங் கோவிட் பாதிப்புடன் வாழ்கின்றனர். இவர்களில் 11,000 குழந்தைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளனர். 8,000 குழந்தைகள் கோவிட் காரணமாக அனாதையாகிவிட்டனர்” என்று சமீபத்திய காணொளியில் லீசா கூறியுள்ளார்.

மிக சமீபத்திய சோகமான மரணங்களில், போர்ட்ஸ்மவுத்தைச் சேர்ந்த ஜோர்ஜா ஹாலிடே என்ற 15 வயது சிறுமி, தனது COVID தடுப்பூசி பெற வேண்டிய நாளான செப்டம்பர் 28 அன்று இறந்தது மிக சமீபத்திய சோகமான இறப்புக்களில் ஒன்றாகும்.

“இது தொடர்பாக நமது அரசாங்கம் என்ன செய்கிறது? முற்றிலும் ஒன்றுமில்லை” என லீசா தொடர்ந்து கூறினார்.

மேலும், “நம்மை பாதுகாக்க நமது அரசியல்வாதிகள் எதுவும் செய்யாததால், மற்றொரு பள்ளி வேலைநிறுத்தத்திற்கு நான் முன்மொழிகிறேன். அதாவது அக்டோபர் 15 அன்று, இந்த காட்டுமிராண்டித்தனமான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் சோதனையை எதிர்க்கும் விதமாக உங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க முடியுமானால், அதைச் செய்யுங்கள். நானும் அதைச் செய்யவிருக்கிறேன். உங்கள் குழந்தையின் சீருடை, அல்லது காலணிகள், அல்லது பை என நீங்கள் விரும்பும் ஏதோவொன்றை இணையத்தில் வெளியிடுங்கள்” என்று கூறி முடித்தார்.

“ஒரு வலுவான செய்தியை, உலகளாவிய செய்தியை அனுப்புவோம், எங்கள் குழந்தைகள் சேதப்பட நாம் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எளிதான இலக்குகளாக இருக்கக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையில் உங்களால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியவில்லை என்றால், ஒற்றுமையை வெளிப்படுத்தும் உங்களது எந்தவொரு பதிவும் நிறைய செய்யும், மேலும் உங்களுக்கு குழந்தைகள் இல்லை என்றால், நீங்கள் ஒரு செய்தியை பதிவிட்டு அது ஏன் முக்கியம் என்று எங்களுக்கு சொல்லலாம். நீண்டகால விளைவுகள் பற்றி நமக்கு முற்றிலும் எதுவும் தெரியாத நிலையில், தேவையில்லாமல், வேண்டுமென்றே புதிய வைரஸ் நமது குழந்தைகளை தொற்றிக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. எனவே, அக்டோபர் 15 அன்று நான் உங்களை சந்திக்கிறேன், கடந்த வேலைநிறுத்தத்தைப் போல இதையும் மிகப்பெரிய வெற்றியடையச் செய்வோம்” என்றார்.

திங்கட்கிழமை ஏதென்ஸில், பொதுக் கல்வி மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையும் மற்றும் பள்ளிகளில் கோவிட் பாதுகாப்பு இல்லாமையையும் எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் போராடுகின்றனர். “நாங்கள் செலவு அல்ல, நாங்கள் தான் எதிர்காலம்!” என்று பதாகை கூறுகிறது (உலக சோசலிச வலைத் தள ஊடகம்)

காணொளிக்கு பதிலளிக்கும் பதிவுகள் வரவிருக்கும் வேலைநிறுத்தத்திற்கு அவர்களது ஆதரவை உறுதிப்படுத்தின.

“நான் பிரேசிலில் இருந்து பதிவிடுகிறேன். அக்டோபர் 15 அன்று நடைபெறும் பள்ளி வேலைநிறுத்தம் 2021 இல் எனது மகனும் நானும் கலந்துகொள்கிறோம். மக்கள் இறப்புக்களை வழமையாக்கும் போக்கு குறித்து நான் மிகவும் அச்சமடைகிறேன், மேலும் வருத்தப்படுகிறேன். நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்” என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மற்றொருவர், “நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் நன்றி லீசா. நான் பிரிட்டிஷில் பிறந்தவன், குழந்தை பருவத்திலிருந்தே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தவன். திகிலூட்டும் வகையில் இங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா? தற்போது டெல்டா மாறுபாடு அறிகுறியுடன் பரவுகிறது, மேலும் எங்கள் அரசாங்கம் இங்கிலாந்து வழிநடத்துதலைப் பின்பற்றுகிறது. இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு எதிராக போராடும் அனைத்து பிரிட்டிஷ் பெற்றோர்களுக்கும், எனது ஒற்றுமையை நான் அனுப்புகிறேன்.

அமெரிக்காவில் உள்ள தொற்றுநோயியல் நிபுணரான எரிக் ஃபிகில்-டிங், “உண்மையில்… குழந்தைகளுக்கு முடிந்தவரை விரைவில் தடுப்பூசி போட வேண்டும்” என்று பதிலளித்தார்.

வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் மற்றவர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொண்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர், கிறிஸ் போர்ட்டர், “ஒரு பெற்றோராகவும் கல்வியாளராகவும், அக்டோபர் 15 பள்ளி வேலைநிறுத்தத்திற்கு எனது ஆதரவை வழங்குகிறேன். நான் பார்த்தவரை, இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை சவால் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆதிக்க வகை வைரஸூக்கு சிறிய சவாலாகத் தெரிகிறது, தடுப்பூசி அதனளவில் போதுமான பாதுகாப்பை வழங்குகிறது, தொழிற்சங்கங்களிலிருந்தும் கூட அவர்களின் வாய்சவுடால்கள் மற்றும் நோக்கங்கள் மூலம் சமூக மற்றும் மனித தேவைகளை பொருளாதார தேவைகளுக்கு முன்னால் வைக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம் என்ற ஒரு அபாயகரமான செய்தி உள்ளது” என்று குறிப்பிட்டார்.

சமூகத்தில் இளையோர்கள் மத்தியில் கோவிட் நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு வருகிறது. கடந்த வாரம் இங்கிலாந்தில் 14 மேல்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு ஒருவர் வீதம் கோவிட் நோய்தொற்று ஏற்பட்டது, 270,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது உட்பட, கடந்த வாரம் 20 மாணவர்களுக்கு ஒருவர் வீதம் நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டது. தேசிய புள்ளியியல் தரவுகளுக்கான அலுவலகம், 7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நோய்தொற்று வீதம் இரண்டு வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதை, அதாவது 2.8 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. முன்னைய நிகழ்வு விகிதங்களின் அடிப்படையில், பள்ளிகளில் வைரஸின் அளவின்படி 13,500 குழந்தைகளுக்கு லோங் கோவிட் அறிகுறிகள் ஏற்படலாம் என்பதாகும்.

அக்டோபர் 15 வேலைநிறுத்தத்திற்கு பரந்த ஆதரவை வழங்க WSWS வலியுறுத்துகிறது. அக்டோபர் 1 நடவடிக்கை “இலாபத்தை அல்லாமல், உயிர்களைக் காப்பாற்றுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கைக்கான தொழிலாள வர்க்கத்தின் முயற்சிகளை வெளிப்படுத்துகிறது, மேலும் தொற்றுநோய்க்கு எதிரான அதன் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் குறிக்கிறது. பள்ளி வேலைநிறுத்த முயற்சி கூட ஒரு சர்வதேச இயக்கமாக வளர்ந்து வருகிறது. “பெற்றோர் வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு இங்கிலாந்தில் தான் தொடங்கியது, என்றாலும் அது உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களினது ஆதரவை ஈர்த்தது. ஒற்றுமை குறித்த தனிப்பட்ட அறிக்கைகளுக்கு கூடுதலாக, இந்த நடவடிக்கை பல நாடுகளின் ஆசிரியர்களாலும், சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என நாங்கள் எழுதினோம்.

விமர்சிக்கப்படும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும் இரண்டு வேலைநிறுத்தங்களும் ஆளும் உயரடுக்கின் படுகொலைக் கொள்கைகளை செயல்படுத்த அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்த தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடனான ட்விட்டர் பரிமாற்றத்தில், இங்கிலாந்தின் தேசிய கல்வி சங்கத்தின் கூட்டுத் தலைவர், கெவின் கோர்ட்னி, பாதுகாப்பற்ற பள்ளிகள் மீதான தொழில்துறை நடவடிக்கைக்கு வாக்களிக்க தொழிற்சங்கத்தின் தனது சொந்த உறுப்பினர்களிடமிருந்து வந்த அழைப்புக்களை மீண்டும் மீண்டும் எதிர்த்தார்.

ஐந்து கல்வி தொழிற்சங்கங்கள், பழமைவாத கட்சி அரசாங்கத்தின் கல்விச் செயலாளர் நாதிம் ஜஹாவிடம், பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், பள்ளிகளை திறந்து வைத்திருக்க வலியுறுத்த மட்டுமே தற்போது எழுதியுள்ளன. யூனிசனின் உதவி பொதுச் செயலாளர் ஜோன் ரிச்சார்ட்ஸ், “மாணவர்கள் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தங்கள் கல்வியில் இடையூறை எதிர்கொண்டுள்ளனர். வகுப்பறைகளில் குழந்தைகளை தக்க வைக்க அனைத்து நிறுத்தங்களையும் அமைச்சர்கள் அகற்ற வேண்டும்” என்று கூறினார்.

பாரியளவில் நோய்தொற்றும் கொள்கைக்கு எதிராக ஏற்கனவேயுள்ள பரந்தளவிலான எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகவே வேலைநிறுத்தத்திற்கான லீசாவின் அழைப்பு உள்ளது. இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இந்த காவல்துறை முயற்சிகளால் தன்னை முடக்கிக் கொள்கிறது.

அக்டோபர் 24 அன்று, உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-FRC) இணைந்து நடத்தும் “தொற்றுநோயை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது: இது நோய்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான வழி”, என்ற இணையவழி கூட்டத்தில் லீசா பேசவுள்ளார்.

தொழிலாளர் சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்கள் மூலமாக, சர்வதேச தொழிலாளர்களின் அணிதிரட்டலுக்கான அரசியல் முன்னோக்குடன் இணைந்து, தொழிலாளர்கள் தொற்றுநோயை எதிர்கொள்ளவும், மேலும் அதனை அழித்தொழிப்பதற்கான ஒரு திட்டத்திற்காக போராடவும் தேவையான விஞ்ஞான அறிவை இந்த கூட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கும்.

லீசா டியஸ் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: @sandyboots2020. வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் செய்திகளை இங்கே WSWS க்கு அனுப்புவோம், ஒற்றுமைக்கான செய்தியை ட்விட்டரில் #SchoolStrike2021 ஹேஸ்டாக்கை பயன்படுத்தி அனுப்ப வேண்டும், மேலும் உலக சோசலிச வலைத் தளத்தை (@WSWS_Updates) இணைக்க வேண்டும்.

Loading