இலங்கை: சிறார்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கி தொற்றுநோய்க்கு மத்தியில் பாடசாலைகள் மீண்டும் திறப்பதை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாட்டில் கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3,000 பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்க இராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து 10,500 பாடசாலைகளையும் அடுத்த சில வாரங்களில் நான்கு கட்டங்களாக திறப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.

மிகவும் வரையறுக்கப்பட்ட பரிசோதனைகளுடன் கூட, தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இன்னும் ஐநூறுக்கும் அதிகமாக உள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 25,000 ஆக உள்ளதுடன் தொற்றுநோயால் தினமும் பல டஜன் கணக்கானோர் இறக்கின்றனர். கொடிய டெல்டா மாறுபாடு நாட்டில் பரவலாக உள்ளது.

சிறுவர்களை பாடசாலை முடிந்து பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர் (Photo: WSWS media)

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சுசி பெரேரா, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சுகாதார நடைமுறைகள் குறித்து கற்றுக்கொடுத்து “அச்சமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு” நேற்று வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மருத்துவர், மஹின் கொத்தலாவல, கடந்த வாரம் சண்டே டைம் பத்திரிகையுடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொண்டு, அந்த சுகாதார நடைமுறைகள் என்ன என்பதை விளக்கினார். அவரைப் பொறுத்தவரை, குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லும்போது பல முக கவசங்களை எடுத்துச் செல்வதையும், அழுக்கு முகக் கவசங்களை வைத்துக்கொள்ள மற்றொரு பையைப் பயன்படுத்துவதையும், முககவசங்களை அகற்றுவதையும், அகற்றிவிட்டு சாப்பிடுவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், சுத்தப்படுத்தும் லோஷன்களைப் பயன்படுத்துவதையும் பழக்கப்படுத்த வேண்டும் என்பதாகும்.

அரசாங்கத்தின் எந்த உதவியும் இல்லாத நிலையில், தங்கள் சிறார்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பல முகக்கவசங்களை வழங்குவது கூட பல பெற்றோர்களுக்கு சாத்தியமானதல்ல. பாடசாலை வயது சிறார்களைக் கொண்ட பல குடும்பங்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். எப்படியும் முகக் கவசங்களையும் தொற்று நீக்கிகளையும் வழங்கினாலும் கூட, விளையாட்டுத்தனமான சிறார்களிடமிருந்து இதுபோன்ற தீவிரமான நடத்தைகளை எதிர்பார்க்க முடியாது என்பது ஆசிரியர்களாகிய எங்கள் அனுபவமாகும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் எனவும், தொற்று பரவலை மேலும் துரிதப்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழு, தொற்றுக்கு மத்தியில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடுமாறு சகல பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஏனைய தொழிலாளர்களிடமும் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் கேட்டுக்கொள்ளகிறது. அதே நேரம், 'தொற்றுநோயுடன் வாழும்' அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைந்து, உலக அளவில் தொற்றுநோயை ஒழிக்கும் பணிக்கு தோள்கொடுக்க வேண்டியதன் தீர்மானகரமான அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம்.

பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அவசரப்படுவது, சிறார்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த எந்தவொரு அக்கறையாலும் அல்ல. உலகெங்கிலும் உள்ள இதே போன்ற ஆளும் வர்க்கங்களைப் போலவே, பெருவணிகத்தின் இலாபம் ஈட்டும் செயல்முறையைத் தொடர்வதற்கு, பொருளாதாரத்தை முழுமையாகத் திறந்துவிட்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கமும், சிறார்கள் வீட்டிலேயே இருப்பது பெற்றோரை வேலைத் தளத்தில் வைத்திருப்பதற்கு தடையாக இருப்பதாக கணிக்கின்றது.

அதிக ஊதியத்தை கோரி மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிப்பது இன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பதன் மற்றொரு குறிக்கோளாகும். தொற்றுநோய் நன்கு கட்டுப்படுத்தப்படும் வரை பாடசாலைகளை தொடர்ந்து மூடிவைத்து, அவர்களுக்கு இணைவழி கல்விக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவழிப்பதற்குப் பதிலாக, சிறார்களை பாடசாலைகளில் அடைத்து அதிலிருந்து கைகழுவிக்கொள்ளுவது அரசாங்கத்தின் மற்ற குறிக்கோளாகும்.

நாட்டின் 60 வீதமான பிள்ளைகளுக்கு இணையவழிக் கல்விக்கு வசதி இல்லாத சூழலில் அதற்கான வசதிகளை வழங்க மறுத்து, அவர்களின் கல்வியை சீர்குலைத்த இராஜபக்ஷ அரசாங்கம், ஆசிரியர்கள் தங்களின் சொந்த செலவில் கற்பிக்கும் போது, கல்வியின் வீழ்ச்சிக்கு ஆசிரியர்கள் மீது பழி சுமத்துவதற்கு, கபடத்தனமாக முயற்சித்து வருகிறது.

'பெரும்பாலான சிறார்களின் பெற்றோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதை' பாடசாலைகளை திறப்பதை நியாயப்படுத்த அரசாங்கம் பயன்படுத்தும் மற்றொரு குதர்க்கமாகும். பாடசாலைகளை திறப்பதற்க்கூடாக சிறார்கள் தொற்றுக்குள்ளாவது தொடர்பாக, சர்வதேச தரவுகள் மற்றும் பிற மருத்துவ வெளிப்பாடுகள் மூலம் அரசாங்கத்தின் கொள்கையின் குற்றத்தன்மையை விளங்கிக்கொள்ளுவது கடினமனது அல்ல.

இலங்கையில் கோவிட் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 59 ஆயிரத்தை எட்டியுள்ளதாக இலங்கை குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன, அக்டோபர் 8 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதில் 67 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேர் வீட்டில் இறந்தனர்.

அக்டோபர் 17 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொழும்பில் உள்ள சீமாட்டி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் நளின் கித்துல்வத்த, நோய்தொற்று ஏற்பட்டதன் பின்னர், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மத்தியில் பல்தொகுதி அழற்ச்சி நோய் பரவி வருவதாக எச்சரித்தார். மருத்துவரின் கூற்றுப்படி, கடந்த வாரம் இதே நிலையில் இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் இறந்தனர். இன்றுவரை, இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகிய சுமார் 200 பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 80 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரித்து, 'புதிய சாதாரண நிலைக்கு' மக்களை அடிபணியச் செய்யும் முதலாளித்துவ ஊடகங்கள், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உட்பட பிற்போக்கு மருத்துவக் குழுக்கள், மக்கள் முகம் கொடுக்கும் ஆபத்துக்கள் குறித்து பொதுமக்களை இருட்டில் வைத்துள்ளன.

பாடசாலைகளை மூடுவதன் மூலம் சிறார்கள் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பிழையான உணவுப் பழக்கம் மற்றும் சமூக தொடர்பை இழப்பது போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசாங்கம் பாடசாலைகளை மீண்டும் திறப்பதை முழுமையாக ஆதரிக்கின்றது. சிறுவர்கள், சர்வதேச ரீதயில் உள்ள விஞ்ஞான அறிவு மற்றும் வளங்களையும் உலகளாவிய முயற்சியால் ஒருங்கிணைப்பதன் ஊடாக, இந்த தொற்றுநோயை இரண்டு மாதங்களில் ஒழிக்க முடியும் என்றாலும், அதற்கு எதிராக 'தொற்றுநோயுடன் வாழ்ந்திடு' என்ற கொள்கையை பின்பற்றும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் போலவே, அதை ஆதரிக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்ற பிற்போக்கு அமைப்புகளும், சிறார்கள் முகம் கொடுக்கும் இந்த அவல நிலைக்கு பொறுப்பு கூறவேண்டும்.

தடுப்பூசி ஏற்றுவதில் வெற்றி கண்ட நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகளிலும், அதை விட குறைந்த சதவீதமான தடுப்பூசி ஏற்றிய பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டதால் நோய் பரவுவது துரிதப்படுத்தப்பட்டு, அறிந்தும் அறியாத பல்லாயிரக்கணக்கான எதிர்கால தலைமுறையினரின் உயிரைப் பறிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பாதிக்கப்பட்ட ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை, தொற்றுக்கு உள்ளான பின்னர் சில மாதங்களில், சரீரத்தை பாலவீனமாக்கும் நோய் அறிகுறிகளுடன் துன்பத்தை கொணரும் நீண்ட கால கோவிட் நிலைமையை உருவாக்கும் என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. கடந்த வாரம், அமெரிக்காவில் 22 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து அந்த நாட்டில் கோவிட்டால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்ந்தது. பிரிட்டனில், 95 பிள்ளைகளும் மற்றும் கல்வி வல்லுநர்கள், ஆசிரியர்கள் உட்பட 570 பேரும் மரணித்துள்ளனர். பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா உட்பட பல நாடுகளில் நிலைமை இன்னும் துன்பகரமானதாகும்.

தொற்றுநோய்க்கு மத்தியில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மாதம் 1 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில், தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என, பிரிட்டனில் இரண்டு குழந்தைகளின் தாயான லிசா டியஸ் விடுத்த அழைப்பு, உலகம் முழுதும் பெற்றோரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. பிரிட்டனிலும் உலகெங்கிலும், பாடசாலைகளை திறப்பதற்கு ஆதரவாக உள்ள தொழிற்சங்கங்களுக்கு வெளியே வளர்ச்சியடைந்த இந்த பகிஷ்கரிப்பு, தொற்று நோயை அடியோடு ஒழிப்பதற்கான உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் ஒரு முக்கியமான படியாகும்.

எமது ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு உட்பட, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியினதும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் முன்னெடுப்பில், இந்த மாதம் 24 அன்று “தொற்று நோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது” என்ற தலைப்பில் உலக புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பங்குபற்றும் பகிரங்க இணையவழி கூட்டம், தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அவசியமான விஞ்ஞானபூர்வ உண்மையும் அரசியல் முன்னோக்கையும் வழங்குவதற்கான மற்றுமொரு முன்னெடுப்பாகும்.

இலாபவெறி கொண்ட முதலாளித்துவ அமைப்புடன் இறுக்கமாக கட்டுண்டுள்ள தொழிற்சங்கங்கள், பெரும் வணிகத்தின் இலாபங்களுக்காக பொருளாதாரத்தை திறந்து விடுவதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் பாடசாலைகளை மீண்டும் திறந்து விடுவதற்கு ஆதரவளிக்கின்றன. தங்களது சர்வதேச சகாக்களை பின்பற்றி, இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) சார்பு ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் உட்பட ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்களின் கூட்டணியும் பாடசாலைகளை மீண்டும் தொடங்குவதற்கு முழுமையாக ஆதரவு அளிக்கின்றன.

தொற்றுநோயை முழுமையாக ஒழிக்கவும், பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு கல்வியை முன்நோக்கி கொண்டுசெல்லவும், பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம்.

  • பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவை! தொற்றுநோய் சரியாகக் கட்டுப்படுத்தப்படும் வரை, அனைவருக்கும் இணையவழி கல்விக்கு இலவச கணினி மற்றும் அதிவேக இணைய வசதியை வழங்கு!
  • தொழிலாளர்கள் மற்றும் ஏனைய மக்களுக்கான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுடன் அத்தியாவசியமற்ற உற்பத்திகளை மூடு!
  • நோயாளிகளைக் கண்டறியும் சோதனைகளை அதிகரிக்கவும், முறையான தனிமைப்படுத்தலுக்கும், சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும் பில்லியன்கணக்கான நிதியை ஒதுக்கு!
  • உலகில் உள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி வழங்கு!
  • சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தொற்று நோயை முழுமையாக ஒழித்திடு!

ஒரு சில முதலாளித்துவவாதிகளின் இலாபத்திற்காக உற்பத்தி செய்கின்ற, தேசிய அரச அமைப்பில் வேரூன்றியுள்ள காலாவதியான முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் இந்த கோரிக்கைகளை வெல்ல முடியாது. முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறிந்து, மனித தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சோசலிசக் கொள்கைகளின் கீழ் உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதன் மூலம் மட்டுமே அந்த கோரிக்கைகள் வெல்லப்பட முடியும்.

சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக, உங்கள் பாடசாலைகளில் வேலைத் தளங்களில் மற்றும் குடியிருப்புப் பகுதியில் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி இந்தப் போராட்டத்தில் இணையுமாறு தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading