இலங்கை ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுப்பதை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி, இலங்கையில் நேற்றுடன் 100 நாளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 25 அன்று பணிக்கு வருவதாக அறிவித்தது. கோரப்பட்ட ஊதிய உயர்வில் எட்டில் ஒரு பங்கைவிட எதையும் வழங்க முடியாது என்று அரசாங்கம் வலியுறுத்திய போதிலும், அதன் உறுப்பினர்களுடன் எந்தவிதமான கலந்துரைடயலும் இன்றி, ஜனநாயக விரோதமான முறையில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கத் தலைமை முடிவு செய்தது.

6 அக்டோபர் 2021 அன்று ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய மறியல் போராட்டம்.

2022 ஜனவரி மாதம் அமுலுக்கு வரவுள்ள அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பின் பிரகாரம், முதலாம் தர ஆசிரியருக்கான மாதாந்த சம்பள அதிகரிப்பு 3,850 ரூபாவாகும். மூன்றாம் தர பயிலுனர் ஆசிரியரின் மாதச் சம்பளம் 1,250 ரூபாய் மட்டுமே அதிகரிக்கும். வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு போதுமானதாக அல்ல.

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமது சக்தியை காட்டுவாதற்க்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் 21, 22 திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும், 'சிறார்களின் கல்வியை கருத்தில் கொண்டு' அக்டோபர் 25 அன்று சேவைக்கு சமூகமளிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் மக்கள் விடுதலை முன்ணனி (ஜே.வி.பி.) தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் (இ.ஆ.சே.ச.) பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்கவும் தெரிவித்தனர்.

இவ்வாறு வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவது, அரசின் அடக்குமுறைக்கும் ஆத்திரமூட்டல்களுக்கும் மத்தியிலும் இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உறுதியுடன் போராடிய 250,000 ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு இழைக்கப்படும் வெட்கக்கேடான துரோகமாகும்.

காட்டிக்கொடுப்பவர்கள் அதை மூடி மறைக்க அடிக்கடி பயன்படுத்துவதை உரத்த குரலில் கூவிய தொழிற்சங்கத் தலைவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நமது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடருவோம் என்றனர். இது, ஆசிரியர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கலைப்பதற்கான ஒரு வெற்று பிரகடனம் மட்டுமே.

இந்த சம்பள கோரிக்கை 24 வருடங்களுக்கு முன்பு 1997 இல் முன்வைக்கப்பட்டதில் இருந்து செய்யப்பட்ட கட்டிக்கொடுப்புகளை நினைவு கூர்ந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களின் துரோகத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவலாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அந்த எதிர்ப்பு மட்டும் போதாது. கடந்த கால போராட்டத்தின் முக்கிய அனுபவங்களையும் பாடங்களையும் உள்வாங்கி, ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை அடைவதற்கான புதிய பாதையை வகுக்க வேண்டும்.

உயரும் வாழ்க்கைச் செலவுக்கு இணையாக ஊதிய உயர்வு அவசியத்தால் நீண்டகாலமாக அவஸ்த்தைப்படும் ஆசிரியர்களை தராதர “ஊதிய முரண்பாடு” என்ற சூத்திரத்தில் சிறைப்படுத்தி, தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த இந்த வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்தில் இருந்தே, தொற்றுநோயால் ஆழமடைந்த அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறிப்பிட்ட சம்பள கோரிக்கையை எந்தவகையிலும் நிறைவேற்ற முடியாது என அரசாங்கம் கூறிவந்ததது. தொற்றுநோய் காலக்கட்டத்தில் சிறப்பு கொடுப்பனவுகள் மற்றும் சரியான பாதுகாப்பு உபகரணங்களைக் கோரிய சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் உட்பட, ஏனைய வர்க்கப் போராட்டங்களில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்த அரசாங்கம், இதே மந்திரத்தேயே உச்சரித்தது.

ஆனால், தொற்றுநோய்க்கு மத்தியில், இந்தளவு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசாங்கம், பெரிய நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான நிவாரணப் பொதிகளை வழங்கும் அதே வேளை, இதனால் மேலும் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை, ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவு வெட்டுக்கள், வேலை வெட்டுக்கள், புதிய வரிகள் மற்றும் பாரியளவிலான விலை அதிகரிப்பு போன்றவை மூலம், தங்கள் தோள்களின் மீது சுமத்தப்படுவதையே ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கம் அனுபவித்தது.

இந்த தாக்குதல்களுக்கு எதிராக, ஆசிரியர்களுக்கு மேலதிகமாக சுகாதாரம், துறைமுகங்கள், பெருந்தோட்டங்கள், மின்சாரம் மற்றும் பெற்ரோலியம் உள்ளிட்ட பல துறைகளிலும் உள்ள தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்கள், தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்த வர்க்கப் போராட்டங்களை மிகக் கொடூரமான முறையில் நசுக்குவதற்காக சர்வாதிகார ஆட்சிகளுக்கு மாறுவதும் ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்காகும். இதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும், இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றார்.

தொற்றுநோய் பேரழிவுகரமாக பரவும்போது, அத்தியாவசியமற்ற பொருட்களையும் பாடசாலைகளையும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் மூட வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும், அரசாங்கம் முதலாளித்துவ இலாப உற்பத்தியைத் தொடர, தொழிலாளர்களின் உயிரை துச்சமாக மதித்து, ஆடை போன்ற அத்தியாவசியமற்ற பொருள் உற்பத்திக்கு உத்தரவிட்டது. அனைத்து தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் கொள்கையை வெளிப்படையாக ஆதரித்தத்தோடு பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பலிகொடுத்து, ஆசிரியர் சங்கங்கள் அக்டோபர் 21 அன்று பாடசாலைகளை மீண்டும் திறக்க உறுதிமொழி வழங்கின.

இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் உட்பட உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சிகள், அரச செலவுகளை வெட்டிக் குறைக்கும் கொள்கைகளை பின்பற்றுகின்றன. இந்த சிக்கன நடவடிக்கைகளை சவால் செய்யும் ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகள், அந்த வெட்டுக்களுக்கு நேரடியாக ஆணையிடும் சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச நிதி மூலதனத்தை எதிர்கொள்கின்றன என, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் தலைமையிலான ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவும் ஆசிரியர் வேலைநிறுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே சுட்டிக்காட்டி வந்துள்ளன.

ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தை வெல்வது எப்படி?” எனும் தலைப்பில், 25 ஜூலை 2021 அன்று, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், “உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து ஊற்றெடுக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான அரசியல் போராட்டமாகும்,” அந்தப் போராட்டம், முதலாளித்துவ தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும், எங்கள் குழு வலியுறுத்தியது.

இந்த அரசியல் போராட்டத்திற்கு எதிராக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று தொடர்ந்து கூறி வந்தன. இந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளமையினால், அழுத்தம் மிக அதிகம் என்று அவர்கள் பெருமை பேசிக்கொண்டனர். இறுதியில், முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுத்து கோரிக்கையை வென்றெடுக்கும் வேலைத்திட்டத்தின் முழு திவால்நிலையை ஆசிரியர்கள் எதிர்மறையாக அனுபவித்துள்ளனர். முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தத்தில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் அனுபவம் இதுதான்.

தொழிற்சங்கமானது முதலாளித்துவ முறைமையுடன் இறுக்கமாக கட்டுண்டிருக்கின்ற, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சர்வதேச மூலதனத்தின் தாக்குதல் கருவியே என்பது, ஆசிரியர்களின் போராட்டத்தில் மேலும் மேலும் அம்பலமானது. அரசாங்கத்தின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, “நாங்கள் ஒரு இறாத்தல் இறைச்சியையும் கேட்காமல்” முடிந்தளவு மிகவும் நெகிழ்வாக இருந்தோம்' என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அக்டோபர் 14 அன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதன் அர்த்தம் யாதெனில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளுக்கு ஏற்றவாறு, சம்பள கோரிக்கையை மூன்றில் ஒன்றாக குறைக்குமளவுக்கு, இந்த தொழிற்றசங்க தலைவர்கள் 'அதிகபட்ச' பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் என்பதாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் கொடுக்கப்படும் வாக்குறுதியின் அடிப்படையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்றன. ஆனால், அரசாங்கத்தின் சொற்ப ஊதிய உயர்வு சம்பந்தமாக ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பை முகங்கொடுத்த தொழிற்சங்கங்களால் அதை எளிதாக செய்ய முடியவில்லை. அதனால்தான் வேலைநிறுத்தம் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தது.

இறுதியில், இவ்வாறு நீண்டு செல்லும் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு ஆசிரியர் சங்கங்களை அரசாங்கம் மிரட்டியது. ஒக்டோபர் 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தொழிற்சங்கத் தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பாடசாலை ஆரம்பிக்கும் போது ஆசிரியர்களுக்கு இடையூறு செய்யும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“ஆசிரியர் வேலைநிறுத்தத்திற்கான காரணங்கள் நியாயமானதோ இல்லையோ, அதனால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதால் வேலைநிறுத்தம் நியாயமற்றது' எனக் கூறிய வீரசேகர, பயங்கரவாதத்தை அடக்கியது போல் ஆசிரியர் போராட்டத்தை அடக்குவதாக, இதற்கு முன்னரும் அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை தடை செய்து, ஜனாதிபதி இராஜபக்ஷ விதித்த “அத்தியாவசிய சேவைகள்” உத்தரவுக்கும் கொடூரமான அவசரகால சட்டத்துக்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் மௌனமான ஆதரவு வழங்கின. இந்த சூழிநிலையிலேயே வீரசேகர உட்பட அரசாங்கம் இந்த அச்சுறுத்தல்களை விடுக்க பலம்பெறுகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி, ,அரசாங்க சார்பு ஸ்ரீலங்கா பொது ஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர், வசந்த ஹந்தபான்கொடவும் வீரசேகரவும், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக பொலிசையும் குற்றப் புலனாய்வுத் துறையும் ஈடுபடுத்தி வேட்டையை துவக்கினர்.

இதற்கிடையில், ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக பாடசாலைகளில் பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்ட பட்டதாரி பயிற்சியாளர்களை அக்டோபர் 21 முதல் வேலைக்கு அமர்த்துமாறு அரசாங்கம் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளுக்கு பொலிஸ் படையொன்றையும் நியமிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், பாடசாலை சாவிகளை உரிய கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு வலய கல்வி அதிகாரிகள் மூலம் அதிபர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்ற அதேவேளை, அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமது கையாட்களை கொண்டு பலவந்தமாக பாடசாலைகளை திறப்பதற்கும் ஆசிரியர்களையும் அதிபர்களையும் பயமுறுத்துவதற்கும் செயற்படுகின்றனர்.

அரசாங்கம், ஆசிரியர்களுக்கு எதிரான இந்த கொடூர அடக்குமுறையையும் பொதுமக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி, ஆசிரியர் போராட்டத்தை தவிடு பொடியாக்க செயற்படுவதால், ஆசிரியர்களின் போராட்டத்தைப் பாதுகாக்க, ஏனைய தொழிலாள வர்க்கத் தட்டினரை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை எங்கள் குழு வலியுறுத்தியது. எவ்வாறாயினும், அத்தகைய ஐக்கியம், முழு முதலாளித்துவ அமைப்பையும் சவால் செய்யும் ஒரு அரசியல் போராட்டமாக மாறலாம் என்ற அச்சத்தில். ஆசிரியர் சங்கங்களும் ஏனைய துறைகளில் உள்ள தொழிற்சங்கங்களும் வேண்டுமென்றே அதை நிராகரித்தன.

இறுதியில், அரசாங்கத்தின் அச்சுறுத்தலின் கீழ், இத்தகைய முதலாளித்துவ சார்பு கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக ஆசிரியர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுக்க தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டன.

ஆசிரியர்களின் போராட்டத்தின் இந்த முழு படிப்பினைகள் மற்றும் அனுபவங்களை பின்வருமாறு தொகுக்கலாம்:

  • ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கை உட்பட தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு கோரிக்கையையும், அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் வெற்றிபெற முடியாது. முதலாளித்துவ அரசாங்களுக்கும் உலக முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே கோரிக்கைகளை வெல்ல முடியும்.
  • அதற்கு முற்றிலும் விரோதமான தொழிற்சங்கங்களின் கைகளில் இத்தகைய போராட்டம் தொடர்வதற்கு ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் போராட்டத்தை உடனடியாக தமது கைகளில் எடுக்க வேண்டும்.
  • இதற்காக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான புதிய அமைப்பு வடிவங்களாக, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவது அவசியம்.

ஜூலை 25 அன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு,

இந்த இன்றியமையாத கோரிக்கைகளை முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையின் கீழ் பூர்த்தி செய்ய முடியாது. மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான பில்லியன் கணக்கான ரூபாய்களை, வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த மறுத்து, பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதன் மூலம் பெற முடியும். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். இந்த போராட்டத்தை சர்வதேச சோசலிசத்தின் ஒரு பகுதியாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தின் பகுதியாகவே இலங்கையில் சோ.ச.க. இந்த வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றது.

Loading