இலங்கை அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தவுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ தனது 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரக்கமற்றதாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். “மக்கள் எதையும் பெற மாட்டார்கள். அதற்கு பதிலாக, நாங்கள் அவர்களிடமிருந்து பெறுவோம்,” என்று அவர் நவம்பர் 1 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் இளைய சகோதரரான அண்மையில் நியமிக்கப்பட்ட நிதியமைச்சர், வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

நவம்பர் 2 அன்று, திறைச்சேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, அரசாங்கமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த ஆண்டு 14.7 வீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 4.5-5 வீதமாக குறைக்க விரும்புவதாக ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு வாங்க வரிசையில் நிற்கும் இலங்கையர்கள்

பாதீட்டுப் பற்றாக்குறையை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பது என்பது, அரசாங்கம் சிறு விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு எஞ்சியிருக்கும் அற்பமான மானியங்களையும் இரத்து செய்து, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்துவதோடு அதிக வரிகளை விதிப்பதுமாகும். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பாதீட்டு இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்று டிரில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது, இது ரூபாய் 27 சதவீத கூர்மையான மதிப்பிழப்புக்குத் தூண்டியது.

வெள்ளிக்கிழமை பாதீட்டு அறிவிப்புக்கு முன்னதாக, வரையறுக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து நீக்கி வருகிறது. பருப்பு, சீனி, நெத்தலி, பச்சைப்பயறு, உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், டின் மீன், கொண்டைக் கடலை, கோதுமை மாவு, முழு ஆடைப் பால் மா, கருவாடு, தேங்காய் கோழி மற்றும் சோளம் உட்பட 14 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, நவம்பர் 3 அன்று நுகர்வோர் அதிகாரசபையால் நீக்கப்பட்டது.

இலங்கையின் உத்தியோகபூர்வ வருடாந்த உணவுப் பணவீக்கம் கடந்த மாதம் கிட்டத்தட்ட 13 சதவீதத்தை எட்டியது.

இந்த முடிவுக்கு முன்னர், அரிசி மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான விலை கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதத்தில் நீக்கப்பட்டன. அதையடுத்து அரசி மற்றும் கோதுமை மா முறையே 10 முதல் 40 சதவீதம் வரை விலை அதிகரித்தன. சமையல் எரிவாயு விலையில் 80 சதவீதம் விலை அதிகரித்தது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, ஆகஸ்ட் 30 அன்று, உணவுப் பொருள்கள் பதுக்கி வைப்பதை நிறுத்துவது மற்றும் கட்டுப்பாடான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்வது என்ற சாக்குப்போக்கின் கீழ், திடீரென ஒரு தேசிய அவசரகாலச் சட்டத்தை விதித்தார்.

பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இராஜபக்ஷ, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக நியமித்தார். எவ்வாறாயினும், இனி விலைக் கட்டுப்பாடுகள் இருக்காது அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் 'இடையூறு இருக்காது' என்பதைக் குறிக்கும் வகையில், அரசாங்கம் கடந்த வாரம் இந்த நிலையை நீக்கியது.

இலங்கையின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மற்றுமொரு அறிகுறியாக, கொழும்பு துறைமுகத்தில் 900க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் கப்பல் கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன. இதில் ஏற்கனவே சந்தையில் பற்றாக்குறையாக உள்ள சீனி 350 கப்பல் கொல்கலன்களில் இருந்தது. இலங்கையில் அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக, தமக்கு தேவையான வெளிநாட்டு நாணயங்கள் வழங்கப்படாததால் பொருட்களை அகற்ற முடியாமல் போனதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயு, பால் மா, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பெரும் சிரமங்களை உருவாக்கியுள்ளது. தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுகளால், நாடு முழுவதும் பசியும் பட்டினியும் அதிகரித்து வருகின்றன.

அரசாங்க அதிகாரிகள், கடந்த வாரம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் மாதாந்த ஓய்வூதியத்தில் இருந்து 400 முதல் 600 ரூபாய் ($US2 முதல் $US3 வரை) குறைக்கும் திட்டம் பற்றி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டனர். ஓய்வூதியதாரரின் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தும் சாக்குப்போக்கின் கீழ் இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தற்போதைய ஓய்வூதிய செலவினங்களை வெட்டுவதன் தொடக்கமாகும், இது அரச திறைச்சேரியின் மீது ஒரு சுமையாக கருதப்படுகிறது.

அக்டோபர் தொடக்கத்தில், நிதியமைச்சர் இராஜபக்ஷ வெளியிட்ட 2022 ஆம் ஆண்டிற்கான தனது மொத்த பாதீட்டு செலவின மதிப்பீடுகள், நடப்பு ஆண்டில் சுமார் 173 பில்லியன் ரூபாய்கள் குறைப்பைக் கொண்டுள்ளது. பிரதானமாக சுகாதாரம், மாகாண சபைகள், சமுர்த்தி (ஏழைகளுக்கான ஒரு சிறிய நலன்புரி கொடுப்பனவு), நீர் வழங்கல், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, கிராமப்புற வீடுகள் மற்றும் தொழிலாளர் செலவினங்களும் இந்த வெட்டுக்களில் அடங்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்காக ஏங்கும் கொழும்பு, இப்போது பல்தேசிய நிறுவனங்களுக்கு (MNCs) இன்னும் தாராளமான சலுகைகளை வழங்குகிறது. நிதியமைச்சர் இராஜபக்ஷ, அவர்கள் பாதீட்டில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி கலந்துரையாட, இலங்கையில் இயங்கி வரும் பல்வேறு பல்தேசிய நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒரு ரகசிய சந்திப்பை அண்மையில் நடத்தினார். எ. பவர் அன்ட் கம்பனி, ஏஐஏ காப்புறுதி, சியட் லங்கா, டோல் லங்கா, INSEE சீமெந்து, ஜப்பான் ஐடச், ஹுவாவி டெக்னொலொஜிஸ், ஸ்டான்டர்ஸ் சார்டட் வங்கி, மற்றும் ஏர்னஸ்ட் அன்ட் யங் ஆகிய நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன.

மட்டுப்படுத்தப்பட்ட ஊடக அறிக்கைகளின்படி, நிதியமைச்சர் பல்தேசிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் 'நிதிக் கொள்கையில் நிலைத்தன்மையை', உதாரணமாக ஒரு கீழ்மட்ட வரி ஆட்சியை, பராமரிக்கும் என்று உறுதியளித்தார். உண்மையில், இலங்கையில் பெருநிறுவன வரி விகிதங்கள் கடந்த ஆண்டு பாதீட்டிலும் தெற்காசியாவில் மிகக் குறைவான 14 முதல் 24 வீதத்திற்கு இடையில் குறைக்கப்பட்டது. ஏற்றுமதிப் பயிர்களை வளர்ப்பதற்கான காணிகளை அனுமதிப்பதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் மற்றும் விலை நிர்ணயத்தில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைப்பது உள்ளிட்ட கொள்வனவு 'பரிந்துரைகளின்' பட்டியலை பல்தேசிய நிறுவனங்கள் சமர்ப்பித்தன. அவர்களின் 'பரிந்துரைகளை' பரிசீலித்து அவற்றைத் தீர்க்க முயற்சிப்பதாக இராஜபக்ஷ கூட்டத்தில் உறுதியளித்தார்.

தொற்றுநோயால் ஏற்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் அனுப்பும் பண வருகையில் வீழ்ச்சி மற்றும் சுற்றுலாத் துறையின் சரிவு போன்றவற்றால் மேலும் தீவிரமடைந்த இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பாரிய வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்ப்படுத்தியது.

கடந்த மாத இறுதியில், மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை மேலும் கீழிறக்கி, எத்தியோப்பியா, லாவோஸ் மற்றும் காங்கோ குடியரசின் அதே வரிசையில் சேர்த்தது. 'இடமாற்று வழிகள் மற்றும் இருதரப்பு கடன்கள் போன்ற துண்டு துண்டான நிதிகளை' அரசாங்கம் மிகவும் நம்பியிருப்பதாகவும், 'மிகக் குறைந்த அந்நியச் செலாவணி இருப்புக்களின்' மத்தியில் இது 'இயல்பு அபாயங்களை' ஏற்படுத்துவதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு செப்டெம்பர் மாத இறுதியில் 2 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சுமார் 1.3 மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானது. எவ்வாறாயினும், நாடு 2025 ஆம் ஆண்டு வரை, சர்வதேச கடன் சேவையில் வருடாந்தம் 4 முதல் 5 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25-27 சதவீதத்தை கடனாகப் பெற வேண்டும் என்றும் மூடிஸ் கணித்துள்ளது.

மூடியின் மதிப்பீட்டை கோபத்துடன் நிராகரித்த இலங்கையின் மத்திய வங்கி, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் 'வெளிப்புற சவால்களைத் தணிக்க உதவும் கொள்கை முன்முயற்சிகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான தொனியை அமைக்கும்' என்பதால், இந்த தரமிறக்குதல் 'நேரத்திற்கு ஏற்றதல்ல' என்று அறிவித்தது.

இந்த 'கொள்கை முன்முயற்சிகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள்' ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட பிற 'கட்டமைப்பு சீர்திருத்தங்களின்' வரிசையில், அரசுக்கு சொந்தமான மின்சாரம், பெட்ரோலிய துறைகள் மற்றும் துறைமுகங்களை தனியார்மயமாக்குவதற்கான அதன் நகர்வுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சீர்திருத்தங்கள் எரிபொருள், மின்சாரம் மற்றும் பிற பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், அரசுக்குச் சொந்தமான துறைகளுக்கு தற்போது கிடைக்கும் அரசு மானியங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு, அந்த தொழில்துறைகள் சர்வதேச நிதி மூலதனத்திற்கான லாபகரமான முதலீடுகளாக மாற்றப்படுகின்றன.

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயல் நிரல் ஆழ்ந்த எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதோடு நவம்பர் 3 அன்று மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் நாடு தழுவிய எதிர்ப்பு போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட சிக்கன பாதீடு, சமூக பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதோடு இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட தொழிலாள வர்க்கத்தை கட்டாயப்படுத்தும்.

Loading