இலங்கை தொழிற்சங்கத் தலைவர் தடுப்பூசிகளுக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் (CMU) பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜயக்கொடி, கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு எதிராக வலதுசாரி பிரச்சாரத்தை நடத்தி வரும் அதே வேளை, தொற்று நோயையும் அதன் விளைவான மரணங்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என வலியுறுத்துகின்றார்.

ஜயக்கொடியின் விஞ்ஞான விரோதமான மற்றும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகள் இலங்கையின் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு எழுதிய கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதுடன் நவம்பர் 6 அன்று வெடபிம என்ற சிங்கள மொழி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் (CMU) பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜயக்கொடி (Source: Facebook)

அக்டோபர் பிற்பகுதியில் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் (NLAC) கூட்டத்தில் தடுப்பூசி ஆணைகள் பற்றிய கலந்துரையாடலின் போது, கூட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் (JAAF) அதிகாரிக்கு அமைச்சர் ஆதரவு தெரிவித்ததற்கு பிரதிபலிப்பாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை குழுவானது முதலாளிகள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு கூட்டுத்தாபன அமைப்பு ஆகும்.

ஜயக்கொடியின் கடிதத்தின்படி, JAAF இன் முன்னாள் தலைவர் ஜொஹன் லோரன்ஸ், தடுப்பூசி போட மறுக்கும் ஆடைத் தொழிலாளர்களை ஆலைகளுக்குள் நுழையவிடாமல் முதலாளிகள் தடுக்க முடியுமா என்றும் அவர்களை 'ஊதியம் இன்றி வீடுகளில் அடைத்து வைக்க முடியுமா' என்றும் கேட்டார். தொழில் அமைச்சர் அதை முழுமையாக ஒப்புக்கொண்டு, “நிச்சயமாக உங்களால் முடியும்” என்று அறிவித்தார்.

18 வெவ்வேறு நிறுவனங்களில் உள்ள 52 சீ.எம்.யு. கிளைத் தலைவர்களுடனான சந்திப்பின் விளைவாக, ஜெயக்கொடியின் கடிதம், தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதானது 'பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் நமது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்' என்று அறிவித்தது.

தொழிலாளர்கள் தடுப்பூசி போட மறுத்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழில் அமைச்சரும் JAAF அதிகாரியும் ஒப்புக்கொள்வதற்கும், ஆடைத் தொழிலாளர்கள் அல்லது தொழிலாள வர்க்கத்தின் வேறு எந்தப் பிரிவினரையும் COVID-19 இலிருந்து பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் தட்டினர் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தளவில், தடுப்பூசி கொள்கையானது உற்பத்தி பராமரிக்கப்படுவதையும் அதிக இலாபம் ஈட்டப்படுவதையும் உறுதி செய்வதாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, இலங்கை அரசாங்கமும் பெருவணிகமும் மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் 'சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல்' என்ற கொள்கையை பின்பற்றி வந்தன. இராஜபக்ஷ அரசாங்கம், 2020 மார்ச் மாதத்தில் ஒரு சுருக்கமான, மோசமாகத் திட்டமிடப்பட்ட, ஒரு மாதகால பொது முடக்கத்துக்குப் பின்னர், பெருவணிகங்களின் வேண்டுகோள் மற்றும் இலாபங்களின் மீதான தாக்கத்திற்கு பதில் நடவடிக்கையாக, ஏப்ரல் நடுப்பகுதியில் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கத் தொடங்கியது.

கொழும்பில், ஜூன் 28, 2021 அன்று கொரோனா வைரஸுக்கு எதிரான பொது தடுப்பூசி இயக்கத்தின் போது, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பதிப்பான கோவிஷீல்டின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்காக முதிய இலங்கையர்கள் வரிசையில் நிற்கின்றனர். (AP Photo/Eranga Jayawardena)

ஆடை மற்றும் பிற உற்பத்தித் தொழில்களில் உள்ள இலட்சக்கணக்கான ஊழியர்கள், போதுமான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்றி வேலைக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர். வேலைக்குத் திருப்பிய சில வாரங்களுக்குள் பல சுதந்திர வர்த்தக வலய (FTZ) தொழிலாளர்களும் ஏனையவர்களும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டனர் மற்றும் சிலர் இறந்தனர். உண்மையில், ஒவ்வொரு ஆலையிலும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் ஆடைத் தொழிற்சாலைகள், கொரோனா வைரஸ் தொற்று பரவும் மையஸ்தானமாக மாறியது.

கடந்த 18 மாதங்களில் முதலாளிகள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி, ஊதியத்தை வெட்டி மற்றும் வேலை நேரத்தை நீட்டித்துள்ளனர். எனினும், சீ.எம்.யு உட்பட தொழிற்சங்கங்களின் உடன்பாட்டுடன் மேலதி நேர வேலைக்கான ஊதியம் கொடுக்கப்படவில்லை.

ஜயக்கொடியின் கடிதம் முதலாளிகளுக்கு எதிராகவோ அல்லது தொற்றுநோய்க்கான அரசாங்கத்தின் குற்றவியல் பிரதிபலிப்புக்கு எதிராகவோ எழுதப்படவில்லை. கட்டாய தடுப்பூசிகள் 'தனிப்பட்ட சுதந்திரத்தை' மீறுவதாக பொய்யாகக் கூறும் அதேவேளை, 'மருந்து நிறுவனங்களும் ஏனைய ஆர்வமுள்ள தரப்பினரும் தொற்றுநோயை பெரிதுபடுத்தியுள்ளனர்' என்று சீ.எம்.யூ. தலைவர் வலியுறுத்துகிறார்.

ஜயக்கொடியின் கடிதம், கோவிட்-19 நோயினால் இலங்கையில் ஏற்பட்ட மரணங்கள் அற்பமானவை என்றும் வஞ்சத்தனமான வகையில் கூறுகிறது. அவர்களுக்கு 'பல்வேறு சிக்கல்கள்' இருந்ததாலேயே ஆறு தொழிலாளர்கள் கூட இறந்துள்ளனர், என்று அவர் கூறுகிறார். ஊடகங்கள் 'தொற்றுநோயை பெரிதுபடுத்தியுள்ளன,' என எழுதிய அவர், 'மன உறுதியற்ற தன்மையை' ஏற்படுத்துவதன் காரணமாக, கிராமப்புற தொழிலாளர்களை 'மேற்கத்திய மருத்துவ விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ள' கட்டாயப்படுத்தக் கூடாது, என அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் 19 அன்று நடந்த முந்தைய இணையவழி கூட்டத்தில், சீ.எம்.யூ. தலைவர் கடுமையாக அறிவித்ததாவது: 'ஒரு சிலர் கோவிட்-19 வைரஸால் மரணித்திருந்தாலும், நாங்கள் அதை ஒரு பயங்கரமான மரணகரமான தொற்றுநோயாக கருதவில்லை.' இதுவே தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் உயிர் வாழ்வு சம்பந்தமான இந்த கொடூரமான அலட்சியம், தொழிற்சங்கங்களை நடத்தும் சலுகை பெற்ற அடுக்குகளுக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெருமளவில் ஆதரிக்கின்ற மற்றும் சுகாதார அதிகாரிகள் அவற்றை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோருகின்ற இலங்கை மக்களின் உணர்வுகளுக்கும் இடையே காணப்படும் பரந்த இடைவெளியை சுட்டிக்காட்டுகிறது. மக்கள் தொகையில் 62 சதவீதம் பேர் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசியை கட்டாயமாக்குவது 'மனித உரிமை மீறல்' மற்றும் 'அரசியலமைப்பு உரிமை மீறல்' என்று ஜயக்கொடி கூறியது முற்றிலும் பொய்யானதாகும். தடுப்பூசி உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற மறுப்பதன் மூலம், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்திவிட யாருக்கும் 'உரிமை' இல்லை.

சீ.எம்.யு. தலைவர் தடுப்பூசிகள் பற்றிய ஐயத்தையும் பரப்ப முயற்சிக்கிறார். அவை நம்பகத்தன்மையற்றவை என்றும் மருந்து நிறுவனங்கள் அவற்றின் செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார். இந்த போலியான மற்றும் விஞ்ஞானப் பூர்வமற்ற கூற்றுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் விரைவான கண்டுபிடிப்பும் அபிவிருத்தியும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள விஞ்ஞானிகளின் ஆரம்ப ஆராய்ச்சியின் காரணமாக இது சாத்தியமானது. சமீபத்திய தசாப்தங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசாதாரண முன்னேற்றங்களால் இது எளிதாக்கப்பட்டது.

பைஸர், மொடர்னா, பையோன்டெக் போன்ற இராட்சத நிறுவனங்களின் இலாபத்திற்கான கட்டுப்பாடற்ற உந்துதலும் போட்டி நிறுவனங்கள் மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் முரண்பட்ட நலன்களும், உலகெங்கிலும் தடுப்பூசிகளின் விரைவான, இலவச மற்றும் சமமான விநியோகத்திற்கு பிரதான தடைகளாகும். எவ்வாறாயினும், இது தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை செல்லாததாக்கவில்லை, மாறாக தனியார் இலாப முறையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மாபெரும் மருந்து நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு பெரிய தொழில்துறையையும் தேசியமயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் முன்வைக்கின்றதன.

கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு மற்றும் வைரஸின் தாக்கம் 'மிகைப்படுத்தப்பட்டது' என்ற ஜயக்கொடியின் கூற்றுக்கள் அலட்சியமானவை மற்றும் கபடத்தனமானவை.

இலங்கையின் மிகக்குறைத்து மதிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 560,000க்கும் அதிகமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14,200க்கும் அதிகமானோர் இந்த நோயால் மரணித்துள்ளனர். எவ்வாறாயினும், குற்றவியல்தனமாக 'பொருளாதாரத்தை திறந்து விடும்' கொள்கைக்கு எதிர்ப்பைத் தூண்டிவிடக் கூடும் என்ற அச்சத்தில் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் முதலாளிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் உண்மையான எண்ணிக்கைகள், மூடி மறைக்கப்படுகின்றன.

தற்போது, உத்தியோகபூர்வ உலகளாவிய கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, சில ஆய்வுகள் மரணங்களின் உண்மையான எண்ணிக்கை 17 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடுகிறது. அண்டை நாடான இந்தியாவில், ஜூலை மாதத்தில் உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை 4 இலட்சத்துக்கும் அதிகம் என கூறப்பட்ட போதிலும், ஏனைய ஆய்வுகள் 4.9 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த நோய்த்தொற்றுகள் மற்றும் மரணங்கள், அரசாங்கங்களும் பெருநிறுவன உயரடுக்கினரும் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுத்து எந்த விலை கொடுத்தாவது உற்பத்தியை முன்னெடுக்கும் கொள்கையை பின்பற்றுவதன் நேரடி விளைவாகும்.

கட்டாயத் தடுப்பூசி என்பது அடிப்படை 'மனித' மற்றும் 'அரசியலமைப்பு உரிமைகளை' மீறுகிறது என்ற ஜயக்கொடியின் போலியான கூற்றுக்கள், தடுப்பூசிகளுக்கும் தொற்றுநோய்க்கு எதிராக விஞ்ஞனப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கும் எதிரான உலகளாவிய வலதுசாரி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

ஜயக்கொடியும் சீ.எம்.யு. அதிகாரத்துவமும், தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கும் உயிர் வாழ்வை விட இலபாத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கைக்கும் இழிவான முறையில் ஒத்துழைக்கின்றனர்.

2020 ஏப்ரலில், சீ.எம்.யு. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் கொரோனா வைரஸை தடுப்பதற்கான முடக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்புகளுக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்து ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதின. 'தேசத்தை நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,' என அவை அதில் பிரகடனம் செய்திருந்தன.

அரசாங்கத்தின் பெருவணிகக் கொள்கைகள் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ இலாப முறைமையை பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, ஜயக்கொடியும், சீ.எம்.யு. மற்றும் ஏனைய இலங்கை தொழிற்சங்கங்களும் தடுப்பூசிக்கு எதிராக நிற்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல,

கோவிட்-19 என்பது ஒரு உலகளாவிய பேரழிவாகும், இது புதிய மற்றும் முன்னெப்போதும் இல்லாதளவு மரணகரமான தொற்று மாறுபாடுகளை கொண்டுள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கையின் மூலமும் மிகவும் அபிவிருத்தி செய்யப்பட்ட விஞ்ஞான அறிவு மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் மட்டுமே வைரஸை எதிர்த்துப் போராட முடியும். உலக சோசலிச வலைத் தளம் 'தடுப்பூசிக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்தை எதிர்த்திடு!' என்ற தலைப்பில் 29 ஜூலை 2021 அன்று வெளியிட்ட ஆசிரியர் குழு அறிக்கை இதனை தெளிவுபடுத்தியுள்ளது.

'தொழிலாளர் வர்க்கத்தின் கொள்கையானது அரசியல் உறுதிப்பாட்டையும் பொறுமையான விளக்கத்தையும் இணைக்க வேண்டும். ஒவ்வொரு வேலைத்தளத்திலும் நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதானது தொழிலாளர்களை குறிப்பாக சுகாதாரப் சேவையில் உள்ளவர்களை, தடுப்பூசி கோரும் அரசியல் பிரச்சாரத்தில் வக்கீல்களாக மாறுவதற்கும், தொற்றுநோயின் கொடிய ஆபத்தில் இருந்து தங்கள் வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கும் உதவும்.

“தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வெறுமனே ஒரு மருத்துவப் பிரச்சினை அல்ல. அதற்கு முதலாளித்துவ முறைமைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டம் அவசியமாகும். பொது சுகாதார நலன்களுக்காக தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய திட்டமிடல் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு அவசியமாகும், இது ஒரு சர்வதேச புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதன் மூலமும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமும் மட்டுமே சாத்தியமாகும்.

Loading