இங்கிலாந்து அரசாங்கம் பெற்றோர்கள் மீதான அடக்குமுறையை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் லீசா டியஸை பாதுகாக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி (Safe Education For All – SafeEdForAll) பிரச்சாரக் குழுவின் உறுப்பினரும், #SchoolStrike2021 இன் தலைவருமான பெற்றோர் லீசா டியஸ், தனது மகளின் பள்ளி வருகை தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்படுவதற்கான குடும்ப நீதிமன்றத்தின் அச்சுறுத்தலை அவர் எதிர்கொண்டதன் பின்னர் அவருக்கு பரந்த ஆதரவு கிடைத்துள்ளது.

அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம், “எனக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இது, ஒரு எதிர்ப்பை நான் தொடங்கி வைத்ததால் என்று நினைக்கிறேன். இது என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது பள்ளிகளைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக இது அரசாங்கம் மற்றும் மக்களை அது நடத்தும் விதம் பற்றியது. இது சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும் கொள்கை பற்றியது. மேலும், 150,000 தேவையற்ற இறப்புக்களைப் பற்றியது” என்று கூறினார்.

“வழக்குரைஞர்கள், சமூக சேவகர்கள், பல்வேறு வகையான மக்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில்களைச் சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

லீசா டியஸ் தனது ட்விட்டர் வீடியோ ஒன்றில் பள்ளி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறார் [Credit: Lisa Diaz @Sandyboots2020]

“குழந்தைகள் இறப்பது, பராமரிப்பு இல்லத்தின் பணியாளர்கள் இறப்பது, ஆசிரியர்கள் இறப்பது என எதுவானாலும் அவை அனைத்தும் ஒரே போராட்டத்தின் பகுதியாகவே உள்ளன. இது மக்களை பீரங்கித் தீவனமாக பார்ப்பதைத் தவிர வேறில்லை. உயிர்களை முற்றிலும் அலட்சியப்படுத்துவது மிகவும் வேதனைக்குரியது. இது மிகவும் அவமதிப்பானது. மேலும், இது மிகவும் கொடூரமானது.”

லீசா மேலும், “இது போராட்டத்தின் அடையாளமாக இருப்பதால் மக்கள் இதை ஆதரிக்க விரும்புகிறார்கள். இது, லோங் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கானது, லோங் கோவிட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கானது, மேலும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கானது. மேலும், தொற்றுநோயால் அல்லது பிற கொடுமைகளால் ஏதேனும் ஒரு வகையில் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட எவருக்குமானது” என்றும் கூறினார்.

இங்கிலாந்தின் கல்வியாளர்கள் சாமானிய பாதுகாப்புக் குழுவின் ஆதரவாளர்கள், லீசாவை பாதுகாப்பது குறித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

ஜூட் ஜாக்சன் “கோவிட்-19 இல் இருந்து தனது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்” தனது “தைரியமான” நிலைப்பாட்டை பரிந்துரைத்து, “லீசாவுடன் நிற்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். மேலும், “தொற்றுநோயின் தீவிரத்தை பொறுப்பற்ற வகையில் குறைத்துக் காட்டுவது, மற்றும் ஒரு முறையான பொது சுகாதாரம் வழிநடத்தும் நடவடிக்கை பற்றிய மற்றும் அதிகரித்து வரும் வைரஸை அகற்றுவது பற்றிய விஞ்ஞானிகளின் கூக்குரலைக் கேட்க மறுத்துவிட்டது” குறித்து அவர் அரசாங்கத்தைக் கண்டித்தார்.

Ben Hughes என்பவர், “லீசாவை குடும்ப நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது என்பது அவரது குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறையும், மற்றும் இப்போதுள்ளதை விட மோசமான கல்வி பயிலும் நிலை அவர்களுக்கு உருவாகும் என்பதாகும்” என்று கருத்துத் தெரிவித்தார். “ஆரோக்கியத்திற்கு முற்றிலும் ஆபத்தான ஒரு அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்ததற்காக” Wigan கவுன்சிலை அவர் கண்டித்தார்.

லீசாவின் “சமூக ஊடகப் பகிர்வுகள் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் ஆதரிக்கும் வகையில் அவர்களை ஒருங்கிணைக்கவும், மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கல்விக்காக அவர்கள் போராடும் நிலையில் மற்றவர்களின் ஆதரவை பெறுவதற்கும் உதவின” என்று ஆசிரியர் ரூத் கூறினார். அவர் லீசாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை, 'ஒரு குறிப்பிட்ட பெற்றோரை இலக்காகக் கொண்ட சமச்சீரற்ற மற்றும் பழிவாங்கும் பதில்' என்று அவர் அழைத்தார், அவர்கள் தர்மசங்கடமாக கருதுகின்றனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளரான கிறிஸ் போர்ட்டர், “தொற்றுநோய் காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமையளித்த ‘குற்றத்திற்காக’ பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கவும் மற்றும் அவர்களை குடும்ப நீதிமன்றம் முன் நிறுத்தவும் அவர்கள் அச்சுறுத்தப்படுவதை” எதிர்த்தார். இங்கிலாந்தின் கோவிட் கொள்கைகளைப் பற்றி குறிப்பிடுகையில், “மாறியது ‘விஞ்ஞானம்’ அல்ல, மாறாக அரசாங்கக் கொள்கை பொருளாதார நலன்கள் பாதிக்கப்படாத வகையில் பொது சுகாதார அக்கறைகளை அனுமதிக்கின்றது” என்று கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான மார்கோட் மில்லர், “இலாப பெருக்கத்திற்கு உயிர்களை அடிபணிய வைக்கும் வெறுக்கத்தக்க ஜோன்சன் அரசாங்கத்தால் பெற்றோர்களின் மிக அடிப்படையான உரிமைகளும், உள்ளுணர்வுகளும் காலிலிட்டு நசுக்கப்படுகின்றன. நாம் லீசாவுடன் நின்று, ‘ஒருவருக்கு ஏற்பட்ட காயம் அனைவருக்கும் ஏற்பட்டதே’ என்ற கருத்தின் அடிப்படையில் பரந்தளவில் தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும்” என்று கூறினார்.

லங்காஷையரைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் பிரையன் ராபின்சன், “லீசாவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தவிர ஒரு குற்றமும் செய்யாத போதும் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதற்கான, அபராதம் விதிக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்வதால், லீசாவுக்கு முழு மனதுடன் தனது ஆதரவை வழங்கினார். அரசாங்கம், கல்வித் துறையின் மூலம், என்ன விலை கொடுத்தேனும் ‘வைரஸூடன் வாழக் கற்றுக்கொள்வது’ என்ற அவர்களின் கொலைகார கொள்கைக்கு எதிராக மாற்றுக் கருத்து வைத்திருப்பதையோ அல்லது அதிலிருந்து விலகுவதையோ பொறுத்துக்கொள்ளாது என்பதை இது அம்பலப்படுத்துகிறது. எல்லா இடங்களிலும் உள்ள பெற்றோர்களுக்கு அக்கறை காட்டுவது மற்றும் போதிப்பதற்கான ஒரு அகத்தூண்டுதலாக லீசா இருக்கிறார் என்ற நிலையில், அரசின் சக்திகளுக்கு எதிராக அவரை தனித்துப் போராட விட்டுவிட முடியாது” என்றார்.

#IStandWithLisa என்று ஹேஷ்டாக்கைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் ஆதரவு அறிக்கைகள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்றாக WSWS இன் ஆதரவாளர் மரியன் கிளாட்ஸ்டோன், “பாதுகாப்பற்ற பள்ளியிலிருந்து தனது குழந்தைகளை பாதுகாப்பதற்காக அம்மா #Lisa வுக்கு எதிராக #WiganCouncil காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். லீசா மீது அபராதம் விதிப்பதும் அச்சுறுத்தல் விடுப்பதும் வாபஸ் பெறப்பட்டு, தொல்லை கொடுத்த குற்றத்திற்காக #WiganCouncil மீது வழக்குத் தொடுத்து அபராதமும் விதிக்கப்பட வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மற்றவர்கள் WSWS க்கு நேரடியாக கருத்துக்களை அனுப்பியுள்ளனர். மார்டின் என்ற ஒரு மின்சார தொழிலாளி, ஆளும் வர்க்கம் “வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் உள்ள ஒருவரை அச்சுறுத்துகிறது என்றும், “ஒரு பனிப்பந்து அளவு சிறியதாக இருந்தாலும், அவர்கள் தங்கள் அதிகாரத்திற்கு எந்த சவாலையும் தாங்க மாட்டார்கள்,” என்றும் எழுதியுள்ளார். மேலும் உலக அரசாங்கங்கள் “தங்கள் குடிமக்களின் நலன்களை கவனிக்காமல்”, “பெரும் பணக்காரர்கள், பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளையே” பாதுகாக்கின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.

இரயில்வே தொழிலாளியான மார்க் என்பவர், கவுன்சில் மற்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை “தனது குழந்தைகளை ஆபத்தில் தள்ள மறுத்த ஒரு தாயை மௌனமாக்க நோக்கம் கொண்ட ஒரு மிருகத்தனமான உளவியல் தாக்குதல்” என்று அழைத்தார். “பணக்காரர்களின் இலாப நலன்களுக்காக எந்தவொரு தொழிலாளியும் நோய்தொற்றுக்கு ஆளாகி இறக்கக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Teachers With Covid UK அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரான கோடாமா, கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையுடன் தொடர்பை உருவாக்கினார்: அதாவது “பள்ளி ஊழியர்கள் தங்கள் வேலையையும் வாழ்வாதாரத்தையும் பணயம் வைக்காமல் வெளிப்படையாகப் பேச முடியாது, மற்றும் பெற்றோர்களோ பலரது ஆரோக்கியத்தை பணயம் வைத்து சிலரது இலாபத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மிருகத்தனமான அமைப்பால் மிகவும் பயமுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், [லீசா] தைரியமாக, தன் நோக்கத்தில் விடாப்பிடியாக நிலைத்திருக்கும் நிலையில், முழு சமூகத்தின் ஆதரவைப் பெற தகுதியானவர் ஆவார்” என்கிறார்.

தங்கள் ஆதரவை அறிவிக்கும் பலரும் புரிந்துகொள்வது போல, லீசா மீதான தாக்குதல், குழந்தைகள் வேண்டுமென்றே பாரிய நோய்தொற்றுக்குள்ளாக்கப்படுவதை எதிர்க்கும் குடும்பங்கள் மீதான ஒரு பரந்த அரசாங்க ஒடுக்குமுறைக்கான முன்னோட்டமாகும்.

கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தின் கல்விச் செயலர் நாதிம் ஜஹாவி உள்ளூராட்சி கவுன்சில் தலைவர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பாதுகாக்கும் பெற்றோர்கள் “பின்விளைவுகளை” சந்திக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தும்படி உத்தரவிட்டதாக நேற்று Schools Week தெரிவித்தது. மேலும், சமூக பாதுகாப்புச் சேவைகளை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க கவுன்சில்களை அந்தக் கடிதம் ஊக்குவித்தது.

நவம்பர் 23 அன்று பள்ளித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட மற்றொரு கடிதம், “நாம் தொற்றுநோய் காலத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம், மேலும் குறைந்த அளவிலான வருகை ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையாக மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாம் இப்போது கூட்டாக செயல்பட வேண்டும். அவசரம் குறித்து ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று அறிவித்தது. மேலும், அமலாக்க நடவடிக்கைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள” பள்ளிகளுக்கு அது அழைப்பு விடுத்தது.

அரசாங்கம் இப்போது ஐந்து “வருகை கண்காணிக்கும் ஆலோசகர்களை” நியமித்துள்ளது, அவர்கள் வருகை விகிதத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அறக்கட்டளைகள் மற்றும் உள்ளூர் கவுன்சில்களுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 பவுண்டுகள் வழங்கப்படும். இந்த கோடை அறிக்கைகள் அந்த அணியை “வருகை தராத மாணவர்களை தாக்கும் விரைவுப்படை” என்று விவரித்தன.

தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட குடும்பகளின் கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

SafeEdForAll குழுவின் ஆதரவாளரான @Tall_Paul_05 ட்விட்டர் பயனர், “நேற்றிரவு காலக்கெடு முடிந்து 120 பவுண்டு அபராதத்தைச் செலுத்த மறுத்ததன் பின்னர், இன்று என் குழந்தை #SchoolStrike2021 இல் கலந்து கொள்வார்” என்று பதிவிட்டிருந்தார். “ஊழியர்கள் லோங் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு கொடூரமான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்று விவரித்து கல்வி அறக்கட்டளையில் இருந்து பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அபி மோரிஸ் மற்றும் சாரா ப்ரூக்ஸ் ஆகியோரின் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களிலிருந்து மேலும் இரண்டு நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக Daily Mirror தெரிவித்தது. “இந்தக் கனவில் நாங்கள் சிக்கிக் கொள்கிறோம்… எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள், எந்தவித வருகையின்மையையும் அவர்களால் அங்கீகரிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என்று செய்தியிதழுக்கு மோரிஸ் தெரிவித்தார்.

இவ்விரண்டு குடும்பங்களும், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய (CV) மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய (CEV) குடும்பங்களைப் பொறுத்தவரை அவர்களின் விருப்பத்தின் பேரில் குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதிக்க மறுத்த அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் Good Law Project (GLP) ஆல் ஆதரிக்கப்படுகின்றன. அக்டோபர் நடுப்பகுதியில், GLP, CV மற்றும் CEV குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் விரும்பினால் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களை அனுமதிக்கும் ஒரு கடிதத்தை கல்வித் துறையிலிருந்து (DfE) பெற்றுள்ளது. என்றாலும், இந்த இழிவான உத்தரவாதம் DfE ஆல் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

நேற்று, “நீதித்துறை மறுஆய்வு அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, கல்விச் செயலர் Good Law Project க்கு ஒரு விஷயம் சொல்லவிருந்ததும், மற்றும் பள்ளிகளுக்கும் கவுன்சில்களுக்கும் மற்றொரு விஷயம் சொல்லவிருந்ததும் மிகவும் திருப்தியற்றது” என்று GLP ட்வீட் செய்தது.

அனைத்துக் கட்சிகளின் தலைமையிலான கவுன்சில்களால் செயல்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் அச்சுறுத்தல், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் உடந்தையுடன் தான் தொடர்கிறது. “தொழிற் கட்சியில் இருந்து எவரோ ஒருவர் நடவடிக்கை எடுப்பதற்காக நான் காத்திருக்கிறேன், என்ன நடக்கிறது என்பதைக் கண்டிக்கிறேன், என்றாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது… அது ஏன் என்று எனக்குத் தெரியும். பதில் என்னவென்றும் எனக்குத் தெரியும். இவை அனைத்தும் ஒரே இயந்திரத்தை இயக்குவதன் ஒரு பகுதியாகும்” என்று லீசா கருத்து பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 104,000 புதிய கோவிட் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. நேற்று, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) வாராந்திர ஆய்வு, இங்கிலாந்தில் கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் கிட்டத்தட்ட 900,000 பேர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கண்டறிந்தது, இது முன்னைய வாரத்தை விட 4 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக கவலைக்குரியது என்னவென்றால், 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் நோய்தொற்றுக்களின் கடுமையான அதிகரிப்பு இருப்பதாக ONS கண்டுபிடித்துள்ளதுதான்.

நவம்பர் 25 அன்று கோவிட் தொடர்பான காரணங்களுக்காக சுமார் 208,000 குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை, இது பதினைந்து நாட்களில் ஏற்பட்ட 60 சதவீத அதிகரிப்பாகும். கடந்த வாரத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் வைரஸால் இறந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை, மொத்த இறப்பு எண்ணிக்கையை 115 ஆக உயர்த்தியது. புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டினால் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருப்பது குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன.

அரசாங்கத்தின் புதிய மற்றும் எழுச்சிப் பெறும் சுவாசம் தொடர்பான வைரஸ் அச்சுறுத்தல்கள் ஆலோசனைக் குழுவின் (New and Emerging Respiratory Virus Threats Advisory Group) நவம்பர் 25 கூட்டத்திற்கான கூட்ட நடவடிக்கை அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது, அது, “இந்த நோய்தொற்று அலை முந்தைய அலைகளை ஒத்ததாகவோ, அல்லது அவற்றை விட மிகப் பெரியதாகவோ இருக்கும் என்பதை நாம் தவிர்க்க முடியாது” என எச்சரிக்கிறது. B.1.1.529 [Omicron] மாறுபாட்டுடன் தொடர்புடைய நோயின் தீவிரத் தன்மை பற்றிய தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், கடுமையான நோய்தொற்றுக்களின் எழுச்சியுடன் கூடிய நோய்தொற்றுக்களின் மாபெரும் அலை உருவெடுப்பதையும், மற்றும் NHS இன் திறனை மூழ்கடிக்க போதுமானதாக இருக்கும் ஒரு துணைக்குழுவையும் நிராகரிக்க முடியாது” என்றும் இது கூறுகிறது.

இந்த நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் பரந்த சமூக எதிர்ப்பின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சுவதுடன், அதன் மிக முக்கியமான விமர்சனங்களை உதாரணமாக எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது. இந்நிலையில், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர போராட விரும்பும் அனைவரும் லீசாவின் பாதுகாப்பிற்காக அணிதிரள வேண்டும்.

Loading