முன்னோக்கு

வெள்ளை மாளிகையில் யூஜெனிக்ஸ் துர்நாற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

யூஜெனிக்ஸ் இயக்கத்தின்* இருண்ட நாட்களை நினைவூட்டும் வகையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இயக்குனர் ரோசெல் வாலெனஸ்கி வெள்ளிக்கிழமை கோவிட்-19 முக்கியமாக “முன்னரே நோயுற்றிருந்த” மக்களைக் அதிகமாக கொல்கிறது என்ற உண்மை 'ஊக்கமளிக்கும் செய்தியாகும்' எனக் கூறினார்.

கோவிட்-19 நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகையில், CDC இயக்குநரிடம் ABC செய்தி சேவையின் 'Good Morning America' நிகழ்ச்சியின் நேர்காணலில் 'இன்று காலையில் நாம் பேசும் ஊக்கமளிக்கும் தலைப்புச் செய்திகள்' பற்றிக் கேட்கப்பட்டது.

அதற்கு வாலென்ஸ்கி பின்வருமாறு பதிலளித்தார்:

75 சதவீதத்திற்கும் மேலாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் முன்னரே ஆகக்குறைந்தது நான்கு நோய்களைக் கொண்டவர்களில் நிகழ்ந்தன. எனவே உண்மையில் இவர்கள் ஆரம்பத்திலேயே உடல்நிலை சரியில்லாதவர்கள், ஆம், ஒமிக்ரோனின் சூழலில் உண்மையில் இவை ஊக்கமளிக்கும் செய்திகள்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஒரு உண்மையான விஷயமாக, பொதுவாக கோவிட்-19 உம் மற்றும் குறிப்பாக ஒமிக்ரோன் மாறுபாடும் வயதானவர்கள் மற்றும் நோயுற்றிருப்பவர்களை மட்டுமே பாதிக்கிறது என்ற கூற்று தவறானது. புதிய மாறுபாட்டின் பரவலானது இளவயதுடையவர்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் மருத்துவமனைகளில் அதிகளவான பதிவுசெய்யப்பட்ட எழுச்சியை உண்டாக்கியுள்ளது. உயிர் பிழைப்பவர்கள் மற்றும் 'நீண்டகால கோவிட்' (“Long COVID”) இன் விளைவுகளால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்படும் அதன் நீண்டகால விளைவுகள் சிறிதளவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே நோயுற்று உள்ளவர்களிடையே (comorbidities) 'அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்' ஏற்படுவது 'ஊக்கமளிக்கும் செய்தி' என்ற கருத்து அதன் விளைவுகளில் அதிர்ச்சியளிக்கிறது.

வாலென்ஸ்கியின் கருத்துக்கள், பைடென் நிர்வாகம் யூஜெனிக்ஸ் இனை தழுவிக்கொள்வதே என்று மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஊனமுற்றோருக்கான வக்கீல்களால் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது.

'இது யூஜெனிசிஸ்ட்' என்று வழக்கறிஞரும் ஊனமுற்றோர் ஆர்வலருமான மத்தேயூ கோர்ட்லாண்ட் ட்விட்டரில் எழுதினார். “பிரச்சனை என்னவென்றால், @CDCDirector உட்பட @CDCgov ஐ இயக்கும் நபர்கள், ஊனமுற்றோர் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்கள் இறந்தால் அது ‘ஊக்குவிக்கிறது’ என்று **அடிப்படையில் நம்புகிறார்கள்**. மேலும் அவர்களின் அனைத்து முடிவுகளும் இதனுடன் தொடர்புடையதாக இருப்பதுடன் அதன்படி செயல்படுத்தப்படுகின்றன.

இவை எதுவும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. வாலென்ஸ்கியின் கருத்துக்கள், வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் மேலாதிக்கம் செய்யும் பிரிவுகளும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களின் உயிர்கள் அடிப்படையில் மதிப்பற்றவை என்ற பார்வையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதை நோக்கித் திரும்புவதை வெளிப்படுத்துகின்றன.

இந்தக் கொள்கையின் முன்னணி ஆதரவாளர், முன்னாள் ஒபாமா நிர்வாக அதிகாரியும் தற்போதைய பைடெனின் கோவிட் பணிக்குழு ஆலோசகருமான எஷிக்கீல் இமானுவல் ஆவார். அவர் இப்போது அமெரிக்க அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களினால் முழு அளவில் ஆதரவளிக்கப்படுகின்றார்.

புதனன்று, Journal of the American Medical Association இமானுவல் மற்றும் பிற முன்னாள் பைடெனின் சுகாதார ஆலோசகர்களின் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டது. அவை கோவிட்-19 ஐ “புதிய வழமையானதொன்றாக்க” வேண்டும் என்று வாதிடுவதுடன் மற்றும் கோவிட்-19 இறப்புகளைப் பற்றிய அறிவிப்பதை “நிறுத்திவைக்குமாறு” மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்தது. இந்தக் கட்டுரைகள் அமெரிக்க ஊடகங்களில் நற்செய்தியாகக் கருதப்பட்டு, நியூ யோர்க் டைம்ஸ்மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் முதற்பக்கங்களில் வெளியிடப்பட்டன.

ஆனால் இந்த பிரச்சாரம் இமானுவல் NBC இன் 'Meet the Press' இல் வெள்ளை மாளிகையின் உத்தியோபூர்வமற்ற பிரதிநிதியாகசேவை செய்தபோது ஞாயிற்றுக்கிழமை உச்சக்கட்டத்தை அடைந்தது.ஒரு 'புதிய வழமையானதொன்றாக்குவதற்கான' இமானுவலின் அழைப்பு வாஷிங்டன் போஸ்ட்டில் முன்னணி தலையங்க கட்டுரையால் ஒரே நேரத்தில் பாராட்டப்பட்டு, இது 'நிபுணர்கள்' முன்வைக்கப்பட்ட 'கோவிட் உடன் வாழ்வதற்கான விவேகமான மூலோபாயம் 'என்று அழைக்கப்பட்டது.

உண்மையில், இமானுவல் மற்றும் அவரது இணை ஆசிரியர்களின் அழைப்பு, 'சமூக நோயெதிர்ப்பு சக்தி' கொள்கை தொற்றுநோயின் முடிவுக்கு வழிவகுக்கும் என்ற கட்டுக்கதையிலிருந்து எடுக்கப்பட்ட போலி-விஞ்ஞான கிரேட் பாரிங்டன் பிரகடனத்திற்கான மறுஅடிபணிவு என்பதைத் தவிர வேறில்லை. இது அலை அலையாக, மாறுபாட்டிற்கு பின் மாறுபாடாக, ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற உயிர்களை எடுக்கும் நிரந்தரமான கோவிட்-19 இற்கான திட்டமாகும்.

'Meet the Press' அல்லது Washington Post ஆசிரிய தலையங்கம், இமானுவல் ஆயுட்காலத்தை குறைப்பதற்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவையை குறைப்பதற்குமான ஒரு முன்னணி வக்கீல் என்று குறிப்பிடவில்லை.

இமானுவல், தென் கரோலினா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியர் ஜெனிஃபர் ஏ. பிரேயின் வார்த்தைகளில், “ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்களை பயனற்றவர்கள் மற்றும் வீணானோர்கள் என்று நினைக்கிறார். நாம் செலவு/இலாப ஆய்வை செய்யும் போது அவர்களின் மதிப்பைவிட செலவு அதிகமாகும்'. '75 வயதிற்குப் பின்னர் வாழ்வது மதிப்புக்குரியது அல்ல, வயதானவர்கள் நமது வளங்களை வறட்சியடைய செய்கிறார்கள்' என்று இமனுவல் நம்புகிறார் என அவர் முடித்தார்.

இமானுவல் 'தனது யூஜெனிசிஸ்ட் கருத்துக்களை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்,' என பத்திரிகையாளரும் மற்றும் இயலாமை தொடர்பான ஆராய்ச்சியாளரான லவ்ரா டோர்வார்ட் தெரிவித்தார்.

இமானுவலின் அடிப்படை அறிவுரை என்னவென்றால், மருத்துவப் பராமரிப்பின் அடிப்படை நிர்ணயம் என்பது தகமை மற்றும் கண்ணியத்திற்கான தனிநபரின் உரிமைகளாக இருக்கக்கூடாது. மாறாக நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியோர்களின் வாழ்வை நீட்டிக்கும் 'சமூகத்திற்கான' செலவினங்களால் இயக்கப்படும் 'செலவு-இலாப ஆய்வினால்' உந்தப்பட்டது ஆகும்.

மருத்துவத் தொழில் இத்தகைய செலவு-இலாப ஆய்வு வெறுக்கத்தக்கது என்று இமானுவல் கூறுவது சரிதான். ஆனால் இதற்குக் காரணம், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு இத்தகைய ஆய்வின் பயன்பாடு யூஜெனிக்ஸ் மரபு மற்றும் நாஜிக்கள் 'உயிர்வாழத் தகுதியற்றவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்ட நீடித்த நோய்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை ஜேர்மன் நாஜிக் கட்சி கொன்றதன் மூலம் அறியப்படுகிறது.

ஊனமுற்றோருக்கு எதிரான நாஜி பிரச்சாரம். அதன் தலைப்பு 'ஒரு நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நபர் நாட்டிற்கு 5.5 ரீச்மார்க்குகள் (இடது) செலவு வைக்கின்றார், அதே தொகையில் ஒரு ஆரோக்கியமான குடும்பம் ஒரு நாள் வாழ முடியும்(வலது).(Credit: US Holocaust Memorial Museum, courtesy of Roland Klemig) [Photo: US Holocaust Memorial Museum, courtesy of Roland Klemig/WSWS]

உயிரியலின் பாடப்புத்தகமான From Chance to Choice: Genetics and Justice என்பதில் பேராசிரியர்கள் அலன் புக்மான், டான் புறொக், நோர்மான் டானியல்ஸ் மற்றும் டானியல் விக்லர் ஆகியோர் அமெரிக்க யூஜெனிக்ஸ் இயக்கத்தில் 'செலவு-இலாப ஆய்வு' பாரம்பரியத்தை பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் 1926 ஆம் ஆண்டின் 'Eugenics Catechism of the American Eugenics Society' என்பதை மேற்கோள் காட்டுகிறார்கள். அது வாதிடுகிறது, '1916 வரை நியூயோர்க் மாநிலம், மரபணு குறைபாடு இருக்கும் ஜூக்ஸ் ஒரு குடும்பத்தின் சந்ததியினருக்காக $2,000,000 செலவழித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது'. 'அசல் ஜூக்ஸ் ஜோடியை கருத்தடை செய்ய எவ்வளவு செலவாகும்?' என அவ்வமைப்பிடம் அவர் கேட்டார்: '150 டாலருக்கும் குறைவாகும்'.

இப்புத்தகம் தொடர்கிறது, “இதே மாதிரியான உதாரணங்கள் 1930 களில் ஜேர்மன் பள்ளி மாணவர்களின் எண்கணித புத்தகங்களில் ஏராளமாக இருந்தன. இதில் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த ஊனமுற்ற மக்களை உயிருடன் வைத்திருப்பதற்கான செலவு வரை உள்டங்கியிருந்தது. சிறிது காலத்திற்குப் பின்னர், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்தனர்”.

'1939 இலையுதிர்காலத்தில், அடோல்ஃப் ஹிட்லர் 'Operation T4' என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட 'கருணைக் கொலை' என்ற மருத்துவ நிர்வகிப்பின் திட்டத்தை இரகசியமாக அங்கீகரித்தார் என அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் எழுதுகிறது. 'போரின் இறுதி வரை கொலைகள் இரகசியமாக தொடர்ந்தன, இதன் விளைவாக 275,000 ஊனமுற்றோர் கொல்லப்பட்டனர்.'

இன்று, நூறாயிரக்கணக்கான முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், எரிவாயு அறைகளில் அல்ல ஆனால் அமெரிக்காவின் மருத்துவமனைகளில் காற்றுக்காக மூச்சுத் திணறி இறக்கின்றனர். கோவிட்-19 நோயால் இறந்தவர்களில் எழுபத்தைந்து சதவீதம் பேர் ஓய்வுபெறும் வயது 65க்கு மேல் உள்ளனர். மேலும் 93 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய இறப்பு தரவுகளின்படி, 373,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்த ஆண்டான 2020இல் அமெரிக்க பிறப்பு எதிர்பார்ப்பு 78.8 இல் இருந்து 77.0 ஆக 1.8 விகிதத்தினால் ஆண்டுக்கு குறைந்துள்ளது.

ஆனால் இந்த யதார்த்தம், வாலென்ஸ்கி சொல்வது போல், 'ஊக்கமளிப்பதாக' இல்லை. மாறாக குற்ற உணர்வு மற்றும் அவமானத்தின் ஒரு பயங்கரமான மூலகாரணமான பலரின் இழப்பில் சிலரை செல்வந்தர்களாக்கும் தேவைகளால் உந்தப்பட்ட முற்றிலும் மனிதாபிமானமற்ற சமூகத்தின் மீதான கண்டனமாகும்.

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் வாலென்ஸ்கியின் கருத்துக்களுக்கு அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதிலளித்துள்ளனர். அவர்களின் கோபம் நியாயமானது. ஆனால் உண்மை என்னவென்றால், வாலென்ஸ்கி தனக்காக மட்டும் பேசவில்லை, பைடென் நிர்வாகத்திற்காக மட்டுமல்ல, முழு முதலாளித்துவ வர்க்கத்திற்காகவும் பேசினார்.

பல ஆண்டுகளாக, அமெரிக்க சிந்தனைக் குழுக்கள் மற்றும் இராணுவ மூலோபாயவாதிகள் அமெரிக்க தொழிலாளர்களின் ஆயுட்காலம் குறைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வாதிட்டனர். வெளித்தோற்றத்தில் செயலற்றதன்மை மற்றும் திறமையின்மை மூலம் இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை தொற்றுநோய் உருவாக்கியுள்ளது.

உண்மையில், இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அனைத்து அம்சங்களின் நோயுற்ற நம்பகத்தன்மையால் இயக்கப்படும் ஒரு திட்டமிட்ட கொள்கையாகும். தொழிலாள வர்க்கத்தினை எப்பொழுதும் அதிகமான ஏழ்மை மற்றும் வறுமையில் தள்ளுவதற்காக சந்தைகளில் நிரந்தரமான எழுச்சியினால் தூண்டப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதி இரத்தம் சிந்திய நிலையில், முதலாளித்துவ தன்னலக்குழு முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோரை பயன்படுத்தப்படாத 'மதிப்பின்' மூலஆதாரமாக பார்க்கிறது.

அவர்களுக்கு வழி இருந்தால், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு மீதான செலவினங்களைக் குறைப்பது அரசியல்வாதிகளால் அமெரிக்க அரசியலின் 'மூன்றாம் பாதையை' தொடுவதன் ஊடாக அடைய முடியாதுவிட்டால், தொற்றுநோயை நிரந்தரமாக தொடர அனுமதிப்பதன் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த இழிந்த கொள்கையானது கோவிட்-19ஐ நிறுத்த முடியாது என்ற அதே இழிவான பொய்யுடன் இணைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 5,000 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், பூச்சிய கோவிட் கொள்கையை சீனா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. தொற்றுநோயின் தொடக்கத்தில் இதேபோன்ற கொள்கை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டிருந்தால், 850,000 க்கும் அதிகமான மக்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

முதலாளித்துவ தன்னலக்குழுவால் கோரப்படும் இந்த கொலைவெறி 'புதிய வழமை', பாரிய தொற்று மற்றும் பாரிய மரணத்தை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தால் சவால் செய்யப்படுகிறது. சிகாகோவில் உள்ள ஆசிரியர்கள் கடந்த வாரம் நேரடியாக பள்ளிகளில் கற்பிப்பதை எதிர்த்து வாக்களித்தனர். மேலும் சிகாகோ, நியூயோர்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிரியர்கள் நோய் காரணமாக விடுமுறை எடுக்கத் தொடங்கியுள்ளனர். மனித உயிர்களின் விலையைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளைத் திறந்து வைக்கும் பைடென் நிர்வாகத்தின் கொலைவெறி உந்துதலுக்கு எதிராக மாணவர்களின் வெளிநடப்பு அலைகளுடன் இந்த வாரம் அவர்களுடன் இணைவார்கள்.

ஆளும் வர்க்கத்தின் யூஜெனிக்ஸ் கொள்கை மீதான வெளிப்படையான திருப்பம், மில்லியன் கணக்கான மக்களுக்கு உதயமாகும் ஒரு அடிப்படை யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது முதலாளித்துவம் பெரும்திரளான மனிதகுலத்தின் சமூக உரிமைகளுடன் பொருந்தாதுள்ளது. அந்த உரிமைகளைப் பெறுவதற்கு, இந்தச் சமூக ஒழுங்கை முடிவுக்குக் கொண்டு வந்து சோசலிசத்தால் மாற்றீடு செய்வதற்கான போராட்டம் தேவைப்படுகிறது.

* பல நாடுகள் பல்வேறு யூஜெனிக்ஸ் கொள்கைகளை இயற்றியுள்ளன, அவற்றுள்: மரபணு பரிசோதனைகள், பிறப்பு கட்டுப்பாடு, வேறுபட்ட பிறப்பு விகிதங்களை ஊக்குவித்தல், திருமணக் கட்டுப்பாடுகள், பிரித்தல் (இன வேறுபாடு மற்றும் மனநலம் குன்றியவர்களைத் தனிமைப்படுத்துதல்), கட்டாய கருத்தடை, கட்டாயக் கருக்கலைப்பு அல்லது கட்டாயக் கர்ப்பம் போன்றவற்றிக்காக வாதிடல் அடங்கும்.

Loading