முன்னோக்கு

ஜனநாயகக் கட்சி ரஷ்யாவுக்கு எதிரான போர் முனைவுக்குத் தலைமை தாங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்

ஒட்டுமொத்த உலகையும் மூன்றாம் உலக போர் விளிம்புக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போர் நடவடிக்கையைப் பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் முன்னெடுத்து வருகின்றன.

உக்ரேனிய ஆயுதப் படைகளின் சிறப்பு நடவடிக்கைப் படைகள் [Photo: Wikipédia/ArmyInform]

CNN தொலைக்காட்சியின் ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் நிகழ்ச்சியான 'State of the Union” (ஒன்றியத்தின் நிலை) என்பதில், வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் குழுவின் ஜனநாயகக் கட்சி தலைவரும் நியூ ஜெர்சி செனட்டருமான ரோபர்ட் மெனென்டிஸ், மற்றும் அந்த குழுவின் முக்கிய உறுப்பினரான ஐடாகோ மாநிலத்தின் குடியரசுக் கட்சி செனட்டர் ஜேம்ஸ் ரிஸ்ச் ஆகியோர் ரஷ்யாவுக்கு எதிராக இந்த இரண்டு பெருவணிக கட்சிகளின் ஒருமனதான நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதற்காக அருகருகே தோன்றினார்கள்.

உக்ரேன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்குமென அமெரிக்கா பேசுவது ஆதாரமற்றது என்று உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கையை மெனென்டிஸ் உதறித் தள்ளினார். “அவர் பொருளாதாரத்துடன் அது சம்பந்தப்படுவதால் அவர் அமைதியின் சாயலை உருவாக்க விரும்புகிறார்,” என்று கூறிய அந்த ஜனநாயகக் கட்சியாளர், “ஆகவே அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,” என்றார்.

“முடிவாக ரஷ்ய பொருளாதாரத்தை நசுக்கும் விதத்தில் … எல்லா தடையாணைகளுக்கும் தலையாய' தடையாணையைத் திணிக்கவும், “மற்றும் ரஷ்ய பிள்ளைகளைச் சுமந்த சடலங்களின் எத்தனை பைகள்... ரஷ்யாவுக்குத் திரும்ப வேண்டுமென புட்டின் முடிவு செய்து கொள்ளட்டும் என்பதை அர்த்தப்படுத்தும் விதமாக, நாங்கள் அனுப்பவிருக்கும் பயங்கர ஆயுத உதவிகளைத் தொடரவும்,” பைடென் நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கும், இரண்டு கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்ட சட்டமசோதாவை அவர் புகழ்ந்துரைத்தார்.

“இது உக்ரேனையும் கடந்து செல்கிறது,” மெனென்டிஸ் எச்சரித்தார். “மீண்டும் ஒரு முனீச் தருணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கு விடையிறுக்காது என்றவர் நம்புகிறார் என்றால், புட்டின் உக்ரேனுடன் நிறுத்திக் கொள்ள மாட்டார்.”

இரண்டு மிகப்பெரிய அணுஆயுத தளவாடங்களைக் கொண்ட நாடுகளான ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே தவிர்க்கவியலாமல் ஓர் இராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அறிவுறுத்துபவர்களும் மற்றும் புட்டினை ஹிட்லருடன் ஒப்பிடுபவர்களும் என இத்தகைய ஜனநாயகக் கட்சியினரில், காங்கிரஸ் சபை வெளியுறவுத்துறை கொள்கையில் சம்பந்தப்பட்ட இந்த ஒரு டஜன் கணக்கான உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரும் உள்ளடங்குவர்.

ரஷ்யாவுக்கு எதிரான பெருவாரியான விஷமப் பிரச்சாரத்தில் ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு அரசியல் மற்றும் சமூக நிகழ்வுபோக்குகள் செயல்படுகின்றன: 1) ஜனநாயகக் கட்சியில் இருந்த, வியட்நாம் போரின் போது மற்றும் அதற்குப் பின்னர் உருவான போர்-எதிர்ப்புக் கன்னை சிதைந்து போனது; 2) வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்திற்குப் பின்னால் நிற்கும், செல்வசெழிப்பான நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய-சார்பு பரிணாமம், இது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரதான சமூக அடித்தளமாக அமைந்துள்ளது.

ஜனநாயகக் கட்சி எப்போதுமே அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கட்சியாகவே இருந்துள்ளது. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், கொரிய போர் மற்றும் வியட்நாம் போரின் முதல் பாதி என ஒரு ஜனநாயகக் கட்சியாளர் தான் இவற்றின் போது ஜனாதிபதியாகவோ மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியாகவோ இருந்திருந்தார், என்றாலும் 1960 களின் போக்கில் பாரிய போர்-எதிர்ப்பு இயக்கம் பலமடைந்தது, ஜனநாயகக் கட்சி அதனுடன் இணைந்து செல்லும் பாத்திரம் ஏற்று, அந்த போர் எதிர்ப்புணர்வை முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்குள் கட்டுப்படுத்தியது.

ஜனநாயகக் கட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க கன்னை வியட்நாம் போருக்கு எதிராக வெளிப்பட்டது, செனட் சபையில் வெளியுறவு விவகாரக் குழு தலைவர் ஜெ. வில்லியம் ஃபுல்பிரைட் (அர்கன்சஸ்); இண்டியானா செனட்டர் வான்ஸ் ஹார்ட்கெ; மின்னிசொடா செனட்டரும் 1968 ஜனாதிபதி வேட்பாளருமான ஒய்கன் மக்கார்த்தி; இடாகோ செனட்டர் பிராங்க் சர்ச்; கனக்டிக்கட் செனட்டர் அபே ரிபிகொஃப்; டென்னசி செனட்டர் முதலாம் அல் கோர் போன்ற பிரமுகர்கள் அதில் இணைந்திருந்தனர். 1972 இல் தெற்கு டகோடா செனட்டர் ஜோர்ஜ் மெக்கோவர்ன் போர்-எதிர்ப்பு திட்டத்தினாலேயே ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வென்றார்.

உலகெங்கிலும் அமெரிக்க உளவுத்துறை முகமைகள் நடத்திய துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை விசாரிக்க 1975 இல் நிறுவப்பட்ட சர்ச் குழுவுக்கு செனட்டர் சர்ச் தலைமை வகித்தார். 1980 களின் மத்தியில் கூட, பெரும்பாலான ஜனநாயகக் கட்சியினர் நிக்கரகுவா புரட்சிக்கு எதிராக மற்றும் மத்திய அமெரிக்காவில் பிற தீவிரக் கொள்கை இயக்கங்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவத் தலையீட்டை எதிர்த்தனர். ஏறக்குறைய ஜனவரி 1991 இறுதியில், ஈராக்குக்கு எதிரான முதல் வளைகுடா போரைத் தொடங்க ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷிற்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை செனட்டில் வெறும் 10 பேர் தான் ஆதரித்திருந்தார்கள், 45 ஜனநாயகக் கட்சியினர் அதற்கு எதிராக செனட்டில் வாக்களித்தனர், அது சிறிய வித்தியாசத்தில் 52 க்கு 47 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.

பில் கிளிண்டன் நிர்வாகம் (1993-2001) ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் குறித்தது. வளைகுடா போருக்கு ஆதரவாக வாக்களித்த 10 ஜனநாயகக் கட்சி செனட்டர்களில் ஒருவரான அல் கோர் ஜூனியரை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக கிளிண்டன் தேர்ந்தெடுத்தார், கிளிண்டன் நிர்வாகம் போஸ்னியா, சேர்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சூடான், சோமாலியா மற்றும் ஹைட்டியில் இராணுவப் பலத்தை ஆக்ரோஷமாக பயன்படுத்தியது. 2000 இல் கோர் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது, அவர் மற்றொரு போர்நாடும் செனட்டர் ஜோ லெபர்மனை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார்.

2002 வாக்கில், ஈராக்கிற்கு எதிராக இரண்டாவது அமெரிக்க போர் தொடுக்க ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிப்பதற்காக, இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான அதிகார தீர்மானம் செனட்டிற்கு வந்த போது, ஜனநாயகக் கட்சிக்குள் இருந்த சமநிலை தலைகீழாக இருந்தது.

1991 இல் அதற்கு சமமான தீர்மானத்திற்கு எதிராக 45-10 என்றிருந்த வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், 2002 வாக்கெடுப்பில் செனட் ஜனநாயகக் கட்சியினரிடையே அத்தீர்மானத்திற்கு ஆதரவான வாக்குகள் 29-21 என்றிருந்தது. அந்த தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்ற செய்த டெலாவர் செனட்டரான வெளியுறவுத்துறைக்கான செனட் சபை குழு தலைவராக ஜோ பைடென் இருந்தார்—இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி. அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பாரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்த போது, ஜனநாயகக் கட்சி அவற்றைக் கண்டு கொள்ளாமல், அது புஷ், சீனெ, ரம்ஸ்ஃபீல்ட் மற்றும் பாவலின் போர் முனைவைத் தழுவியது.

வலதை நோக்கி இன்னும் இரண்டு முக்கிய நகர்வுகளும் நடந்தன. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான 2008 பிரச்சாரத்தில் பராக் ஒபாமா, 2002 வாக்கெடுப்பில் ஈராக் போருக்காக ஹிலாரி கிளிண்டன் வாக்களித்தார் என்று இடைவிடாது அவரைத் தாக்கி இருந்தார். அமெரிக்க உளவுத்துறை முகமைகளுடனான அவரின் சொந்த உறவுகளைக் குறித்து அவர் வாய்திறக்கவில்லை, இது ஜனநாயகக் கட்சி மற்றும் வோல் ஸ்ட்ரீட்-இராணுவ-உளவுத்துறை இணைப்புக்கு இடையே நிலவிய ஆழ்ந்த தொடர்புகளை வெளிப்படுத்தியது.

முந்தைய நிர்வாகங்களைப் போல அதேயளவுக்கு ஆக்ரோஷமாக அமெரிக்க இராணுவப் பலத்தைப் பயன்படுத்திய ஜனாதிபதி ஒபாமா, வேட்பாளர் ஒபாமாவின் போர் எதிர்ப்பு வாய்சவுடால்களை எல்லாம் விரைவிலேயே குழி தோண்டி புதைத்தார். அவர் புஷ் அமைத்து தந்திருந்த அதே வேகத்தில் ஈராக்கில் இருந்து படைகளைத் திரும்ப வரவழைத்து, ஆப்கானிஸ்தான் போரைத் தீவிரப்படுத்தினார் மற்றும் லிபியாவில் நேட்டோ மூலமாகவும், சிரியா மற்றும் யேமனில் இஸ்லாமியவாத பினாமிகள் மூலமாகவும் புதிய போர்களைத் தொடங்கினார். ஒபாமா பின்னர் இஸ்லாமிக் அரசுக்கு (ISIS) எதிராக ஈராக்குக்குள் திரும்பவும் அமெரிக்க படைகளை நகர்த்தினார். அமெரிக்க படைகள் புவியியல்ரீதியில் முன்பினும் பரந்த இடங்களில், பாகிஸ்தானில் இருந்து மத்திய ஆசியா மற்றும் மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் டிரோன் ஏவுகணை போர்முறையை நடத்தியது.

உளவுத்துறை முகமைகள் மற்றும் இராணுவ பின்புலம் கொண்டவர்கள், ஒபாமா நிர்வாகத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாக அதிளவில் மேலுயர்த்தப்பட்டனர், இவர்களைத் தான் உலக சோசலிச வலைத் தளம்சிஐஏ ஜனநாயகக் கட்சியினர் என்று குறிப்பிடுகிறது.

போர் எதிர்ப்பு சம்பந்தமான எந்த வேஷத்தையும் ஜனநாயகக் கட்சி கைவிட்டதன் கடைசி அத்தியாயம் ட்ரம்ப் நிர்வாகத்தின் போக்கில் வந்தது. ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் பிரதான அச்சு, ஒரே அச்சாக இருந்ததும் கூட, என்னவென்றால், ட்ரம்ப் ரஷ்யாவின் ஒரு கைப்பாவை அல்லது விளாடிமீர் புட்டினின் ஒரு முழு முகவர் என்ற போலி வாதத்தை அடிப்படையாக கொண்ட ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் சிறப்பு விசாரணைக் குழு தலைவர் ரோபர்ட் முல்லரின் விசாரணைக்கு இட்டுச் சென்றது, அது எந்த ஆதாரமும் வழங்கவில்லை, இதைத் தொடர்ந்து ட்ரம்ப் மீதான முதல் குற்றச்சாட்டு விசாரணை நடந்தது. பைடெனின் மகன் பற்றிய அசுத்தமான செய்திகளை தோண்டி எடுக்குமாறு உக்ரேனிடம் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதே இதற்கான அடிப்படையாகும். இந்த திசையில் அழுத்தம் கொடுக்க, ட்ரம்ப் ஆயுதக் கப்பலை நிறுத்தினார், ரஷ்யாவுடனான மோதலை அதிகரிக்கும் அமெரிக்காவின் நீண்டகால திட்டங்களை தாமதப்படுத்தினார்.

நடுத்தர வர்க்கத்தில், குறிப்பாக அதன் மிகவும் தனிச்சலுகை கொண்ட அடுக்குகளில், ஏற்பட்ட ஏகாதிபத்திய-சார்பு மாற்றமானது ஜனநாயகக் கட்சியின் மாற்றத்துடன் இணைந்திருந்தது மற்றும் அதன் பக்கவாட்டில் நடந்தேறியது. 1960 களில் மேலெழுந்த போர் எதிர்ப்பு இயக்கத்தில் நடுத்தர வர்க்க பிரிவுகள், குறிப்பாக கல்வி வளாகங்களில் இருந்தவர்கள், மேலோங்கி இருந்தனர். 1973 இல் கட்டாய இராணுவச் சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை, நடுத்தர வர்க்க பிரிவுகளை அரசியல் ஸ்தாபகத்திற்குள் இணைப்பதற்கான ஆளும் வர்க்கத்தினது பரந்த மூலோபாயத்தின் பாகமாக இருந்தது, இதில் அடையாள அரசியலை உருவாக்குவது உள்ளடங்கி இருந்தது.

பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு அப்பாற்பட்டு, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவு—அமெரிக்க சமூகத்தின் உயர்மட்ட 5 அல்லது 10 சதவீதம்—நான்கு தசாப்தங்கள் காலமாக வோல் ஸ்ட்ரீட் அதிகரிப்பின் போக்கில் தன்னை செல்வசெழிப்பாக்கி கொண்ட இது அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலோங்கிய உலகளாவிய அந்தஸ்தைச் சார்ந்துள்ளது. 1990 களின் பால்கன் போர், கிளிண்டன் நிர்வாகத்தால் 'மனித உரிமைகளுக்கான' போராக ஊக்குவிக்கப்பட்ட நிலையில், அது ஒரு திருப்புமுனையாக இருந்தது. உலக சோசலிச வலைத் தளம்அப்போது பின்வருமாறு எழுதியது:

தொடர்ந்து அதிகரித்து வரும் பங்குச் சந்தை அதிகரிப்பின் புறநிலை நிகழ்முறையும் சமூக தாக்கங்களும், ஏகாதிபத்தியத்திற்கு, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிடையே ஒரு புதிய மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வட்டாரத்தை நியமிக்க உதவியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மேலோங்கி உள்ள இந்த பிற்போக்குத்தனமான, இணக்கவாத மற்றும் எரிச்சலூட்டும் புத்திஜீவிய சூழல்—ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டு பெரிதும் அடிபணிந்த மற்றும் ஊழல்பீடித்த கல்வியாளர் சமூகத்தில் ஆதரிக்கப்படும் இது—குறைந்தபட்சம் புதிதாக அது பெற்றிருக்கும் செல்வசெழிப்பின் பொருளாதார மற்றும் அரசியல் அடித்தளங்களை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்வதை ஊக்குவிப்பதில் கூட ஆர்வம் காட்டாத உயர்மட்ட தனிச்சலுகை கொண்ட அடுக்கின் சமூக பார்வையைப் பிரதிபலிக்கிறது.

இத்தகைய சமூக நிகழ்வுபோக்குகள் ஆளும் வர்க்கத்தின் அத்தனை உத்தியோகபூர்வ துறைகளிலும் அவற்றின் பிரதிபலிப்பைக் காண்கின்றன. ஊடகங்களில், ரஷ்யாவுக்கு எதிரான போரை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ அரசாங்க பொய்களை இடதுசாரி நிலைப்பாட்டில் இருந்து எதிர்ப்பது இல்லையென்றாலும், அவற்றைக் கேள்வி கேட்பதற்கான ஒரேயொரு குரலையும் காண முடியவில்லை. 1968 டெட் தாக்குதலை (Tet offensive) அடுத்து வியட்நாம் போருக்கு தனது எதிர்ப்பை அறிவித்து புகழ்பெற்ற, CBS நிகழ்ச்சி தொகுப்பாளர் வால்டர் குரோன்கைட்டுக்கு இணையானவர்கள் இப்போது யாருமில்லை. ஊடகத்தில் பேச வரும் நன்கு வருவாய் ஈட்டும் பிரபலங்களில், அதேபோல கல்வித்துறையில் உள்ள தனிச்சலுகை கொண்ட அடுக்குகளில், ஏகாதிபத்தியம் முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வட்டாரத்தைக் காண்கிறது.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற போலி-இடது அமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதிலும் மற்றும் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பி விடுவதிலும் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. உக்ரேன் சம்பந்தமான அமெரிக்க கொள்கை குறித்த கேள்விகளுக்கு, செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென், பிரதிநிதிகள் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ், ஐஹான் ஒமர், அயன்னா பிரெஸ்லி மற்றும் ரஷிதா தலைப் ஆகியோர் பதிலளிக்க மறுத்து விட்டனர் அல்லது திரும்பி அழைக்கவே இல்லை என்று இவ்வாரயிறுதியில் தாராளவாத பத்திரிகையான American Prospect அறிவித்தது.

இத்தகைய மாற்றங்கள் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்காகும். ஜேர்மனியில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் 1970 களின் போர் எதிர்ப்பு நடவடிக்கையாளர்களாலும் நிறுவப்பட்ட பசுமைக் கட்சி, 1998 இல் ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பாகமாக இறுதியில் அதிகாரத்திற்கு வந்தது, முன்னாள் தீவிரக் கொள்கையாளரும் 'வீதி போராளியுமான' பசுமை கட்சியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ்கா பிஷ்ஷர், மூன்றாம் ரைஹ் க்குப் பின்னர் ஜேர்மன் படைகளை அந்நாட்டுக்கு வெளியே முதல்முறையாக நிலைநிறுத்தும் நடவடிக்கையாக முன்னாள் யூகோஸ்லேவியாவுக்குத் துருப்புகளை அனுப்புவதற்குத் தலைமை தாங்கினார். இதுபோன்ற அரசியல் உருமாற்றங்கள் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளிலும் நடந்தது.

போருக்கான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தை மையத்தில் கொண்டுள்ளது, கொண்டிருக்க வேண்டும். உக்ரேன் அல்லது கிழக்கு ஐரோப்பாவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளிலும் அமெரிக்கா தலையீடு செய்வதைப் பெருவாரியான மக்கள் எதிர்ப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஆனால் இந்த எதிர்ப்பு அமெரிக்காவின் உத்தியோகபூர்வ இருகட்சி முறைக்குள் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. ஏகாதிபத்தியத்திய போருக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகக் கட்சி மூலமாகவோ அல்லது எந்தவொரு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபக அமைப்பு மூலமாகவோ நடத்த முடியாது. அதற்கு ஒரு சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அணித்திரட்டுவது அவசியமாகும்.

Loading