அமெரிக்க கோவிட்-19 இறப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெருநிறுவன ஊடகங்கள் கிட்டத்தட்ட இருட்டடிப்பை பேணுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓமிக்ரோன் அலையின் போது அமெரிக்காவில் கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை உச்சபட்ச மட்டத்தை எட்டியுள்ளன, இச்சூழ்நிலையில் அமெரிக்க மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு பெரியளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை, மாறாக மக்களின் ஆரோக்கியத்தில் இந்த தொற்றுநோய் ஏற்படுத்தும் பேரழிவுகர தாக்கத்தை மூடிமறைக்கவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைக்கு (DHSS) மருத்துவமனை அமைப்புக்கள் கோவிட்-19 இறப்புக்கள் பற்றி அறிக்கை செய்யும் கட்டுப்பாடு பிப்ரவரி 2, 2022 அன்று முடிவுக்கு வந்தது.

கூடுதலாக, விரைவாக அடுத்தடுத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கட்டாய முகக்கவச பயன்பாடு தளர்த்தப்பட்டு வருகிறது. நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கடந்த புதன்கிழமை மாநிலத்திற்குள் நடைமுறையிலுள்ள கடுமையான கட்டாய முகக்கவச கட்டுபாட்டை கைவிட்டார். இதில், அதிக மக்கள்தொகை கொண்ட, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இல்லினாய்ஸ், கலிஃபோர்னியா மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில மாநிலங்கள் அடங்கும்.

ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளி [Source: Wikimedia Commons]

வோல்டோமீட்டர் தரவுத்தளத்தின்படி, கோவிட்-19 இறப்புக்களின் ஏழு நாள் போக்கு சராசரி ஜனவரி மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 2,600 என்றளவிற்கு உயர்ந்தது. பிப்ரவரி 1, 2022 அன்று நியூ யோர்க் டைம்ஸ் கோவிட்-19 தரவுத்தளம் அன்றைய தினத்தின் எண்ணிக்கை உச்சபட்சமாக 3,582 என பதிவானதன் அடிப்படையில் நாளாந்த சராசரி 2,653 என காட்டியது.

அப்போதிருந்து, கோவிட்-19 கண்காணிப்பு அமைப்புக்களால் நாளாந்த இறப்பு சராசரிகள் திடீரெனவும் கணிசமாகவும் குறைத்துக் காட்டப்பட்டன, அதாவது வோல்டோமீட்டர் இன் படி 2,044 மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் இன் படி 2,454 எனக் குறைந்தன. அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முன்னணி மற்றும் நம்பகமான கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் ஆதார மையம், இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்த வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து ஏறிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களின் கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, கோவிட்-19 இறப்புக்களின் ஏழு நாள் சராசரி 2,500 க்கு அதிகமாகவே உள்ளது.

உண்மையில், கோவிட்-19 காரணமான புதிய நோய்தொற்றுக்களும் மருத்துவமனை அனுமதிப்புக்களும் குறைத்துக் காட்டப்படுவதானது இறப்புக்களின் போக்கில் மாற்றத்தைக் கொண்டுவர உதவ முடிகிறது, என்றாலும் அவை இன்னும் தொற்றுநோய் காலத்தின் உச்சபட்ச எண்ணிக்கைகளாகவே உள்ளன. இருப்பினும், நோய்தொற்று அளவீடுகளில் இதேபோன்ற போக்குகளைக் கொண்ட மற்ற நாடுகளிலும் இறப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இதற்கு டென்மார்க் மற்றும் தென்னாபிரிக்கா இரண்டு நாடுகளும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

மருத்துவமனை நிர்வாகிகளும், சுகாதார அதிகாரிகளும் கோவிட்-19 மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்கள் தொடர்பான தங்கள் அறிக்கைகளை எவ்வாறு சரிசெய்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, அறிக்கை செய்யும் அமைப்புக்களை அகற்றுவதற்கான மாநிலங்கள் மற்றும் அரசாங்கங்களின் சமீபத்திய முயற்சிகளானது, நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்களை வேலைக்கு திரும்ப வைப்பதற்கு பள்ளிகளையும் வணிகங்களையும் திறக்கவும் திறந்தே வைத்திருக்கவும் கட்டாயப்படுத்த அவர்கள் தலையிடுவதுடன் ஒருங்கே இணைந்ததாக அத்தகைய அளவீடுகளையும் முற்றிலும் கைவிடுவதற்கான கணிசமான முயற்சியின் பகுதியாக உள்ளன. தொற்றுநோய்கள் குறித்த முக்கியமான மற்றும் அவசியமான கண்காணிப்பு ஆளும் உயரடுக்கிற்கு ஒரு தொல்லையாக வளர்ந்துள்ளது.

இது சம்பந்தமாக, தொடர்ந்து அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கைகள் குறித்து செய்திகள் வெளியிடாமல் பிரதான ஊடகங்கள் ஆழ்ந்த மௌனம் சாதிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஓமிக்ரோன் மாறுபாடு தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவுவதால் நிகழும் பேரழிவுகர உயிரிழப்புக்கள் பற்றி அமெரிக்க ஞாயிறு நாளிதழ்களின் மேலோட்டமான கணக்கெடுப்புகள் எதுவும் குறிப்பிடாதது குறிப்பிடத்தக்கது. விரைவான மாற்றம் பிரமிக்க வைக்கிறது. இந்நிலையில், தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என்றோ அல்லது அனைவரும் விழித்துக்கொண்டிருக்கும் ஒரு கனவு என்றோ இதை ஒருவர் கருதலாம். உண்மையில், அந்த கனவு ஒரு புதிய வடிவத்தில் தொடர்கிறது என்றே கூறலாம்.

தற்போதைய நாளாந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், அது செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரண்டு கடத்தப்பட்ட விமானங்கள் கட்டிடங்களுக்கு இடையில் பறக்கவிடப்பட்டதால் 2,700 க்கும் அதிகமானோர் பலியானதற்கு சமமாக உள்ளது. இந்த மரணங்கள் பற்றி ஒவ்வொரு பிரதான செய்தி ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் துதிபாடப்பட்டு குறிப்பிடப்பட்டது. அவை மத்திய கிழக்கு முழுவதுமான அமெரிக்க போர்களுக்கும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டன, இதற்கும் தொற்றுநோயின் போதான முன்னேற்றங்களுக்கும் கணிசமான தொடர்புள்ளது.

கடந்த வாரம், கோவிட்-19 ஆல் 14,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர், இது கிட்டத்தட்ட ஐந்து 9/11 நிகழ்வுகளுக்கு சமமான இழப்பாகும். ஆனால் எந்த ஊடக வர்ணனையாளரும் இதுபற்றி குறிப்பிடவில்லை. ஏனென்றால், இந்த மரணங்களுக்கு ஒரு பயங்கரவாத ‘எதிரி’ காரணம் அல்ல, மாறாக நாடு முழுவதும் நோய்தொற்றை வெடித்துப்பரவ அனுமதித்துள்ள அமெரிக்க ஆளும் வர்க்கத்தின், மற்றும் அதன் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளின் வேண்டுமென்ற கொள்கை தான் காரணமாகும்.

2022 புத்தாண்டு தினத்தில் இருந்து, அமெரிக்காவில் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்-19 மற்றும் அது தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்துள்ளனர். இது வியட்நாம் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும். அதாவது, ஒரு டஜன் ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு போருக்கு ஈடாக, தொற்றுநோய் இறப்புக்கள் வெறும் ஆறு வாரங்களுக்குள் நிகழ்ந்துள்ளன.

மேலும், ஜனாதிபதி ஜோ பைடென் பதவியேற்றதில் இருந்து, 5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர், இது வோல்டோமீட்டர் அறிக்கையின்படி, மொத்த கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை 943,000 ஆக அதிகரிக்கச் செய்துள்ளது. உண்மையில், அமெரிக்க முதலாளித்துவத்தின் இரட்டைக் கட்சிகள் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைப் பின்பற்றியதால், ட்ரம்ப் நிர்வாகத்தை விட பைடென் நிர்வாகத்தின் கீழ் இறந்தவர்கள் அதிகமாகும்.

ஓமிக்ரோன் மாறுபாட்டைப் பற்றி எவரும் கேள்விப்படுவதற்கு முன்னரே, அற்பமான தணிப்பு நடவடிக்கைகளின் கடைசி சுவடுகளைக் கூட முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவிர்க்க முடியாமல், ஓமிக்ரோன் நோய்தொற்று அலை பெரியளவில் தூண்டப்பட்ட பின்னர் பல மாதங்களுக்கு அவற்றை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.

கடந்த வாரம், நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் சில வாரங்களில் தொடங்கப்பட்ட பொது சுகாதாரத் திட்டமிடல், திரை-மறைவு (back-channel) விவாதங்கள் மற்றும் அரசியல் கவனம் செலுத்தும் குழுக்கள் ஆகியவை மாதக்கணக்கில் அவ்வப்போது ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியில், நியூ ஜெர்சி முதல் கலிஃபோர்னியா வரையிலான ஜனநாயகக் கட்சி தலைமையிலான மாநிலங்கள் இந்த வாரம் இதேபோன்ற நகர்வுகளுக்கு அறிவித்த நிலையில், வணிகங்கள் தொடர்புபட்ட நியூயோர்க்கின் தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.”

பொது சுகாதார நடவடிக்கைகளை முற்றிலும் அகற்றியதால் மட்டுமே ஓமிக்ரோன் பரவல் அலை நீடித்தது என்பது, எடுக்கப்பட்ட முடிவின் முழு விஞ்ஞானப்பூர்வமற்ற தன்மையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் முடிவுகள் தரவு மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் இயக்கப்படவில்லை, மாறாக தொற்றுநோய்களின் போக்கில் பெருநிறுவன அமெரிக்காவிற்கு செலுத்தப்பட்ட டிரில்லியன்களை மீட்டெடுப்பதன் அவசியத்தால் உந்தப்பட்டது.

நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதுடன் (ஆனால் இன்னும் அதிர்ச்சியூட்டும் மட்டங்களில் உள்ளன), SARS-CoV-2 அதன் போக்கில் ஒரு உள்ளூர் நோயாக மாறி வருகிறது என்ற பாசாங்கின் கீழ் “வைரஸூடன் வாழ” மக்கள் மாறுவதற்கு கோரிக்கை வைத்து, இது தொடர்பான தங்கள் கவலைகளை ஆளுநர்கள் வெள்ளை மாளிகைக்கு எடுத்துச் சென்றனர்.

தேசிய ஆளுநர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான நியூ ஜெர்சி ஆளுநர் பில் மர்பி, பைடெனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொற்றுநோயிலிருந்து உள்ளூர் நோயாக உருவெடுக்கும் போக்கு எப்படி இருக்கும், நாம் அதை எப்படி மதிப்பிடுவது? அதுதான் நமக்கு முன் உள்ள பணி என்பதில் பரந்த உடன்பாடு இருந்தது” என்று கூறினார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொற்றுநோயின் முடிவு என்பது, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 1 மில்லியனை நெருங்கச் செய்யும் அளவிற்கு ஒரு கொடிய வைரஸ் தொடர்ந்து உச்சபட்ச எண்ணிக்கைகளில் மக்களைக் கொல்கிறது என்பதை மக்களுக்கு நினைவூட்டும் அனைத்து அளவீடுகள் மற்றும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.

உண்மையில், தொற்றுநோயிலிருந்து நிரந்தர நோயாக மாறும் போக்கு எப்படி இருக்கும்?

மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பிரிட்டிஷ் அரசு அமைப்பான அவசரநிலைகளுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழு (Scientific Advisory Groups for Emergencies - SAGE), சமீபத்தில் பிப்ரவரி 10 அன்று கோவிட்-19 வைரஸ் பரிணாமக் காட்சிகள் குறித்த கல்வியாளர்களின் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அவை மிகுந்த நன்மையானது முதல் மிகுந்த பயங்கரமானது வரை நான்கு காட்சிகளை வழங்குகிறது. அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்: “ஒவ்வொரு சூழ்நிலையிலும், காலப்போக்கில் (2 முதல் 10 ஆண்டுகள் வரை) ஒப்பீட்டளவில் நிலையான, பல வகை மாறுபாடுகள் மீண்டும் மீண்டும் உருவெடுக்கும் என கருதப்படுகிறது, ஆனால் அதன் மாற்றம் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாகவும் முன்கணிக்க முடியாததாகவும் இருக்கும். நீண்டகால மாறுபாடு வெளிப்படுகையில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் என்ன நடக்கும் என்பதை நம்பிக்கையுடன் அறிய முடியாமல் போகலாம்.”

மேலும் அவர்கள் குறிப்பாக இதைக் குறிப்பிடுகின்றனர்: “உலகளாவிய தொற்றுநோய் இயக்கவியல் (அதாவது பரவல் மற்றும் நிகழ்வு) மற்றும் வைரஸ் பரிணாமம் மற்றும் உருமாற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பின்னூட்ட சுழற்சியும் உள்ளது: அதிக உலகளாவிய SARS-CoV-2 பரவலானது வைரஸ் பரிணாமத்திற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குகிறது, அதே நேரத்தில் புதிய மாறுபாடுகள் அதிக பரவலை உண்டாக்க முடியும்.” மேலும், அதிகம் பரவக்கூடிய மாறுபாடு குறைந்த தீவிரத்தன்மை கொண்டதாகவோ அல்லது அதற்கு நேர்மாறாகவோ இருக்கும் என்று கருதக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். மாறாக, மோசமான சூழ்நிலையில், மிகக் கொடிய மற்றும் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள மாறுபாடு வெளிப்படலாம்.

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரும் உயிரியல் புள்ளியில் நிபுணரும், மற்றும் கோவிட்-19 பற்றிய நிபுணருமான டாக்டர் ஸோ ஹைட், சமூக ஊடகங்களின் அறிக்கைக்கு இவ்வாறு பதிலளித்தார்: “[குறைந்த தீவிரம் மற்றும் குறைந்த பரவும் தன்மை கொண்ட ஒரு மாறுபாடு தோன்றும்] ஒரு சிறந்த சூழ்நிலை யதார்த்தமானதாகத் தெரியவில்லை. இதுவரை நடந்தவற்றுக்கு இது முரணானதே. … இன்று வரையிலான SARS-CoV-2 உடனான எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், முக்கியமாக நம்பத்தகுந்த சூழ்நிலை இருக்காது என்றே எனக்கு பெரும்பாலும் தெரிகிறது. இருப்பினும், நோய்தொற்றைத் தொடர்ந்து நீண்டகால தாக்கங்கள் அதிகரித்திருப்பதான மோசமான சூழ்நிலையின் ஒரு கூறு சரியாக இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.”

20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டு போர்களைப் போலவே, நவீன நோய்தொற்றுக்களும் முன்னறிவிக்கக்கூடியவை, தடுக்கக்கூடியவை மற்றும் நிறுத்தக்கூடியவையாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆழமாக வேரூன்றிய முரண்பாடுகளின் துணை விளைபொருளாகவே இவை இரண்டும் வெடிக்கின்றன. இரண்டு நிகழ்வுகளின் போதான மரணத்தின் அளவானது, ஒரு முன்னோக்கிய பாதையை வழங்கும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் புரட்சியின் அவசியத்தை முன்னிலைப்படுத்த நிர்ப்பந்திக்கும் ஒரு பாரிய சமூக நெருக்கடிக்கு வழிவகுக்கிறது.

Loading