74 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரோனின் கொடிய BA.2 துணை வகை பரவி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓமிக்ரோன் BA.2 துணை மாறுபாடு உலகெங்கிலும் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்களின் அதிகரிப்பிற்கு காரணமாகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த வாரம் உலகளவில் 74 க்கும் மேற்பட்ட நாடுகளில் இது இருப்பதாக அறிவித்தது.

இந்த நிறமூட்டப்பட்ட டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி படம் SARS-CoV-2 இனைக் காட்டுகிறது. இது 2019-nCoV என்றும் அழைக்கப்படுகிறது. இது கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்-அமெரிக்காவில் உள்ள நோயாளியிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. அது ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கலங்களின் மேற்பரப்பில் இருந்து வைரஸ் துகள்கள் வெளிவருவதைக் காட்டுகிறது (Source: NIAID-RML) [Photo: NIAID-RML]

கோவிட்-19 க்கான உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவரான டாக்டர் மரியா வான் கெர்கோவ், ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ஓமிக்ரோன் மற்றும் அதன் துணைப் பிரிவுகளைப் பற்றி விரிவாகக் கூறினார். ஓமிக்ரோன் உடனான நோய்த்தொற்றுகள் இலேசானவை அல்ல எனவும், மேலும் உலகெங்கிலும் அதிகளவிலான எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியாகின்றனர் என்ற முக்கியமான வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அவர் குறிப்பிட்டார், “உலகம் முழுவதும் டெல்டாவை முந்தி சமீபத்திய மாறுபாடான ஓமிக்ரோன் எவ்வளவு விரைவாக பரவியுள்ளது என்பது மிகவும் நம்பமுடியாதது. இந்த துணைமாறுபாடு பெரும்பாலான வரிசைகள் BA.1 க்கு கீழமைந்தவையாகும். BA.2 வரிசைகளும் விகிதாசாரத்தில் அதிகரித்து வருவதையும் காண்கிறோம். ஓமிக்ரோன் அதன் அனைத்து துணை வரிசைகளுடன் டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது”.

வான் கெர்கோவ் தொடர்ந்தார், “ஆனால் துணைவரிசைகளுக்குள், ஓமிக்ரான் BA.2 ஆனது BA.1 ஐ விட அதிகமாக பரவக்கூடியது. அதனால், தொற்றுநோய் வளைவுகளில் நாம் எதைத் தேடுகிறோம், அந்த சிகரங்கள் எவ்வளவு விரைவாக மேலே செல்கின்றன, ஆனால் அவை எவ்வாறு கீழே வருகின்றன என்பதை நாங்கள் பார்க்கிறோம். ”தொற்றுக்குகளில் சரிவு ஏற்படுவதால், அந்த சரிவு குறைகிறதா அல்லது மீண்டும் அதிகரிப்பதை காணத் தொடங்குமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். நாம் அதிகரிப்பதை காணத் தொடங்கினால், BA.1 இன் இந்த பெரிய அலைக்குப் பின்னர் BA.2 இன் மேலும் சில நோய்த்தொற்றுகளைக் காணலாம்.

உலகளவில், கடந்த வாரம் 16 மில்லியனுக்கும் அதிகமான புதிய நோய்த்தொற்றுகளும் மற்றும் 73,400 க்கும் மேற்பட்ட இறப்புகளும் இருந்தன. டிசம்பர் 27, 2021 முதல், வாராந்திர உலகளாவிய இறப்புகள் 2021 கோடையின் பிற்பகுதியில் காணப்பட்ட டெல்டா உச்சங்களை விட தொடர்ச்சியாக ஆறு வாரங்களாக அதிகரித்து வருகின்றன. தற்போது GISAID இல் பதிவேற்றப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் மரபணுக்களின் அடிப்படையில், BA.1 துணை மாறுபாடு ஆதிக்கம் செலுத்துகிறது.

BA.1 ஐ மாற்றீடு செய்யப்படும் பல நாடுகளில் BA.2 படிப்படியாக அதிகரித்து வருகிறது. தென்னாபிரிக்கா, டென்மார்க் மற்றும் இங்கிலாந்தில் இதன் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் கோவிட் தொற்றுக்களும் இறப்புகளும

ஓமிக்ரோன் முதன்முதலில் வரிசைப்படுத்தப்பட்ட தென்னாபிரிக்காவில், புதிய நோய்த்தொற்றுகளின் ஏழு நாள் நகரும் சராசரி ஒரு நாளைக்கு 2,500 வரை கிட்டத்தட்ட செல்கின்றது. இருப்பினும், இறப்பு விகிதம் சராசரியாக ஒரு நாளைக்கு 164 இறப்புகளுடன் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து பத்து மடங்கு உயர்ந்துள்ளது. ஓமிக்ரோன் அலையின் போது 9,000 க்கும் மேற்பட்ட தென்னாபிரிக்கர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து கோவிட் இறப்புகளில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகும். குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.2 மடங்கு அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 17 அன்று 435 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோயின் ஓமிக்ரோன் எழுச்சிக் கட்டத்தில் ஒரு நாள் அதிகபட்சமாக இருந்தது. இந்த கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நாட்டில் கோவிட்-19 இன் மாறுபடும் சராசரி தொற்று இறப்பு விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 7, 2022 வரை GISAID க்கு சமர்ப்பிக்கப்பட்ட வைரஸ் வரிசைப்படுத்தல்கள், BA.2 தான் 65 சதவீத தொற்றுகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் இருந்து எழும் கேள்வி என்னவென்றால், அதன் அதிகரித்த தொற்றும் தன்மையை ஆதரிக்கும் அனைத்து ஆய்வுகளுடன் BA.2 தொற்றுநோய்களின் போக்கில் என்ன பங்கு வகிக்கும் என்பதே.

மாசசூசெட்ஸில் உள்ள பொஸ்டனில் உள்ள Beth Israel Deaconess மருத்துவ மையத்தில் நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் நுண்ணுயிரி ஆய்வாளரான டான் பாரூச், “இது ஓமிக்ரோன் எழுச்சியை நீடிக்கக்கூடும். ஆனால் இது ஒரு புதிய கூடுதல் எழுச்சிக்கு வழிவகுக்காது என்று எங்கள் தரவு தெரிவிக்கலாம்” என Nature இதழுக்கு தெரிவித்தார்.

ஜனவரி மாத இறுதியில் BMJ இல் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையில், BA.2 இன் 'வெளிப்படையான வளர்ச்சி தற்போது கணிசமாக உள்ளது' என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு அமைப்பு எச்சரித்தது. BA.2 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அதை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். London School of Hygiene and Tropical Medicine உள்ள தொற்று நோய்க்கான கணிதவியல்ரீதியாக மாதிரிப்படுத்தும் மையத்தின் பேராசிரியரான டாக்டர் ஜோன் எட்மண்ட்ஸ், BMJ இடம் “இதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்று சொல்வது கடினம். இது நோய்த்தொற்றின் இந்த அலையை நீட்டிக்கலாம் அல்லது மற்றொரு உச்சத்திற்கு கூட வழிவகுக்கும். நல்ல செய்தி என்னவென்றால், தற்போது இது ஓமிக்ரோனை விட கடுமையானது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் பகுப்பாய்வு காட்டுவது போல், தடுப்பூசிகள் BA.1 க்கு எதிராக செயல்படுவதைப் போலவே இதற்கு எதிராகவும் செயல்படுகின்றன” என்றார்.

இருப்பினும், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகம் விவாதிக்கப்பட்ட புதிய விலங்கு மற்றும் உயிரணு-கலாச்சார அடிப்படையிலான ஆய்வின் முன்னணி விஞ்ஞானி டாக்டர். கெய் சாடோ, BA.1 இனைவிட 1.4% மடங்கு BA.2 மிகவும் கூடுதலாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய நோய்க்கிருமியாக இருந்தது. BA.2 வைரஸ் மிகவும் நோயுண்டாக்கும் மற்றும் நுரையீரல் திசுக்களில் மிகவும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தமது விலங்கு மாதிரிகளில் காட்டுகிறது என கண்டுபிடித்தார்.

மேலதிக கண்டுபிடிப்புகள், BA.2 ஆனது தடுப்பூசிகள் அல்லது நோய்த்தொற்றுகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கிறது மற்றும் பல மாறுபட்ட நோயெதிர்ப்பு கலன்களுக்கு எதிர்ப்பை காட்டுகின்றன என்பதை காட்டுகின்றது. இதனால் தற்போதுள்ள கவலை என்னவெனில் கோவிட் நோய்த்தொற்றுக்கு ஆளானால், SARS-CoV-2 இன் மாறுபாடுகள் இப்போது இருக்கும் சிகிச்சை முறைகள் போதாமல் இருக்கும் என்பதே. இங்கு கூடுதலாக நியாயப்படுத்தப்படும் கூற்று என்னவெனில், தொற்று ஏற்பட்டால் போதியளவிலான சிகிச்சை இருந்தாலும் தொற்றினை ஒரு நிரந்தரமான ஒன்றாக கையாளவேண்டும் என்பதாகும்.

கட்டுரை கண்டுபிடிப்புகளை பற்றி பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறது:

BA.2 ஒரு ஓமிக்ரோன் மாறுபாடாகக் கருதப்பட்டாலும், அதன் மரபணு வரிசை BA.1 இலிருந்து பெரிதும் வேறுபட்டது. இது BA.2 இன் நுண்ணுயிரியல் பண்புகள் BA.1 இலிருந்து வேறுபட்டதாகக் கூறுகிறது. இங்கு, BA.2 இன் நுண்ணுயிரியல் பண்புகளை, அதன் அதிக பயனுள்ள இனப்பெருக்க எண் மற்றும் அதிக கலன்களுடன் இணைவதற்கான திறன் BA.1 உடன் ஒப்பிடும்போது அதிக நோய்ப்பரப்பும் தன்மை கொண்டதாக உள்ளதை தெளிவுபடுத்தினோம். மேலும், BA.2 ஆனது BA.1-தூண்டப்பட்ட மனித நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் தன்மைகொண்டது என்பதை நாங்கள் நிரூபித்தோம். BA.2 ஆனது BA.1 இலிருந்து நுண்ணுயிரியல் ரீதியாக வேறுபட்டது என்பதை எங்கள் தரவு சுட்டிக்காட்டுகிறது மற்றும் BA.2 க்கு கிரேக்க எழுத்துக்களின் ஒரு வடிவம் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஓமிக்ரோன் மாறுபாட்டான BA.1 இலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும் என்று ஒரு முன்மொழிவை எழுப்புகிறது.

ஆய்வு சக மதிப்பாய்வு செயல்பாட்டில் உள்ளது. மேலும் அதன் முக்கிய வரம்புகளில் ஒன்று மனித மக்கள்தொகையில் அதன் இனப்பெருக்கத்தன்மை ஆகும். Louisiana State University Health Shreveport இல் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் இணைப் பேராசிரியரான ஜெர்மி கமில், நியூஸ் வீக்கிடம், “இந்த ஆய்வு மிகவும் நம்பகமானதாகவும் கடுமையானதாகவும் தெரிகிறது மற்றும் ஒரு சிறந்த ஆராய்ச்சிக் குழுவிலிருந்து வந்தது. விலங்கு மற்றும் உயிரணு வளர்ப்பு மாதிரிகளில் உள்ள வேறுபாடுகளை மனித நோய் தொடர்பாக என்ன நடக்கிறது என்பதற்கு மொழிபெயர்ப்பது எப்போதும் கடினம் என்று நான் நினைக்கிறேன். வேறுபாடுகள் உண்மையானவை என தெரிகின்றது” என்று கூறினார்.

ஓஹியோவில் உள்ள Cleveland Clini இன் நுண்ணுயிரியல் பிரிவுத் தலைவரான டாக்டர். டானியல் ரோட்ஸ், CNN இடம் “ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில், இது BA.1 ஐ விட மோசமான வைரஸாக இருக்கலாம், மேலும் சிறப்பாகவும் பரவக்கூடியதாகவும் இருக்கலாம். மோசமான நோயை உருவாக்கலாம்' எனக் கூறினார். தீவிரத்தன்மையின் அடிப்படையில், இது டெல்டாவுடன் ஒப்பிடப்படுகிறது. மேலும், இது பல வேறுபட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளது, இது அசல் ஓமிக்ரோன் விகாரத்திலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இது கிரேக்க எழுத்துடன் வரையறுக்கப்படவேண்டும் என பலரால் உலக சுகாதார சபைக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

உலக சுகாதார சபையின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் பதிவுசெய்யப்பட்ட ஐந்தில் ஒரு புதிய ஓமிக்தோன் தொற்றுக்களில் BA.2 துணைவேறுபாடு உள்ளது. உண்மையில், இவை அனைத்தும் நாடுகளிலும் எவ்வாறான விளைவை உருவாக்கும் என்பது நோய்த்தொற்றுகளை தடுக்க எவ்வளவு தீவிரமாக நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன அல்லது வைரஸை தடையின்றி பரவ அனுமதிக்கும் கொள்கைகள் அனுமதிக்கப்ப்பட்டால் என்ன நிகழும் என்பதால் தீர்மானிக்கப்படும்.

பெப்ரவரி 1 அன்று டென்மார்க்கில் அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. கோவிட்-19 க்கான அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, நடைமுறையில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், “மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்பில் உதாரணமாக முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி அத்தாட்சியை பயன்படுத்துவதற்கான பரிந்துரைகள் தொடர்ந்து இருக்கும். தனியார் வணிகங்கள் மற்றும் தனியார் கலாச்சார நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் போன்றவற்றிலும் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பது இன்னும் சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, கொரோனா தடுப்பூசி அத்தாட்சியை அல்லது முகக்கவசங்கள் / கேடயத்தைப் பயன்படுத்துதல்.

டென்மார்க்கில் கோவிட் தொற்றுக்கள் மற்றும் இறப்புகள்

BA.2 மாறுபாடு ஜனவரி நடுப்பகுதியில் டென்மார்க்கில் ஆதிக்கம் செலுத்தி BA.1 ஐ பிரதியீடு செய்தது. தற்போது டென்மார்க்கில் உள்ள அனைத்து வரிசைப்படுத்தப்பட்ட SARS-CoV-2 மாதிரிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஜனவரி மாத இறுதியில் தொற்றுக்கள் உச்சத்தை அடைந்து, அங்கு அவை ஏழு நாள் நகரும் சராசரியாக நாளொன்றுக்கு 40,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களுடன் தொடர்ந்து உயர்ந்தன. கடந்த குளிர்காலத்தின் உச்சத்தை தாண்டிய தினசரி இறப்பு எண்ணிக்கையின் அதிகரிப்பு கவலையளிக்கிறது. இப்போது ஒவ்வொரு நாளும் முப்பத்து மூன்று பேர் இறக்கின்றனர்.

ஒப்பீட்டு நோக்கங்களுக்காக இந்த புள்ளிவிவரங்களை வைத்தால், டென்மார்க்கில் 5.83 மில்லியன் மக்கள் உள்ளனர், அதே நேரத்தில் அமெரிக்காவில் 331 மில்லியன் மக்கள் உள்ளனர். டென்மார்க் இதேபோன்ற சமமான மக்கள்தொகை இருந்திருந்தால், தொற்றுவிகிதம் தினசரி 2.2 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களாக இருக்கும் மற்றும் தினசரி இறப்பு ஒரு நாளைக்கு 1,900 க்கு அருகில் இருக்கும்.

கோவிட்-19க்கு, எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நீக்க அமெரிக்காவில் உள்ள மாநில மற்றும் மத்திய ஆட்சி அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், BA.2 துணைப் பிரிவு காரணமாக கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்ச புள்ளிவிவரங்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் உள்ளன. இது வரிசைப்படுத்தப்பட்ட தொற்றுக்களில் 6 சதவீதம் ஆகும். அடுத்த சில வாரங்கள் எப்படி நடக்கும் என்று கணிப்பது காலத்திற்கு முந்தியதாகும். ஆனால் புறநிலை கண்டுபிடிப்புகள் செல்லுபடியானவையாக என நிரூபிக்கப்பட்டால், அமெரிக்கா மார்ச் மாத இறுதியில் மற்றொரு நசுக்கும் அலையை சந்திக்க நேரிடும்.

பத்திரிக்கையாளர் கிறிஸ் டர்ன்புல் சமீபத்தில் ட்விட்டரில் குறிப்பிட்டபடி, “ஒருவேளை நான் இங்கே அறையில் இருக்கும் யானையை சுட்டிக் காட்டுகிறேன். ஆனால் டெல்டா அலைகள் தடுப்பூசிகளால் மழுங்கடிக்கப்பட்டிருந்தால், மேலும் உங்களிடம் BA.2 போன்ற மாறுபாடுகள் இருந்தால் அது கோட்பாட்டளவில் கடுமையாகத் தெரிகிறது. இது ஏற்கனவே டெல்டாவை விட அதிக தொற்றக்கூடியதாக இருந்தBA.1 ஐ விட 1.4 மடங்கு அதிக தொற்று உள்ளது... மேலும், நீங்கள் BA.1 இன் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கிறீர்கள். பின்னர் இது நாம் ஆரம்பத்தில் இருந்து பார்த்த மிக மோசமான மாறுபாட்டின் கலவையாகும். இது வெளிப்படையாக ஆரம்ப நாடுகளாக இருக்கின்றது. நான் இங்கே ஊகிக்கிறேன், ஆனால் கோட்பாட்டளவில், அது மிகவும் சாத்தியமாகத் தெரிகிறது.

டர்ன்புல்லின் கருத்துக்கள், SARS-CoV-2 வைரஸால் மக்களுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தீவிரமானதாகக் கருதும் முன்னெச்சரிக்கையான கொள்கையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கு குடிமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பரந்த பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவது அவசியம்.இந்தச் சூழலில், முகக்கவசங்கள் அணிவதில் இருந்து மக்களுக்கு 'இடைவேளை' கொடுப்பது பற்றி டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கியின் சமீபத்திய கருத்து ஆழ்ந்த கவலையளிக்கிறது மற்றும் முற்றிலும் குற்றகரமானது.