உக்ரேனின் ஜனாதிபதி செலென்ஸ்கி “பாராளுமன்றத்தில் போர் கூட்டணிக்கு” அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது நீண்டகால பொருளாதாரத் தடைகளை விதித்து, மோதலை மேலும் தீவிரப்படுத்திய நிலையில், உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி உக்ரேனிய பாராளுமன்றத்தில் “போர் கூட்டணிக்கு” அழைப்பு விடுத்ததுடன், ரஷ்யா உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளும் திட்டங்களை மதிப்பாய்வு செய்யத் தொடங்கினார்.

திங்களன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கியேவில் அமெரிக்க ஆதரவுடன் நடந்த 2014 ஆட்சிக்கவிழ்ப்பை தொடர்ந்து தம்மைத்தாமே ‘மக்கள் குடியரசுகளாக’ அறிவித்துக் கொண்ட டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்கில் உள்ள பிரிவினைவாத பகுதிகளை ‘சுதந்திரமானவையாக’ அங்கீகரித்து, அப்பகுதிக்கு ரஷ்ய துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டார். ரஷ்ய ஆயுதப் படைகளை அங்கு நிலைநிறுத்த ரஷ்ய பாராளுமன்றம் செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புட்டின் பேசுகையில், “துருப்புக்கள் உடனடியாக அங்கு செல்லும்” என்று தனது உத்தரவுக்கு அர்த்தம் இல்லை என்றார்.

2015 மின்ஸ்க் ஒப்பந்தம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான டொனெட்ஸ்கை சேர்ந்த ஒரு பிரிவினைவாதத் தலைவரை படுகொலை செய்தது உட்பட, கியேவ் உண்மையில் பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தை நாசப்படுத்தி புறக்கணித்து வந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அதன் சோவியத் கால அணுசக்தி உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, உக்ரேன் தீர்மானித்தால் அணு ஆயுதங்களை எளிதாகப் பெற முடியும் என்றும் வலியுறுத்தினார். இந்த வார இறுதியில், உக்ரேனின் செலென்ஸ்கி முனிச் பாதுகாப்பு மாநாட்டில், அவரது நாட்டின் ‘பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு’ உத்தரவாதமளிக்கப்படாவிட்டால், உலகின் மூன்றாவது மிகப்பெரிய அணுவாயுத சக்தியாக இருந்தபோது உக்ரேன் அணுவாயுதங்களை கைவிடக் காரணமான 1994 புடாபெஸ்ட் உடன்படிக்கையை அவர்கள் திரும்பப் பெறுவார்கள் என்று அச்சுறுத்தினார்.

பெப்ரவரி 22, 2022, செவ்வாய்க்கிழமை, வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறையில் நடந்த செய்தியாளர் மாநாட்டிற்குப் பின்னர் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனும் (வலதுபுறம்), மற்றும் உக்ரேனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவும் உள்ளனர். (AP Photo/Carolyn Kaster)

தற்போது அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகள் ரஷ்ய எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்க நேட்டோவை அனுமதிக்கும் என்பதால், மோதலின் எந்தவொரு தீர்வுக்கும் உக்ரேனின் குறிப்பிடத்தக்க இராணுவ குறைப்பு தேவைப்படும் என்று புட்டின் மீண்டும் வலியுறுத்தினார்.

செவ்வாயன்று, மாஸ்கோ உக்ரேனில் இருந்து அதன் அனைத்து தூதர்களையும் வெளியேற்றப் போவதாக அறிவித்தது.

கியேவில், தன்னலக்குழுவும் தீவிர வலதுசாரிகளும் திங்களன்று மோதலை அதிகரிக்கவும், வெளிப்படையான போருக்கு களம் அமைக்கவும் புட்டினின் முடிவை பற்றிக்கொண்டனர். 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்த வலதுசாரி எதிர்ப்புக்களில் பங்கேற்ற டிமிட்ரி குபேலா தலைமையிலான உக்ரேனின் வெளியுறவு அமைச்சகம், ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க செலென்ஸ்கிக்கு க்கு முறையான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. வாஷிங்டனுக்கு விஜயம் செய்த குபேலா, 'இது ஏற்கனவே 2014 இல் செய்திருக்க வேண்டும்' என்று தான் எப்போதும் உணர்ந்ததாக கூறினார்.

இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளான, முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவின் “ஐரோப்பிய ஒற்றுமைக் கட்சி”யைச் சேர்ந்த Oleksiyh Honcharenko மற்றும் நவ நாஜி ஸ்வோபோடா கட்சியின் துணைத் தலைவரான Olga Savchuk ஆகியோர் இதேபோன்ற மசோதாக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தனர். அவை இப்போது பாராளுமன்ற குழுக்களால் பரிசீலிக்கப்படும், அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவை பரிசீலிப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் உடனான உக்ரேனின் எல்லைகளை மூடுவதற்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்கில் போர் நிலையை அறிவிக்குமாறும் அழைப்பு விடுத்து பாசிச பாராளுமன்ற உறுப்பினர் சவ்சுக் (Savchuk) பாராளுமன்றத்தில் மற்றொரு திட்டத்தை முன்வைத்தார். சவ்சுக் நவ-நாஜி ஸ்வோபோடா கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆவார், இது நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவையும் வாஃபென் எஸ்எஸ் கலீசியா பிரிவையும் (Waffen SS Galicia Division) வெளிப்படையாக மகிமைப்படுத்துகிறது.

2014 ஆட்சிக்கவிழ்ப்பில் ஸ்வோபோடா முக்கிய பங்காற்றியது, பின்னர் அதிலிருந்து உருவான ஆர்செனி யட்சென்யுக் (Arseniy Yatsenyuk) அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்வோபோடா பாராளுமன்றப் பிரிவின் தலைவர் ஓலே தியாஹ்னிபோக் (Oleh Tyahnibok), கிரிமிய தீபகற்பம் உக்ரேனுக்குத் திரும்புவதற்கு ரஷ்யா ‘20 தேசிய மாநிலங்களாக’ ‘துண்டாடப்பட வேண்டும்’ என்று சமீபத்தில் கூறினார், இது உக்ரேனின் உத்தியோகபூர்வ இராணுவ மூலோபாயமாகும்.

உக்ரேனின் தீவிர வலதுசாரிகளுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையேயான நெருக்கமான உறவுகளுக்கான மற்றொரு உதாரணம், சவ்சுக் அமெரிக்க காங்கிரஸின் திறந்த உலக தலைமைத்துவ மையத்தின் (US Congress’s Open World Leadership Center) முன்னாள் மாணவர் ஆவார், இம்மையம் 2019 இல் உக்ரேனின் பாராளுமன்றத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெருமைபீற்றியது.

போரோஷென்கோவின் ஐரோப்பிய ஒற்றுமைக் கட்சியும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டுடனும், அத்துடன் உக்ரேனின் தீவிர வலதுசாரிகளுடனும் விரிவான உறவுகளைக் கொண்டுள்ளது. செலென்ஸ்கிக்கு எதிரான தீவிர வலதுசாரி பேரணிகளுக்கும், கிழக்கு உக்ரேனில் நிலவும் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கும் போரோஷென்கோ பலமுறை உரையாற்றினார்.

1.5 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு கொண்ட உக்ரேனின் முன்னாள் ஜனாதிபதி சமீபத்தில் உக்ரேனுக்குத் திரும்பினார், அங்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் நேரடித் தலையீட்டின் காரணமாக அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முடிந்தது. அதன் பின்னர் அவர் வலதில் இருந்து ஜெலென்ஸ்கி அரசாங்கத்தைத் தாக்கும் பிரச்சாரத்தை நடத்தியதுடன், ரஷ்யாவுடனான மோதலில் அது போதுமான அளவு ‘உறுதியாக’ இல்லை என்று அதை குற்றம் சாட்டினார். கடந்த வாரங்களில், ரஷ்ய படையெடுப்பு ‘உடனடியாக’ நிகழும் என்பதான பைடென் நிர்வாகத்தின் கூற்றுக்களை ஜெலென்ஸ்கி பலமுறை நிராகரித்ததுடன், அமெரிக்க போர் பிரச்சாரத்தை ‘வெறித்தனமானது’ என்று கண்டித்தார்.

அமெரிக்க அரசின் சக்திவாய்ந்த பிரிவுகளும் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களும் இப்போது ஜெலென்ஸ்கியை எதிர்க்கின்றன என்பதற்கான அடையாளமாக, அவருக்கு எதிரான பிரச்சாரம் இப்போது நியூ யோர்க் டைம்ஸின் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. திங்களன்று, போர் நெருக்கடிகளின் போது சிஐஏ இன் ஒரு செய்தி முகமையாக செயற்பட்ட ஒரு நிறுவனம், “உக்ரேனின் ஜனாதிபதி அழுத்தத்தில் இருக்கிறார்” என்ற தலைப்பிலான உக்ரேனிய பத்திரிகையாளர் ஒல்கா ருடென்கோவின் (Olga Rudenko) கருத்தை வெளியிட்டது. அமெரிக்க வணிகம் மற்றும் அரசியல் உயரடுக்கின் மையமாக திகழும் University of Chicago’s Booth School of Business இல் சமீபத்தில் உயர்படிப்பை முடித்தார். அவரது கருத்தில், 'ஜெலென்ஸ்கியின் நடத்தை' 'ஒழுங்கற்றதாக இருக்கும் அளவிற்கு வித்தியாசமானது' என்று எழுதினார்.

செலென்ஸ்கி 'ரஷ்யாவிற்கு, குறிப்பாக கிழக்கு உக்ரைனில் உள்ள மோதலில்' சலுகைகளை வழங்கினால், தெருக்களில் 'நூறாயிரக்கணக்கான மக்களை' சந்திக்க நேரிடும் என்றும், 2014 இல் தூக்கி எறியப்பட்ட யானுகோவிச்சை விட அதே கதியை சந்திக்க நேரிடும் என்பதை அப்பெண்மணி ஒப்புக்கொண்டார். நிச்சயமாக ருடென்கோ கூறாதது என்னவென்றால், 2014 ஆம் ஆண்டு ‘புரட்சி’ என்பது, அமெரிக்க அரசால் அப்போது நிதியளிக்கப்பட்டு, பின்னர் மேலும் ஆயுதம் வழங்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட பாசிச குண்டர்களால் நடத்தப்பட்டது என்பதுதான்.

தீவிர வலதுசாரிகள் மற்றும் வாஷிங்டனின் அழுத்தத்திற்கு, இந்த நவ-பாசிச சக்திகளுடன் ஒரு ‘போர் கூட்டணி’ அமைக்கவும், போருக்கான தயாரிப்புக்களை முடுக்கிவிடவும் அழைப்பு விடுத்து ஜெலென்ஸ்கி பதிலிறுத்தார். செவ்வாய்க்கிழமை மாலை, அவர் அனைத்து பாராளுமன்ற பிரிவுகளுடன் ஒரு இரகசிய கூட்டத்தை நடத்தினார். போரோஷேன்கோவின் ஐரோப்பிய ஒற்றுமைக் கட்சி பிரிவுடனான சந்திப்பின் போது, கியேவின் இராணுவத் திறன்களை கணிசமான அளவு கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கும் போரோஷேன்கோ முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புகளுக்குப் பின்னர், செலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவர் ஒரு அறிக்கையை தெளிவாகவும் முதன்மையாகவும் தன்னலக்குழுக்கள் மற்றும் நவ-பாசிச கும்பல்களில் உள்ள அவரது விமர்சகர்களை நோக்கி கூறினார். அந்த அறிக்கையில், “உக்ரேனிய அரசியல்வாதிகள் அனைவரும் இப்போது அரசு செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் நமது நாட்டின் நலனுக்காக தங்கள் இலட்சியங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். நமது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இராணுவ பாதுகாப்புத் திறனுக்காக பாராளுமன்றத்தில் ஒரு போர்க் கூட்டணி, ஒற்றுமை மற்றும் விரைவான மற்றும் முக்கியமான முடிவுகள் தேவை என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். இன்று, அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் ஒரே ஒரு நிறம் மட்டுமே உள்ளது: நீலம்-மஞ்சள் [உக்ரேனிய தேசியக் கொடியின் நிறங்கள்] என்று கூறினார்.

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தனது அரசாங்கம் தயாராகி வருவதை தெளிவுபடுத்தி, மின்ஸ்க் ஒப்பந்தங்களை ரஷ்யா ‘ஒருதலைப்பட்சமாக’ மீறிவிட்டது என்று ஜெலென்ஸ்கி அவரது உரையில் வலியுறுத்தியதுடன், “[எங்கள் பிரதேசத்தில்] எதையும் யாருக்கும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் 2014 ஆம் ஆண்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, 2022 ஆம் ஆண்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இப்போது வேறுவிதமானவர்கள் என்பதுடன், எங்களிடம் வேறுவிதமான இராணுவமும் உள்ளது” என்றும் கூறினார். உண்மையில், ஏகாதிபத்திய சக்திகள் 2014 முதல் உக்ரேனின் இராணுவ விரிவாக்கத்திற்கு பில்லியன்களைப் பாய்ச்சியுள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல், உக்ரேன் நேட்டோவின் “மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகள் கொண்ட கூட்டாளியாக” உள்ளது, மேலும் அது “கணினி இயக்கத்திறன் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகல், மற்றும் மிகுந்த தகவல் பகிர்வு” வசதிகளை பெருக்குவதில் ஈடுபடுகிறது.

ஜெலென்ஸ்கி உக்ரேனிய மக்களிடம், நாட்டைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு நாளும் ‘கடின உழைப்புக்கு’ அவர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி, ‘ஸ்லாவா உக்ரைனி’ என்ற தேசிய வணக்கத்துடன் தனது உரையை முடித்தார், இந்த வணக்கம், இப்போது உக்ரேனிய அரசியலில் பொதுவானதாக இருந்தாலும், உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு மற்றும் 1930கள் மற்றும் 1940களின் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் பாசிச அரசியலுடன் நெருங்கிய தொடர்புடையது.

அன்று மாலை, ஜெலென்ஸ்கியும் அனைத்து இராணுவ இருப்புக்களையும் அணிதிரட்டுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார், ஆனால் பொது அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். உக்ரேனிய ஆயுதப் படைகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு தேவையான பெரியளவிலான முதலீடுகள் குறித்து கலந்துரையாட உக்ரேனின் வணிக உயரடுக்கின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார்.

இதற்கிடையில் கிழக்கு உக்ரேனில் இராணுவ மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டொனெட்ஸ்கில் பிரிவினைவாத அதிகாரிகளின் கூற்றுப்படி, செவ்வாயன்று ஒரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புதன் கிழமை இரவு நகர மையத்தில் நடந்த மற்றொரு பெரிய குண்டுவெடிப்பில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. பிரிவினைவாத அதிகாரிகள் நகரின் தொலைக்காட்சி மையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பை ஒரு ‘பயங்கரவாத தாக்குதல்’ என்று விவரித்தனர். லுகான்ஸ்கில், உக்ரேனிய பீரங்கி வண்டி கார் மீது மோதியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய செய்தி அறிக்கைகளின்படி, கிழக்கு உக்ரேனில் இருந்து இப்போது 100,000 அகதிகள் ரஷ்யாவிற்கு வந்துள்ளனர்; அவர்களில் 30,000 பேர் குழந்தைகளாவர்.

Loading