முன்னோக்கு

வடக்கு பர்லிங்டன் இரயில்வே நிறுவனத்தில் வேலைநிறுத்த தடை உத்தரவை நீதிபதி உறுதி செய்கிறார்: அமெரிக்க முதலாளித்துவம் போருக்குத் தயாரிப்பு செய்தவாறு தொழிலாள வர்க்கத்தை நெறிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டெக்சாஸின் கூட்டாட்சி நீதிபதி, BNSF (Burlington Northern Santa Fe) இரயில்வேயில் 17,000 நடத்துனர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு எதிரான முந்தைய வேலைநிறுத்த தடை உத்தரவை உறுதிப்படுத்தி செவ்வாய்கிழமை ஒரு தீர்ப்பு வெளியிட்டார். தற்போதைய பணியாளர்களை அதிகமாக கசக்கிப் பிழியவும் மற்றும் வேலைநீக்கங்கள் மற்றும் செலவு குறைப்புகளுக்கு வழிவகுக்கவும் வடிவமைக்கப்பட்ட அந்நிறுவனத்தின் புதிய 'Hi Viz' வருகைப் பதிவேடு கொள்கைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய, தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்ததை அடுத்து, கடந்த வாரம் அசல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

BNSF engine [Credit: Wikipedia/Augy8400]

அதன் பின்னர் ஏறக்குறைய உடனேயே, பிற்போக்குத்தனமான 1926 இரயில்வே தொழிலாளர் சட்டத்தின் (RLA) கீழ் வேலைநிறுத்தத்தைத் தடுக்க BNSF வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த சட்டத்தின் வெளிப்படையான நோக்கம் ஏறக்குறைய முழுமையாக வேலைநிறுத்தங்களுக்குத் தடைவிதிப்பதும் மற்றும் ''பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம், தன்னார்வ இசைவு, மற்றும் சமரசத்திற்கான' கட்டாய மற்றும் 'நடைமுறையளவில் முடிவில்லா' செயல்முறையை அமைப்பதும்' ஆகும் என்பதை செவ்வாய்க் கிழமை தீர்ப்பில், நீதிபதி மார்க் பிட்மன் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்.

இந்த தடை உத்தரவு தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு மிகப் பெரும் தாக்குதலாகும். இது “வாயை மூடு! வேலை செய்!” என்று BNSF தொழிலாளர்களைத் துப்பாக்கி முனையில் கைக்கட்டி வேலைக்குச் செல்ல வைப்பதற்குச் சமம். இது வேலைநிறுத்தங்கள் மற்றும் பணி நிறுத்தங்களுக்கு மட்டும் தடை விதிக்கவில்லை மாறாக 'மறியல் செய்வதை, வேலையில் வேகக்குறைப்பு, மருத்துவ விடுப்பு எடுத்தல் அல்லது பிற சுய-உதவி பெறுவதற்கும்' தடை விதிக்கிறது.

இந்தத் தீர்ப்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக தனிப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 'அவர்களுடன் இணைந்து செயல்படும் அல்லது அவர்களுடன் பங்கெடுக்கும் எல்லா நபர்களுக்கும்' எதிராக தொடர்புபடுகிறது. தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசுவது அல்லது உலக சோசலிச வலைத் தளத்தில் அவர்களது போராட்டத்தைப் பற்றி படிப்பதைக் குறித்தும் கூட பேசுவது உள்ளடங்கலாக, முதல் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் தெளிவாகப் பாதுகாக்கப்பட்ட நடவடிக்கையைக் குறிவைக்க நீதிமன்றங்கள் இந்த மொழியைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

வேலையிடங்களில் கட்டுப்பாடின்றி கோவிட்-19 பரவல், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சாத்தியமில்லா வேலை நேரங்கள் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒரு மிகப் பெரிய வர்க்க போராட்டத்தை முகங்கொடுத்துள்ள, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் முந்தைய தலைமுறையில் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க பயன்படுத்திய ஜனநாயக-விரோத முறைகள் அனைத்தையும் புதுப்பித்து வருகிறது.

இதில் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள் மட்டுமின்றி மாறாக அரசின் நேரடி தலையீடும் உள்ளடங்கும். இந்த குளிர்காலத்தில் தேசிய பாதுகாப்புத் துருப்புக்கள் மற்றும் பொலிஸைக் கூட கருங்காலிகளாக பயன்படுத்தியதன் மூலம் மருத்துவமனைகளும் பள்ளிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. விஸ்கான்சினில் உள்ள ஒரு நீதிபதி, 'பொது நலனை' மேற்கோள் காட்டி, மருத்துவத் துறை பணியாளர்கள் அவர்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கு இந்தாண்டு தடை விதித்தார்.

வினியோகச் சங்கிலி பெயரில் வேலைநிறுத்தத்திற்குத் தடைவிதிப்பதும் 'பொது நலனுக்காகவே' என்று அறிவித்து, நீதிபதி பிட்மேன் அவரின் அசல் தீர்ப்பை நியாயப்படுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேலைநிறுத்தம் செய்வதற்கான தொழிலாளர்களின் உரிமை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான அவர்களின் முதல் அரசியலமைப்பு திருத்த உரிமை உட்பட தொழிலாளர்களின் உரிமைகள், இலாபம் ஈட்டுவதற்காக நிறுவனங்களின் 'உரிமை' எனப்படுவதை விட குறைந்ததே என்று அறிவிக்கப்படுகிறது.

வேலை வெட்டுக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் ஒவ்வொரு சல்லிக் காசையும் பிழிந்தெடுப்பதற்கான முதல் தர இரயில்வே தடங்களின் உரிமையாளர்களான பெர்க்ஷயர் ஹாத்வே மற்றும் பிற வோல் ஸ்ட்ரீட் உரிமையாளர்களின் முனைவு இரயில்வே சரக்குப் போக்குவரத்து வினியோகச் சங்கிலியைத் தரைமட்டத்திற்குத் தள்ளி உள்ளது, அத்துடன் இரயில் தடம்புரள்வு மற்றும் மரண விபத்துக்களும் வழக்கமாக நடந்து வருகின்றன, மேலும் இரயில்கள் வழக்கமாக மணிக்கணக்கில் மற்றும் நாட்கணக்கிலும் கூட நேரம் கடந்து ஓடுகின்றன.

ஆனால் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான போருக்கு பைடென் நிர்வாகத்தின் முன்னேறிய திட்டங்களை வைத்துப் பார்த்தால், 'வினியோகச் சங்கிலிகளின்' மீதான புறக்கணிப்பைக் குறிப்பிடுவது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. உள்நாட்டிலும் மற்றும் வாஷிங்டனிலும் நிலவும் மிகப் பெரிய சமூக பதட்டங்களை தேசப்பற்று, போர்வெறி பிரச்சார பேரலை மூலமாக ஒடுக்குவதும், மற்றும் அமெரிக்க சமூகத்தைப் போரில் நிறுத்துவதன் மூலம் 'தேச ஒற்றுமையை' செயல்படுத்துவதுமே இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது.

போக்குவரத்துத்துறை செயலர் Pete Buttigieg கடந்தாண்டு சீனாவுடனான மோதல் வாய்ப்புகளைக் குறிப்பிடும் கருத்துக்களில் இதை மிகத் தெளிவாகக் கூறினார், அவர் கூறிய போது, “புதிய சீனச் சவால் அரசியல் பிளவைக் கடந்து ஒன்றிணைவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. குறைந்தபட்சம் பாதி போர் உள்நாட்டில் உள்ளது,” என்றார்.

உள்நாட்டில் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கும் அதே வேளையில், உக்ரேனின் தேசிய உரிமைகள் மீது வாஷிங்டன் காட்டும் ஆழ்ந்த அக்கறையில் மலைப்பூட்டும் அளவுக்குப் பாசாங்குத்தனம் உள்ளது.

ஊழல் நிறைந்த, கார்ப்பரேட் சார்பு தொழிற்சங்கங்கள் பைடெனின் மூலோபாயத்திற்கு முக்கியமானவை. BNSF நிறுவனத்தில் உள்ள BLET சங்கம் (இன்ஜின் பொறியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் சகோதரத்துவம்) மற்றும் SMART-TD சங்கம் (தகடு வேலைகள், விமானச் சேவை, இரயில்வே மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் போக்குவரத்து பிரிவு) ஆகிய தொழிற்சங்கங்களுக்கு, இரயில்வே தொழிலாளர்களிடையே நிலவும் ஆழ்ந்த எதிர்ப்பும் விரக்தியும் தெளிவாக தெரியும். அவை இந்த தீர்ப்பை விமர்சித்து கடிதம் வெளியிட்டாலும் நிகழ்வுபோக்கை அனுமதிக்கும் விதத்தில் தொழிலாளர்கள் களத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டன. ஆனால் நீதிபதி பிட்மேன் அவரே ஒப்புக் கொண்டதைப் போல, RLA சங்கம் மற்றும் பிற தொழிலாளர் சட்டங்களால் நிறுவப்பட்ட இந்த ஒட்டுமொத்த சட்ட செயல்முறையும் அடி முதல் முடி வரை நிறுவனங்களுக்குப் பலனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பின் கீழ் தொழிலாளர்களின் ஒப்பந்த உரிமைகள் கூட மதிக்கப்படுவதில்லை. பேரம்பேசல் கூட இல்லாமல் அதன் வருகைப் பதிவேட்டு கொள்கையைத் தன்னிச்சையாக மாற்ற BNSF நிறுவனம் அனுமதிக்கப்பட்டது, மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாக தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை அனுமதிக்க எந்த நீதிபதியும் ஆதரவாக நிற்கவில்லை என்று BNSF வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆணவத்துடன் குரூர திருப்தியோடு வாதிட்டனர். அவர்கள் Hi Viz கொள்கைக்குத் தொழிலாளர்களின் எதிர்ப்பை காற்று மின்னாலையில் இறகுகளை முறுக்க முயன்ற Don Quixote நடவடிக்கையுடன் ஒப்பிட்டனர். தொழிலாளர்கள் அமைதி காக்குமாறும் இந்த நிகழ்வுபோக்கில் நம்பிக்கை வைக்குமாறும் தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூறும் அதேவேளையில், BNSF தொழிலாளர்கள் இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஓர் ஒப்பந்தம் இல்லாமலேயே உள்ளனர்.

ஆனால் இந்த சட்டங்கள் நிறுவனங்களுக்குப் பயனளிப்பது மட்டுமல்லாமல், மாறாக அவை சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு எதிராக தொழிற்சங்கங்களையும் பாதுகாக்கின்றன. இந்த தீர்ப்பின் மீது அவர்களின் தணிந்த விமர்சனம் இருந்தாலும், இந்த தடை உத்தரவு போர்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக அவர்களுக்கு வெடிமருந்துகளை வழங்குவதால் இந்த தீர்ப்பைத் தொழிற்சங்க அதிகாரத்துவம் வரவேற்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த தீர்ப்பு 'அமெரிக்க வரலாற்றில் [மிகவும்] தொழிற்சங்க சார்பு ஜனாதிபதி' என்ற பைடெனின் கூற்றுக்குக் கூடுதலாக நிம்மதி அளிக்கிறது. இரயில்வே துறையில் பல தசாப்தங்களாக இருந்துள்ளதைப் போலவே எல்லா இடங்களிலும் அரசு கட்டுப்பாட்டிலான 'தொழிலாளர் இயக்கத்தை' பைடென் விரும்புகிறார்.

தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் அரசின் உருவாக்கங்களாகும், இவை அவற்றின் உயிர்வாழ்வுக்கு அரசின் ஆதரவைச் சார்ந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்க வழக்கறிஞர் ஒருவர், தொழிற்சங்கத்தில் இல்லாத பொதுத்துறை தொழிலாளர்களும் சம அளவில் சந்தா செலுத்த வேண்டும் என்ற சட்டங்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட போது இந்த உறவு வெளிப்படையாக வெளியானது. “தொழிற்சங்கப் பாதுகாப்பு என்பது வேலைநிறுத்தங்கள் இல்லாமல் வைத்திருப்பதற்கான பரிவர்த்தனையாகும்' என்றவர் அறிவித்தார், தொழிற்சங்கங்களின் சேவைகள் இல்லாமல், 'நாடு முழுவதும் தொழிலாளர் அமைதியின்மையின் ஒரு சொல்லொணா பெரும் ஆபத்தை நீங்கள் எழுப்பி விடுவீர்கள்' என்று நீதிமன்றத்தை எச்சரித்தார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து அச்சுறுத்தல் இல்லாமல், தொழிற்சங்கங்கள் உள்ளார்ந்து இணைந்துள்ள இந்த ஒட்டுமொத்த பெருநிறுவன தொழிலாளர்-அரசு-நிர்வாகத்தின் கட்டமைப்பிலிருந்து சுயாதீனமான மூலோபாயத்தை உருவாக்குவதற்கான வழிவகைகள் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றன.

இது BNSF தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவைக் கட்டமைப்பதை அர்த்தப்படுத்துகிறது, இது கடந்த வாரம் அதன் ஸ்தாபக அறிக்கையை வெளியிட்டது. “நிர்வாகம், செல்வசெழிப்பான தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் 'தடையாணைகள் மூலமாக செயல்படும் அரசாங்கம்' ஆகியவற்றுக்கு எதிராக ஒரு மாற்று அதிகார வளத்தை' உருவாக்குவதே இந்த குழுவின் நோக்கம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முதலாளித்து அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவையை இந்த அரசாங்க தாக்குதல்கள் எடுத்துக் காட்டுகின்றன. தொழிலாளர்கள் ஏதோவொரு பேராசை மிக்க நிறுவனத்திற்கு எதிராக அல்ல, மாறாக இந்த இலாபகர அமைப்புமுறையையும் அதைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களையும் எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை இந்த தடை உத்தரவும் மற்றும் இதுபோன்ற மற்ற நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன.

Loading