பேர்னி சாண்டர்ஸ் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களை ஆதரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் மார்ச் 26, 2021 வெள்ளிக்கிழமை அன்று, பேர்மிங்காம், அலபாமா மாநிலத்தில் உள்ள அமசன் கிட்டங்கியில் தொழிற்சங்க வாக்கெடுப்புக்கு முன்னதாக ஒரு பேரணியில் பேசுகிறார். (AP Photo/Kim Chandler)

செவ்வாயன்று, ஜோ பைடென் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் 'முதல் கட்டம்' என்று அழைத்ததை அறிவித்த சிறிது நேரத்திலேயே, வேர்மொன்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் இந்த நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை அறிவித்தார். ஆறு வாக்கியங்கள் கொண்ட அந்த அறிக்கையில், போர் ஆபத்துக்கு ரஷ்யாவை சாண்டர்ஸ் குற்றம்சாட்டி மேலும் சமாதானமான வழிகளில் மோதலை தீர்க்க அமெரிக்கா ஜனநாயகரீதியில் செயல்படுவதாகவும் காட்டினார். சாண்டர்ஸ் இப்பொருளாதாரத் தடைகளை அரசியல்ரீதியாக முற்போக்கானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என நியாயப்படுத்தினார்.

அந்த முழு அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

உக்ரைன் மீதான விளாடிமிர் புட்டினின் சமீபத்திய படையெடுப்பு, அவர் எந்த தவறான போலிக்காரணங்களை காட்டினாலும், சர்வதேச சட்டத்தை பாதுகாக்க முடியாத மீறலாகும். இந்த நிலைமைக்கு எப்போதும் ஒரு இராஜதந்திர தீர்வு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, புட்டின் அதை நிராகரிக்கும் நோக்கத்தில் இருக்கிறார். அமெரிக்கா இப்போது நமது நட்பு நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து புட்டின் மற்றும் அவரது தன்னலக்குழுக்கள் மீது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளில் அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை அணுக மறுப்பது உட்பட கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். இந்த மோதலில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு உதவ உக்ரேனின் அண்டை நாடுகளுக்கு உதவுவதன் மூலம் அமெரிக்காவும் எங்கள் கூட்டாளிகளும் மோசமான சூழ்நிலைக்கு தயாராக வேண்டும். இறுதியாக, நீண்டகாலத்திற்கு, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி உலகளாவிய பசுமை எரிசக்தி மாற்றத்தில் நாம் முதலீடு செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், சர்வாதிகார பெற்ரோலிய நாடுகளுக்கு அவர்கள் உயிர்வாழத் தேவையான வருவாயை மறுக்க வேண்டும்.

சர்வதேச சட்டத்தை மீறி போர்களை முன்னெடுப்பதற்காக மற்றவர்களை விமர்சிக்கும் நிலையில் சாண்டர்ஸ் மட்டுமல்லாது, எந்த அமெரிக்க அரசியல்வாதியும் இல்லை. 31 ஆண்டுகளாக, சாண்டர்ஸ் காங்கிரஸில் அமர்ந்துள்ளார். இந்த அமைப்பானது இரக்கமற்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஒப்புதல் மற்றும் நிதியளிப்பது, முழு சமூகங்களையும் அழிப்பதற்கும், மில்லியன் கணக்கான மக்களை கொல்வதற்கும் பொய்யான சாக்குப்போக்கின் கீழ் மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதற்கும் காரணமாகும்.

இந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களுக்கு ஒரு 'முற்போக்கான' உந்துதலை வழங்குவதில் சாண்டர்ஸ் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். இது ஒரு இரத்தக்களரி குற்றத்திலிருந்து அடுத்த குற்றத்திற்கு தடுமாறி செல்லும்போது அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் தவறான நியாயங்களை சட்டபூர்வமாக்குகிறது. வழமையாக இவ்வாறே நிகழ்கின்றது: ஆளும் வர்க்கம் சாண்டர்ஸின் 'ஆம்' என்ற வாக்கு தேவைப்படாதபோது 'இல்லை' என்று வாக்குகளை அளிக்க அனுமதிக்கிறது மற்றும் அதனது ஏகாதிபத்திய கொள்ளைப் போர்களுக்கான சமீபத்திய மனிதாபிமான பொய்களை மக்களுக்கு விற்பதற்கு அவரது ஆதரவைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது தோற்றத்தை 'போர் எதிர்ப்பு' என்று விளம்பரப்படுத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஊக்குவிக்கும் சாண்டர்ஸின் நீண்ட வரலாறு

ஆகஸ்ட் 22, 1990 இல், சாண்டர்ஸ் காங்கிரஸுக்குப் போட்டியிட்டபோது, வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் டேவிட் ப்ரோடர், மத்திய அமெரிக்காவில் அமெரிக்கத் தலையீட்டிற்கு அப்போதைய பேர்லிங்டன் மேயரின் கடந்தகால எதிர்ப்பு இருந்தபோதிலும், வெளியுறவுக் கொள்கை கேள்விகளில் வேட்பாளர் சாண்டர்ஸ் 'முக்கிய அரசியல் நீரோட்டத்தில் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது' என்று எழுதினார்.

சாண்டர்ஸ் 'ஈராக் மீதான தடையை ஆதரிக்கிறார் மற்றும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்படுவதை ஆதரிக்கிறார்,' என்று ப்ரோடர் எழுதுகிறார். 'சர்வாதிகாரி-கொடுங்கோலன்' சதாம் ஹுசைனின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் பின்வாங்க முடியாது' என்று சாண்டர்ஸ் கூறியதை அவர் மேற்கோள் காட்டினார். 1999 ஆம் ஆண்டு போர்-எதிர்ப்பு போராட்டக்காரர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, முன்னாள் சாண்டர்ஸ் உதவியாளர் ஒருவர் சாண்டர்ஸ் தனது ஊழியர்களிடம் 'ஒரு மோசமான போரால் தேர்தலில் தோல்வியை நான் அனுமதிக்கப் போவதில்லை' எனக் கூறியதாக தெரிவித்தது.

பிரதிநிதிகள் சபையில் இருந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரான 178 ஜனநாயகக் கட்சியினருடன் சாண்டர்ஸ் 1991 ஈராக் படையெடுப்பிற்கு எதிராக வாக்களித்தார். எவ்வாறாயினும், பெரும்பான்மையான கட்சி, கிட்டத்தட்ட ஒருமனதாக குடியரசுக் கட்சி சிறுபான்மையினருடன் சேர்ந்து, போர் தீர்மானத்திற்கு போதுமான வாக்குகளை வழங்கி எளிதாக நிறைவேற்றியது. சாண்டர்ஸ் ஈராக் அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஆதரித்தார் மற்றும் போர் முடிவடைந்த பின்னர் அவற்றை நீக்குவதை எதிர்த்தார். Vermont Digger இன் கூற்றுப்படி, இது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஹுசைனின் முயற்சிகளை எளிதாக்கும் என்ற அடிப்படையில் அமெரிக்கா விதித்த தடையை அகற்றுவதை சாண்டர்ஸ் எதிர்த்தார். பின்னர் 1992 இல், பதவியைவிட்டு வெளியேறும் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் பாக்தாத்தில் டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவினார். சாண்டர்ஸ் Burlington Free Press இடம் இத்தாக்குதலை ஆதரிப்பதாகவும், “ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அதன் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுவிடும்” என்றும் தெரிவித்தார்.

ஈராக்கில் கிளின்டன் நிர்வாகத்தின் தொடர்ச்சியான குண்டுவீச்சு பிரச்சாரங்களை சாண்டர்ஸ் ஆதரித்தார். 1996 இல் Rutland Herald இடம் 'இராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் பொறுத்துக்கொள்ளாது என்பதை ஹுசைன் கற்றுக்கொள்ள வேண்டும்.' அமெரிக்காவிற்கு ஒரு மனிதாபிமானக் கடமை இருந்தது, 'ஒரு நிலையற்ற கொடுங்கோலன் தொடர்ந்து அட்டூழியங்களைச் செய்ய பச்சை விளக்கு காட்டி அனுமதிக்கக்கூடாது' என்று சாண்டர்ஸ் கூறினார். அவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம்: 'தற்போதைய நேட்டோ வான்வழித் தாக்குதல்களை நான் தொடர்ந்து ஆதரிக்கிறேன்' எனக் கூறினார்.

Sanders speaking on the war in Serbia in 1999

டவுன் ஹால் நிகழ்வில், முன்னாள் மாணவர் தீவிரவாதியாக இருந்து நேட்டோ குண்டுவீச்சு பிரச்சாரத்தின் முக்கிய ஆதரவாளரான மாறிய ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷரை சாண்டர்ஸ் சாதகமாக மேற்கோள் காட்டினார். நியூஸ்வீக்கில் பிஷ்ஷர் உடனான நேர்காணலில் இருந்து மேற்கோள் காட்டி, சாண்டர்ஸ் இவ்வாறு கூறினார்: “நான் இங்கே நேட்டோ தலைமையகத்தில் இருந்து ஒரு நேர்காணல் கொடுக்கிறேன். நான் அதைப் பற்றி கனவிலும் நினைக்கவில்லை, ஆனால் மிலோசெவிச்சின் கொள்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் முழங்காலிட்டு வணங்க முடியாது. சாண்டர்ஸ் மேற்கோளை முடித்துவிட்டு, 'நான் வரும் இடத்திற்கு மிகவும் நெருக்கமான இடத்திலிருந்து தான் திரு. பிஷ்ஷர் வருகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

2001 இல், சாண்டர்ஸ் ஆப்கானிஸ்தானில் போருக்கு ஆதரவாக வாக்களித்தார். மேலும் 2003 இல் ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக வாக்களித்த போதிலும், காங்கிரஸ் அங்கத்தவர் ஜோன் ஸ்ப்ராட் (D-SC) முன்வைத்த திருத்தத்தை ஆதரித்தார். இது 'தேவைப்பட்டால் பலத்தால்' ஈராக்கிய பேரழிவுகரமான ஆயுதங்களை அகற்றுவதில் ஈடுபடுவதற்கு அமெரிக்க துருப்புக்களை அங்கீகரித்தது.

பெப்ரவரி 17, 2020 அன்று, NBC நியூஸ் 'ஈராக் போருக்கு சாண்டர்ஸின் எதிர்ப்பு அவர் முன்வைப்பதை விட மிகவும் சிக்கலானது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. திருத்தத்தின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி ஸ்ப்ராட்டின் திருத்தமானது 'ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு செய்திக் கருவியாகும். இது சரியான சூழ்நிலைகளில் அவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளித்தனர் என்பதை குறிப்பதை விரும்பியது”. சாண்டர்ஸால் ஆதரிக்கப்பட்ட திருத்தமானது 'தேவைப்பட்டால் ஐ.நா. அனுமதியின்றி செயல்பட புஷ்ஷுக்கு தேர்வை அளித்தது.' இத்திருத்தத்தின் ஒரு ஆதரவாளரான காங்கிரஸ் உறுப்பினர் லொயிட் டோகெட் (D-TX) நாங்கள் ‘சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடு’ என்ற ஆர்ப்பாட்டக்கார்களின் ஒரு கூட்டு அல்ல” என்று கூறினார்.

சாண்டர்ஸ் நான்கு முறை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு நிதியளிக்க வாக்களித்தார். ஹிலாரி கிளிண்டனுடனான 2015 விவாதத்தில், சிரியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். தலையீடு உடனடியாக அசாத் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கக் கூடாது என்று அவர் வாதிட்டார்: “இப்போது ISIS தான் முக்கிய முன்னுரிமை. பின்னர் அசாத்தை ஒழிப்போம். ஜனநாயக சிரியாவை உருவாக்குவோம். ஆனால் ISIS ஐ அழிக்க நாடுகளை ஒன்றிணைப்பதுதான் முதல் பணி” என்றார். 2015 ஆம் ஆண்டில், சாண்டர்ஸ் டிரோன் போரைப் பயன்படுத்துவதற்கான தனது ஆதரவை அறிவித்தார். NBC இன் சக் டோடிடம் அவர் டிரோன்களை: 'அனைத்தையும் இன்னும் பலவற்றையும்' ஆதரிப்பதாகக் கூறினார்

ரஷ்யாவின் எல்லைகள் வரை கிழக்கு நோக்கி விரிவாக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் சாண்டர்ஸ் நேட்டோவிற்கான நிலையான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். 2015 இல், அவர் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய கொள்கை உரையை நிகழ்த்தினார். அதில் அவர் நேட்டோவுக்கான ஆதரவை வலியுறுத்தி மற்றும் அதன் தோற்றம் 'சோவியத் ஆக்கிரமிப்புக்கு' எதிரான ஒரு முற்போக்கான கூட்டணியில் இருப்பதாகக் கூறினார்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சோவியத் ஆக்கிரமிப்பு அச்சத்திற்கு விடையிறுக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பை (NATO) நிறுவின. இதன் பகிரப்பட்ட நலன்கள் மற்றும் இலக்குகள் மற்றும் பொதுவான எதிரிக்கு எதிரான கூட்டுப் பாதுகாப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த இலட்சியங்களை நாம் விரிவுபடுத்த வேண்டும் மற்றும் உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது எனது நம்பிக்கை.

கடந்த வாரம், ரஷ்யாவை அச்சுறுத்துவதற்காக கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆயிரக்கணக்கான படையினரை அனுப்பும் பைடெனின் முடிவிற்கு சாண்டர்ஸ் தனது ஆதரவை அறிவித்து NPR இடம் பின்வருமாறு கூறினார்: 'இது நாங்கள் நேட்டோவுடன் நிற்கிறோம் என்பதற்கான சமிக்ஞை என்று நான் நினைக்கிறேன்'.

ஏகாதிபத்திய போருக்கான 'முற்போக்கான' போலிக்காரணங்களை உருவாக்குதல்

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலுக்கு தனது தற்போதைய ஆதரவை 'முற்போக்கானது' என்று முன்வைக்கும் சாண்டர்ஸின் முயற்சிகள் அபத்தமானது. அவரது அறிக்கையில், கிழக்கு ஐரோப்பாவில் பதட்டங்களைத் தூண்டியதற்கு 'பில்லியன் கணக்கான டாலர்களை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும்' 'புட்டின் மற்றும் அவரது தன்னலக்குழுக்கள்' மீது அவர் குற்றம் சாட்டினார். பிற்போக்குத்தனமான, முதலாளித்துவ புட்டின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போர் ஆபத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை என்றாலும், முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் வார்சோ ஒப்பந்தத்தின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட ஒரு டஜன் புதிய நாடுகளை நேட்டோவில் அனுமதிப்பதை அமெரிக்காவே வரவேற்றுள்ளது. மற்றும் இப்போது உக்ரேனின் நுழைவுக்கான 'கதவு திறந்து' வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது ரஷ்யாவின் எல்லைகளை கூட்டணி ஆக்கிரமிக்காது என்ற கடந்தகால உறுதிமொழிகளை மீறுகிறது.

சாண்டர்ஸ் ரஷ்யாவில் மட்டுமே உள்ள தன்னலக்குழுக்களை கண்டனம் செய்வதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமெரிக்க தன்னலக்குழுக்கள் ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும், அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் சார்பாக அதன் வளங்கள் மற்றும் மலிவு உழைப்பைப் பெறுவதற்கும் தற்போதைய நெருக்கடியைத் தூண்டிவிடுகின்றன என்ற உண்மையைப் பற்றி அவர் எதுவும் கூறாமல் இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள செல்வச் சமத்துவமின்மைக்கு சாண்டர்ஸ் அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் பைடெனின் பொருளாதாரத் தடைகளை ஆதரித்தும் ரஷ்யாவைக் கண்டித்தும் விடுக்கப்பட்ட அவரது அறிக்கை போராலும் மற்றும் உலக மேலாதிக்கத்தின் மூலம் தம்மை செழுமைப்படுத்திக்கொள்ளும் அமெரிக்க தன்னலக்குழுக்களின் முயற்சிகளை மட்டுமே மேம்படுத்துகிறது.

'இந்த மோதலில் இருந்து வெளியேறும் அகதிகளை உக்ரேனின் அண்டை நாடுகளில் பராமரிப்பதற்கு உதவுங்கள்' என்ற சாண்டர்ஸின் மனிதாபிமான வேண்டுகோளைப் பொறுத்தவரை, அமெரிக்க ஏகாதிபத்தியமும் பைடென் நிர்வாகமும் தான் மோதலைத் தூண்டுவதற்கும், பாரிய மரணம் மற்றும் இடப்பெயர்ச்சியை உருவாக்குவதற்கான முதன்மைப் பொறுப்பாளிகளாக இல்லாதிருந்திருந்தால் இது மிகவும் உண்மையானதாகத் தோன்றலாம்.

மேலும், சாண்டர்ஸ் அகதிகளுக்கு உதவும் என்று நம்பும் 'அண்டை நாடுகளில்' போலந்தும் அடங்கும். இது சமீபத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான போர்களில் இருந்து வெளியேறி வந்த அகதிகளைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பெலாரஸுடனான அதன் கிழக்கு எல்லையில் ஆயிரக்கணக்கான படையினரை நிலைநிறுத்தியது. அமெரிக்கா தனது சொந்த தெற்கு எல்லையில் 'அகதிகளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை'. அங்கு புகலிட உரிமை கணிசமாக இல்லாதொழிகக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அகதிகள் மிருகத்தனமாக மற்றும் குதிரை எல்லைக் காவலர்களால் சவுக்கால் அடிக்கப்படுகிறார்கள். பேரினவாத அடிப்படையில் அமெரிக்காவிற்குள் குடியேற்றுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதை சாண்டர்ஸ் எதிர்க்கிறார். ஏனெனில் அவர்கள் தொழில்களுக்காக அமெரிக்க தொழிலாளர்களுடன் போட்டியிடுவார்கள் என்கிறார்.

அதேபோல், பொருளாதாரத் தடைகள் 'புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுதல்' மற்றும் 'சர்வாதிகார பெட்ரோலிய நாடுகளுக்குத் தேவைப்படும் வருவாயை மறுக்கின்றன' என்ற சாண்டர்ஸின் வாதங்கள் அப்பட்டமாக அபத்தமானது. நடைமுறை அடிப்படையில், பொருளாதாரத் தடைகள் என்பது ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கான ரஷ்ய எரிவாயு இறக்குமதிகளை வெட்டுவதைக் குறிக்கிறது. இதனை அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ள கட்டார் போன்ற பிற்போக்குத்தனமான பாரசீக வளைகுடா ஷேக்டாம்களின் உற்பத்தி அதிகரிப்பதால் பிரதியீடு செய்யப்படலாம். இந்த நெருக்கடியானது அணுவாயுத பரிமாற்றத்தைத் தூண்டும் பட்சத்தில் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழல் கூட எதுவும் இருக்காது.

சாண்டர்ஸின் பங்கு அம்பலமானது

அமெரிக்க மக்களிடையே போருக்கு ஆழ்ந்த எதிர்ப்பை ஆளும் வர்க்கம் அறிந்திருக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட AP கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய மோதலில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று 26 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே நம்புகின்றனர்.

அமெரிக்க சமூகம் கடந்த 30 ஆண்டுகால போர்களால் பாரியளவில் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. அவை வரவு-செலவுத் திட்டங்களை வற்றச்செய்து, அரசியல் கலாச்சாரத்தை விஷமாக்கியுள்ளன. மேலும் முழு அரசியல்-பெருநிறுவன-ஊடக-இராணுவ ஸ்தாபனத்தையும் பொய்யர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகள் என்று அம்பலப்படுத்தியுள்ளன. பணவீக்கம் அதிகரித்து வருகிறது, மேலும் ஆளும் வர்க்கம் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து பெருநிறுவன இலாபத்திற்காக தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை தியாகம் செய்வதால் ஒவ்வொரு நாளும் 2,000 பேர் கோவிட்-19 நோயால் இறக்கின்றனர்.

ஆளும் வர்க்கம், உலக மேலாதிக்க நிலை வீழ்ச்சியடைந்து வருவதிலிருந்து மீண்டு கொள்வதற்கும் உள்நாட்டில் உள்ள மரணம், வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றிலிருந்து தொழிலாள வர்க்கத்தை, வெளியில் ஒரு வெளிநாட்டு எதிரியை நோக்கி திசைதிருப்புவதிலும் தீவிரமாக உள்ளது. அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும், பைடெனின் போர் உந்துதலை நியாயமானதாக்குவதில் சாண்டர்ஸ் வெற்றிபெற மாட்டார். இந்த செயல்பாட்டில் அவர் தன்னை மட்டுமே அம்பலப்படுத்திக்கொள்வார்.

Loading