ஓமிக்ரோன் பிறழ்வு ஹாங்காங்கில் பேரழிவை ஏற்படுத்தும் நிலையில், உலகளவில் கோவிட் இறப்புக்கள் 6 மில்லியனை எட்டியுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாரத்தில், அதாவது மார்ச் 11, 2020 அன்று, உலக சுகாதார நிறுவனம் SARS-CoV-2 வெடிப்பை உலகை அச்சுறுத்தும் ஒரு பெருந்தொற்று என அறிவித்தது. அந்த நேரத்தில், WHO பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “நோய்தொற்றின் பரவல் மற்றும் தீவிரத்தன்மையின் எச்சரிக்கையூட்டும் மட்டங்கள், மற்றும் அறிகுறியற்ற தன்மையின் எச்சரிக்கையூட்டும் மட்டங்கள் இரண்டையும் கண்டு நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்” என எச்சரித்தார்.

அந்த நாளில் 100,000 க்கும் சற்று குறைவாக நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன என்பதுடன், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,000 க்கு சற்று குறைவாக இருந்தது, ஆனால் புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் நாட்டுக்கு நாடு பதிவான நிலையில், சீனாவிற்கு வெளியே நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வந்தது.

இப்போது மொத்த கோவிட் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 445 மில்லியனை எட்டியுள்ளது, மேலும் கோவிட் இறப்பு எண்ணிக்கை 6 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. சீனாவில் அதன் வெற்றிகரமான பூஜ்ஜிய கோவிட் கொள்கையினால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தடுக்கப்பட்ட இந்த பெருந்தொற்று, இப்போது அந்நாட்டின் குறைந்தபட்சம் ஒரு பகுதியில், அதாவது தன்னாட்சி வர்த்தக மையமான ஹாங்காங்கில் மீண்டும் வெடித்துப் பரவி வருகிறது.

இறப்புக்கள் மற்றும் நோய்தொற்றுக்களின் சமீபத்திய பயங்கரமான புள்ளிவிபரங்கள் கூட உத்தியோகபூர்வமான மொத்த பதிவுகள் மட்டுமே, ஏராளமான நோய்தொற்றுக்கள், அதிலும் குறிப்பாக வறிய நாடுகளின் நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளன.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) உலகளாவிய கோவிட் நோய்தொற்றுக்களின் மதிப்பீடுகளின் படி, ஓமிக்ரோன் மாறுபாடுகளின் தீவிர தொற்றும்தன்மை காரணமாக 2022 ஆம் ஆண்டில் மட்டும் பரவியுள்ள நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஏற்கனவே 2.5 பில்லியனைத் தாண்டியுள்ளது. (எக்னாமிஸ்ட் நாளிதழின் கருத்துப்படி) உலகளாவிய அதிகப்படியான இறப்பு எண்ணிக்கை பரவலாக குறிப்பிடப்பட்ட மதிப்பீட்டின்படி 19.9 மில்லியன் ஆகும், அல்லது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட 3.3 மடங்கு அதிகமாகும்.

அதிகப்படியான இறப்புக்கள் அனைத்தும் SARS-CoV-2 ஆல் நேரடியாக ஏற்படுவதில்லை, மாறாக அந்த கொடிய தொற்றுநோயின் தாக்கத்தின் காரணமாகவும், மேலும் அதன் தொடர் தாக்குதலை முற்றிலும் அகற்றுவதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, உலக மக்களை அதைத் தாங்கிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்திய உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளின் விளைவாகவும் தான் அவை நடந்துள்ளன.

Our World in Data தரவு தளத்தின் தலைவர் எட்வார்ட் மாத்தியூ (Edouard Mathieu), “உறுதிப்படுத்தப்பட்ட இறப்புக்கள் கோவிட் நோயால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையில் ஒரு பின்னப் பகுதியை மட்டுமே குறிக்கிறது, ஏனென்றால் பெரும்பாலும் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளும் மற்றும் மரணத்திற்கான காரணத்தைக் கூறுவதில் உள்ள சவால்களும் தான் அதற்கு காரணம். சில நாடுகளில், அதிலும் பெரும்பாலும் பணக்கார நாடுகளில், அந்த பின்னப் பகுதி இன்னும் அதிகமாக குறைத்துக் காட்டப்படுகிறது, மேலும் உத்தியோகபூர்வ எண்ணிக்கை மிகத் துல்லியமானதாக அங்கு கருதப்படலாம், ஆனால் மற்ற அமைப்புகளில் இது மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது” என்று அசோசியேட்டட் பிரஸ் இடம் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, ‘வைரஸூடன் வாழும்’ கொள்கைகள் முகக்கவச பயன்பாட்டை நீக்கியுள்ளன, தனிமைப்படுத்தல்கள் மற்றும் பூட்டுதல்கள் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன, மேலும் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளதுடன், உலகளவில் அனைத்து வணிகங்களையும் மீளத்திறந்துள்ளன. செல்போன் தரவு சுட்டிக்காட்டியபடி, மக்கள்தொகை இயக்கம் தொற்றுநோய்க்கு முன்னைய அளவை விட அதிகமாக உள்ளது. வைரஸூக்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் இது தொடர்பான பிரச்சாரம், ஓமிக்ரோன் மாறுபாடு ‘இலேசானது’ என்றும், ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய எதிர்காலத்தில் நோயின் கொடிய விளைவுகள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறும் என்பதால் கொரோனா வைரஸ் ‘நிரந்தர’ நோயாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

கடந்த சில மாதங்களாக நீக்குதல் மூலோபாயத்தை பின்பற்றிய பல நாடுகளும் பிராந்தியங்களும் தங்கள் மக்களுக்கு குறிப்பிடத்தக்க தீங்கை விளைவிக்கும் வகையில் இத்தகைய பொது சுகாதார நடவடிக்கைகளை கைவிட்டுள்ளன. ஹாங்காங்கின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பதுடன், சில மாதங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் முதன்முதலில் கண்டறியப்பட்டதைப் போல, இதுவும் பல நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்துக்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கலாம்.

படம் 1, அமெரிக்கா மற்றும் ஹாங்காங் இடையே ஒரு மில்லியன் மக்களில் பதிவான புதிய உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஒப்பீடு. ஆதாரம் Our World in Data.

சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங் 7.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்டதாகும். அது அதன் பூஜ்ஜிய கோவிட் கொள்கையில் விடாப்பிடியாக உள்ளது, ஆனால் உள்ளூர் அரசாங்கத்தின் முயற்சிகள், ஜனவரியில் வெடித்து, விரைந்து பரவத் தொடங்கியதான ஓமிக்ரோனின் மிகுந்த தொற்றும்தன்மை கொண்ட BA.2 துணை மாறுபாட்டை எதிர்கொள்வதில் பலவீனமடையத் தொடங்கின. விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் சலூன்கள் மூடப்பட்டிருந்த அதேவேளை, சந்திர புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான மக்கள் மோங் கோக் மலர் சந்தையிலும் மற்றும் கோவில்களிலும் குவிந்தனர்.

South China Morning Post இல் பிரசுரமான ஒரு கருத்துப் பகுதியில், ரெஜினா Ip, “மக்கள் அடர்த்தி மிகுந்த பொது குடியிருப்புப் பகுதிகளில் பெரியளவில் நோய்தொற்றுக்கள் வெடித்தது பெரிதும் ஆச்சரியப்படத்தக்கதல்ல. பேரழிவுக்கு சாத்தியமுள்ள பகுதிகளாக நீண்டகாலமாக முன்னிலைப்படுத்தப்பட்ட வயோதிபர்களுக்கான நெரிசலான குடியிருப்புக்களில் கொடிய வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தணிக்க சிறியளவிலான நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

பெப்ரவரி 28 அன்று ஹாங்காங் வந்தடைந்த தேசிய சுகாதார ஆணையத்தின் கோவிட் நடவடிக்கைகளுக்கான நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் லியாங் வன்னியன் (Dr. Liang Wannian), “‘dynamic clearing’ இன் குறிக்கோள் பூஜ்ஜிய தொற்று கொள்கையை கண்மூடித்தனமாக பின்பற்றுவது அல்ல, மாறாக தொற்று, கடுமையான நோய்த்தன்மை மற்றும் இறப்பு ஆகியவை ஏற்படுவதைக் குறைக்க நோய் பரவல் சங்கிலியை முடிந்தளவிற்கு விரைந்து துண்டிக்க வேண்டும்” என்று சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பெப்ரவரி முதல் வாரம் வரை, புதிய கோவிட் நோய்தொற்றுக்கள் நாளாந்தம் சுமார் 700 ஆக பெயரளவில் இருந்தன, ஆனால் அவை வெடித்துப் பரவி இப்போது நாளொன்றுக்கு 50,000 க்கு அதிகமாகிவிட்டது. புத்தாண்டின் தொடக்கத்தில் மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 12,650 ஆக இருந்தது, இப்போது 440,000 ஆக பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் 90 சதவீத நோய்தொற்றுக்கள் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் நிகழ்ந்துள்ளன.

அதே மூன்று வாரங்களில், இறப்பு எண்ணிக்கை 219 அளவிற்கு குறைவாக இருந்தது 1,774 ஆக உயர்ந்தது, அதாவது மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு நிகழ்ந்த இறப்புக்கள் தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த ஒட்டுமொத்த இறப்புகளுக்கு சமமாக இருந்தது. ஹாங்காங்கில் இருந்து வரிசைப்படுத்தப்பட்ட அனைத்து SARS-CoV-2 வைரஸ்களிலும் BA.2 துணை மாறுபாட்டின் ஸ்பைக் புரதம் நூறு சதவீதம் I1221T பிறழ்வை கொண்டுள்ளமை, இந்த பிறழ்வு வைரஸுக்கு ஒரு முக்கியமான நன்மையை வழங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது.

தனிநபர் அடிப்படையில் கணக்கிடப்படும் இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் கவலையளிக்கிறது, இது ஒரு புதிய பிறழ்வுடன் தொடர்புபட்டுள்ளது. படம் 2 இல் காட்டப்பட்டுள்ளபடி, ஹாங்காங்கில் இப்போது காணப்படும் தனிநபர் விகிதம், தொற்றுநோய் காலம் முழுவதும் அமெரிக்காவில் காணப்பட்டதை விட அதிகமாக உள்ளது, இது ஓமிக்ரோன் மாறுபாடுகளின் கொடிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அதாவது, ஹாங்காங்கில் பெரும்பாலான வயோதிகர்களுக்கு குறைவான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. அரசாங்கத்தின் தடுப்பூசி பிரச்சாரங்கள் மீதான அவநம்பிக்கையாலும், மற்றும் தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களாலும் இந்த குழுவினர் இன்னும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகையினராக உள்ளனர், எனவே இது அதிக இறப்பு விகிதங்களை உருவாக்கும் காரணியாக உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிக்கைகள் வெளி வருகின்றன.

படம் 2, அமெரிக்கா மற்றும் ஹாங்காங் இடையே ஒரு மில்லியன் மக்களில் பதிவான உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 இறப்புக்களின் ஒப்பீடு. ஆதாரம் Our World in Data.

ஹாங்காங்கின் மருத்துவமனைகளிலும் பிணவறைகளிலும் சடலங்கள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங் மருத்துவமனை ஆணையத்தின் மூத்த நிர்வாகி, லாவ் கா-ஹின் (Lau Ka-hin), “கோவிட் தொடர்புபட்ட இறப்புக்கள் அதிகரித்துள்ளன. எங்களால் சடலங்களை உடனடியாக பிணவறைகளுக்கு மாற்ற முடியவில்லை; எனவே, விபத்து மற்றும் அவசர சிகிச்சை அறைகளில் சடலங்கள் [அடுக்கி வைக்கப்பட்டு] இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இறந்த நோயாளிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைக்காக பொது பிணவறைகளுக்கு மாற்றப்பட வேண்டும்” என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

South China Morning Post இன் கூற்றுப்படி, இந்த வாரம் மருத்துவமனை படுக்கைகளில் பாதியை கோவிட்-19 நோயாளிகளுக்கு மீண்டும் ஒதுக்க சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மருத்துவமனை ஆணையத்தின் தலைவர் ஃபேன் ஹங்-லிங் (Fan Hung-ling), “பொது மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஒதுக்குவது தான் உண்மையான யோசனையாக இருந்தது, ஆனால் புதிய நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், டாக்டர். லியாங் தலைமையிலான நிபுணர் குழு அதை 50 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. Tin Shui Wai மற்றும் North Lantau ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் 500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு ஏற்கனவே 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது, மேலும் பல மருத்துவமனைகள் அதைச் செய்ய தயாராகி வருகின்றன” என்று போஸ்ட் க்கு தெரிவித்தார்.

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையானது கோவிட் நோயாளிகளை பராமரிப்பதில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நோயாளிகளின் நெரிசல் காரணமாக, அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அநாமதேய மருத்துவர்களும் செவிலியர்களும், இத்தாலிய மற்றும் நியூயோர்க் நகர மருத்துவமனைகளின் இருண்ட நேரத்தை நினைவூட்டும் வகையில், ஒரு இருண்ட படத்தை வரைந்துள்ளனர்.

ஒருமுறை செவிலியர் கூறினார், “சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தீர்ந்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு புத்துயிரூட்ட வேண்டியிருந்தது. இதை அலட்சியம் என்றே நான் நினைக்கிறேன், ஆனால் இப்போது நாங்கள் ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறோம், மேலும் எங்களுக்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் தான் உள்ளன.”

தொற்றுநோய் முடிவுக்கு வருவதாக பெருநிறுவன ஊடகங்களின் மெத்தனப் போக்கு பிரச்சாரம் ஒருபுறமிருக்க, ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மனிதகுலம் எதிர்கொள்ளும் வைரஸின் தற்போதைய கடுமையை நிரூபிக்கிறது. குறிப்பாக, சமீபத்திய பிறழ்வுகளின் தன்மையும், மற்றும் சில நாட்களில் உலகம் முழுவதும் பரவக்கூடிய வகையில் அவை ஏற்படுத்தும் தாக்கமும் தான் கவலையளிக்கின்றன. அடுத்தது யார்? என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

Loading