ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடு எப்போதும் மிகவும் ஆபத்தான கோவிட் மாறுபாடாகும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடு பற்றிய சமீபத்திய ஆய்வுகள், இது BA.1 துணை மாறுபாட்டை விட மிகுந்த தொற்றும்தன்மையுள்ளது மற்றும் மிகவும் ஆபத்தானது, மேலும், இது நாடு விட்டு நாடு முந்தைய மாறுபாட்டை விட விரைந்து இடம் மாறுகிறது என்று கூறுகின்றன. இந்த கண்டுபிடிப்புக்கள், தொற்றுநோய் முடிவுக்கு வருகிறது, ஓமிக்ரோன் ‘இலேசானது’ மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் தளர்த்தப்படலாம் அல்லது முற்றிலும் அகற்றப்படலாம் என்பதான உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் கூற்றுக்களுக்கு நேரடியாக முரண்படுகின்றன.

மார்ச் 7, 2022, திங்கட்கிழமை, நியூயோர்க்கில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் வருகின்றனர். (AP Photo/Seth Wenig)

இந்த கண்டுபிடிப்புக்கள், உலகளவில் கோவிட் நோய்தொற்றுக்களின் சமீபத்திய வீழ்ச்சி குறைந்துள்ள நிலையில் மற்றும் பீடபூமியைத் தாக்கியதாகத் தெரியும் நிலையில் வெளி வருகின்றன. இதுபோன்ற அனைத்து முந்தைய பீடபூமிகளும் ஒரு புதிய மற்றும் மிகவும் பரவலான மற்றும் கொடிய எழுச்சியை எதிர்கொண்டன, அது பொதுவாக ஆல்பா (பிரிட்டனில் தோன்றியது), டெல்டா (இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது) மற்றும் ஓமிக்ரோன் (தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது) போன்ற புதிய மாறுபாடுகளுடன் தொடர்புடையது. இப்போது, BA.2 இன் பரவலால் ஒரு புதிய எழுச்சி தீவிரமாகத் தூண்டப்படலாம்.

பைடென் நிர்வாகமும் பெருநிறுவன ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு, தொற்றுநோய் பற்றிய எந்த விவாதத்தையும் கிட்டத்தட்ட கைவிட்டன, மாறாக உக்ரேன் போர், மற்றும் இந்த நெருக்கடியில் தலையிட்டு ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல தயாராகும் நேட்டோ நாடுகளின் வெறித்தனமான முயற்சிகள் மீது தங்கள் கவனத்தை செலுத்துகின்றன. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,500 பேர் இறக்கும் சூழலில், கோவிட்-19 தொடர்புபட்ட தலைப்புகள் கிட்டத்தட்ட செய்திகளிலிருந்து காணாமற் போய்விட்டன. தடுப்பூசி போட தகுதியான மக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தும் கூட, 61,000 மொத்த கோவிட் இறப்புகளுடன் பெப்ரவரி மாதம் நிறைவடைந்தது, மேலும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்கள் தொற்றுநோயின் நான்காவது மற்றும் ஐந்தாவது மோசமான மாதங்களாக இருந்தன.

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன, இந்த ஆய்வு, ஓமிக்ரோனின் BA.1 மற்றும் BA.2 துணை மாறுபாடுகளை ஒப்பீடு செய்து, BA.2 முழுமையான புதிய மாறுபாடாக வகைப்படுத்தப்பட வேண்டியது மற்றும் கோவிட்-19 நோய்தொற்றுக்களில் மிகவும் ஆபத்தானது என்பதால், அது மிகவும் வித்தியாசமானது, இப்போது கோவிட் நோய்தொற்றின் மூன்றாம் ஆண்டில் அது வெளிவந்துள்ளது என்று முடிக்கிறது.

“எங்களது கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில், BA.2 ஒரு தனித்துவமான கவலைக்குரிய மாறுபாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும், மேலும் இந்த SARS-CoV-2 மாறுபாடு ஆழமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்,” என்று முன்னணி விஞ்ஞானி கெய் சாடோ கூறினார்.

டோக்கியோ ஆய்வு பகிரங்கப்படுத்தப்பட்டு, மேலும் இன்று உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) பிரசுரமானதன் பின்னர் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், ‘வைரஸூடன் வாழும்’ கொள்கைக்குப் பதிலாக, கோவிட் ஐ ஒழிக்கும் கொள்கையை ஆதரிக்கும் உலக சுகாதார வலையமைப்பின் இணை நிறுவனரான விஞ்ஞானி யானீர் பார்-யாம், கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை விவரித்தார்.

இந்த ஆய்வில், BA.1 ஐ விட BA.2 அதிகம் பரவக்கூடியது மட்டுமல்ல, அதிக தடுப்பூசி ஏய்ப்புத் தன்மையையும் மற்றும் BA.1 ஆல் ஏற்பட்ட முந்தைய தொற்றுக்கு அதிக எதிர்ப்புத் திறனையும் அது கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. “நீங்கள் முன்பே BA.1 ஆல் பாதிக்கப்பட்டிருந்தால், BA.2 க்கான பாதுகாப்பு நிலை BA.1 ஐப் போல இருக்காது. BA.1 பாதிப்புக்கு பிந்தைய எதிர்ப்பு சக்தியை BA.2 கடந்து மற்றொரு நோய்தொற்றின் [அதிக ஆபத்துக்கு] அது வழிவகுக்கும்,” என்று நம்மிடம் கூறினார்.

டோக்கியோ ஆய்வில், BA.2 ஆனது BA.1 ஐ விட விலங்குகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதும் கண்டறியப்பட்டது, காரணம் இது அசல் ஓமிக்ரோன் துணை மாறுபாட்டை விட தொற்றுநோயை நுரையீரலுக்குள் மிக ஆழமாக கொண்டு சென்றது. பார்-யாம் WSWS க்கு இவ்வாறு தெரிவித்தார்: “இப்போது, வெளிப்படையாக இதுபற்றி நாம் இன்னும் மக்களில் பார்க்க வேண்டிய ஒன்றாகும், ஆனால் வெள்ளெலிகளில் இதுதான் நடக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால், அது பரவாயில்லை என்று கருதுவதை நீங்கள் நிறுத்திவிட்டு, பின்னோக்கிச் சென்று இப்போது என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.”

BA.2 ஐ ஓமிக்ரோனின் துணை மாறுபாடு என விவரிப்பது தவறாக இருக்கலாம் என்று பார்-யாம் கூறினார். “BA.2 ஆனது BA.1 இல் இருந்து வேறுபட்டது, தற்போதைய எண்ணிடல் திட்டத்தின் படி அதன் சொந்த வகைக்கு என சொந்த கிரேக்க எழுத்து வழங்கப்பட வேண்டும். ஆனால் இது அரசியல் ரீதியாக அவ்வளவு சௌகரியமானதல்ல, ஏனென்றால் மக்களுக்கு இது முடிந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள் என்ற நிலையில், ஒரு புதிய கிரேக்க எழுத்து வழங்கப்பட வேண்டும் என்பது என்ன நடக்கிறது என்று நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கேள்விகளை எழுப்பும்.”

BA.1 இன் இடத்தை BA.2 பிடிக்கிறது என்று மற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கோவிட் இன் புதிய திரிபு இப்போது அமெரிக்காவில் 8 முதல் 10 சதவீத மரபணு மாதிரிகளில் காணப்படுகிறது, இங்கு டிசம்பர் தொடக்கத்தில் முதல் ஓமிக்ரோன் மாறுபாடு வெளிப்பட்டது.

மேலும், மற்ற சமீபத்திய ஆய்வுகள், (டென்மார்க்கில், BA.2 ஆதிக்க வகையாக உள்ள நிலையில்) 50 சதவீத பரவும் காரணிகளின் அடிப்படையில் BA.1 ஐ விட BA.2 மிகுந்த தொற்றும்தன்மையுள்ளது என்று கூறுகின்றன, அதேவேளை டோக்கியோ ஆய்வு, தொற்றும்தன்மையில் 40 சதவீத அதிகரிப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திற்கான கோவிட்-19 குறித்த தொழில்நுட்ப முன்னணி தலைவர் மரியா வான் கெர்கோவ், “BA.1 ஐ விட கூடுதல் வளர்ச்சி சாதகத்தை BA.2 கொண்டுள்ளது” எனக் கூறினார், மேலும், அதன்படி, “நாம் அதன் பரவலைக் குறைக்க வேண்டும். ஏனென்றால், நாம் அதைச் செய்யாவிட்டால், நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள், மற்றும் இறப்புக்களை மட்டும் உச்சபட்சமாக எதிர்கொள்ள மாட்டோம், மாறாக நெடுங்கோவிட் நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதையும், புதிய மாறுபாடுகள் தோன்றுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் கூட நாம் எதிர்கொள்வோம்” என்றும் கூறினார்.

மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, BA.2 பற்றிய பல கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து, “ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடு, நோய் எதிர்ப்பி (antibody) பாதுகாப்புடன் அல்லது பாதுகாப்பு இல்லாமல் மக்களை பாதிப்படையச் செய்வதன் மூலம் நடைமுறையில் உள்ள மற்றொரு மாறுபாடாக அது உருவெடுக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம்” என்று முடிக்கிறது.

குறிப்பாக, BA.2 ஆனது, BA.1 ஐ விட 30 சதவீதமும், மற்றும் டெல்டா மாறுபாட்டை விட 17 மடங்கும் அதிக தடுப்பூசி-எதிர்ப்புத் திறன் கொண்டதாகும். மேலும், இது, BA.1 ஐ விட கணிசமாக அதிகமான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, அதாவது, உடலில் உள்ள உயிரணுக்களுடன் வைரஸை இணைத்து அவற்றை ஆக்கிரமிப்பதற்கான முக்கிய பகுதியான ஏற்பி பிணைப்பு களத்தில் நான்கு தனித்துவமான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதும் இதில் அடங்கும்.

மாசசூசெட்ஸ் ஆய்வு, “தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடையே SARS-CoV-2 நோய்தொற்றின் ஆபத்து மாறுபாடு சார்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன, அதாவது இது SARS-CoV-2 க்கு எதிரான பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியானது மாறுபாடுகளைப் பொறுத்து வேறுபடலாம் என பரிந்துரைக்கிறது” எனக் கண்டறிந்துள்ளது. ஓமிக்ரோனின் இரண்டு துணை மாறுபாடுகளுக்கு இது பொருந்தும் என்பதை வேறொரு ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது: BA.1 ஆல் ஏற்பட்ட தொற்று, BA.2 மாறுபாட்டின் அடுத்தடுத்த தொற்றுநோயில் இருந்து பாதுகாக்காது.

Nature இதழ் திங்களன்று 50 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வை வெளியிட்டது, அவர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு முன்னும் பின்னும் மூளை ஸ்கேன் செய்து கொண்டவர்கள். இந்த ஆய்வு, முதன்மையாக வாசனை உணர்வுடன் தொடர்புபட்ட பகுதிகளிலும், அத்துடன் மூளை செயல்பாடுகளுடன் தொடர்புபட்ட சில பகுதிகளிலும் திசுக்கள் சேதமடைந்திருப்பதை கண்டறிந்தது.

ஏனைய அறிக்கைகள் தொற்றுநோயின் தற்போதைய புள்ளிவிபரங்களை ஆவணப்படுத்தியுள்ளன. மிச்சிகன் மருத்துவத்தின் ஆரோக்கியமான முதுமை பற்றிய தேசிய கருத்துக்கணிப்பின்படி, வயோதிபர்கள், தொற்றுநோய் தொடர்பான காரணங்களுக்காக, பரிசோதனைகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள், அத்துடன் வருடாந்திர பரிசோதனைகள் உட்பட, அவர்களின் உடல்நல பாதுகாப்பிற்கான மருத்துவ முன்பதிவுகளில் 30 சதவீதத்தை ஒத்திவைத்தனர் அல்லது இரத்து செய்தனர். தடுப்பூசி பெறாதவர்களை விட தடுப்பூசி பெற்றவர்கள் தான் பெரும்பாலும் இரத்து செய்தனர்.

வாஷிங்டன் போஸ்டில் திங்களன்று வெளியான ஒரு அறிக்கை, தொற்றுநோய் மனநலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டியது, தொலைதூரக் கற்றல் குழந்தைகளுக்கு மனநோயை ஏற்படுத்துகிறது என்பது போலிக் கூற்று அல்ல, உண்மையில் மனநலப் பாதுகாப்புக்கான வளங்களின் பற்றாக்குறை உள்ள சூழலில், மக்களிடையே நிகழ்ந்த பாரிய மரணங்கள் மற்றும் பாதிப்புக்களின் உண்மையான விளைவுகளால் தான் குழந்தைகளுக்கு மனநோய் ஏற்படுகிறது.

போஸ்ட் இவ்வாறு குறிப்பிட்டது: “மத்திய அரசாங்கத்தின் மனநலம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்புபட்ட உதவி இணைப்பிற்கு 2020 இல் மட்டும் 833,598 அழைப்புகள் வந்துள்ளன, இது 2019 ஐ விட, அதாவது தொற்றுநோய்க்கு முன்னைய ஆண்டை விட, 27 சதவீதம் அதிகமாகும். 2021 இல், இந்த எண்ணிக்கை மீண்டும் 1.02 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது.”

ஆலோசனைகள் மற்றும் பிற சேவைகளின் தேவையிருந்தும் அவற்றை அணுக முடியாமல் காத்திருக்கும் மக்களின் தொடர்ச்சியான வேதனையளிக்கும் நேர்காணல்களைத் தவிர, குழந்தை மருத்துவப் பராமரிப்பு சேவைகளுக்கான மிக நீண்ட காத்திருப்புப் பட்டியல் பற்றி அந்தக் கட்டுரை குறிப்பிட்டது – உதாரணமாக பாஸ்டன் மருத்துவ மையத்தில் 10 மாதங்களாக காத்திருப்பவர்களின் பட்டியலைக் குறிப்பிடலாம். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனநலனுக்கான அமெரிக்க கல்விச்சாலையின் (American Academy of Child and Adolescent Psychiatry) கூற்றுப்படி, அமெரிக்காவில் 15 மில்லியன் இளம் பருவத்தினருக்கு சேவை செய்ய 8,300 குழந்தை மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

கோவிட்-19 ஆல் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் மோசமடைந்து வரும் ஆபத்தான நிலைமைகள் குறித்த விஞ்ஞான ஆதாரங்களின் கடும் குறைபாடு, தொற்றுநோய் முடிவுக்கு வருவதாகவும், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களின் அபாயத்தை தடுப்பூசி திறம்பட முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் கூறி, (சீனாவைத் தவிர) வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் பெருமளவில் கைவிட்டதான பெரும்பாலான முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிரானது.

இந்த பரப்புரைப் பிரச்சாரத்தின் நோக்கம், விஞ்ஞானத்தையோ அல்லது பொது சுகாதாரத்தையோ அடிப்படையாக கொண்டிருக்கவில்லை, மாறாக பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்காக இலாபத்தை பெருக்கும் வேலைகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபடக் கோரும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தேவைகளுக்காக மக்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வைக்கும், மீண்டும் பள்ளிக்குத் திரும்ப வைக்கும் கொள்கையை அமல்படுத்துவதாகும்.

Loading