ரஷ்யாவின் எல்லைகளுக்கு அமெரிக்கா அதிக படைகளை அனுப்புவதுடன், விமான எதிர்ப்பு பொறிமுறைகளையும் அனுப்ப முயல்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் நேரடி இராணுவத் தலையீட்டிற்கு அமெரிக்க ஊடகங்களில் பெருகிவரும் கோரிக்கைகளுக்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பாவிற்கு கூடுதலாக 500 துருப்புக்களை அனுப்புமாறு பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின் உத்தரவிட்டுள்ளார்.

திங்களன்று பென்டகனால் பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த அறிவிப்பு, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளுக்கு அனுப்பப்பட்ட மொத்த அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை 14,500 ஆக்குகின்றது. இது ரஷ்யாவின் எல்லையில் உள்ள எஸ்தோனியா மற்றும் லாத்வியாவிலிருந்து ருமேனியா வழியாக தெற்கு ஐரோப்பா வரை பரவியுள்ளது.

ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி, 'தேவைப்பட்டால் நேட்டோ வான்வெளியைப் பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சிகளுக்கு இந்த நடவடிக்கை ஆதரவாக உள்ளது' என்று கூறினார்.

2022.மார்ச் 6, 2022, ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் வில்னியஸ், லித்துவேனியாவிற்கு வடக்கே சுமார் 60 கிமீ (38 மைல்கள்) தொலைவில் உள்ள பப்ரேடில் உள்ள பயிற்சித் தளத்தில், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி அமெரிக்க இராணுவத்தினரை உற்சாகப்படுத்துகின்றார் (AP Photo/Mindaugas Kulbis)

CNN இன் வார்த்தைகளில், 'ஆயுதங்களை அனுப்புவதற்கான மையமாக மாறியுள்ள உக்ரேனிய எல்லைக்கு அருகில் உள்ள ஒரு பெயர் அறியப்படாத விமான நிலையத்திற்கு', கடந்த வாரம், கூட்டுப் பணியாளர்களின் தலைவரான மார்க் மில்லி, நாட்டிற்குள் ஆயுதங்களை கொண்டு செல்வதை நேரடியாக மேற்பார்வையிடச் சென்றதாக பென்டகன் தெரிவித்தது.

கூடுதலாக, 'கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நட்பு நாடுகளுக்கு முக்கியமான வான் பாதுகாப்பு பொறிமுறைகளை வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. ஏனெனில் ரஷ்யர்கள் கூட்டணியின் கிழக்குப் பகுதிக்கு எதிராக ஏவுகணைகள் அல்லது விமானங்களை ஏவுவது குறித்து பரிசீலிக்கலாம்' என்று திங்கள்கிழமை CNN தெரிவித்துள்ளது. 'இது உக்ரேனுக்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக அந்த நாடுகள் தனது படையெடுப்பிற்கு ஆபத்தாக இருப்பதாக முடிவு செய்தால், ஒரு கட்டத்தில் நேட்டோ எல்லைக்குள் ரஷ்ய ஏவுகணைகள் அல்லது விமானங்கள் வேண்டுமென்றே இலக்குகளைத் தாக்கக்கூடும் என்ற கவலையை மையமாகக் கொண்டது' என்று CNN எழுதியது.

அறிக்கை மேலும் கூறியது, 'அமெரிக்காவால் பயன்படுத்தப்படக்கூடிய மிகவும் சாத்தியமான பொறிமுறையாக Patriot மற்றும் THAAD (Terminal High Altitude Area Defense) பொறிமுறை இருக்கலாம்.'

உக்ரேனை அடுத்துள்ள நேட்டோ பிராந்தியங்களில் இந்த விமான எதிர்ப்பு பொறிமுறைகளை பென்டகன் 'பரிசீலனை செய்து வருகிறது' என்ற அறிவிப்பு, அமெரிக்க கட்சிகள் மற்றும் இராணுவம் ஆகிய இரு தரப்பிலிருந்தும் உக்ரேன் மீது பறக்க தடை விதிக்கும் மண்டலத்தை திணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருவதால் வந்துள்ளது. இது ரஷ்யாவுடன் ஒரு உண்மையான போர் அறிவிப்பாக இருக்கும்.

ஜனநாயகக் கட்சியின் லெப்டினன்ட் கர்னல் அலெக்சாண்டர் விண்ட்மேன் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் லியோன் பனெட்டா, குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆடம் கிஞ்சிங்கர் மற்றும் ரோஜர் விக்கர் மற்றும் நான்கு நட்சத்திர அமெரிக்க விமானப்படை ஜெனரல் பிலிப் ப்ரீட்லோவ் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

வார இறுதியில், அவர்களுடன் வேர்ஜீனியா ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜோ மன்சின், ரஷ்யாவுக்கான முன்னாள் துணைப் பாதுகாப்புச் செயலாளரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஈவ்லின் பர்காஸ் ஆகியோரும் இணைந்தனர். அவர் Hill இல் பைடென் நிர்வாகம் பறக்கத் தடை விதிக்கும் மண்டலத்தை ஆதரிக்க மறுத்ததைக் கண்டித்தார்.

'நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முன்கூட்டியே புட்டினுக்கு தந்தி அனுப்ப நான் விரும்பவில்லை. குறிப்பாக அவர் நடைமுறையில் எதையும் செய்யக்கூடியவர் என்பதை நாங்கள் அறிந்திருப்பதால், மேலும் கொடூரமான நடவடிக்கைகளை அவர் எடுப்பதில் இருந்து தடுக்க முயற்சிக்கிறோம். உக்ரேனுக்கான எதிர்கால விருப்பங்களைத் துண்டிப்பதிலிருந்தும் மற்றும் உக்ரேன் அல்லது நேட்டோவின் நமது பாதுகாப்புக்காகவும்” முயல்கின்றோம் என்று அவர் கூறினார்.

இந்தக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், ரஷ்யாவிற்கு விமானங்களை நேரடியாக ஈடுபடுத்துவதற்கான அழைப்புகளை வெள்ளை மாளிகை தற்போது எதிர்த்துள்ளது. இது உக்ரேனுக்கு ஆயுதங்களை குவிக்க விரும்புகிறது மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக எரியும்-மண்ணுடன் ஒரு பொருளாதாரப் போரை நடத்த விரும்புகிறது.

Politico 'மாஸ்கோவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்வதற்கு கடலின் இருபுறமும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கென் ஞாயிற்றுக்கிழமை இதற்காக ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா இயங்குவதை சுட்டிக்காட்டினார்.'

இதுவரை அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனுக்கு 17,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 2,000 ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பியுள்ளன என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக CNN தெரிவித்துள்ளது.

உக்ரேனுக்கு அமெரிக்க ஆயுதப் பரிமாற்றங்களின் திகைப்பூட்டும் வேகம் பற்றி நியூ யோர்க் டைம்ஸ் திங்கட்கிழமை காலை ஒரு அறிக்கையில், “பெப்ரவரி 26 அன்று 350 மில்லியன் டாலர் இராணுவ உதவிக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தபோது... அதில் 70 சதவீதம் ஐந்து நாட்களில் வழங்கப்பட்டது” எனக்குறிப்பிட்டது.

இதை நடைமுறைப்படுத்திய வேகம், துப்பாக்கி ஏந்திய நடவடிக்கை ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே தயாரிக்கப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது.

Times எழுதியது போல், “முன்னரே தயாராக இருந்த இராணுவக் களஞ்சியங்களை பயன்படுத்தியதன் மூலம் விமானப்படையின் C-17 போக்குவரத்து விமானங்கள் மற்றும் பிற சரக்கு விமானங்களுக்குள் அவற்றை இராணுவத்தால் விரைவாக ஏற்ற முடிந்தது. மேலும் அண்டை நாடுகளில், முக்கியமாக போலந்து மற்றும் ருமேனியாவில் உள்ள அரை டசின் முகாம்களுக்கு கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது'.

உக்ரேனுக்குளான ஆயுத பரிமாற்றங்களின் அளவைப் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்க அமைதியின்மையை வெளிப்படுத்தி, 'இதுவரை, ரஷ்யப் படைகள் நாட்டின் பிற பகுதிகளில் மிகவும் ஆக்கிரமித்துள்ளன. அவை ஆயுத விநியோகப் பாதைகளைக் குறிவைக்கவில்லை. ஆனால் அது நீடிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள்.” என எச்சரிக்கின்றது.

'அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடன் நேரடி மோதலில்' ஈடுபடுவதைத் தவிர்க்க போரில் ஒரு 'இணைந்து போராடுபவராக' தான் பார்க்கப்படுவதைத் தவிர்க்க அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளதாக Times குறிப்பிடுகிறது.

ஆனால் Times எச்சரிக்கையில், “ஆயுதங்கள் உள்ளே நுழையும் போது, ரஷ்ய தகவல் தொடர்பு மற்றும் கணினி வலைப்பின்னல்களில் தலையிடும் முயற்சிகள் அதிகரித்தால், இதுபோன்ற மோதல்கள் பெருக வாய்ப்புள்ளது என்ற ஒரு முன் ஊகம் இருப்பதாக சில அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றது.

'உக்ரேன் விஷயத்தில், ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, வெள்ளை மாளிகையைச் சுற்றி எதிரொலிக்கும் கேள்வி: நாம் எப்படி வல்லரசு மோதலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறோம் என்பதைச் சொல்லுங்கள்’ என்பதாக இருக்கின்றது என அக்கட்டுரை குறிப்பிட்டது.

இதற்கிடையில், போர் ஏற்கனவே அமெரிக்க இராணுவ செலவினங்களை பாரியளவில் விரிவுபடுத்துவதற்கான போலிக்காரணமாகவும் மற்றும் அடிப்படை சமூகத் திட்டங்களின் மீதான தாக்குதல்களுடனும் இணைந்துள்ளது.

'நேட்டோவுக்கு அதிக துப்பாக்கிகளும் குறைந்த வெண்ணெயும் தேவை,' என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துப்பிரிவின் ஒரு பதிப்பு வெளியிடப்பட்டது. அது சமூக பாதுகாப்பு திட்டங்களையும் Medicare இனையும் இதை கோர தகுதியுள்ளதா என பரிசீலிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்தது.

அதனுடன் கூடிய தலையங்கத்தில், ஜேர்னல் பின்வருமாறு கோருகிறது. “எந்தவொரு மோதலுக்கும் மிகப்பெரிய அளவிலான வெடிமருந்துகள் தேவைப்படும். மேலும் தற்போதைய திட்டங்களின்படி அமெரிக்கப் படைகள் சில வாரங்களில் மிகவும் ஆபத்தான மற்றும் முக்கியமான சில பொருட்கள் தீர்ந்துவிடும். பென்டகன் தற்போது திட்டமிட்டுள்ள நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு மற்றும் கூட்டு வானிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகளை வாங்குவதை இப்போதே விரைவாக்க வேண்டும்” என்றது.

Loading