பொருளாதார பொறிவை ஏற்படுத்த வெளிநாட்டு பெருநிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, அந்நாட்டிலிருந்து வெளிநாட்டு பெருநிறுவனங்களின் பெருமளவிலான வெளியேற்றத்தைத் தூண்டியுள்ளது, அதன் பேரழிவுகரமான விளைவுகள் இப்போது தான் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்குகின்றன. நிதித்துறை, விமானப் போக்குவரத்து, வாகனத்துறை, எரிசக்தி, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சேவைகள், பொழுதுபோக்கு, உணவு உற்பத்தி, உடை அலங்காரம் மற்றும் நுகர்வு பொருட்கள் என பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையையும் இந்த வெளியேற்றம் பாதித்து வருகிறது.

மாஸ்டர்கார்ட், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், கூகுள், ஆப்பிள் மற்றும் ஆப்பிள் பே, சாம்சுங், ஜெனரல் எலெக்ட்ரிக், ஷெல் ஆயில், பிரிட்டிஷ் பெட்ரோலியம், எக்ஸொன்மொபில், ஐகியா, நைக், ரீபொக், ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, டைம்லெர், ஜெனரல் மோட்டார்ஸ், லாண்ட் ரோவர், மெர்சிடஸ்-பென்ஸ், நோக்கியா, எரிக்சன், டெல், சிமென்ஸ், ரெனால்ட், நெட்பிளக்ஸ், வால்ட் டிஸ்னி, யூனிவர்சல், லெகோ, எக்ஸ்பீடியா, வாலியோ, பேசர், டனோன், அர்லாவின் McD, கோகோ கோலா, ஸ்டார்பக்ஸ் மற்றும் இன்னும் நூற்றுக் கணக்கானவை ரஷ்யாவில் விற்பனை, உற்பத்தி மற்றும் சேவையை இடைநிறுத்தம் செய்த முக்கிய பெருநிறுவனங்களின் பட்டியலில் உள்ளடங்கும்.

மருத்துவம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சட்டரீதியாக ரஷ்யாவில் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன என்றாலும், சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கான SWIFT முறையில் இருந்து அந்நாடு நீக்கப்பட்டிருப்பதால், இது அந்நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிக கடினமாக்குகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரஷ்யாவில் உள்ள பெருந்திரளான சாமானிய மக்கள், வேலைகள், வருமானங்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுக்கும் வெளிப்படையான நோக்கத்துடன் அவர்கள் உலகளாவிய சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பிரெஞ்சு வெளியுறவு மந்திரி புருனோ லா மையரின் வார்த்தைகளில் கூறுவதானால், இந்த 'ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் நிதியியல் போரின்' நோக்கம், 'ரஷ்ய பொருளாதாரத்தைச் சிதைப்பதாகும்.'

Apple logo sign. (AP Photo/Matthias Schrader)

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் மனிதாபிமானமின்றி அவர்களின் உயிரை உறிஞ்சி வருகின்றன. நீண்டகாலமாக தயாரிக்கப்பட்டு வந்த ஓர் அழிவார்ந்த இராணுவ மோதலுக்குள் ரஷ்யாவை இழுக்க ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டு, இறந்த உக்ரேனியர்களின் சடலங்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

பொருளாதாரத் தடைகள் மக்கள் மீது ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை மூடிமறைக்கும் அதன் அவநம்பிக்கையான முயற்சியின் ஒரு பாகமாக, ரஷ்ய அரசாங்கம் பணவீக்கம் பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் அந்நாட்டில் பணவீக்கம் தற்போது 17 சதவீதத்திற்கும் சற்று குறைவாக உள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டிச் சென்று கொண்டிருக்கின்றன.

விண்ணை முட்டிச் செல்லும் விலைகளைக் குறித்து நுகர்வோர் புகார் அளிப்பதற்கு வசதியாக சில பகுதிகளில் நேரடி தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாஸ்கோவில் காய்கறிகளின் விலை 2 முதல் 17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தென்மேற்கு ரஷ்யாவில் சுமார் 400,000 மக்கள் வசிக்கும் ஸ்டாவ்ரோபோலில், சர்க்கரை இப்போது 120 ரூபிள் ஆகும், இது பல வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பால் பொருட்கள் போன்ற நுகர்வோர் வாங்கக்கூடிய சில பொருட்களுக்கு ஸ்வெர்ட்லொவ்ஸ்க் வரம்பு விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் வாங்க முடியாத நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் அவற்றை வாங்கி வைக்கும் முயற்சியாக மக்கள் கடைகளை காலியாக்கி வருகிறார்கள்.

கசானில், ஒரு தாய் பத்திரிகையாளர்களிடம் கூறினார், 'நான்கு நாட்களுக்கு முன்னர், நான் 1,381 ரூபிள்களுக்கு குழந்தைக்கான உணவை வாங்கி வந்தேன், ஆனால் நேற்று ஏற்கனவே 2,233 ரூபிள் விலையாகிவிட்டது.' கான்டி-மான்சி தன்னாட்சி ஓக்ரக்கின் உள்ளூர் அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கியதால், 'குழந்தைகளுக்கான ஆடைகள், டயப்பர்கள் மற்றும் குழந்தை உணவுகள் உட்பட உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை [அதிகாரபூர்வமாக] சோதனை செய்ய' தொடங்க அவர்கள் முடிவெடுத்தனர். 'சில குழந்தைகளுக்கான பொருட்களின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளன' என்று பிராந்திய பிரதிநிதி ஒருவர் கூறினார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவதாலும், உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையாலும், ரஷ்ய நிறுவனங்களின் வியாபாரத்தைச் சாத்தியமற்றதாக்கும் பொருளாதாரத் தடைகளாலும் மற்றும் தேவை வீழ்ச்சி அடைவதன் காரணமாக, தொழிற்சாலைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுவதால், பொருளாதாரம் முழுவதும் வேலைநீக்கங்கள் பரவி வருகின்றன.

உணவு உற்பத்தியாளர் Fazer செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் அதன் செயல்பாடுகளில் இருந்து 2,300 தொழிலாளர்களை வெளியேற அனுமதிக்க உள்ளது. அங்கே சுமார் 2,000 பேர் வேலை செய்யும் நிசான் ஆலை, ஹூண்டாய் நிறுவனத்தைப் போலவே, மற்றுமொரு 2,500 தொழிலாளர்களுடன் மூடப்படுகிறது. சுமார் 370 பேரைச் சம்பளப் பட்டியலில் கொண்டுள்ள பொனாவா, நகரத்தில் அதன் கட்டுமானத் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் ஒரு பகுதியாக விளங்கும் அந்த மிகப் பெரிய பகுதியில் உள்ள காகித உற்பத்தி ஆலை, லெனின்கிராட் ஒப்லாஸ்ட், 1,700 வேலைகளை வெட்டி மூடப்படலாம்.

கலுகா, நிஸ்னி நோவ்கோரோட், டோக்லியாட்டி மற்றும் பிற இடங்களிலும் மிகப் பெரிய ஆலைகளைக் கொண்ட அமெரிக்க மற்றும் ஜேர்மன் உற்பத்தியாளர்கள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ஆலைகளை அடைப்பதாக அறிவித்து வருகின்றனர். ஹனோவரை மையமாக கொண்ட வாகன நிறுவனமான கான்டினென்டல், மாஸ்கோவின் தெற்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள சுமார் 325,000 மக்கள்தொகை கொண்ட கலுகாவில் அதன் செயல்பாடுகளை நிறுத்த இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது, இதனால் 1,300 வேலைகள் ஆபத்தில் உள்ளன.

இதற்கும் கூடுதலாக, உணவு உற்பத்தி நிறுவனங்களான Valio மற்றும் Paulig, வெர்ஸ்க் ஒப்லாஸ்ட் இல் உள்ள கடையை மூடுகின்றன, இதில் 600 பேர் வேலை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்பக்ஸ் மற்றும் கோகா-கொலா போலவே, ரஷ்யாவில் 62,000 தொழிலாளர் சக்தியைக் கொண்ட மெக்டொனால்ட் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. இப்போது வரை என்ன ஏற்பட்டிருக்கிறதோ அதை அடைய வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்துடன், இன்னும் கடையை மூடாத நிறுவனங்களைத் தனிமைப்படுத்தி, கடந்த பல நாட்களாக மேற்கத்திய பத்திரிகைகளில் ஒரு வெறித்தனமான பிரச்சாரம் நடக்கிறது.

இது வெறும் தொடக்கம் தான். ரஷ்ய பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் நேரடியாக நூறாயிரக்கணக்கானவர்களை மறைமுகமாக மில்லியன் கணக்கானவர்களை வேலையில் அமர்த்தி உள்ளன. ரஷ்ய பொருளாதார செய்தி தளமான Investing.com இல் எழுதும் ஒரு ஆய்வாளர் கருத்துப்படி, கேள்விக்குரிய தொழில்துறையைப் பொறுத்து, ரஷ்ய தயாரிப்பாளர்கள் அவர்களின் அனைத்து பாகங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கும் 40 சதவிகிதம் வரை எங்கிருந்தாவது வெளிநாட்டு விநியோகங்கள் மற்றும் சேவைகளை நம்பியிருக்கிறார்கள். சான்றாக, உணவு உற்பத்தி, சேவைத் துறை, உலோகத்துறை, விமானத்துறை மற்றும் கப்பல் கட்டுதல் போன்றவற்றில் உள்ள நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும்.

ரஷ்யாவின் வடக்கு காகசஸில் அமைந்துள்ள கபார்டினோ-பால்காரியா குடியரசின் உளவுத்துறை, அந்நாட்டில் செயல்பாடுகளை நிறுத்தும் சில நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு ஒரு சிறிய செய்தி அறிக்கையை வெளியிட்டது. அது பின்வருவனவற்றை பட்டியலிட்டது: Ikea, 15,000 வேலைகள், டோக்லியாட்டியில் உள்ள ரெனால்ட்-நிசான் (Renault-Nissan), 35,000 வேலைகள், BMW இன் அவ்டோட்டர், 3,500 வேலைகள். ரஷ்யாவின் முன்னணி தேடுபொறியான யாண்டெக்ஸ் அது திவாலாகும் அபாயத்தில் இருப்பதாக அதன் 12,000 பணியாளர்களை எச்சரித்ததை அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்தச் செய்தி அறிக்கை, “போலி” என்று ஒரு பெரிய சிவப்பு முத்திரை குத்தப்பட்டதைக் கொண்டிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது, இது தகவல் நிஜமாகவே போலித் தன்மையைக் கொண்டிருந்தது என்பதால் நீக்கப்பட்டிருக்காது, அனேகமாக பெரும்பாலும் அரசாங்கத்திற்கு முன்வைக்கும் அபாயத்தைக் குறித்து நீக்கப்பட்டிருக்கலாம். அரசாங்கத்தின் போர் இலக்குகளைப் பலவீனப்படுத்தும் 'போலி' செய்திகளைப் பரப்புபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கும் மற்றும் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தில் ஜனாதிபதி புட்டின் சமீபத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

கிரெம்ளின் அமைதியாக இருப்பதைப் போல போலியான பிம்பத்தைக் காட்டுவதன் மூலமும், இணையத்தில் சேதாரம் ஏற்படுத்தும் செய்தி அறிக்கைகளை நீக்குவதன் மூலமும், மட்டுப்படுத்தப்பட்ட சில சமூக நடவடிக்கைகளை அறிவித்தும், வியாபாரத் துறைக்கு முழு ஆதரவை அறிவித்தும் இந்த சுழன்று வரும் நெருக்கடியைக் கையாள முயன்று வருகிறது.

8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் வழங்குவதற்காக 455 பில்லியன் ரூபிள் ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ரஷ்யாவில் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, ஒரு குழந்தைக்கு உத்தியோகபூர்வ வாழ்வாதாரத்தில் குறைந்தபட்சமாக 50 முதல் 100 சதவிகிதம் வரை பெறுவார்கள், இது 6,000 முதல் 12,000 ரூபிள் வரை இருக்கும்.

குழந்தைக்கு உணவு வாங்க முயற்சிக்கும் கசானில் உள்ள அந்த தாய் அதுபோன்றவொரு தொகையைப் பெற்றால் —ஆனால் அது அவருக்குக் கிடைக்காது ஏனென்றால் அவரது குழந்தை 8 வயதுக்குக் குறைந்தவர்—அவரால் கூடுதலாக மூன்றில் இருந்து ஐந்து திண்பண்டங்கள் வாங்க முடியும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தணிக்கைக்கும் அரசு இப்போதிருந்து 2024 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டிய வணிகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும், அரசுக்குப் பொருட்களை விற்பனை செய்யும் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியங்களை அதிகரிக்கும் உரிமை அந்தந்த ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு மாதத்திற்கு 20,000 ரூபிள் க்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை, இதனால் அவர்கள் சுமார் 2,600 ரூபிள் சேமிக்கலாம். மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் பின்புல பொருளாதார வேலைகளில் பணியாற்றுவதை வைத்து பார்த்தால், குறிப்பாக சம்பள விகிதத்தின் கீழ்நிலையில் இருப்பவர்களை வைத்து பார்த்தால், இது மொத்தத்தில் உதவியாக ஏற்றுக் கொள்ள இயலாது.

இந்த போர் நெருக்கடியின் தொடக்கத்தில், ஜனாதிபதி புட்டின் அறிவிக்கையில், ரஷ்யா 'வணிகத்திற்கு அதிகபட்ச சுதந்திரத்தை' உறுதி செய்யும் என்று அறிவித்தார். இது ரஷ்ய பெருநிறுவனங்களுக்குத் தேவைப்பட்டால் தொழிலாளர் செலவைக் குறைக்கவும், தொழிலாளர்கள் ஆட்சேபித்தால், அவர்களை வேலைகளில் வைத்திருக்க அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் அவற்றுக்குச் சுதந்திரம் வழங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது.

Loading