உக்ரேனில் கண்காணிப்பு தண்டனை பரவுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோவால் தூண்டப்பட்ட ரஷ்யாவுடனான பேரழிவுகரமான போர் நான்காவது வாரத்திற்குள் நுழைகையில் தீவிர வலதுசாரி கண்காணிப்பு படைகள் நாடு முழுவதும் வெறித்தனமாக அலைவதால், மக்கள் கம்பங்களில் கட்டப்பட்டு, பின்னர் அடித்து அவமானப்படுத்தப்படுவதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் சமீபத்திய வாரங்களில் பரவிவருகின்றன.

பல வீடியோக்கள் உக்ரேனிய குடிமக்கள் ஆயுதப்படை உறுப்பினர்களால் கட்டப்பட்டு அடிக்கப்படுவதைக் காட்டுகின்றன. இது 'சர்வாதிகார' புட்டின் ஆட்சிக்கு மாறாக, 'ஐரோப்பிய மதிப்புகள்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றின் உருவகமாக முன்வைக்கப்படும் நாட்டில் உண்மையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் திறம்பட கைவிடப்பட்டதை அறிவுறுத்துகிறது.

வெளிப்படையாக, இத்தகைய கண்காணிப்பு நீதியால் பாதிக்கப்பட்டவர்கள், கொள்ளையர்கள் அல்லது ரஷ்ய முகவர்கள் மற்றும் நாசகாரர்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் ஒரு தனிநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரே வீடியோவின் மாறுபட்ட இடுகைகளில் அடிக்கடி மாறுகின்றன.

இந்த 'கசையடி'யின் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் உக்ரேனில் உள்ள தீவிர வலதுசாரி சமூக ஊடக கணக்குகளால் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும், சிந்தி மற்றும் ரோமா சிறுபான்மையினரும் அடங்குவர்.

பிளாஸ்டிக் போர்வையால் தூணில் சுற்றிக் கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் அடிக்கடி தங்கள் கால்சட்டைகளை கீழே இழுத்து, பின்னர் வலதுசாரி பார்வையாளர்கள் அல்லது உக்ரேனிய ஆயுதப்படை உறுப்பினர்களால் தாக்கப்படுகிறார்கள். சிலரின் முகங்களில் பச்சை அல்லது நீல வண்ணம் பூசப்பட்டிருக்கும்.

புட்டின் ஆட்சி மற்றும் அதன் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதே மேற்கத்திய ஊடகங்கள், உக்ரேனின் தீவிர வலதுசாரிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் செயல்கள் குறித்து பெரும்பாலும் மௌனம் சாதித்து வருகின்றன. விதிவிலக்குகளில் ஒன்று —இங்கிலாந்தின் டெய்லி மிரரில் வந்த ஒரு கட்டுரை— அது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு நியாயமான மற்றும் நகைச்சுவையான எதிர்வினை என்று கூட அழைத்தது. 'பெருமைமிக்க உக்ரேனிய குடிமக்கள்' 'ஒரு தனித்துவமான தண்டனையுடன்' பதிலடி கொடுப்பார்கள் என்று அது எழுதியது.

2014 ஆட்சிக் கவிழ்ப்பில் பல்வேறு தீவிர வலதுசாரி குழுக்கள் மற்றும் பாசிசக் குழுக்கள் ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை வெளியேற்றியதிலிருந்து, பிப்ரவரி 24 அன்று போர் தொடங்குவதற்கு முன்பும், அதற்கும் நீண்ட காலத்திற்கு முன்பே இந்த வகையான விழிப்புணர்வு நீதி பயன்படுத்தப்பட்டது.

2018 இல் செர்னிஹிவ் நகரில், நவ-நாஜி அசோவ் பட்டாலியனின் உறுப்பினர்கள் 2013-14 ஆம் ஆண்டு மைதான் சதுக்க போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவகத்தை சேதப்படுத்தியதாகக் கூறி ஒரு நபரை ஒரு தூணில் கட்டினர்.

அசோவ் பட்டாலியன் உறுப்பினர் ஒலெக்சாண்டர் டர்னாவ்ஸ்கி என்பவரால் அந்த நபர் சட்ட விரோதமாக கைதுசெய்து காவலில் வைக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது, மேலும் போலீஸ் வருவதையும் ஆனால், அந்த நபர் அடுத்த 20 நிமிடங்கள் கட்டிவைக்கப்பட நிலையில் விட்டுச்செல்லப்படுவதையும் காட்டுகிறது.

ஒரு அசோவ் உறுப்பினராக, ரோமா மக்களுக்கு எதிராக இனவெறி உள்ளடக்கத்தை இடுகையிடுவதற்காக தர்னாவ்ஸ்கி அறியப்பட்டார், அத்துடன் நாஜி வணக்கத்தில் கையை உயர்த்திய புகைப்படமும் இருந்தது.

இத்தகைய கண்காணிப்பு இயக்கங்கள் உக்ரேனிய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக ஆதரிக்கப்பட்டு அரசுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டில், போரோஷென்கோ அரசாங்கம் ஒரு தேசிய குடிப்படையை உருவாக்கி, தெருக்களில் ரோந்து மற்றும் 'குற்றவியல்' நடத்தைகளை வேரறுக்கும் பணியை அவர்களுக்கு வழங்கியது.

உண்மையில், இந்தக் குழுக்கள் அரசியல் குண்டர்களாகச் செயல்பட்டன. அவர்கள் கியேவின் இராணுவவாத, ரஷ்ய எதிர்ப்பு மற்றும் நேட்டோ சார்பு நோக்குநிலைக்கு எதிராக பார்க்கும் எவரையும் பின்தொடர்ந்து தாக்கினர்.

அசோவ் படை மற்றும் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்ட தேசிய குடிப்படைக்கு கூடுதலாக, நவ-நாஜி C14 இயக்கம் 2014 முதல், குறிப்பாக உக்ரேனின் இன சிறுபான்மையினருக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அறியப்பட்டது.

2018 இல் C14 நாடு முழுவதும் ரோமா முகாம்களில் பல சோதனைகளை நடத்தியது, குறைந்தது ஒரு இளம் ரோமா ஆணைக் கொன்றது. கியேவில் நடந்த தாக்குதலில், C14 உறுப்பினர்கள் ரோமா குடும்பங்களை விரட்டிய பின் அவர்களின் வீடுகளை எரித்தனர்.

பிப்ரவரி தொடக்கத்தில், உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவின் பெயரிடப்பட்ட ஒரு அரசியல் கருத்தரங்கில், நவ-நாஜி குழு C14 இன் தலைவரான யெவ்ஜென் காராஸ், ரஷ்யர்களைக் கொல்வது 'வேடிக்கையானது' மற்றும் 'குளிர்ச்சியானது' என அறிவித்தார். அவரைப் போன்ற நவ நாஜிக்கள் ரஷ்யர்களைக் கொல்ல விரும்புவதால்தான், மேற்குலகம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் கராஸ் வெளிப்படையாகக் கூறினார்.

முன்பு ரோமா மீது C14 தலைமையில் நடத்திய இனவெறி தாக்குதல்கள் இப்போது உக்ரேனிய ஆயுதப்படைகளின் அனுசரணையில் நடைபெறுகின்றன. L‘viv இன் சமீபத்திய புகைப்படங்கள் ரோமா பெண்களின் முகத்தில் பச்சை வண்ணம் பூசப்பட்டு ஒரு கம்பத்தில் கட்டியிருப்பதைக் காட்டுகிறது. படங்கள் உக்ரேனிய ஆயுதப்படை உறுப்பினர்களை பின்னணியில் தெளிவாகக் காட்டுகின்றன, இந்தத் தாக்குதல்கள் அவர்களால் நேரடியாகவோ அல்லது அவர்களின் மேற்பார்வையிலோ நடத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்கிறது.

Lviv இல் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் பல ரோமாக்களின் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

உக்ரேனிய ஆயுதப் படைகளும், பிடிபட்ட ரஷ்ய துருப்புக்களைக் கொல்வது போன்ற வெளிப்படையான போர்க் குற்றங்களை ஊக்குவிக்கின்றன.

'கசையடி' என்பது ஒப்பீட்டளவில் சில கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்துவதாகத் தோன்றினாலும், சமீபத்தில் ஒரு யூத விளையாட்டு வீரர் மற்றும் போர்-எதிர்ப்பு ஆர்வலர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருப்பது, இத்தகைய தீவிர வலதுசாரி தாக்குதல்கள் விரைவில் கடுமையான காயங்கள் மற்றும் கொலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. கூறப்படும் கொள்ளையர்கள், சந்தேகிக்கப்படும் ரஷ்ய முகவர்கள் மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிரான பிற்போக்குத்தனமான கண்காணிப்பு பிரச்சாரம் உக்ரேனிய அரசாங்கத்தின் வலதுசாரி இராணுவவாத கொள்கைகளின் நேரடி விளைவு ஆகும்.

2014 அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் தற்போதைய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் இரு அரசாங்கங்களும் பாசிச சக்திகளைக் கட்டியெழுப்பும்போது குடியுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த சீராக நகர்ந்தன.

இந்தப் பிரச்சாரம் இப்போது போர்க்கால நிலைமைகளின் கீழ் தீவிரப்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவுடன் ஒத்துழைத்ததாகக் கூறி 11 அரசியல் கட்சிகளின் செயல்பாட்டுக்கு செலென்ஸ்கி தடை விதித்தார்.

உக்ரேனின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான, ரஷ்ய ஆதரவு எதிர்ப்புத் தளம் (Opposition Platform) — வாழ்க்கைக்கான கட்சி (For Life party), நாட்டின் 450 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 45 இடங்களைக் கைப்பற்றியது.

தடைசெய்யப்பட்ட கட்சிகள் எதுவும் ரஷ்ய வெற்றிக்கு அழைப்பு விடுக்கவில்லை அல்லது பேரழிவுகரமான படையெடுப்பை ஆதரிக்கவில்லை, மற்றும் ஒத்துழைப்பு அல்லது நாசவேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் உக்ரேனிய அரசாங்கத்தால் வைக்கப்படவில்லை.

அவர்களின் முக்கிய குற்றம், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமாதானத்தை ஆதரித்ததாகவே இருந்தது, இது உக்ரேனின் வலதுசாரிகளால் எதிர்க்கப்படுகிறது மற்றும் ஜெலென்ஸ்கியும் அவரது பிரதிநிதிகளும் தீவிரமாக தடுக்க முயற்சிக்கின்றனர்.

உக்ரேனின் இரகசிய சேவையால் (SBU) நடத்தப்படும் பயங்கரவாதத்தின் ஒரு திட்டமிட்ட அரசியல் பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக எதிர்க்கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு உத்தியோகபூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6 அன்று SBU உக்ரேனிய கம்யூனிஸ்ட் இளைஞர்களின் மிக்கைல் மற்றும் அலெக்சாண்டர் கொனோனோவிச் ஆகியோரை 'ரஷ்ய சார்பு மற்றும் பெலாருஷ்ய சார்பு பார்வைகள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்தது.

உக்ரேன் முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பிரச்சாரம், ரஷ்யாவிற்கு எதிராக ஏகாதிபத்திய போர் உந்துதலால் வளர்க்கப்பட்ட அரசியல் சூழலின் கொச்சையான வெளிப்பாடாகும் மற்றும் அதன் பினாமியான செலென்ஸ்கி அரசாங்கம், கருத்து சுதந்திரம், நியாயமான விசாரணை மற்றும் பிற ஜனநாயக உரிமைகளை ஒழிக்கிறது.

Loading