வேலைநிறுத்தம் செய்யும் ஸ்பானிய லாரி ஓட்டுனர்கள் போதாத அரசு பிணை எடுப்பு சலுகையை நிராகரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இரண்டு வாரங்களாக ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான ஸ்பெயின் லாரி ஓட்டுனர்கள், நேற்று முன்மொழியப்பட்ட தீர்வை நிராகரித்துள்ளனர். அவர்கள் ஸ்பெயின் முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மையங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர், உதிரிப்பாகங்களை பெறமுடியாத தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு பொருட்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன.

சமூக-ஜனநாயகப் பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் 16 பில்லியன் யூரோப் பொதியாக அரசு ஆதரவு கடனை முன்மொழிந்தார். வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஸ்பெயின் நிதி வட்டங்களில் இருந்து எழுந்த அவசர கோரிக்கைகளுக்குப் பின்னர், IBEX-35 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வணிக மன்றத்தில் அவரது திட்டத்தை விவரித்தார். 'குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீதான நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்க ஏறத்தாழ 6.0 பில்லியன் யூரோக்கள் நேரடி உதவி மற்றும் வரிச்சலுகைகள் மற்றும் 10 பில்லியன் யூரோக்கள் அரசு உத்தரவாதக் கடன்கள்' ஐ வெளியிடுவதற்கான திட்டத்தை இன்று அவரது அமைச்சரவையில் விவாதிப்பதாக அவர் உறுதியளித்தார்.

24 மார்ச் 2022 வியாழன் அன்று மாட்ரிட், ஸ்பெயினின் புறநகர்ப் பகுதிகளில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து லாரிகள் கூடுகின்றன. (AP Photo/Manu Fernandez)

இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும், இது எரிபொருள் விலையில் ஏற்பட்ட வெடிப்பை ஓரளவு மட்டுமே ஈடுசெய்யும். இது ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் மற்றும் 'ஒரு லீட்டர் எரிபொருளுக்கு குறைந்தபட்சம் 20 சென்ட் குறைப்பு' என்று சான்சேஸ் கூறினார், குறைக்கப்பட்டதில் 15 சென்ட் அரசால் மற்றும் 5 சென்ட் எண்ணெய் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது. திங்களன்று, ஸ்பெயினில் சராசரி பெட்ரோல் விலை லீட்டருக்கு 1.84 முதல் 1.98 யூரோக்கள் வரையிலும், டீசல் 1.86 முதல் 1.95 யூரோக்கள் வரையிலும் இருந்தது.

போக்குவரத்து, சிறிய லாரி நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் புரியும் லாரி ஓட்டுனர்களின் சங்கம், வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, அது அரசாங்கத்தின் பொதியை நிராகரித்து, தங்கள் வாடிக்கையாளர்களை நஷ்டத்தில் இயங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்ற சட்டத்தைக் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 'போக்குவரத்தில் தற்போதைய நிலைமையின் பகுப்பாய்வு என்னவென்றால், நாங்கள் வேலைநிறுத்தம் செய்வதை விட இப்போது நாங்கள் வேலை செய்வதில் மிகவும் மோசமாக இருக்கிறோம், எரிபொருள் விலை உயர்ந்தது மற்றும் மிக அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' 'நாங்கள் இறுதிவரை தொடர்வோம்' என Transport அமைப்பு அறிவித்துள்ளது.

சான்சேஸின் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் லாரி ஓட்டுனர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை அல்லது ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்களைப் பேரழிவிற்கு உட்படுத்தும் விலை உயர்வுக்கான அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்யவில்லை. எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன, ஏனெனில் குறிப்பாக COVID-19 தொற்றுநோய்களின் போது; பணவீக்கம் விநியோகச் சங்கிலிகளின் ஒழுங்கின்மை மற்றும் மத்திய வங்கிகளால் பெருமளவில் பணத்தை அச்சிடுதல் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோ போருக்கு மத்தியில் ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் தானியங்களை உலகச் சந்தைகளில் இருந்து அகற்றும் நேட்டோவின் கொள்கை விலைவாசி உயர்வை மேலும் துரிதப்படுத்துகிறது.

பொடேமோஸ் கட்சியின் தலைவரான துணைப் பிரதம மந்திரியும் தொழில் அமைச்சருமான Yolanda Diaz, IBEX-35 க்கு சான்சேஸின் முன்மொழிவை பாராட்டினார்: 'இந்த நிலைமை முற்றிலும் விதிவிலக்கானது மற்றும் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள், இந்த பெரும் நெருக்கடியில் இருந்து வெளியேற, எங்களுக்கு ஒரு வழியை வழங்கும் என நான் நினைக்கிறேன்' உண்மையில், சான்சேஸின் பொதி சமீப ஆண்டுகளில் முதலீட்டு வர்க்கங்களிடம் ஒப்படைக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான யூரோக்களை மறுபகிர்வு செய்வதையோ அல்லது ஐரோப்பாவில் வெடிக்கும் உலகப் போரின் பெருகும் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

அதன் 16 பில்லியன் யூரோப் பொதியுடன், சான்சேஸின் சோசலிஸ்ட் கட்சி (PSOE)-Podemos கூட்டணி அரசாங்கம் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்புகிறது, 23,000 கலகத் தடுப்புப் பொலிசார் பெருமளவில் அணிதிரட்டப்பட்ட போதிலும், நிதியப் பிரபுத்துவத்தை வளப்படுத்தும் அதன் எந்தத் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வராமல் அதை ஒடுக்க முடியவில்லை.

சான்சேஸின் தொகுப்புக்கான கோரிக்கைகள் வேலைநிறுத்தக்காரர்களிடமிருந்து வந்தவை அல்ல, அவர்கள் அதிக எரிபொருள் விலைகள் காரணமாக நஷ்டத்தில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து சட்டப் பாதுகாப்பைக் கோருகின்றனர், மாறாக ஸ்பானிய பெருவணிகத்திடம் இருந்து வந்தது. கடந்த வாரம், ஸ்பெயினின் வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு (CEOE) ஒரு எச்சரிக்கையை விடுத்தது, வேலைநிறுத்தம் அவர்களின் இலாபங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் கட்டுப்பாடற்ற வெடிப்பைத் தூண்டுமுன் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கையைக் கோரியது.

'இந்த சூழ்நிலையில்,' CEOE ஒரு அறிக்கையில் எழுதியது, 'வணிகம் மற்றும் சமூகத்தில் இருந்து வரும் கூச்சல் அரசியல் செயலற்ற தன்மையின் முகத்தில் வெடிக்க அச்சுறுத்துகிறது. … விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொண்டு, வேலைநிறுத்தத்தின் காரணமாக தங்கள் வணிகங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியாதவர்களுக்கு உதவுவதற்கு ஏன் நடவடிக்கை விரைவாக எடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.”

வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கோரி CEOE மற்றும் சான்சேஸின் அறிக்கைகள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் எதிரொலிக்கப்படுகின்றன, அவை லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என கண்டனம் செய்தன, மற்றும் 'இடது ஜனரஞ்சக' பொடேமோஸ் கட்சி, லாரி ஓட்டுனர்கர்களை பாசிஸ்டுகள் என அவதூறு செய்தன.

நேற்று, பொடேமோஸ் பாராளுமன்ற செய்தித் தொடர்பாளர் Pablo Echenique மீண்டும் Transport அமைப்பை தாக்கினார், பெரிய ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்த பின்னர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும் எனக் கூறினார்.

PSOE-Podemos அரசாங்கம், பெருவணிகமான தேசிய சாலைப் போக்குவரத்துக் கூட்டமைப்புடன் (CNTC) உடன்பாட்டை எட்டிய பின்னர், 'வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் நியாயமானதாக இருக்கும்' என அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 'வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய போக்குவரத்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்பெயினின் முக்கிய நவ-பாசிசக் கட்சியான வோக்ஸின் மனிதர்' என்றார். Transport இன் செய்தித் தொடர்பாளர் மானுவல் பெர்னாண்டஸ் தனக்கு அதனுடன் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என திரும்பத் திரும்பக் கூறியதை அலட்சியம் செய்தார்.

ஸ்பெயினின் தொழிற்சங்கங்கள் லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த வேலை செய்தன மற்றும் தொழிலாளர்களை தங்கள் பாதுகாப்பில் அணிதிரட்ட மறுத்தன. ஸ்ராலினிச தொழிலாளர் கமிஷன் (CCOO) தொழிற்சங்கம், அரசாங்கம் 'இந்த சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தளவாடங்கள் போன்ற ஒரு துறையில் ஒரு மகத்தான மோதலில் இருந்து,' மேலும் 'ஏதாவது ஒரு வழியில் நாம் இந்த முட்டுச்சந்தில் இருந்து வெளியேற வேண்டும்' என்றது.

Transport இன்று PSOE-Podemos அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகையில், ஸ்பெயின் முழுவதும் உள்ள பத்திரிகை ஆதாரங்கள் வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று வலியுறுத்துகின்றன. Europa Press செய்தி நிறுவனம்: 'பல்வேறு தொழில்துறை ஆதாரங்களின் அறிக்கைகளின்படி, நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இரண்டும், இந்த வார இறுதியில் செயல்பாடுகள் 97 சதவிகிதம் இயல்பானவை மற்றும் துறைமுகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன …' என எழுதியது.

உண்மையில், உள்ளூர் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் லாரி ஓட்டுனர்களின் அறிக்கைகள் வேலைநிறுத்தம் மிகவும் தொடர்கிறது மற்றும் துறைமுகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது:

  • லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தின் காரணமாக நெரிசலின் அளவு 'மிக அதிகமாக' இருப்பதாக வலென்சியா துறைமுகம் கூறியது, ஏனெனில் அங்கு சாதாரண எண்ணிக்கையிலான லாரிகளில் 30 சதவிகிதம் மட்டுமே இயங்குகிறது. துறைமுகத்திற்குள் கப்பல் கொள்கலன்கள் நுழைவதை 'நிறுத்த' துறைமுக அதிகாரசபை தள்ளப்பட்டுள்ளது. Port Transport Association (Asotranport) இன் தலைவர் அல்வாரோ ஓர்டிஸ், நேற்று காலை முதல் சுமார் 2,000 லாரிகள் வலென்சியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
  • பார்சிலோனா துறைமுகத்தில், வேலைநிறுத்தத்தில் முன்னதாக துறைமுகத்திற்கு வெளியே மறியல் மற்றும் நகரத்தில் உணவுப் போக்குவரத்து வசதிகள் மூலம் பொலிஸ் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வதாகவும், வரும் நாட்களில் துறைமுக உள்கட்டமைப்பை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாகவும் லாரி ஓட்டுனர்கள் பத்திரிகை ஆதாரங்களுக்கு உறுதிப்படுத்தினர்.
  • பில்பாவோ துறைமுகத்தில், கன்டெய்னர்களை இறக்குவதற்கும் கொண்டு செல்வதற்கும் பணிபுரியும் தோராயமாக 700 லாரிகளில் 450 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன, மேலும் துறைமுக அதிகாரிகளிடம் இருந்து மேம்படுத்தப்பட்ட நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என்பதை நிராகரித்தன. 'யாரும் நஷ்டத்தில் வேலை செய்ய விரும்பவில்லை' என போக்குவரத்து சங்கம் அறிவித்தது.
  • மேலும் மெதுவான நடவடிக்கைகள் கலீசியா மற்றும் கேனரி தீவுகளில் பதிவாகியுள்ளன. அஸ்டூரியாஸ் பிராந்தியத்தில் போக்குவரத்துக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் பெர்னாண்டஸ், வேலைநிறுத்தம் பலவீனமடைந்து வருகிறது என்ற செய்திகளை மறுத்ததோடு, வேலைநிறுத்தம் ஏற்படுத்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் 'அரசியல் விருப்பமின்மை' காரணமாக அது தொடர்வதாகக் கூறினார்.

PSOE-Podemos அரசாங்கம் இதற்கிடையில் லாரி ஓட்டுனர்களுக்கு எதிராக அவர்கள் திரட்டிய பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தின் அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது. கடந்த வார இறுதியில், ஸ்பானிய உள்துறை அமைச்சகம் 67 லாரி ஓட்டுனர்களை சிறையில் அடைத்ததாகவும், போலீஸ் பிரிவுகள் 6,969 லாரிகளை கருங்காலி ஓட்டுனர்கள் மூலம் இயக்கியதாகவும் தெரிவித்தது. இருப்பினும், இது ஒரு கணிசமான குறைமதிப்பாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. Castilla y Leon இல் உள்ள பிராந்திய அதிகாரிகள், 40 லாரி ஓட்டுனர்களை கைது செய்துள்ளதாகவும், தங்கள் பிராந்தியத்தில் மட்டும் 6,000 லாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

PSOE-Podemos அரசாங்கம் மற்றும் நேட்டோ கூட்டணியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக, லாரி ஓட்டுனர்களை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை அணிதிரட்டுவதுதான் இப்போது தீர்க்கமான கேள்வியாக உள்ளது.

Loading