சோசலிச சமத்துவக் கட்சியின் போர் எதிர்ப்பு ஒளிப்பதிவை முகநூல் தணிக்கை செய்வதை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமையன்று, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei- SGP) தயாரித்த பிரபலமான ஒரு போர்-எதிர்ப்பு ஒளிப்பதிவை முகநூல் எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் நீக்கியது. “மூன்றாம் உலகப் போர் வேண்டாம்! உக்ரேன் போருக்கும், நேட்டோ ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் ஜேர்மன் மறுஆயுதமயமாக்கலுக்கும் எதிராக! என்ற இந்த ஒளிப்பதிவு ஒரு சில நாட்களில் 20,000 தடவை பார்க்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி ஞாயிற்றுக்கிழமை முகநூல் பதிவில் உடனடியாக இந்த நீக்குதலை மாற்றியமைக்க அழைப்பு விடுத்தது. 'ஒளிப்பதிவுடன் அரசியல் கருத்துக்களை உருவாக்குவதில் பங்கேற்பதற்கான எங்கள் அரசியலமைப்பு உரிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம்,' என கட்சி அதன் முறையீட்டில் கூறியது. ஆனால் நிறுவனம் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே இந்த நீக்கம் சோசலிச சமத்துவக் கட்சியின் சுயாதீனமான போர் எதிர்ப்பு முன்னோக்கிற்கு எதிரான அரசியல் தணிக்கை நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். அனைத்து வாசகர்களும் இந்த தணிக்கையை எதிர்க்குமாறும், சமூக ஊடகங்களிலும் அதற்கு அப்பாலும் தங்கள் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி அதற்கு எதிராக பலமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒளிப்பதிவில், சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரான கிறிஸ்தோஃப் வாண்ட்ரேயர் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் தலைமை ஆசிரியர் ஜொஹானஸ் ஸ்ரேர்ன் ஆகியோர் ரஷ்ய அரசாங்கத்தின் போரை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் நடத்தப்பட்ட போர்களாலும், நேட்டோவினால் ரஷ்யாவை இராணுவ சுற்றி வளைப்பாலும் அது எவ்வாறு தூண்டப்பட்டது என்பதையும் அவை விளக்குகின்றன.

உக்ரேனில், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில், மக்கள் தொகையின் இழப்பில் ஒரு பினாமி யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு அணுவாயுத உலகப் போரில் சென்று முடிய அச்சுறுத்துகிறது. பேரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தின் ஒரு பகுதியாக போர் மற்றும் அதன் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றிணைப்பதே ஆகும் என வாண்ட்ரேயர் மற்றும் ஸ்ரேர்ன் விளக்குகின்றனர்.

இந்த பகுப்பாய்வும் மற்றும் முன்னோக்கும் ஒரு அதிர்ச்சியை தூண்டிவிட்டு, மேலும் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை முகநூலூடாக சென்றடைந்தது. இந்த ஒளிப்பதிவு 150 க்கும் மேற்பட்டவர்களால் விருப்பத்திற்குரியதாக குறிக்கப்பட்டு, 140 தடவை பகிரப்பட்டதுடன் மற்றும் 120 தடவை அது தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இது நேட்டோவின் போர்வெறிக்கு காணப்படும் பரவலான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. இவ்வெதிர்ப்பானது உத்தியோகபூர்வ ஊடகங்களில் அடக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அவற்றால் ரஷ்யாவிற்கும் இறுதியில் சீனாவிற்கும் எதிரான முழுமையான போரை இலக்காகக் கொண்ட காதை அடைக்கும் போர் பிரச்சாரம் முன்வைக்கப்படுகின்றது.

வார இறுதியில் இந்த ஒளிப்பதிவு வீடியோ நீக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பைடென், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்கு என்றும் மற்றும் பல தசாப்த கால யுத்த நிலையை அறிவித்தார். ஜேர்மனியின் அதிபர் ஷோல்ஸ் ஞாயிற்றுக்கிழமை போர் வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக அதிகரித்து ஆதரித்தபோது இதேபோன்ற அறிக்கைகளை வழங்கினார். இதன் மூலம் ஜேர்மனி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்த முடியும்.

மூன்றாம் உலகப் போரை நோக்கிய இந்த பைத்தியக்காரத்தனமான உந்துதல், பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்படுகிறது. அதனால்தான் ஊடகங்கள் போர்ப் பிரச்சார முறைக்கு மாறி, அடிப்படைக் கேள்விகளைக் கூட கலந்துரையாட அனுமதிக்காதுள்ளன. இப்போது திணிக்கப்படவுள்ள தணிக்கை என்பது, இந்த பிரச்சாரம் மிகக்குறைவான மக்களையே முட்டாளாக்குகிறது என்பதற்கான அவநம்பிக்கையான பிரதிபலிப்பாகும். பெரும்திரளான தொழிலாளர்கள் போருக்கு எதிரான ஒரு சுயாதீனமான முன்னோக்கை தேடுகின்றனர்.

தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கங்களின் தணிக்கை நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு அதிகரித்து வருகின்றன. 2017 ஆம் ஆண்டில், கூகுள் எதிர்காலத்தில் தேடல் முடிவுகளில் 'அதிகாரபூர்வமான ஆதாரங்களுக்கு' ஆதரவாக இருப்பதாக அறிவித்தது. அதே நேரத்தில், சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்கள், குறிப்பாக உலக சோசலிச வலைத் தளம், தணிக்கை செய்யப்பட்டு தேடல் முடிவுகளிலிருந்து வெளியேற்றப்பட்டன.

முகநூல் அதன் தளத்தில் இடுகைகளைக் கண்காணிக்கவும், விரும்பத்தகாத இடுகைகளைத் தணிக்கை செய்யவும் 20,000 க்கும் மேற்பட்டோரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த ஊழியர்களில் பலர் உளவுத்துறை அல்லது சட்ட அமுலாக்கத்துறையின் பின்னணியைக் கொண்டுள்ளதுடன் மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுகின்றனர். ஜேர்மனியில், அரசாங்கத்துடனான தொழில்நுட்ப நிறுவனங்களின் நெருக்கமான ஒத்துழைப்பு வலைப்பின்னல் அமுலாக்கச் சட்டம் மூலம் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை தணிக்கை செய்ய முகநூல் ஏற்கனவே இரண்டு முறை முயற்சித்துள்ளது. ஜனவரி 22 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள கட்சியின் உள்ளூர்ப் பிரிவுகளின் கணக்குகளை முகநூல் முடக்கியது. மேலும் பெரும் எதிர்ப்புக்கு பின்னர் ஜனவரி 25 அன்று மட்டுமே அவற்றை மீள இயங்க அனுமதித்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர், முகநூல் வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் 'வாஷிங்டன் போஸ்டின் 'வூஹான் ஆய்வுகூட' சதிக்கோட்பாடு அம்பலமானது' என்ற கட்டுரையைப் பகிர்வதைத் தடுத்தது அந்த கட்டுரை தவறான தகவல்களை பரப்புவதாக முகநூல் காரணம் தெரிவித்தது. மே மாதத்தில், அந்நிறுவனம் இந்த அறிக்கையின் நம்பமுடியாத தன்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு மற்றும் கட்டுரை மீதான தடையை நீக்கியது.

முகநூலின் இன் தணிக்கையானது சோசலிச சமத்துவக் கட்சியை மௌனமாக்குவதற்கும் போருக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் குற்றமாக்குவதற்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் முதன்முறையாக சோசலிச சமத்துவக் கட்சியை அதன் வருடாந்த இரகசிய சேவை அறிக்கையில் 'இடதுசாரி தீவிரவாதிகள்' என்று சேர்த்து மற்றும் அது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அவதூறு செய்தது. இதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி புகார் அளித்த பின்னர், உள்துறை அமைச்சகம் உளவுத்துறை அமைப்புகளால் கட்சியின் கண்காணிப்பை நியாயப்படுத்தியது. மேலும் 'ஒரு ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமூகத்திற்காக போராடுவது' மற்றும் 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதம்' எனக் கூறப்படுவதற்கு எதிரான கிளர்ச்சி' எனப்படுபவை அடிப்படையில் அரசியலமைப்பிற்கு எதிரானவை எனக் கூறியது.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜூலை 2019 இல் சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு கூறியது: “இந்தத் தாக்குதல் ஜேர்மனியில் சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தின் குற்றவியல் மரபுகளைத் தூண்டுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி மீதான உள்துறை அமைச்சகத்தின் தாக்குதல் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும் நோக்கம் கொண்டது. சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் அழிவு, அரசு அடக்குமுறை, இராணுவத்தை கட்டியெழுப்புதல் அல்லது முதலாளித்துவ சமூகத்தின் மற்ற அநீதிகளை எதிர்க்கும் அமைப்புகள், குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை சட்டபூர்வமாக்குவதற்கு இது பயன்படுத்தப்படும்”. பேர்லின் நிர்வாக நீதிமன்றம் அதன் சட்டத்தீர்ப்பில் மத்திய அரசாங்கத்தை ஆதரித்தபோது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் போர் எதிர்ப்பு ஒளிப்பதிவை முகநூல் தணிக்கை செய்தமை, இந்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. பெருகிவரும் சமூக சமத்துவமின்மை, தொற்றுநோயின்போது கொலைகார 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற போக்கை எதிர்கொள்ளும் நிலையில் பணக்காரர்களின் நலன்களுக்கான போர் உந்துதல் மற்றும் கொள்கைகளை எதிர்க்கும் எவரும் நசுக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றது.

எனவே, உத்தியோகபூர்வ போர்க் கொள்கைக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் இலக்காககொண்டதும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முகநூலினதும் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் தணிக்கை சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே நிறுத்தப்பட முடியும். எனவே, இந்த கட்டுரையை அனைத்து வழிமுறைகளிலும் பரப்பி தணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும். அதற்காக #defendSGP, #StopCensoringSocialism, #SpeakOutAgainstWW3 போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதுடன் முகநூல் ஊடாக இந்த ஒளிப்பதிவைபகிருங்கள்.

Loading