ரஷ்யாவுடனான போரில் நேட்டோவில் பதட்டங்கள் அதிகரித்து வருகையில் துருக்கி கிரேக்கத்தை கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 23 அன்று, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், மே 16 அன்று கிரேக்க பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) வாஷிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தை கடுமையாக கண்டித்தார். அவரைப் பொறுத்தவரை மிட்சோடாகிஸ் 'இனி இல்லை' என்று அறிவித்த எர்டோகன், மிட்சோடாகிஸ் இன் பயணத்தை நேட்டோ கூட்டணிக்கு தொலைநோக்கு தாக்கங்களை ஏற்படுத்தும் நம்பிக்கை மீறலாக தான் கருதுவதாக தெளிவுபடுத்தினார்.

ஏஜியன் கடலில் துருக்கியுடனான கிரேக்க மோதலில் அமெரிக்காவை ஈடுபடுத்தியதற்காக மிட்சோடாகிஸை எர்டோகன் கண்டித்தார். 'எங்கள் சர்ச்சையில் மூன்றாம் நாடுகளை சேர்க்க வேண்டாம் என்று நாங்கள் அவருடன் ஒப்புக்கொண்டோம். இருந்தபோதிலும், அவர் அமெரிக்காவிற்குச் சென்று காங்கிரஸில் பேசினார், எங்களிடம் F-16 [போர் விமானங்களை] கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார், ”எர்டோகன் கூறினார். ஜூலை 15, 2016 அன்று துருக்கியில் தோல்வியுற்ற நேட்டோ-ஆதரவு இராணுவ சதியின் ஆதரவாளர்களுக்கு கிரீஸ் அடைக்கலம் அளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். அது எர்டோகனை படுகொலை செய்வதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது.

எர்டோகன் கிரீஸில் நேட்டோ தளங்களை அமெரிக்கா நிர்மாணிப்பதையும், அது ரஷ்யாவையும் சீனாவின் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்கையும் குறிவைத்து தனது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக கருதுவதாகவும் தெரிவித்தார். அவர் கூறினார்: 'எல்லாவற்றிற்கும் மேலாக, கிரேக்கத்தில் கிட்டத்தட்ட 10 தளங்கள் உள்ளன. இந்த தளங்கள் மூலம் கிரேக்கம் யாரை அச்சுறுத்துகிறது? அல்லது இந்த தளங்கள் ஏன் கிரேக்கத்தில் உருவாக்கப்படுகின்றன?

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ கூட்டணியில் பின்லாந்து மற்றும் சுவீடன் இணைவதற்கான அமெரிக்க ஆதரவுடைய திட்டங்களின் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தப்போவதாக எர்டோகன் மிரட்டுகிறார். கிரீஸில் உள்ள நேட்டோ தளங்களை எர்டோகன் பலமுறை கண்டித்துள்ளார். நேட்டோவின் ஒருங்கிணைந்த இராணுவ கட்டளைக்கு கிரீஸ் திரும்புவதை வீட்டோ செய்யாத துருக்கியின் முடிவு தவறானது என்று அவர் கூறினார். மேலும் கடந்த வியாழன் அன்று அவர் கூறினார்: “[கிரீஸ்] திரும்பி வந்தபோது என்ன நடந்தது? உதாரணமாக, துருக்கியின் எல்லைக்கு அருகில் உள்ள கிரேக்க நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலி (Alexandroupoli) இல் அமெரிக்கா இப்போது ஒரு தளத்தை நிறுவியுள்ளது.”

வாஷிங்டனுக்கு மிட்சோடாகிஸ் இன் விஜயம் சந்தேகத்திற்கு இடமின்றி துருக்கிய அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் மூலோபாய அழுத்தத்தை கொடுத்தது. மிட்சோடாகிஸ் ட்விட்டரில் எழுதினார், பைடென் உடனான அவரது சந்திப்பு 'கிரீஸ்/அமெரிக்க உறவுகள் எப்படி எல்லா நேரத்திலும் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உச்சத்தில் உள்ளன என்பதை நிரூபித்தது.' மேலும், “எப்-35 விமானங்களின் ஒரு படைப்பிரிவை வாங்குவதற்கான செயல்முறையை நாங்கள் தொடங்குவோம். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்த அற்புதமான விமானத்தை கிரேக்க விமானப்படையில் சேர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

2016 நேட்டோ ஆதரவு சதி தோல்வியடைந்த பின்னர் ரஷ்யாவிடமிருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க F-35 திட்டத்தில் இருந்து துருக்கி விலக்கப்பட்டது.

நேட்டோவிற்குள் அதிகரித்து வரும் கிரேக்க-துருக்கிய மோதல்கள் மற்றும் பதட்டங்கள் ஏஜியன் கடலில் ஒரு ஆபத்தான விரிவாக்கத்துடன் கைகோர்த்து செல்கின்றன. கிரீஸ் மற்றும் துருக்கி இடையே வான்வெளி மீறல்கள் பற்றிய பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 'ஒரு பெரிய அளவிலான கிரேக்க கடற்படை பயிற்சியான Storm 2022, தற்போது நடந்து வருகிறது, மே 27 அன்று முடிவடையும்' என்று கிரேக்க செய்தித்தாள் கதிமெரினி அறிவித்தது. மேலும் துருக்கி, 'இரண்டு F-16s போர் விமானங்கள் கிரேக்க வான்வெளியை மீறியுள்ளது, வடக்கு துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலியில் இருந்து இரண்டு 2.5 கடல் மைல்கள்” என்று எழுதியிருந்தது.

இந்த வாரத்தில் இரண்டு முறை கிரீஸ் தனது வான்வெளியை மீறியதாக துருக்கி கூறியுள்ளது. துருக்கிய விமானப்படையின் ஈடுபாட்டின் விதிகளின்படி 'பரஸ்பர அடிப்படையில் மற்றும் இணங்க' வெள்ளிக்கிழமை இந்த மீறல்களுக்கு அது பதிலளித்தது.

கதிமெரினி துருக்கியை விமர்சித்தது, 'புலம்பெயர்ந்தோர் நிறைந்த படகுகள் கிழக்கு ஏஜியனில் உள்ள கிரேக்க தீவுகளுக்கு அதன் கரையை விட்டு வெளியேற அனுமதிக்கும் அதன் நடைமுறையை மீண்டும் தொடங்கியுள்ளது... நீண்ட காலத்திற்குப் பின்னர் துருக்கிய கடற்கரையிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் கிரேக்க கடல் எல்லைக்குள் நுழைய முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும்.'

எவ்வாறாயினும், ஏஜியன் மோதல் இப்போது உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோ போருடனும், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ விரிவாக்கத்திற்கான அமெரிக்கத் திட்டங்களுடனும் பிணைந்துள்ளது என்பது வெளிப்படையானது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேட்டோவிற்கு உதவியதாக எர்டோகன் பெருமையடித்துக் கொண்டார். அவர் கூறினார்: 'எல்லோரும் பெரிதாகப் பேச விரும்பும் கருங்கடலின் வடக்கில் நடந்த போரில் கூட, உக்ரேனுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க, உறுதியான மற்றும் நன்மை பயக்கும் ஆதரவை நாங்கள் வழங்கியுள்ளோம்.' உக்ரேனுக்கான துருக்கிய ஆயுத விற்பனை 2021 முதல் காலாண்டில் 2 மில்லியன் டாலரிலிருந்து 2022 முதல் காலாண்டில் 60 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தனது அரசாங்கம் 'முதலில் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கும் பின்னர் ரஷ்யாவுடன் அரசியல் மற்றும் மனிதாபிமான உறவுகளைப் பேணுவதன் மூலம் பிராந்தியத்தில் நீடித்த அமைதியை அடைவதற்கும் நேர்மையான முயற்சிகளை மேற்கொள்கிறது' என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து ஏஜியன் மற்றும் கருங்கடல்களுக்கு இடையில் உள்ள டார்டனெல்லெஸ் (Dardanelles) மற்றும் இஸ்தான்புல் (Istanbul) ஜலசந்திகளை ரஷ்ய மற்றும் நேட்டோ போர்க்கப்பல்களுக்கு அங்காரா மூடியுள்ளது.

நேட்டோ-ரஷ்யா போர் சர்வதேச அளவில் உழைக்கும் மக்களை, குறிப்பாக பால்கன் மற்றும் மத்திய கிழக்கில் பேரழிவுகரமான அணுசக்தி போருடன் அச்சுறுத்துகிறது. வியாழன் அன்று எர்டோகனின் அறிக்கை 'ஒரு புதிய உலகப் போர் வெடிப்பதால் பிராந்தியத்திற்கோ அல்லது உலகத்திற்கோ எந்தப் பயனும் இல்லை' என்பது துருக்கிய முதலாளித்துவத்தில் இந்த ஆபத்துகள் குறித்து பெருகிவரும் கவலைகளை சுட்டிக்காட்டுகிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் இலக்குகள் —முதலில் கிரிமியாவையும் டான்பாஸையும் திரும்பப் பெறுவது, ரஷ்யாவைச் செதுக்கி, ஒரு நவ-காலனித்துவ ஆட்சியை நிறுவுவது— இது துருக்கி உட்பட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள நாடுகளுக்கு எதிரான கொள்கையை ஒத்ததாகும்.

எவ்வாறாயினும், வாஷிங்டன் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளால் உந்தப்பட்ட உலகப் போரின் ஆபத்தை எர்டோகன் அரசாங்கம் போன்ற முதலாளித்துவ ஆட்சிகளால் எதிர்த்துப் போராட முடியாது. அது அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானது, ஏகாதிபத்தியத்துடன் பிணைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தைப் பற்றிய பயம் கொண்டது, துருக்கியானது ஏகாதிபத்தியப் போருக்கு சர்வதேச அளவில் இருக்கும் வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்டவும் ஒன்றிணைக்கவும் விரும்பாமலும், இயலாமலும் உள்ளது. அந்த பணிகள் தொழிலாள வர்க்கத்திடம் விழுகிறது.

எர்டோகன் பின்லாந்து மற்றும் சுவீடனின் நேட்டோ உறுப்புரிமையை வீட்டோ செய்வதாக அச்சுறுத்தும் அதே வேளையில், குர்திஷ் மக்களுக்கு எதிரான புதிய தாக்குதல்களுக்கும் மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கும் பச்சைக்கொடி காட்ட நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுடன் பேரம் பேசுவதன் ஒரு பகுதியாக மட்டுமே அவர் அவ்வாறு செய்கிறார்.

குர்திஷ்-தேசியவாத மக்கள் பாதுகாப்பு பிரிவுகளுக்கு (YPG) ஆதரவு அளித்ததன் அடிப்படையில் சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவதை வீட்டோ செய்வதாக எர்டோகன் அறிவித்தபோது, அவர் அமெரிக்க கொள்கையை குறிவைத்துள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ரஷ்ய ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக வடக்கு சிரியாவை ஆக்கிரமித்துள்ள ஒரு பினாமிப் படையாக YPG ஐ வாஷிங்டன் ஆதரிக்கும் அதே வேளையில், துருக்கிய முதலாளித்துவம் அதன் எல்லைகளில் YPG தலைமையிலான குர்திஷ் அரசு உருவாவதைத் தடுப்பதில் உறுதியாக உள்ளது.

இந்த நோக்கத்திற்காக, 2016ல் இருந்து சிரியா மீது பலமுறை படையெடுத்து, நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்த எர்டோகன், சிரியாவில் புதுப்பிக்கப்பட்ட துருக்கிய படையெடுப்பை அச்சுறுத்தினார்: 'எங்கள் தெற்கு எல்லைகளில் 30 கிலோமீட்டர் ஆழமான பாதுகாப்பான மண்டலங்களை உருவாக்க நாங்கள் தொடங்கியுள்ள பணிகளின் மீதமுள்ள பகுதிகள் குறித்து விரைவில் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குகிறோம்.'

சுவீடனும் பின்லாந்தும் சிரியாவில் YPG மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) க்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என எர்டோகன் கோரியுள்ளார். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், சுவீடிஷ் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் மற்றும் பின்னிஷ் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் பரபரப்பான சந்திப்புகளில் அவர் இதைப் பற்றி கலந்துரையாடினார்.

திங்களன்று, எர்டோகன் கூறினார்: 'இந்த நாடுகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு நடைமுறை மற்றும் அரசியல் ஆதரவை வழங்குவதற்கும், நேட்டோ உறுப்புரிமைக்காக துருக்கியின் ஒப்புதலை எதிர்பார்ப்பதற்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் கூறியுள்ளோம், மேலும் அவர்கள் அதை வெளிப்படையான அறிகுறிகளுடன் காட்ட வேண்டும்.'

இருப்பினும், சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் அனுமதிக்கும் அழுத்தத்திற்கு எர்டோகன் அடிபணிவார் என அமெரிக்க அதிகாரிகள் இன்னும் கணித்துள்ளனர். செவ்வாயன்று, அமெரிக்கத் துணைப் பாதுகாப்புச் செயலர் காத்லீன் ஹிக்ஸ், வாஷிங்டன் 'பின்லாந்து மற்றும் சுவீடன் பற்றிய இந்த [கவலைகளை] துருக்கியர்களுடன் நேரடியாகத் தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளது' என்றார்.

உண்மையில், ரஷ்யா மீதான நேட்டோவின் போர், மத்திய கிழக்கு முழுவதும் ஒரு பிராந்திய மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. YPG போராளிகள் மீதான மேலும் தாக்குதல்களுக்கு அங்காராவின் தயாரிப்புகள், உக்ரேனில் தனது படைகளை வலுப்படுத்த சிரியாவில் தனது இராணுவ பிரசன்னத்தை ரஷ்யா குறைக்கிறது என்ற கூற்றுகளுக்கு மத்தியில் வந்துள்ளது. உக்ரேனியப் போர்முனையில் போரிடுவதற்காக வாபஸ் பெறப்பட்ட ரஷ்யப் படைகளுக்குப் பதிலாக ஈரானியப் படைகள் சிரியாவில் நிலைநிறுத்தப்படுவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று, 'உக்ரேன் நெருக்கடி சிரிய உள்நாட்டுப் போரை எவ்வாறு மோசமாக்கும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், வாஷிங்டன் போஸ்ட் எழுதியது: 'அசாத் ஆட்சிக்கான ஆதரவில் ரஷ்யாவின் பங்கைக் குறைப்பது ஒரு சாதகமான வளர்ச்சியாக சிலர் கருதலாம். ஆனால் இந்த மாற்றங்கள் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரிப்பதுடன் சண்டையை மீண்டும் தொடங்குவதற்கான குறிப்பிடத்தக்க அபாயங்களை உருவாக்கக்கூடும் என்பதே எங்கள் மதிப்பீடு.”

பிராந்திய மற்றும் உலகளாவிய போரின் வளர்ந்து வரும் ஆபத்து, தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் போராட்டங்களை ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கமாக வளர்ப்பதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading