ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புக் கொள்கையில் பங்கேற்பதற்கு டேனிஷ் சர்வஜன வாக்கெடுப்பு பெரும்பான்மையை உருவாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெளிவந்துள்ள கருத்து கணிப்புகளின்படி ஜூன் 1 வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பாதுகாப்புக் கொள்கையில் டென்மார்க்கின் ஈடுபாட்டை சுமார் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் ஆதரித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் பங்கேற்பதற்கு நாட்டின் 30 ஆண்டுகால நிராகரிப்பை முறியடிக்க அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் செய்தன.

இதன் விளைவாக, டேனிஷ் துருப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்படும் மற்றும் இராணுவ பயன்படுத்தல்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய முடிவெடுக்கும் செயல்முறைகளில் கோபன்ஹேகன் பங்கேற்கும். இது பெருகிய முறையில் புவிசார் அரசியல் வெடிக்கும் பிராந்தியமான ஆர்க்டிக்கில் இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாய்ப்புகளைத் திறக்கும்.

Mette Frederiksen, in Copenhagen, Denmark on May 17, 2021 (Photo: Wikipedia) [Photo: US Department of State]

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு சமூக ஜனநாயக அரசாங்கத்தின் முழு ஆதரவின் விளைபொருளே இந்த வாக்கெடுப்பு. மார்ச் 6 அன்று, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வெற்றிகரமாக உக்ரேன் மீதான தனது பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தூண்டிய இரண்டு வாரங்களுக்குள், டேனிஷ் அரசாங்கம் எதிர்கட்சியான வென்ஸ்ட்ரே (தாராளவாத) மற்றும் பழைமைவாதக் கட்சிகளுடன் பாதுகாப்புக் கொள்கையில் ஒரு விரிவான உடன்பாட்டை அறிவித்தது. முன்னாள் ஸ்ராலினிச பசுமை இடதுகளால் ஆதரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 2033 ஆம் ஆண்டிற்குள் டேனிஷ் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்துவது, ரஷ்ய எரிவாயு மீது நாடு தங்கியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஜூன் 1 வாக்கெடுப்பை நடத்துவது போன்ற உறுதிமொழியை உள்ளடக்கியிருந்தது.

ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ விரிவாக்கத்திற்கு கோபன்ஹேகனின் ஆதரவின் மற்றொரு அடையாளமாக, சமூக ஜனநாயக அரசாங்கம் கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை குறிவைக்க ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு அனுப்புவதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.

மாஸ்ட்ரிச் உடன்படிக்கையை வாக்காளர்கள் நிராகரித்ததை தொடர்ந்து 1992 இல் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புக் கொள்கையில் இருந்து விலகுவது குறித்து டென்மார்க் பேச்சுவார்த்தை நடத்தியது. எடின்பேர்க் உடன்படிக்கையின் நான்கு விடயங்களில் பாதுகாப்பு விலகலும் ஒன்றாகும். இதில் நீதி, குடியேற்றக் கொள்கை மற்றும் பொருளாதாரம் மற்றும் நாணய ஒன்றியம் (யூரோ நாணயம்) ஆகியவற்றுக்கான விதிவிலக்குகள் அடங்கும்.

டென்மார்க்கின் பாதுகாப்புக் கொள்கையானது பாரம்பரியமாக நேட்டோவில் அதன் முழுப் பங்கேற்பையும், 1949 இல் ஸ்தாபக உறுப்பினராக இருந்ததையும், கிரீன்லாந்தில் உள்ள ஆர்க்டிக் தளங்களில் இருந்து அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதையும் மையமாகக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது அத்தீவில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதற்கு டென்மார்க் ஒப்புக்கொண்டது. வட அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்துவதற்கு கிரீன்லாந்து நாஜி ஜேர்மனிக்கு ஒரு தளமாக மாறும் என்ற தனது அதிகரித்த கவலையை வாஷிங்டன் அப்போது வெளிப்படுத்தியது. அமெரிக்காவின் முக்கிய தளம் தூலே (Thule) ஆகும். இது 1951 இல் கட்டப்பட்டு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கான முக்கிய இடமாக மாறியது.

நேட்டோவை விட ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைகள் குறைவாகவே இருந்தபோதிலும், 2003 இல் மாசிடோனியாவிற்கு முதல் தடவையாக அனுப்பப்பட்டதில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. அவை கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து பொஸ்னியா, மாலி, சோமாலியா, ஈராக், ஜோர்ஜியா மற்றும் ஆப்கானிஸ்தான் வரையிலான நடவடிக்கைகள் உள்ளன. ஏகாதிபத்தியப் போர்களில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள் ஐரோப்பாவை அடைவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான கடற்படை மத்தியதரைக் கடலில் ரோந்து சென்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி மற்றும் பிரான்சில் உள்ள ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், ஐரோப்பிய ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை எளிதாக்கும் வகையில், தேவைப்பட்டால் அமெரிக்காவிற்கு எதிராகவும் ஐரோப்பிய இராணுவ தகமைகளை பலப்படுத்துவதற்காக அழுத்தம் கொடுக்கின்றன. கூட்டு ஐரோப்பிய ஆயுத அமைப்புகள் மற்றும் கட்டளை கட்டமைப்புகளின் உருவாக்கமும் இதில் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புக் கொள்கையில் டென்மார்க்கின் பங்கேற்பானது, அது இன்னும் காலூன்றாத பிராந்தியங்களில் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறக்கும். டென்மார்க், 5.8 மில்லியன் மக்கள்தொகையுடன், 7,000 முதல் 9,000 தொழில்முறை துருப்புக்களைக் கொண்ட ஒப்பீட்டளவில் மிதமான இராணுவத்தைக் கொண்டிருந்தாலும், ஃபரோ (Faroe) தீவுகள் மற்றும் கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாடு வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக்கில் உள்ள புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அணுகலை வழங்குகிறது.

ஆர்க்டிக்கின் பரந்த பகுதிகளுக்கு பிராந்திய உரிமைகோரல்களை கொண்டுள்ள நாடுகளான கனடா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகளில் டென்மார்க் ஒன்றாகும். காலநிலை மாற்றம் காரணமாக, ஆர்க்டிக்கின் மீதான கட்டுப்பாடு பெரும் சக்திகளுக்கும், டென்மார்க் போன்ற சிறிய நாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கவலையாக உள்ளது. உருகும் பனிக்கட்டிகள் எண்ணெய் மற்றும் எரிவாயு, முக்கியமான கனிமங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் குறிப்பிடத்தக்க இருப்புகளுக்கான அணுகலைத் திறப்பதுடன், மேலும் முன்னர் பனியால் தடுக்கப்பட்ட கடல் பாதைகள் திறக்கப்படுவதால் வர்த்தக வழிகளின் தூரத்தை கணிசமாகக் குறைக்கும்.

ரஷ்யாவின் ஆர்க்டிக் கரையோரத்தில் செல்லும் வடகடல் பாதை (NSR) மிகவும் போட்டியிடும் பாதைகளில் ஒன்றாகும். இதனை மாஸ்கோ தனது உள்நீர்நிலைகள் என்று கூறுகிறது. சீனக் கப்பல்கள் வடகடல் பாதையைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யா சீனாவுடன் ஒத்துழைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வாஷிங்டன் இதை எதிர்ப்பதுடன், வடகடல் பாதை அனைத்து கப்பல் போக்குவரத்துக்கும் சுதந்திரமான பாதையாக சர்வதேச நீர்நிலைகளாக கருதப்பட வேண்டும் என்று கூறுகிறது.

கிரீன்லாந்து, ஃபரோ தீவுகள் மற்றும் அவற்றின் பிராந்திய நீர்நிலைகளில் டேனிஷ் இராணுவம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் கூட்டு ஆர்க்டிக் கட்டளையகத்தால் மேற்பார்வையிடப்படுகின்றன. அக்டோபர் 2020 இல், கூட்டு ஆர்க்டிக் கட்டளையகத்துடன் நேட்டோ ஒரு முறையான கூட்டாண்மைக்குள் நுழைந்தது. இதில் உளவுத்துறை தகவல்களை பரிமாறல், கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்கள் ஆகியவை அடங்கும்.

ஆர்க்டிக்கில் பதட்டத்தை அதிகரிக்க உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நேட்டோ சக்திகள் கையிலெடுத்துள்ளன. 1996 இல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பான தற்போது ரஷ்யாவின் தலைமையில் உள்ள இப்பிராந்தியத்தில் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி விடயங்களில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேற்பார்வையிடும் ஆர்க்டிக் கவுன்சிலின் எட்டு உறுப்பினர்களில் ஏழு பேர் அவற்றின் குழுக்களில் பங்கேற்பதை நிறுத்தியுள்ளன.

அமெரிக்கா, கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை, ஆர்க்டிக் குழுவின் செயல்பாடுகளை திறம்பட நிறுத்தியது. நேட்டோ அங்கத்துவத்திற்கு விண்ணப்பிக்க பின்லாந்து மற்றும் சுவீடன் எடுத்த கூட்டு முடிவு ஆர்க்டிக் புவிசார் அரசியலையும் பாதிக்கிறது. அவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பால்டிக் கடலின் கரையில் அமைந்துள்ளதுடன் மேலும் அவை நேட்டோ இராணுவப் படைகளுக்கு ஆர்க்டிக் சூழ்நிலைமைகளின் கீழ் பயிற்சியளிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பெரிய நாடுகளும், குறிப்பாக ஜேர்மனி, நீண்ட காலமாக ஆர்க்டிக் விவகாரங்களில் ஒரு பெரிய பங்கிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 2021 இல், ஐரோப்பிய ஒன்றியம் அதன் புதிய ஆர்க்டிக் மூலோபாயத்தை வெளியிட்டது. ஆர்க்டிக் குழுவில் தனக்கு இன்னும் உத்தியோகபூர்வ பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பது அதன் முக்கிய புகார்களில் ஒன்றாகும். இந்த மூலோபாயம் கிரீன்லாந்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய அலுவலகத்தைத் திறப்பதற்கும் உறுதியளித்தது. புதிய மூலோபாயத்தை அறிவிக்கும் செய்தி அறிக்கை, ஆர்க்டிக் 'காலநிலை மாற்றம், மூலப்பொருட்கள் மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கு போன்றவற்றின் பார்வையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது' என்று குறிப்பிட்டது.

'ஜேர்மன் ஆர்க்டிக் கொள்கைக்கான வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் பிராந்தியத்திற்கான அதன் முதல் உத்தியோகபூர்வ மூலோபாய ஆவணத்தில், ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் ஆர்க்டிக்கை 'அதிகரித்த நெருக்கடிக்கு சாத்தியமான பிராந்தியமாக' கருதுகிறது என்று 2019 இல் குறிப்பிட்டது. ஆவணம் தொடர்ந்தது, “பல நாடுகள் இராணுவ ரீதியாக ஆர்க்டிக்கில் தங்கள் நலன்களை அதிகளவில் பாதுகாத்து வருகின்றன. இது ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும். இரட்டை பயன்பாட்டு திறன்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் நிலையான நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வெளிப்புற தலையீட்டாளர்களின் மூலோபாயங்கள் ஆகியவை தற்காப்பு மற்றும் தாக்குதல் கொள்கை விருப்பங்களுக்கு இடையிலான பிரிவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. …ஆர்க்டிக்கில் ஒத்துழையாத நடத்தைக்கான சாத்தியம் அதிகரிக்கிறது. இது பிராந்தியத்தில் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு கொள்கை ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் அதன் மூலம் ஜேர்மன் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும்”.

பேர்லினின் வெளியுறவுக் கொள்கைக்கான ஆர்க்டிக்கின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் குறித்து அரசாங்கத்துடன் இணைந்த சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் நிறுவனம் (SWP) இந்த பெப்ரவரியில் வெளியிட்ட ஒரு ஆய்வு, 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதிக்கு பின்னர் காணப்படாத உலகளாவிய ஜேர்மன் ஏகாதிபத்திய இலட்சியங்களின் மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. 'ஆர்க்டிக்கில் ரஷ்யா' என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில், 'இந்தப் பகுதி ஜேர்மனிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தவொரு இராணுவ மோதலிலும், ஜேர்மன் கூட்டாட்சி ஆயுதப் படைகள் (Bundeswehr) நேட்டோவின் ஒரு பகுதியாக அழைக்கப்படும்; மற்றும் ஜேர்மனியே வடக்கு ஐரோப்பாவின் புவி-பொருளாதார மற்றும் புவி-மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் கோடுகளில் உள்ளது. இவற்றின் எந்த இடையூறும் முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்”.

புருஸ்ஸெல்ஸை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான ஐரோப்பிய கொள்கை மையம், ஐரோப்பிய ஒன்றியம் ஆர்க்டிக் குழுவில் 7+ மாதிரியை முன்மொழியலாம், அதாவது இவ்வமைப்பை புறக்கணிக்கும் ஏழு ஆர்க்டிக் குழு உறுப்பினர்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கொண்ட அமைப்பு வேண்டும் என சமீபத்திய அறிக்கையில் பரிந்துரைத்தது.

டென்மார்க், ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திற்கு இடையே காற்றலை ஆற்றல் உருவாக்கம் பற்றி விவாதிக்க மே 18 அன்று எஸ்ப்ஜேர்க்கில் நடந்த ஒரு மாநாட்டில், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஊர்சுலா வொன் டெயர் லெயன் இருவரும் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கொள்கையிலிருந்து டென்மார்க் விலகியிருப்பதை இல்லாதொழிப்பதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர், டேனிஷ் பாதுகாப்பு மந்திரி மோர்டன் போட்ஸ்கோவ், எஸ்ப்ஜேர்க் துறைமுகத்தை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பால்டிக் கடல் பகுதிக்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு செல்வதற்கான நேட்டோ மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாக அறிவித்தார்.

டென்மார்க்கின் அரசியல் ஸ்தாபகத்திலும் ஊடகங்களிலும் பாதுகாப்பு விலகலை ஒழிப்பதற்கான பெரும் ஆதரவும், இந்த நடவடிக்கைக்கு எந்தவிதமான உண்மையான எதிர்ப்பும் இல்லாததால், புதன் கிழமை வாக்கெடுப்பில் ஒருதலைப்பட்சமான முடிவை உருவாக்க உதவும்.

விலகுவதற்கு எதிரான 'இல்லை' என்ற பிரச்சாரம் ஒரு தேசியவாத அடிப்படையில் தீவிர வலதுசாரி டேனிஷ் மக்கள் கட்சியால் வழிநடத்தப்பட்டது. டென்மார்க் தனது ஆயுதப் படைகள் மீது முழு இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியதுடன், ஐரோப்பிய இராணுவத்தில் டென்மார்க் படையாளர்கள் ஈடுபடுத்தப்படுவதைப் பற்றி எச்சரித்தனர்.

போலி-இடது சிவப்பு-பச்சைக் கூட்டணி (RGA) 'இல்லை' என்ற வாக்கெடுப்புக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம் அதன் சிதைந்த இராணுவ-எதிர்ப்பு நற்சான்றிதழ்களைக் காப்பாற்ற முயன்றது. இருப்பினும், அதன் பிரச்சாரம் கிட்டத்தட்ட நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

போருக்கான இடதுசாரி எதிர்ப்பை அடக்குவதற்கும் கழுத்தை நெரிப்பதற்கும் சிவப்பு-பச்சைக் கூட்டணி நீண்டகாலமாக உழைத்துள்ளது. 2019 முதல், ஹார்பூன் ஏவுகணைகள் உட்பட உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை அனுப்பும் மெட்டே ஃபிரெடெரிக்சனின் சிறுபான்மை சமூக ஜனநாயக அரசாங்கத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதில் பாராளுமன்றத்தில் அதன் வாக்குகள் முக்கியமானவை. 2014 இல் இருந்து ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான போர் உட்பட ஏகாதிபத்திய போர்களுக்கும் சிவப்பு-பச்சைக் கூட்டணி ஆதரவாக வாக்களித்தது.

Loading