இலங்கை அமைச்சின் உயர்மட்ட அதிகாரி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை "தேசத் துரோகிகள்" என்று அறிவிக்கின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரிகளுக்கு நடத்திய கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள 'மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின்' அம்சங்களை கோடிட்டுக் காட்டினார்.

'இந்த விஷயங்களில் உடன்படாத எந்தவொரு அரசியல் கட்சி, வெகுஜன அமைப்பு அல்லது தொழிற்சங்கம் அனைத்தும், எதிர்கால சந்ததியினரால் தேசத் துரோகிகளாக கருதப்படும்,' என அவர் அறிவித்தார்,

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே (Source: Priyantha Mayadunne Facebook)

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை சுமத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே மாயாதுன்னேவின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம், தனது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இலங்கையின் 'கடன் நிலைத்தன்மை' உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பண நெருக்கடியில் உள்ள கொழும்பு ஆட்சிக்கு பிணை எடுப்பு கடன் வழங்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, அரச செலவினங்களை வெட்டுவது, வரிகளை அதிகரிப்பது, அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது அல்லது வணிகமயமாக்குவது மற்றும் சமூக நலத் திட்டங்களை வெட்டுவதும் அடங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாரிய வேலை அழிப்பு, அரச துறையில் ஊதியம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள், மானியங்களை நீக்குதல் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் கல்வி மீது மேலும் தாக்குதல்களும் அமுல்படுத்தப்படும்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் அச்சுறுத்தும் கருத்துக்கள் வெறும் தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் அனைவருக்கும் எதிராக ஒரு அடக்குமுறை அரசியல் பிரச்சாரத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது என்பதற்கான அறிகுறியே இதுவாகும்.

மாயாதுன்னேயின் 15 நிமிட உரையின் ஒரு பகுதி, பட்டினி ஆபத்து வேகமாக மோசமடைந்து வருவதை விளக்கியது. “நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த மாதத்திற்குள் கண்டிப்பாக அதற்குள் மூழ்கிவிடுவோம். சிறு போகத்தில் நமது விவசாயப் பொருட்கள் நன்றாக இருக்கும் என்பதற்கு எங்களிடம் எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஆணவத்துடன் மக்களைக் குற்றம் சாட்ட முயன்ற மாயாதுன்னே, 'மக்கள் புரிந்துகொள்வதற்கு வலியை அனுபவிக்க வேண்டும், அப்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்,” என்று கொடூரமாக அறிவித்தார்.

மாயாதுன்னே சாதாரண மக்கள் மீது குற்றம்சாட்டியது, நெருக்கடியின் உண்மையான தோற்றுவாயை மூடி மறைக்க எடுத்த ஒரு அப்பட்டமான முயற்சியாகும். கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்டு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ தூண்டிய போரால் உக்கிரமடைந்து ஒரு புதிய உச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள உலக முதலாளித்துவ முறிவின் கூர்மையான வெளிப்பாடே இலங்கையில் வெளிப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களும் முழு ஆளும் வர்க்கமும் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதன் மூலம் இலாப முறையை பாதுகாக்க தீவிரமாக முயன்று வருகின்றன.

'அவசர இடையேற்பாடு திட்டம் அவசியம்' என்று கூட்டத்தில் கூறிய மாயாதுன்னே, அரச ஊழியர்கள் தங்களின் அனைத்து 'சலுகைகளையும்' குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்கு 'ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.

“பொருளாதாரம் 10,000 டொலரை [தனிநபர் வருமான நிலை] அடையும் வரை ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக் கொடுப்பனைவை கேட்க யாருக்கும் உரிமை இல்லை. 17.5 பில்லியன் ரூபாய் [50 மில்லியன் டொலர்] ஓய்வுக் கொடுப்பனவு தொகை [ஒரு மொத்த ஓய்வூதியத் தொகை] செலுத்த உள்ளது,” என்று கூறிய அவர், இந்தத் தொகையை வழங்குவதற்கு வழி இல்லை என்று வலியுறுத்தினார்.

அரச துறை வேலை மற்றும் சம்பள வெட்டுக்களை முன்னறிவித்த மாயாதுன்னே தொடர்ந்து தெரிவித்ததாவது: “அரச துறையில் அதிகபட்சம் தாங்கக்கூடிய தொழில்கள் 500,000 அல்லது அதிகபட்சம் 800,000 ஆகும். எனவே, ஓய்வு பெறுவதும், ஓய்வுக் கொடுப்பனவு கேட்காமல் ஓய்வூதியம் பெறுவதுமே மிகவும் பொருத்தமானது. தொழிற்சங்கங்கள் கூச்சலிட்டாலும் கூட, கொடுக்க பணம் இல்லை. பணத்தை அச்சடித்து எங்களால் செலுத்த முடியாது. எனவே, அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டிய யுகம் இது”.

1.7 மில்லியனாக இருந்த அரச வேலை வாய்ப்புகள் முந்தைய அரசாங்கங்களால் விரிவாக்கப்பட்டுள்ளதாக கூறிய மாயாதுன்னே, தற்போதைய நிலைமைகளின் கீழ் இத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதை தான் எதிர்ப்பதாகவும் அறிவித்தார்.

அமைச்சின் செயலாளரின் அறிக்கைகள் கொழும்பு உயரடுக்கிற்குள் இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதங்களை எதிரொலிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அரசாங்கங்கள், பலமுறையும் சர்வதேச நாணய நிதியத்தின் முந்தைய பொருளாதார சீர்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளன. இருப்பினும், பின்வாங்குவது சாத்தியமில்லை என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட மின்வெட்டு ஆகியவற்றுடன் விலைவாசிகள் விண்ணைத் தொட்டதால், குவிந்துவந்த தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பு, கடந்த மாதங்களில் ஆழமடைந்தது. இது ஏப்ரல் தொடக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள நிலையில், நாடு முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதற்கு வழியமைத்தது.

ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் இரண்டு பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. இராஜபக்ஷ அரசாங்கத்தை மட்டுமல்ல முழு அரசியல் ஸ்தாபனத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த பகுதியினரின் ஆதரவுடன் சக்திவாய்ந்த தேசிய வேலைநிறுத்தத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த வேலைநிறுத்தங்களை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்களின் துரோகத்தை நம்பியிருந்த, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க-சார்பு பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதிய திட்டத்தை திணிக்க வேலை செய்கிறார்.

விக்கிரமசிங்க மே 24 அன்று ராய்ட்டர் செய்திச் சேவையிடம், தான் தற்போது தயாரித்து வரும் அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம், அரசாங்க செலவினங்களை 'எலும்புவரை வெட்டிக் குறைக்கும்” என்று கூறினார்.

முதற்கட்டமாக, சேவையை பேணுவதற்கு தேவையான அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்குமாறு அனைத்து அரச நிறுவன அதிகாரிகளுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரச ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு அழைக்கப்படுகிறார்கள். இந்த வாரம், தொழில் அமைச்சானது அதன் அனைத்து அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என்று அறிவித்தது. மேலும் வேலை வெட்டுக்கள் பற்றியும், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் எவ்வாறு குறைக்கப்படலாம் என்பது பற்றியும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளோ அல்லது வேறு எந்த எதிர்க்கட்சிகளோ இந்த உடனடி தாக்குதல்களை எதிர்க்கவில்லை. அவை அனைத்தும் சர்வதே நாணய நிதிய திட்டத்தை திணிப்பதை ஆதரிக்கின்றன.

அதேபோல், தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் மற்றும் இலட்சக் கணக்கான அரச வேலைகளை வெட்டுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து வஞ்சத்தனமான மௌனத்தை கடைபிடிக்கின்றன.

கடந்த ஆண்டு, ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் கோபமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு பிரதிபலித்த தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திடம் 'பொருளாதார நெருக்கடியைப் புரிந்து கொண்டுள்ளதாக' கூறின. தொழிலாளர்களின் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. தங்கள் உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்த முடியாதபோது, அவை போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து அவற்றை அவை விரைவாக காட்டிக் கொடுத்தன.

சோசலிச சமத்துவக் கட்சியால் (சோ.ச.க.) தொடங்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களின் கூட்டணி, திங்களன்று “அரச துறையில் வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை எதிர்த்திடு! தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த பகுப்பாய்வைப் படித்து, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருநதோட்டங்களிலும் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளிலும் அவசரமாக நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கான போராட்டத்தில் எங்களுடன் சேர்ந்துகொள்ளுமாறும் சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் மூலம் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கத் தயாராகுமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading