இங்கிலாந்து இரயில் வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக TUC பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் நடவடிக்கைகளுக்கு கோருகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொழிற்சங்க காங்கிரஸால் (TUC) நடத்தப்பட்ட 'நாங்கள் சிறந்த வாழ்க்கைச் செலவைக் கோருகிறோம்' என்ற பேரணியில் சனிக்கிழமை இலண்டனில் சுமார் 40-50,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 50,000 இரயில் ஊழியர்களின் இந்த வார தேசிய இரயில் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சதுக்கத்தில் TUC பேரணியின் ஒரு பகுதி (WSWS Media)

எழுச்சியடைந்துவரும் வேலைநிறுத்த அலையை கட்டுப்படுத்த முயன்று, தொழிற்சங்க அதிகாரத்துவம் அனைத்து தடைகளையும் பயன்படுத்தியது. அப்படியிருந்தும், சமீபத்திய ஆண்டுகளில் வருடாந்த TUC எதிர்ப்புகளை விட இந்தப் பேரணி சற்றே பெரியதாக இருந்தபோதிலும், கன்சர்வேடிவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, முதலில் ஒரு காட்டுமிராண்டித்தனமான சிக்கன தாக்குதலைத் தொடங்கிய பின்னர் 2011 இல் அழைப்பு விடப்பட்டதில் சுமார் 200,000 பேர் கலந்துகொண்டதைவிட இது மிகவும் சிறியதாக இருந்தது.

ஜோன்சன் அரசாங்கத்தையும் முதலாளிகளையும் எதிர்க்கும் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சக்திவாய்ந்த உணர்வின் மத்தியில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த பேரணி, பல தசாப்தங்களாக காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு பின்னர் தொழிற்சங்கங்களின் அதிகாரம் வீழ்ச்சியடைவதற்கு சாட்சியமளிக்கிறது. இது போர்க்குணமிக்க வார்த்தையாடல்களை நோக்கிய அவசியமான ஒரு திருப்பத்தை மறைக்கமுடியாமல் போனது.

பங்குபற்றியவர்களில் பலர் உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகள், தொழிற்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் உட்பட பழைய தலைமுறையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளாவர். ஆனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் வாழ்க்கைத் தரத்தின் மீதான பேரழிவுகரமான தாக்குதல் மற்றும் 11 சதவீதத்தை நோக்கிச்செல்லும் பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைத் தேடுகின்றனர். பேரணியின் நாளில், 2008 மற்றும் 2021 க்கு இடையில் சராசரி தொழிலாளி கிட்டத்தட்ட 20,000 பவுண்டுகள் உண்மையான வருவாயை இழந்ததைக் காட்டும் ஆய்வு ஒன்றை TUC வெளியிட்டது.

பாராளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் நிறைவுப் பேரணியில் TUC யின் திவாலான அரசியல் உறுதிப்படுத்தப்பட்டது. ஜோன்சனின் அரசியல் பங்காளிகளான தொழிற் கட்சிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின், ஒரு போராட்டமும் இல்லாமல் பிளேயர் சார்பான வலதுசாரி கன்னைக்கு கட்சியை கையளித்த பின்னர் அதிலிருந்து விலக்கப்பட்டு, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நபராக ஆர்ப்பாட்டத்தில் சுற்றித் திரிந்தார்.

புதிய தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மருக்கு ஏதோவொரு விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களுடன் தொடர்புபட்டவராக காட்டலாம் என எந்த இடத்திலும் தோன்றும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால் அவரது துணைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர் மற்றும் டோனி பிளேயரின் கையாள் வெஸ் ஸ்ட்ரீடிங் ஆகியோர் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பரஸ்பர உடன்பாட்டின் மூலம் அவர்களது அரசியல் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அவர்களுக்கு TUC தலைவர் பிரான்சிஸ் ஓ`கிராடி உட்பட புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அடுத்த நாள், உள்ளூர் அரசாங்க சங்க தொழிலாளர் குழுவின் மாநாட்டில் பேசிய ஸ்டார்மர், இரயில் வேலைநிறுத்தங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும் என அறிவித்து, தொழில்துறை நடவடிக்கையை தூண்டியதற்காக பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் மீது குற்றம் சாட்டினார். பிரிவு.' அவர் ட்விட்டரில், “நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. டோரிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து இதை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்றார்.

ஷரோன் கிரஹாம் (Unite), ஜோ கிரேடி (பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தொழிற்சங்கம்), டேவ் வார்ட் (தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் சங்கம்) மற்றும் மார்க் செர்வோட்கா (பொது மற்றும் வணிகச் சேவைகள் சங்கம்) போன்ற ஒரு தொழிற்சங்க அதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக தொழிலாள வர்க்கத்தின் மோசமான தோல்விகளை மேற்பார்வை செய்த பின்னர் தொழிற்சங்கங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

Bank of England ஆளுனர் ஆண்ட்ரூ பெய்லிக்கு தொழிலாளர்கள் ஊதிய உயர்வைக் கோரக் கூடாது என்று வலியுறுத்துவதற்கு உரிமை இல்லை என்று மற்றொரு அதிகாரத்துவவாதி அறிவித்தபோது ஓ'கிரேடி தானே கைதட்டினார். ஆனால் அவர் பெய்லியுடன் இங்கிலாந்து வங்கியின் இயக்குநர்கள் சபையில் அமர்ந்துள்ளார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் ஒரு தொழில்துறை புலி மீது சவாரி செய்கிறார்கள், 'தேவைப்பட்டால்' வேலைநிறுத்த வாக்கெடுப்புக்களையும் தொழில்துறை நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வோம் என்று ஒருவர் பின் ஒருவராக அச்சுறுத்துகின்றனர். சமீபத்தில் நடவடிக்கைக்கு அச்சுறுத்தும் தொழிற்சங்கங்களில் Unison, 3 சதவீத ஊதியம் மட்டுமே கிடைக்கும் என்ற அச்சுறுத்தலை எதிர்நோக்கும் நூறாயிரக்கணக்கான தேசிய சுகாதார சேவை ஊழியர்களையும் மற்றும் 450,000 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கல்வி தொழிற்சங்கத்தையும் (NEU) பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

RMT தலைவர் மிக் லிஞ்ச் TUC பேரணியில் பேசுகிறார் (WSWS Media)

இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் (RMT) தலைவர் மிக் லிஞ்ச் கடந்த வாரம் தேசிய இரயில் பிரச்சினைக்கு முடிவுகட்ட பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அதில் “எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல்” அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்து இரங்கி ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அவர் தனது உறுப்பினர்களிடையேயும் மற்றும் பரந்த தொழிலாள வர்க்கத்தினிடையே நிலவும் போர்க்குணமிக்க உணர்வை நன்கு அறிந்து பேரணியில் 'உங்கள் வேலைநிலைமைகள் தாக்கப்பட்டால், உங்கள் ஊதியம் தாக்கப்பட்டால், உங்கள் வேலைகள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டால், நீங்கள் ஒரு வர்க்கப் போராட்டத்தில் உள்ளீர்கள்” என்று கூறினார்.

'எங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த சமரசமும் இல்லை. மற்றும் செய்தி தெளிவாக உள்ளது: நாங்கள் இப்போது ஒரு வர்க்கப் போராட்டத்தில் இருக்கிறோம்.'

லிஞ்ச் 'எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இந்த வேலைநிறுத்தத்தை நாங்கள் தொடருவோம். பிரச்சாரம் நடக்கிறது. மோதல் நடந்து கொண்டிருக்கிறது. போராட்டம் தொடர்கிறது... இது எங்கள் வாழ்விற்கான போராட்டம், RMT க்கு வெற்றி' எனக் கூறி முடித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, பைனான்சியல் டைம்ஸ், “இங்கிலாந்தின் தொழில்துறை நடவடிக்கைகளின் அலைகளால் அரசாங்கம் பதட்டமடைந்துள்ளது” என்ற கட்டுரையை வெளியிட்டது. அதில் “அமைச்சரவை மந்திரி” ஒருவரை மேற்கோள் காட்டி, “ஊதியத்தைக் குறைப்பதற்கும், வேலைநிறுத்தத்திற்கு பல துறைகளை நிர்ப்பந்திக்காமல் பணவீக்க ஊதிய சுழலைத் தவிர்ப்பதற்கும் அரசாங்கம் ஒரு 'நுட்பமான கயிற்றில்' நடப்பதாகக் கூறினார். 'நாங்கள் இதை தவறாகப் புரிந்து கொண்டால், ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தும், மேலும் கொந்தளிப்பை உருவாக்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான அபாயத்திற்குள் செல்வோம்’”.

எவ்வாறாயினும், தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டத்தை ஒழுங்கமைப்பதாக உறுதியளித்தல் என்பது, அது ஆளும் வர்க்கத்தின் தொழில்துறை காவல்துறையாக இயங்குவதின் முன்கூட்டிய நடவடிக்கையின் ஒரு வடிவமாகும். இது RMT போன்ற மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதை அர்த்தப்படுத்தினாலும் சமூக அமைதியின்மையின் எழுச்சி அலைகளை ஒடுக்க முயல்கிறது.

அதிகாரத்துவத்திற்கான முக்கிய ஆதரவாளர்கள் போலி-இடது கட்சிகள் ஆகும். அதன் உறுப்பினர்களுள் தொழிற்சங்க அதிகாரத்தின் குறிப்பிடத்தக்க அடுக்கு உள்ளது.

சனிக்கிழமையன்று நடந்த பேரணிக்கு விடையிறுக்கும் வகையில், சோசலிச தொழிலாளர் கட்சி, “2018க்குப் பின்னர் முதல் முறையாக, பிரிட்டனில் உள்ள அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களும் தங்கள் உறுப்பினர்களை நூற்றுக்கணக்கான இல்லையென்றால் ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டாக அணிவகுத்துச் சென்றன. அவர்கள் முயன்றால் தெருக்களில் அணிதிரட்ட முடியும் மற்றும் இன்னுமொரு உண்மையான சக்தி என்பதைக் காட்டுகின்றது” எனக் கூறியது.

'பல மக்களுக்கு அணிவகுப்பின் அளவு, —அது தொழிற்சங்க இயக்கம் முழுவதிலும் இருந்து மக்களைக் கொண்டு வந்தது— ஒன்றுபட்ட போராட்டம் சாத்தியம் என்பதை அவர்களுக்குக் காட்டியது.'

சோசலிச தொழிலாளர் கட்சி விசித்திரக் கதைகளை வழங்குகிறது. 1984-85 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நீடித்த தோல்விகளின் தொடர்களைத் திணித்து, தொழிலாளர்களின் போராட்டங்களைப் பிரிக்கவும், தனிமைப்படுத்தவும் மற்றும் காட்டிக் கொடுக்கவும் பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கு மத்தியில் அந்தக் காலம் முடிவுக்கு வருகிறது. ஆனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் விரும்பும் ஜோன்சன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தேவையான ஐக்கியப்பட்ட போராட்டம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் சுயாதீனமாகவும் நடாத்தப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கி செல்லும் வழி, ஒவ்வொரு பணியிடத்திலும் ஒவ்வொரு போராட்டத்தின் மையத்திலும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை நிறுவுவதற்கான போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் “பிரிட்டிஷ் இரயில் வேலைநிறுத்தம்: ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்!' என்ற அறிக்கை சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் விநியோகிக்கப்பட்டது. 'இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு பணியிடத்திலும், தொழில்துறையிலும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை அமைப்பது, நாசவேலையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்கள் தோற்கடிப்பதற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்கும். இது எழுச்சியுறும் முன்னணிகளை ஒன்றிணைத்து ஜோன்சன் அரசாங்கத்தை வீழ்த்தும்”.

இந்த நோக்கத்திற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏப்ரல் 2021 இல் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) நிறுவியது. சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்புகொண்டு இன்றே IWA-RFC இல் சேருமாறு அனைத்துத் தொழிலாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading