மாட்ரிட்டில் நடந்த போர் உச்சிமாநாட்டிற்கு மத்தியில் நேட்டோவில் சுவீடனும் பின்லாந்தும் இணைவதற்கு எதிரான வீட்டோ தடுப்பதிகாரத்தை துருக்கி திரும்பப் பெறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரையும் சீனாவை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, செவ்வாயன்று மாட்ரிட்டில் துருக்கி, சுவீடன் மற்றும் பின்லாந்தின் உயர் அதிகாரிகள் ஸ்டாக்ஹோமும் ஹெல்சிங்கிகும் இராணுவக் கூட்டணிக்குள் நுழைவதை அனுமதிக்கும் ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ மற்றும் சுவீடனின் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திற்குப் பின்னர், இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் ஒரு ஆவணம் கையெழுத்திடப்பட்டது.

ஜூன் 28, 2022 அன்று ஸ்பெயினின் மாட்ரிட்டில் (இடமிருந்து வலமாக, பின் வரிசை) நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன். (முன் வரிசையில்) பாதுகாப்புக் கூட்டணியில் பின்லாந்து மற்றும் சுவீடனின் உறுப்புரிமைக்கு துருக்கி ஒப்புக் கொள்ளும் ஆவணத்தில் துருக்கிய வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு, பின்லாந்து வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ மற்றும் சுவீடன் வெளியுறவு மந்திரி ஆன் லிண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர் (AP Photo/Bernat Armangue) [AP Photo/Bernat Armangue]

'கதவு திறந்திருக்கிறது — பின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோவில் இணைவது நடக்கும்.' பால்கன் முதல் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா வரை பல தசாப்தங்களாக நீடித்த இந்த ஏகாதிபத்தியப் போர் மற்றும் அழிவு கூட்டணியை பாதுகாப்புக்கான ஒரு அமைப்பாக முன்வைக்க முற்பட்ட அவர், 'நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனின் உறுப்புரிமை பின்லாந்துக்கும் சுவீடனுக்கும் நல்லது. இது, நேட்டோவுக்கும் நல்லது, அது ஐரோப்பிய பாதுகாப்புக்கும் நல்லது” என ஸ்டோல்டன்பேர்க் அறிவித்தார்.

நடந்துகொண்டிருக்கும் மாட்ரிட் உச்சிமாநாட்டில் வாசலில் அவர் பின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோவில் இணைவது 'முன்னோடியில்லாத வகையில், சில வாரங்களுக்குள் விரைவாக இருக்கும்' என்று அறிவித்தார்.

அங்காராவின் கோரிக்கைகள் தொடர்பான சுவீடனினதும் பின்லாந்தினதும் உறுதிமொழிகளுக்கு ஈடாக, துருக்கிய அரசாங்கம் அவர்களின் நேட்டோ அங்கத்துவம் தொடர்பான தனது வீட்டோ தடுப்புரிமையை திரும்பப் பெற்றது. சிரியாவில் உள்ள குர்திஷ் தேசியவாத மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPG) மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதை சுவீடன் மற்றும் பின்லாந்து நிறுத்த வேண்டும் என்று துருக்கி கோரியது.

துருக்கிய ஆளும் வர்க்கம் அதன் எல்லைகளில் YPG தலைமையில் எந்தவொரு குர்திஷ் அரசும் தோன்றுவதைத் தடுப்பதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. மேலும் மே மாத இறுதியில் இருந்து குர்திஷ் இராணுவக் குழுக்களுக்கு எதிராக ஒரு புதிய இராணுவ நடவடிக்கையைத் தயாரித்து வருகிறது.

'மனித உரிமைகள்' மற்றும் உக்ரேனின் தேசிய சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பது என்ற பெயரில் ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலை நியாயப்படுத்தும் ஏகாதிபத்திய சக்திகளின் பாசாங்குத்தனத்தை இந்த அமெரிக்க ஆதரவு உடன்பாடு கூர்மையாக அம்பலப்படுத்துகிறது. துருக்கியில் குர்திஷ் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான அரசு அடக்குமுறை அதிகரித்து வரும் நேரத்தில், இந்த ஒப்பந்தம் சிரியாவில் YPG க்கு எதிரான புதிய தாக்குதலுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது. இது முன்பு போலவே நூறாயிரக்கணக்கான மக்களின் இடப்பெயர்வுக்கும், ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கும் வழிவகுக்கும்.

இந்த ஆவணத்தின்படி, 'பின்லாந்தும் சுவீடனும் YPG/PYD [சிரியாவில் ஜனநாயக யூனியன் கட்சி] மற்றும் துருக்கியில் FETO [பெத்துல்லாவாத பயங்கரவாத அமைப்பு] எனக் கூறப்படும் அமைப்புக்கு ஆதரவை வழங்காது'. எர்டோகன் அரசாங்கத்திற்கு எதிராக நேட்டோ ஆதரவுடனான 2016 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட போதகர் பெத்துல்லா கூலன் (Fethullah Gülen) இனை அங்காரா குற்றம்சாட்டுகின்றது.

'பின்லாந்தும் சுவீடனும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் பிற அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்பு உள்ளவர்களையும், இந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மற்றும் இணைக்கப்பட்ட மற்றும் ஈர்க்கப்பட்ட குழுக்கள் அல்லது வலைப்பின்னல்களில் உள்ள தனிநபர்களின் செயல்பாடுகளையும் தடுக்க உறுதியளிக்கிறது' என்றும் ஆவணம் கூறுகிறது.

2019 இல் YPG ஆயுதக்குழுக்களை இலக்காகக் கொண்டு சிரியாவில் அங்காராவின் இராணுவப் படையெடுப்பிற்கு எதிராகத் தொடங்கிய துருக்கி மீதான ஆயுதத் தடையை முடிவுக்குக் கொண்டுவர சுவீடன் உறுதியளித்துள்ளது. இரு நாடுகளும் 'துருக்கியின் நிலுவையில் உள்ள நாடுகடத்தல் அல்லது பயங்கரவாத சந்தேக நபர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளை விரைவாக நிவர்த்தி செய்வதாக' உறுதியளித்தன. நேற்று, பின்லாந்து மற்றும் சுவீடனில் இருந்து PKK அல்லது FETO இன் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 33 பேரை நாடு கடத்த முயலும் என்று அங்காரா அறிவித்தது.

இந்த உறுதிமொழிகளுக்கு ஈடாக, துருக்கி 'நேட்டோவின் திறந்த கதவு கொள்கைக்கான நீண்டகால ஆதரவை உறுதிப்படுத்தியது. மேலும் 2022 மாட்ரிட் உச்சிமாநாட்டில் பின்லாந்து மற்றும் சுவீடனை நேட்டோவில் உறுப்பினர்களாக ஆக்குவதற்கான அழைப்பை ஆதரிக்க ஒப்புக்கொள்கிறது'. இது ரஷ்யாவிற்கு எதிரான வடக்கு முன்னணி திறப்பதற்கான ஒரேயொரு தடையை திறம்பட நீக்குகிறது. கூட்டணியின் எந்தவொரு புதிய அங்கத்துவத்திற்கும் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளின் ஒரு உறுதிப்படுத்தல் தேவை.

வாஷிங்டன், பேர்லின் மற்றும் லண்டனில் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை மூலம், அடிப்படையில் முழு ஸ்கான்டிநேவிய பிராந்தியமும் ரஷ்யாவுடனான மோதலில் சாத்தியமான போர் மண்டலமாக மாற்றப்படும். மே மாதம், பின்லாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் உக்ரேன் மீதான ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை காரணமாக காட்டி, நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை நியாயப்படுத்த, அவற்றின் உத்தியோகபூர்வ நீண்டகால நடுநிலைமை கொள்கைகளை கைவிட்டன.

பின்லாந்து ரஷ்யாவுடன் 1,300 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அதே நேரத்தில் சுவீடன் பால்டிக் கடலில் முக்கியமான இடத்தில் உள்ளது. மேலும் இரு நாடுகளும் கடந்த காலத்தில் நேட்டோ சக்திகளால் ரஷ்யாவிற்கு எதிராக அதிகளவில் ஆயுதமமாக்கப்பட்டுள்ளன.

'ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடமிருந்து மிக முக்கியமான செய்திகளில் ஒன்று ... அவர் மேலதிக நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக இருந்தார். அவர் குறைவான நேட்டோவை விரும்பினார். இப்போது, ஜனாதிபதி புட்டின் தனது எல்லைகளில் அதிக நேட்டோ நாடுகளைப் பெறுகிறார்” என்று செவ்வாய் மாலை ஸ்டோல்டன்பேர்க் கூறினார். இந்த அறிக்கையின் மூலம், ரஷ்யாவை இலக்காகக் கொண்டு நேட்டோவின் பல தசாப்தங்களான கிழக்கு நோக்கிய விரிவாக்கம், உக்ரேனை ஆக்கிரமிக்க கிரெம்ளினை தூண்டிவிட்டு, அதன் மூலம் அமெரிக்க தலைமையிலான கூட்டணி ரஷ்யாவுடனான மோதலை மேலும் அதிகரிக்கலாம் என்பதை உள்ளவாறே ஒப்புக்கொண்டார்.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ் மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நேட்டோ படைகள் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் நேட்டோ விரிவாக்கம் குறித்த உடன்பாடு வந்துள்ளது. நேட்டோ சக்திகள் உக்ரேனுக்கு பாரிய ஆயுதங்களை வழங்குவதைத் தொடர்ந்து, ஸ்டோல்டன்பேர்க் இராணுவக் கூட்டமைப்பு அதன் 'உயர் தயார்நிலைப் படைகளை' ஏழு மடங்கு அதிகரித்து, 40,000 இலிருந்து 300,000 வரை அதிகரித்து பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் மற்றும் எண்ணற்ற டாங்கிகள் மற்றும் விமானங்களை நேரடியாக ரஷ்யாவின் எல்லைக்கு அனுப்பும் என்றார்.

மேலும், வாஷிங்டனின் 'பெரும் சக்தி மோதல்' தேசிய மூலோபாயத்திற்கு இணங்க, நேட்டோ ரஷ்யாவை மட்டுமல்ல, சீனாவையும் இலக்காகக் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து ஒரு புதிய மூலோபாயத்தை பின்பற்றுகிறது. இந்த இரண்டும் ஏகாதிபத்தியத்தின் உலக மறுபங்கீட்டிற்கான முக்கியமான மூலப்பொருட்களின் பாரிய வளங்களையும், பரந்த அணுவாயுதங்களையும் கொண்ட நாடுகளாகும்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு ஆசிய-பசிபிக் நாடுகளின் தலைவர்கள் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், ஸ்டோல்டன்பேர்க், உச்சிமாநாடு நேரடியாக 'நமது பாதுகாப்பு, நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு பெய்ஜிங் முன்வைக்கும் சவால்களுக்காக' சீனா தொடர்பாக முதன்முறையாக கவனம் செலுத்தும் என்றும் அறிவித்தார்.

செவ்வாயன்று எர்டோகனின் அலுவலகம், 'பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் துருக்கி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது' என்றும், 'துருக்கி விரும்பியதைப் பெற்றுள்ளது' என்றும் சுவீடன் பிரதமர் ஆண்டர்சன் அறிவித்தது போல் இது 'மிக நல்ல உடன்பாடு' என்று கூறினார். 'பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். அதேபோல் நேட்டோ உறுப்பினர்களும் துருக்கியுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் அதைச் செய்வார்கள்' என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு அறிக்கையில், பின்லாந்தின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, 'பின்லாந்து, சுவீடன் மற்றும் துருக்கி ஆகியவற்றின் பரஸ்பர பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்கள் முழு ஆதரவை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை எங்களின் கூட்டுக் ஆவணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது' என்றார்.

பெரிய ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். 'பின்லாந்து, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு முத்தரப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டதற்கு வாழ்த்துக்கள். பின்லாந்து மற்றும் சுவீடனுக்கான நேட்டோவின் அழைப்பை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இது எங்கள் கூட்டணியை பலப்படுத்தி மற்றும் நமது கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்தும். மேலும் உச்சிமாநாட்டைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்' என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ட்விட்டரில் எழுதினார்.

துருக்கி, சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் வெளிப்படையான அமெரிக்க ஈடுபாடு இல்லை என்றாலும், 'உச்சிமாநாட்டிற்கு முன்ன்னதாக ஜனாதிபதி பைடென் திரு. எர்டோகனை அழைத்து, 'இந்த தருணத்தை கைப்பற்ற' வலியுறுத்தியபோது இந்த சர்ச்சையைத் தீர்ப்பதற்கான இறுதி உந்துதல் செவ்வாய்க் கிழமை காலை தொடங்கியது” என நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ட்விட்டரில் இந்த ஒப்பந்தத்தை பாராட்டி, 'நாங்கள் நேட்டோ உச்சி மாநாட்டை தொடங்கும்போது அருமையான செய்தி. சுவீடன் மற்றும் பின்லாந்தின் அங்கத்துவம் எங்களின் புத்திசாலித்தனமான கூட்டணியை வலுவாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும். ஜேர்மனிய வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக், நேட்டோவில் இணைவதற்கு சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு எதிரான தனது எதிர்ப்பை துருக்கி முடிவுக்குக் கொண்டு வந்ததால் தனது அரசாங்கம் 'ஆறுதலடைந்ததாக' குறிப்பிட்டார்.

முக்கிய துருக்கிய முதலாளித்துவ எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியும் (CHP) இந்த உடன்பாட்டை வரவேற்றது. அமெரிக்காவிற்கான CHP பிரதிநிதி யுர்டர் ஓஸ்கான் 'எர்டோகானின் AKP அரசாங்கம் அதன் போலி வீட்டோ தடுப்பைக் கைவிட்டு சரியான முடிவை எடுத்தது' என ட்வீட் செய்தார். முன்னதாக, CHP செய்தித் தொடர்பாளர் வாயிக் ஒஸ்ட்ராக், 'CHP இனை பொறுத்தவரையில், நேட்டோ பலப்படுத்தப்படுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைவோம். ஆனால் துருக்கியின் நலன்கள் முதலில் இருக்கவேண்டும்' என்றார்.

இந்த ஒப்பந்தம் ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோ கூட்டணிக்கான துருக்கிய முதலாளித்துவத்தின் ஆழமான வேரூன்றிய அர்ப்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளை நோக்கி குர்திஷ் தேசியவாதம் கொண்டிருந்த நோக்குநிலையின் திவால்நிலையையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மே மாத இறுதியில், குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் (HDP) ஒரு முன்னணி பிரதிநிதியான மேரால் டேனிஸ் பெஸ்டாஸ், “குர்திஷ் பிரச்சினை துருக்கிக்குள் தீர்க்கப்படலாம். நேட்டோவிற்கு அழுத்தம்கொடுப்பதன் மூலமும், சுவீடன், பின்லாந்து மீது வீட்டோ தடுப்பதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலமும் நீங்கள் இந்த சிக்கலை தீர்க்க முடியாது. நிச்சயமாக, இந்த நாடுகள் குறுகியகால பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் சுவீடன், பின்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் ஜனநாயக அமைப்பு, ஒரு நியாயமான நீதி அமைப்பு, சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது”.

நேட்டோ மற்றும் ஏகாதிபத்திய சார்பு கொண்ட இந்த துருக்கிய மற்றும் குர்திஷ் முதலாளித்துவத்திற்கு இடையிலான மோதல் முற்றிலும் தந்திரோபாயரீதியானது. இருவரும் குர்திஷ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு விரோதமானவர்கள். மூன்றாம் உலகப் போரின் பெருகும் அபாயத்திற்கு மத்தியில், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஐக்கியம் மட்டுமே போருக்கு எதிராகப் போராடவும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியும்.

Loading