உக்ரேனில் அமெரிக்க துணை இராணுவப் படைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க முன்னாள் இராணுவத்தினர் டஜன் கணக்கானவர்கள் உக்ரேனில் செயல்பட்டு வருவதாகவும், ஓய்வுபெற்ற மூத்த அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனிய போர் முயற்சிகளில் சிலவற்றை நாட்டிற்குள் இருந்து இயக்குவதாகவும் நியூ யோர்க் டைம்ஸ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷ்ய தளபதிகளை படுகொலை செய்வதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டது மற்றும் ரஷ்ய கருங்கடல் கடற்படையின் முதன்மையான மொஸ்க்வாவை மூழ்கடிப்பதில் அமெரிக்கா நேரடியாக திட்டமிட்டு இயக்கியது என்பது வெளிப்பட்ட பின்னர், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்ற பைடென் நிர்வாகத்தின் தவறான கூற்றை அறிக்கை மேலும் மறுக்கிறது.

அதன் அறிக்கையில் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது:

அமெரிக்கர்கள் உக்ரேனில் உள்ளனர். போர் முனைகளில் அறியப்படாத எண்ணிக்கையானவர்கள் போராடுகின்றனர். மற்றவர்கள் காயப்பட்டோரை வெளியேற்றும் குழுக்கள், வெடிகுண்டுகளை அகற்றும் நிபுணர்கள், தளவாட நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் உறுப்பினர்களாக இருக்க முன்வந்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 21 அமெரிக்கர்கள் போரில் காயமடைந்துள்ளனர் என்று அவர்களை வெளியேற்றும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இருவர் கொல்லப்பட்டுள்ளனர், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பெப்ரவரியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், 'எங்கள் படைகள் உக்ரேனில் ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபடவில்லை, ஈடுபடப்போவதில்லை' என்றார். மார்ச் மாதம், பைடென் இதை உறுதிப்படுத்தி “நாங்கள் தாக்குதல் உபகரணங்களை அனுப்புவோம், விமானங்கள் மற்றும் டாங்கிகளை வைத்திருக்கிறோம் ... அமெரிக்க விமானிகள் மற்றும் அமெரிக்கக் குழுவினருடன் உள்ளே செல்வோம், புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் என்ன சொன்னாலும், சிறுபிள்ளைத்தனமாக இருக்காதீர்கள், அது மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கப்படுகிறது” என்றார்.

அந்த அறிவிப்பிற்கு பின்னர், அமெரிக்கா உக்ரேனுக்கு 200 க்கும் மேற்பட்ட கவச பணியாளர்கள் வாகனங்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட வானூர்களை வழங்கியுள்ளது. அதே போல் M109 சுயமாக இயங்கும் கவசவாகன ஹோவிட்சர்கள், ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் HIMARS நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கியுள்ளது.

இந்த இராணுவ ஆயுதங்கள் தவிர, அமெரிக்கா படைகளை அனுப்பியிருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. ஒரு கேர்னல் மற்றும் ஒரு லெப்டினன்ட் கேர்னல் உட்பட இந்தப் படைகள் தாங்களாகவே செயல்படுகின்றன என்றும் அவை அமெரிக்க இராணுவத்தின் கட்டளைக்கு உட்பட்டவை அல்ல என்றும் அமெரிக்க இராணுவம் கூறுகிறது.

ஆனால் இந்த மறுப்புகள் ஒரு பொய்யாகும். இது அமெரிக்க மக்களை ஏமாற்றும் நோக்கமுடையது. அவர்கள் ரஷ்யாவுடன் போருக்கு செல்வதை பெருமளவில் எதிர்க்கின்றனர். டைம்ஸிடம் கூறிய அதிகாரிகள், தங்கள் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு 'நம்பத்தகுந்த மறுப்புக்களை' கொடுக்கும் என ஒத்துக்கொண்டனர்.

உக்ரேனில் உள்ள ஓய்வுபெற்ற மரைன் பிரிவு சிறப்பு நடவடிக்கை கேர்னலான ஆண்ட்ரூ மில்பேர்னை டைம்ஸ் பேட்டி கண்டது. அவர் தனது நடவடிக்கைகளும் டஜன் கணக்கான அமெரிக்க படையினரது செயல்களும் 'இராணுவத்தால் செய்ய முடியாத அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துகின்றன' என்று அறிவித்தார்.

கிழக்கு உக்ரேனில் உள்ள போர்முனையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய திரு. மில்பேர்ன், அமெரிக்காவை ஈடுபாட்டிலிருந்து பாதுகாக்கும் அதேவேளையில், தனது முயற்சிகள் அமெரிக்க நோக்கங்களை ஆதரித்தன என்றார். 'நான் ஒரு நம்பத்தகுந்த மறுப்பு,' என்று அவர் கூறினார். 'நாங்கள் அந்த வேலையைச் செய்ய முடியும், அவர்களுக்கு எங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா சொல்ல முடியும்' என்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க அதிகாரிகள் 'போர் பணிகளைத் திட்டமிடுவதற்கு உதவுவதுடன்', போர் முயற்சியின் அமெரிக்க வழிகாட்டுதலுக்கு ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாக பணியாற்றுகின்றனர்.

'மொஸார்ட் குழு' என்று அழைக்கப்படும் டஜன் கணக்கான அமெரிக்க படையினர்கள் இருப்பதாக டைம்ஸ் அறிவிக்கிறது. அவர்கள் ஆயிரக்கணக்கான உக்ரேனிய துருப்புக்களுக்கு javelin டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற அமெரிக்காவினால் வழங்கப்படும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டைம்ஸ் இன் அறிக்கை, புலனாய்வு அறிக்கையை அடித்தளமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அமெரிக்க மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அணு ஆயுத சக்திகளுக்கு இடையேயான 'சூடான போரை' ஏற்றுக்கொள்ளச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல்களின் கட்டுப்படுத்தப்பட்ட வெளியீடாகும்.

சிறிது சிறிதாக அமெரிக்கா ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்ற பைடெனின் பொய்யான கூற்று, அமெரிக்கா உண்மையில் உலகின் இரண்டாவது பெரிய அணு சக்தியுடன் போரில் ஈடுபட்டுள்ளது என்ற யதார்த்தத்தால் மாற்றப்படுகிறது. அமெரிக்க மக்களுக்கு வெறுமனே ஒரு முடிந்துவிட்ட நிகழ்வு முன்வைக்கப்படுவதுடன் மற்றும் அவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்ற அடிப்படையில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கை பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இந்த வாரம் வெளியிடப்பட்ட YouGov கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 40 சதவீதம் பேர் அமெரிக்கா 'உலகம் முழுவதிலும் உள்ள மோதல்களில் குறைவாக இராணுவ ரீதியாக ஈடுபட வேண்டும்' என்று கூறியுள்ளனர். 12 சதவீதமானோர் 'அதிக ஈடுபாடுடன்' இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர், 'ரஷ்யா-உக்ரேன் போரில் அமெரிக்க இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்' என்று கூறியுள்ளனர். ஆனால் அத்தகைய நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் வெறும் 23 சதவீதம் பேர்தான்.

உக்ரேனுக்கு தொடர்ச்சியான இராணுவ பின்னடைவுகள் இருந்தபோதிலும், அமெரிக்கா போரில் தனது ஈடுபாட்டை மட்டுமே தீவிரப்படுத்தியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனுக்கு உத்தியோகபூர்வமாக 54 பில்லியன் டாலர்களை இராணுவ மற்றும் பொருளாதார உதவியாக காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் 100,000 க்கும் மேற்பட்ட டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் மற்றும் டஜன் கணக்கான வானூர்திகள் மற்றும் பிற விமானங்களை அனுப்பியுள்ளன. போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா நிரந்தரமாக 20,000 கூடுதல் துருப்புக்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.

கடந்த வாரம், ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் முடிவில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்றும் கனடா உட்பட நேட்டோ உறுப்பினர்கள், அணு ஆயுதம் தாங்கிய சக-போட்டியாளர்களுக்கு எதிராக அதிக தீவிரமான பன்முகப் போருக்கான 'முழு அளவிலான படைகளை வழங்குவதற்கு' உறுதியளிக்கும் ஒரு மூலோபாய ஆவணத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்த வார்த்தைகள் நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் அல்லது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இல் வெளியிடப்படவில்லை அல்லது எந்த முக்கிய ஒளிபரப்பு வலைத் தளங்களினாலும் மேற்கோள் காட்டப்படவில்லை. அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் அமெரிக்க அரசாங்கம் உலகப் போருக்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. உக்ரேனில் உள்ள மோதல் அதன் ஆரம்பம் மட்டும்தான்.

Loading