இலங்கை ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரசு எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அரச வேட்டையாடலை நிறுத்து!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இணைய ஊடக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை மற்றும் வேட்டையாடலை கட்டவிழ்த்து விட்டிருப்பதை கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு வண்மையாக கண்டிக்கிறது.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை ஜூன் 28 அன்று வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டமை இந்த ஜனநாயக விரோதத் தாக்குதலின் சமீபத்திய நடவடிக்கையாகும். அங்கு, அவரது யூடியூப் சேவையின் உள்ளடக்கம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு முன்னதாக, ஜூன் 20 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் கைது செய்தனர். அலுவலகத்தின் நுழைவு வாயில்களை மறித்து போராட்டம் நடத்துவதால், அத்தியாவசியப் பணிகளுக்காக அந்த அலுவலகங்களுக்குச் செல்லும் அதிகாரிகள் மற்றும் தேவைகளுக்காக வரும் மக்களும் அலுவலகத்திற்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாத நிலையை உருவாக்கினர் என பொலிஸார் அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

ரதிந்து சௌம்ய சேனாரத்ன (Image: Facebook)

அதற்கு சில நாட்களுக்கு முன்னர், பொலிஸ் தலைமையகம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண, ஜெஹான் அப்புஹாமி, ரதின்து சேனாரத்ன (ரட்டா) உள்ளிட்ட 9 பேரை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக” போலீசார் அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவாலும் அவரது சகாக்களாலும் தூண்டிவிடப்பட்ட காலிமுகத்திடலில் மே 9 நடத்தப்பட்ட குண்டர் தாக்குதலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த பல சொத்து சேதங்களை வேட்டையாடலுக்கான சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, தீவின் பல பாகங்களில் இருந்து கைது செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அண்மையில் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் ஆவர்.

கலைஞரும் தேசிய தொலைக்காட்சி தொகுப்பாளருமான பாரமி ரணசிங்க, ஜனாதிபதியை விமர்சித்து முகநூலில் குறிப்பொன்றை வெளியிட்டதையடுத்து அவருக்கு பணியில் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திசர அனுருத்த பண்டார என்ற சமூக ஆர்வலர், ஏப்ரல் முதலாம் திகதி நள்ளிரவில், கம்பஹா, அத்கலவில் உள்ள அவரது வீட்டிற்கு மோதரை பொலிஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சுதந்திர ஊடகவியலாளரும் கத்தோலிக்க மத ஆர்வலருமான ஷெஹான் மாலகா கமகே, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதற்காக பெப்ரவரி 14 அன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அன்றைய தினம் அதிகாலை ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு முகமூடி அணிந்த இனம் தெரியாத கும்பல் ஒன்று வேனில் வந்து குண்டர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது.

‘புதுங்கே ரஸ்தியாதுவ’ புத்தகத்தை வெளியிட்ட ஆசிரியர்களான ஸ்ரீநாத் சதுரங்க மற்றும் உபுல் சாந்த சன்னஸ்கல ஆகியோருக்கு எதிராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ‘பௌத்த மதத்தை அவமதித்ததாக’ குற்றம் சாட்டி, அவர்கள் மே 20 அன்று நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் சுமார் 16 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது 138 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச குழு தெரிவித்துள்ளது. ucanews.com இணையதளம் மார்ச் 18 அன்று, அனைத்து வழக்குகளும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அறிவித்தது

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), 2007 ஆம் ஆண்டு எண். 56 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச உடன்படிக்கை சட்டம் (ICCPR), கணினி குற்றச் சட்டம் முதலிய அடக்குமுறைச் சட்டங்கள், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் உரிமைகள் பாதிக்கப்பட்டவர்களில் கவிஞர் அஹ்னாப் ஜசீம், எழுத்தாளர் சக்திக சத்குமார, ரம்சி ராசிக் மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் அடங்குவர்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல்கள், நெருக்கடியில் சிக்கியுள்ள இராஜபக்ஷ ஆட்சி உட்பட ஒட்டுமொத்த ஸ்தாபனமும் பெயரளவிலான விமர்சனங்களைக்கூட அடக்கி, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு வேகமாக மாறிவருவதைக் காட்டுகிறது.

அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு, கொவிட்-19 தொற்று மற்றும் அமெரிக்கா மற்றும் நேட்டோ உகிரேனை மையமாக கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போரினால் உக்கிரமடைந்துள்ள உலகப் பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஆழமடைந்துள்ளமை இதற்கான முக்கிய காரணங்கள் ஆகும். முதலாளித்துவ ஆளும் வர்க்கம், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாத நிலையில், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக நசுக்குவதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.

அத்தியாவசியப் பொருட்களின் பாரிய தட்டுப்பாடு மற்றும் அவற்றின் வானளாவ உயரும் விலைவாசி, ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டு போன்ற சகிக்க முடியாத நிலைமைகளுக்கு எதிரான போராட்டங்களை அடக்க, மே 9 அன்று நடந்த போராட்டங்களை உடனடியாக சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, 'கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்த' உத்தரவுகளை வழங்கி, நாடு முழுவதும் இராணுவத்திற்கு அதிகாரம் அளித்து, கண்ட இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தையும் கொடுத்தார்.

இலங்கையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, உலகளாவிய நிகழ்வாக இருப்போதுட, இந்த தாக்குதல்கள், பிராந்தியத்தின் அனைத்து நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஆழமடைந்து வருகின்றன. இந்தியாவில், 'தேசத்துரோகத்திற்கு' எதிரான சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்கள்; பங்களாதேஷின் டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சட்டம் (ICT சட்டம் 2006) ஆகியவை இந்த கொடூரமான ஒடுக்குமுறைக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் ரஷ்யாவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போரின் மத்தியில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளில், குறிப்பாக ரஷ்ய கலைஞர்களுக்கு எதிராக ரஷ்ய எதிர்ப்பு வெறி தூண்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் டிஜே மற்றும் நடிகை நினா க்ரவிஸ், அமெரிக்காவின் டெட்ராய்டில், புடின் ஆட்சியின் உக்ரைன் படையெடுப்பிற்கு எதிராக அவர் போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்ற அடிப்படையில், அமெரிக்காவில் டிட்ரொயிட்டிலும், நெதர்லாந்தில் தி ஹேக்கிலும், ஜெர்மனியின் ட்ரோட்மண்டிலும் மூன்று இசை விழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கனடாவின் வான்கூவர் ரெசிட்டல் சொசைட்டியினால், பல்வேறு வலதுசாரி குழுக்களின் அழுத்தத்தின் கீழ், மார்ச் மாத தொடக்கத்தில், மொண்ட்ரீயலில் திட்டமிடப்பட்ட ரஷ்ய பியானோ கலைஞர் அலெக்சாண்டர் மலோஃபீவ் மலஃபீவின் இரண்டு இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது. இந்த வேட்டைக்கு விளையாட்டு வீரர்களும் பலியாகி உள்ளனர்.

இந்த வேட்டைகள், இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில், யூத தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் உட்பட முழு யூத மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட கொடூரமான அடக்குமுறையை நினைவூட்டுகிறது.

முன்னணி ஊடகவியலாளரான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரேலியா அரசாங்கங்களின் கூட்டு பழிவாங்களின் பலி ஆடாக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளார். அவ்வாறு நாடு கடத்தப்பட்டால், அமெரிக்க நிர்வாகத்தால் அவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசான்ஜ் தொடர்ச்சியான கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்.

ஏப்ரல் 2019 ஜூலியன் அசான்ஜ் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். [Photo: Facebook]

உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான நெருக்கடியின் விளைவாக உருவாகும் இந்தத் தாக்குதல்கள், தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஒன்றுபட்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை, அதாவது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தைத் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும். முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான தொழிற்சங்கங்களால், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற மாயையை பரப்பும் போலி இடதுகளில் இருந்தும் விலகி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் கட்டியெழுப்பிக்கொள்ளும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் மூலம் மட்டுமே இந்தப் போராட்டத்தை முன்கொண்டு செல்ல முடியும்.

அதன் ஒரு பகுதியாக, கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவை உருவாக்க தொழிலாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணையுமாறு நாம் அழைக்கிறோம்.

  • கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்!
  • ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இணைய ஊடக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் விலக்கிக்கொள்!
Loading