முன்னோக்கு

தோழர் விஜே டயஸ்: ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராளி (27 ஆகஸ்ட் 1941 – 27 ஜூலை 2022)

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தோழர் விஜே டயஸின் மரணத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறது. தோழர் விஜே, 1987 டிசம்பர் முதல் கடந்த மே மாதம் வரை சோசலிச சமத்துவக் கட்சியினதும் (இலங்கை) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (RCL) பொதுச் செயலாளராக இருந்தார் அதன் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சித் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜே டயஸ்

அடுத்த மாதம் தனது 81 வயதை எட்டவிருந்த விஜே, நேற்று காலை மாரடைப்பால் கொழும்பில் காலமானார். அவர் நீண்ட காலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு 2013 இல் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து தனது வாழ்க்கையின் கடைசி நாள் வரை கட்சியின் தலைமைப் பொறுப்பில் தீவிரமாக செயற்பட்டார்.

தோழர் விஜேயின் அரசியல் வாழ்க்கை ஆறு தசாப்தங்களாக நீடித்ததுடன் கிட்டத்தட்ட நான்காம் அகிலமானது அனைத்துலகக் குழுவால் வழிநடத்தப்பட்ட முழு காலகட்டத்தையும் உள்ளடக்கியது. ஏழ்மை, போர் மற்றும் அனைத்து வகையான முதலாளித்துவ ஒடுக்குமுறைகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்காக அவர் தனது இளம் வயது முதல் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

விஜே, நிரந்தரப் புரட்சிக்கான சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத முன்னணித் தலைவனும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராளியும் ஆவார். மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாப்பதில் அவர் தளர்ந்துவிடவில்லை. ஏனெனில். அந்தக் கொள்கைகள் கைவிடப்பட்டதாலும், காட்டிக்கொடுக்கப்பட்டதன் பெறுபேறாகவும் உருவாகிய அரசியல் குழப்பம், பிற்போக்கு மற்றும் துன்பகரமான உயிரிழப்புகள் போன்ற பேரழிவு விளைவுகளை அவர் கண்டிருந்தார்.

1953 இல் ஸ்தாபிக்கப்பட்ட மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் வழிகாட்டுதலின் கீழ், லங்கா சம சமாஜ கட்சி (LSSP) இலங்கை தொழிலாள வர்க்கத்துக்குச் செய்த வரலாற்றுக் காட்டிக் கொடுப்பின் பிரதான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டதும், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தைப் பாதுகாத்ததுமான இளைஞர்களின் குறிப்பிடத்தக்க குழுவில் விஜேயும் இருந்தார்.

1962 இல் பேராதனையில் உள்ள இலங்கை பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த பின்னர், லங்கா சம சமாஜ கட்சியின் இளைஞர் அமைப்பில் விஜே இணைந்தார். லங்கா சம சமாஜ கட்சி, இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தின் நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருப்பதாக கூறிய அதேவேளை, 1953 பிளவு குறித்து ஒரு தெளிவற்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அது அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட் ஜேம்ஸ் பி. கனன் மற்றும் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரால் வெளியிடப்பட்ட 'பகிரங்க கடிதத்தை' அங்கீகரிக்க மறுத்தது.

லங்கா சம சமாஜ கட்சி தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்க சக்தியாக இருந்தது. எவ்வாறாயினும், ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் மிஷேல் பப்லோவின் ஊக்குவிப்புடன், அது பாராளுமன்ற மற்றும் மக்கள் முன்னணி உபாய சூழ்ச்சிகள் மற்றும் தொழிற்சங்கவாதத்திற்கும் ஆதரவாக சோசலிச அரசியலை மேலும் மேலும் வெளிப்படையாக நிராகரித்ததுடன், ஆளும் வர்க்கத்தின் சிங்கள பேரினவாத அரசியலுக்குள் விரைவாக சரணடைந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பின் நிலைமைகளின் கீழ், நான்காம் அகிலத்தினுள் தலைதூக்கிய குட்டி-முதலாளித்துவ கலைப்புவாதப் போக்கே பப்லோவாதம் ஆகும். அது தன்னை ஸ்ராலினிசம், சமூக-ஜனநாயகம் மற்றும் குறைந்த-வளர்ச்சியடைந்த நாடுகளில், முதலாளித்துவ தேசியவாதத்தினதும் பின்இணைப்பாக மாற்றிக்கொள்ள முயன்றது.

லங்கா சம சமாஜ கட்சி, 1964 இல், தீவில் முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளத்தை உலுக்கிய '21 கோரிக்கைகள்' இயக்கம் என்ற ஒரு சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க எழுச்சியைக் காட்டிக் கொடுத்தது. 'முதலில் சிங்களம்' என்ற கொள்கையை முன்வைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டதன் மூலம், லங்கா சம சமாஜ கட்சி இலங்கை முதலாளித்துவத்துக்கு பிரதான சமூக முண்டுகோலாக இருக்கும் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டது.

இந்த காட்டிக்கொடுப்பானது சோசலிச சர்வதேசியவாதத்தையும், இலங்கை போன்ற முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில், முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவினரும் வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாஷைகளையும் சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாக்கற்றது என்பதை நிரூபித்த ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் வெளிப்படையாக மறுப்பதை பிரதிநிதித்துவப்படுத்தியது.

லங்கா சம சமாஜ கட்சியின் நடவடிக்கைகள் 1950களின் நடுப்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவுடன் ஒத்துப்போனது. 1963 இல், சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதிகளுடன் மீண்டும் ஒன்றிணைவதை நோக்கி நகர்ந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்த ஒரு சிறுபான்மையினர் கொள்கையற்ற மறு ஒருங்கிணைப்பை எதிர்த்து, 1964 இல் இலங்கையில் லங்கா சம சமாஜ கட்சியின் 'மாபெரும் காட்டிக்கொடுப்பு' பற்றி கலந்துரையாடலைக் கோரி கடிதம் ஒன்றை வெளியிட்டனர். அவர்கள் சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை (ACFI) அமைத்ததுடன் 1966 இல் சோசலிச சமத்துவக் கட்சிக்கு (அமெரிக்க) முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கை உருவாக்கினர்.

இந்த நிகழ்வுகளுக்கு விஜேயின் பதில் அவரது வாழ்க்கையில் தீர்க்கமான திருப்புமுனையாக அமையவிருந்தது. லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பினால் சீற்றமடைந்த விஜே, இளம் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர்கள் 1964 க்கும் 1968 க்கும் இடையில் ஒரு தீவிர கலந்துரையாடலின் பின்னர், ட்ரொட்ஸ்கிச கட்சியாக லங்கா சம சமாஜ கட்சியின் வீழ்ச்சி பப்லோவாதத்தின் விளைவே ஆகும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியது சரியானது என்பதை உணர்ந்தனர்.

இந்த கலந்துரையாடல்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிப்பதில் உச்சகட்டத்தை அடைந்தன. 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தி பாலசூரிய இந்தப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரத்தை வகித்தார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்ததில், கீர்த்தியும் அவரது தோழர்களும் லங்கா சம சமாஜ கட்சியுடன் அமைப்புரீதியாக முறித்துக் கொள்வது மட்டும் போதுமானதல்ல, மாறாக காட்டிக்கொடுப்பிற்கு அரசியல் போர்வையை வழங்கிய பப்லோவாதத்துடன் அரசியல் ரீதியாக பிளவுபடுவது அவசியம் என்பதை புரிந்து கொண்டனர். பப்லோவாதிகள் தங்கள் தடங்களை மூடி மறைப்பதற்காக உயர்மட்ட லங்கா சம சமாஜ கட்சி தலைவர்களை வெளியேற்றிய பின்னர், மற்றவர்கள் அவசர அவசரமாக ஒன்றிணைத்துக்கொண்ட புரட்சிகர லங்கா சம சமாஜ கட்சியின் (LSSP-R) மத்தியவாத அரசியலை அம்பலப்படுத்துவதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதிக கவனம் செலுத்தியது.

அடுத்த தசாப்தங்களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம், லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பின் அரசியல் விளைவுகளில் இருந்து கடந்துவருவதற்கான போராட்டத்தை சுற்றியே பெரும்பாலும் இருந்தது. தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்கு அடிமையாக்கி, இலங்கை ஆளும் வர்க்கத்தின் இனவாத அரசியலை ஊக்குவிப்பதன் மூலம், காஸ்ட்ரோவாதம், மாவோவாதம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தை கலவையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தமிழ் தேசியவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் வடிவில் குட்டி முதலாளித்துவ தீவிரவாத அரசியலின் எழுச்சிக்கு அது கதவைத் திறந்துவிட்டது.

1971இல் அது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கிராமப்புற இளைஞர்களின் தனிமைப்படுத்தப்பட்ட கிளர்ச்சியின் அரசியல் திவால்தன்மையை அம்பலப்படுத்திய அதே வேளை, மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் மற்றும் காரியாளர்களை கொடூரமான அரச அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பிரச்சாரமும் செய்தமை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கை ரீதியான அரசியலுக்கு ஒரு அடையாளத்தை ஸ்தாபித்தது. அவ்வாறு செய்வதன் மூலம், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அரசின் அடக்குமுறைக்கு உள்ளானதுடன் தலைமறைவாக செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டது.

1970-76 இன் இரண்டாவது லங்கா சம சமாஜ கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி, உக்கிரமடைந்த உலகப் பொருளாதார நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கத்துடன் கசப்பான மோதலுக்கு வந்தது. இது உருவாக்கிய அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அவரது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) 1977ல் ஆட்சிக்கு வந்தது. அவர்கள் உடனடியாக தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்து, தீவை உலகளாவிய முதலீட்டுக்குத் திறந்துவிட்டு, 1980 பொது வேலைநிறுத்தத்துக்கு வழியமைத்ததுடன் சிங்களப் பேரினவாதத்தை தூண்டிவிட்ட அதே நேரம், ஒரு சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நிறுவினார். இறுதியில் இது 1983 இல் அடுத்த கால் நூற்றாண்டுக்கு தீவை மூழ்கடித்த ஒரு இனவாதப் போர் வெடிப்பதற்கு வழிவகுத்தது.

புரட்சிகர தோற்கடிப்புவாதம் மற்றும் சோசலிச சர்வதேசியவாத நிலைப்பாட்டில் இருந்து, போரையும் மற்றும் பேரினவாத இலங்கை முதலாளித்துவத்தையும் அதன் அரசையும் எதிர்ப்பதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சி தனித்து நின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கோரிய அதேவேளை, இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற முயன்ற புலிகளின் இனவாத அரசியலையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்த்ததுடன், ஸ்ரீ லங்கா, தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களையும் கிராமப்புற ஏழைகளையும் ஐக்கியப்படுத்த போராடியது.

1985-86இல், பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசிய சந்தர்ப்பவாத சீரழிவுக்கு எதிராக, அனைத்துலகக் குழுவின் தலைமைக்குள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு முக்கியமான மற்றும் தீர்க்கமான பங்கை ஆற்றியது. ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை தொழிலாளர் புரட்சிக் கட்சி காட்டிக்கொடுத்தமைக்கு எதிரான போராட்டத்துக்கு, அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பிரிவான வேர்க்கர்ஸ் லீக்கும் அதன் தேசிய செயலாளரான டேவிட் நோர்த்தும் வழிநடத்தினர். தொழிலாளர் புரட்சிக் கட்சி உடனான பிளவின் அரசியல் அடித்தளங்களை விரிவுபடுத்தி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தயாரித்த பிரதான ஆவணங்களை வரைவதில் நோர்த் உடன் கீர்த்தி நெருக்கமாக பணியாற்றினார்.

டேவிட் நோர்த் (இடது), விஜே டயஸ் (வலது), 1988

விஜே டயஸின் 75வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நோர்த் எழுதிய போது, கீர்த்தியின் 'தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்பானது முந்தைய தசாப்தங்களில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திலிருந்து பெறப்பட்ட, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமைத்துவம் மற்றும் காரியாளர்களின் மகத்தான அனுபவத்தையும் அரசியல் உறுதியையும் பிரதிபலித்தது,' என்று நோர்த் எழுதினார்.

இந்தக் காரணத்தினால்தான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் டிசம்பர் 1987 இல் தோழர் கீர்த்தியின் அகால மற்றும் முற்றிலும் எதிர்பாராத இழப்பைத் தாங்க முடிந்தது. அவரது 39 வது வயதில் அவர் இறந்தது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவுக்கு கொடூரமான மற்றும் சோகமான இழப்பாகும். உள்நாட்டுப் போர், மக்கள் விடுதலை முன்னணி (JVP) கொலையாளிகளின் தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான அரசாங்கத் துன்புறுத்தல் ஆகியவற்றின் மத்தியில், கீர்த்தியின் மரணத்தின் தாக்கத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் தாங்க முடிந்தது என்பது எந்த புறநிலை மதிப்பீடுகளிலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையின் அசாதாரண அரசியல் வலிமையின் எடுத்துக்காட்டாகும். ஆனால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியிலோ அல்லது அனைத்துலகக் குழுவிற்குள்ளோ இந்த தீர்ப்பை சவால் செய்யும் ஒரு தோழர் கூட இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள், தோழர் விஜே, புரட்சிகர சர்வதேசியவாத நோக்குநிலையை பேணுதல் மற்றும் அதை முன்னோக்கி வழிநடத்துதலில் கட்சியின் ஐக்கியத்தை பேணுவதில் தீர்க்கமான பங்கை வகித்தீர்கள்.

1985-86 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியை அனைத்துலகக் குழு தோற்கடித்தமையானது, இலங்கைப் பிரிவின் தலைவர்கள் மற்றும் அவர்களது சர்வதேச சம சிந்தனையாளர்கள் மற்றும் தோழர்கள் இடையே விரிவான ஒத்துழைப்பை சாத்தியமாக்கியமை உட்பட, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான போராட்டத்தில் ஒரு உறுதியான திருப்புமுனையைக் குறித்தது.

கீர்த்தியின் மரணம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் தூண்டப்பட்ட ஒரு பாரிய அரசியல் நெருக்கடிக்கு சமாந்தரமாக நடந்தது.

தோழர் விஜே இந்த சவாலை அரசியல் தைரியத்துடனும் உறுதியுடனும் எதிர்கொண்டார். உள்நாட்டுப் போர், அரச அடக்குமுறை மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தாக்குதல்கள் மற்றும் நீண்டகால அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் கொந்தளிப்பான ஆண்டுகளில், அவர் மீது வைக்கப்பட்டிருந்த அரசியல் நம்பிக்கையை விட அதிகமாக நிரூபித்திருந்தார். உண்மையில், அவர் தனது சொந்தக் கட்சியிலும், முழு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவர்கள் மற்றும் காரியாளர்கள் மத்தியிலும் மகத்தான மரியாதையைப் பெற்றார்.

விஜே டயஸ் தனது மனைவி அமரர் பியசீலி விஜேகுணசிங்கவுடன்

2010 ஆம் ஆண்டில், தோழர் விஜே தனது மனைவியும் தோழருமான பியசீலியை இழந்தார். பியசீலி, தீவில் நிகரற்ற ஒரு சிறந்த அரசியல் மற்றும் கலாச்சார ஆளுமையாக இருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், விஜேக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலக் குறைவு மற்றும் முதுமையில் இயற்கையாகவே ஏற்படும் உடல் ரீதியான சிரமங்கள் இருந்தபோதிலும், அவர் அரசியலில் சுறுசுறுப்பாக இருந்து, அவரது வாழ்க்கையின் கடைசி நாட்கள் வரை தனது பரந்த அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தலைமைத்துவத்தையும் அரசியல் ஆலோசனைகளையும் வழங்கினார். செவ்வாயன்று உலக சோசலிச வலைத் தளத்தின் இலங்கை ஆசிரியர் குழு கூட்டத்தில் அவர் பங்குபற்றினார்.

அவர் இறப்பதற்கு முந்திய மாதங்களில், ஏப்ரல் தொடக்கம் இம்மாதம் வரை, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற காரணமான தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பாரிய எழுச்சிக்கு, கட்சியின் பிரதிபலிப்பை அபிவிருத்திசெய்வதில் அவர் நெருக்கமாக ஈடுபட்டார்.

மே மாதம் நடைபெற்ற இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாட்டில், விஜே தலைமை பங்கை ஆற்றியதுடன், “இலங்கையில் தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக சோசலிச மாநாட்டிற்காக!” என்ற கட்சியின் அறிக்கையை எழுதுவதில் அனைத்துலகக் குழுவுடன் நெருக்கமாக ஈடுபாடுகொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு ஜூலை 20 அன்று அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை முதலாளித்துவ ஆட்சிக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் அசைக்கமுடியாத எதிர்ப்பை தெளிவுபடுத்துகிறது. 1917 ரஷ்யப் புரட்சியில் இருந்து 1964இல் லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு மற்றும் 2011இல் தோல்வியுற்ற எகிப்திய புரட்சியின் படிப்பினைகள் வரை, கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அனுபவங்களை வெளிக்கொணர்ந்த அந்த அறிக்கை, தொழிலாளர் ஆட்சிக்கும் சோசலிசத்திற்காகவும் போராடுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்புகளை கட்டியெழுப்புவதன் அடிப்படையில் ஒரு மூலோபாயத்தை விவரிக்கிறது.

தோழர் விஜே முழுமையான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்தினார். அவர் தனது தாய்மொழியான சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சக்திவாய்ந்த பேச்சாளராக இருந்தார். அவர் பேசும் பல ஒளிப்பதிவுகள் அதற்கு சான்றகும்.

இலங்கை, இந்திய வரலாறு, சர்வதேச தொழிலாளர் இயக்கம் மற்றும் தெற்காசிய, மேற்கத்திய கலாச்சாரம் ஆகிய இரண்டிலும் அவருக்கு பரந்த அறிவு இருந்தது.

2003 இல் விஜே டயஸ்

அவர் வர்க்க எதிரியை எதிர்ப்பதில் அச்சமற்றவராக இருந்த அதேவேளை, அவரது மிகக் கசப்பான எதிரிக்குக் கூட அவரது அரசியல் நேர்மையை கேள்விக்குட்படுத்த முடியவில்லை என்பதோடு அதற்கான தைரியமும் இருக்கவில்லை.

அவர் சிறந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளின் அரசியல் பிரதிநிதிகளின் வெற்று ஆரவாரத்தையும் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்துவதில் அவர் அந்த உணர்வை மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடியவராக இருந்தார். அவருக்கு தகுதியான அரசியல் அந்தஸ்து இருந்தபோதிலும், விஜே மிகவும் அடக்கமான மனிதராக இருந்தார்.

ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அவர்களது பப்லோவாத கூட்டாளிகளால் தொழிலாள வர்க்கம் மோசமாக காட்டிக்கொடுக்கப்பட்டதுடன் பிணைக்கப்பட்ட நீண்ட மற்றும் கடினமான சூழ்நிலைகளில் விஜே பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர எழுச்சியைக் காண்பதற்காகவே அவர் வாழ்ந்தார். உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதீயான நெருக்கடி நிலைமைகளின் கீழ் இடம்பெறும் நிகழ்வுகள், முழு உலகிற்கும் ஒரு முன்னோடியாக இருக்கப் போவதை விரைவாக வெளிப்படுத்துகின்றன.

தோழர் விஜே டயஸ் இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தில் ஒரு மகத்தான ஆளுமைமிக்கவராவார். அவரது வாழ்க்கையும் மரபும் இப்போது சோசலிசத்திற்கான போராட்ட வரலாற்றினுள் செல்கின்றது. உலக சோசலிசப் புரட்சியின் தசாப்தமாக நிரூபிக்கப்படவுள்ள மற்றும் நிரூபிக்கப்பட வேண்டிய இந்த தசாப்தத்தில், ஒரு அரசியல் நோக்குநிலை வழங்குவதில் அவரது முன்னுதாரணம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகத்தை வழங்கும்.

Loading