முன்னோக்கு

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 82வது ஆண்டு நினைவு நாளில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்று 82 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 20, 1940 இல், லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச இரகசிய பொலிஸ் GPU இன் முகவரால் மெக்சிகோவின் கொயோகானில் உள்ள அவரது வில்லாவில் படுகொலை செய்யப்பட்டார், அங்கு அவர் தனது வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளை ஒரு அரசியல் நாடுகடத்தப்பட்ட நிலையில் கழித்தார். ட்ரொட்ஸ்கி அவரது கொலையாளி ரமோன் மெர்காடரால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் மறுநாள் இறந்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி, ஆகஸ்ட் 21, 1940 அன்று ஸ்ராலினிச முகவர் ரமோன் மெர்காடரால் ஏற்படுத்தப்பட்ட காயங்களுக்கு ஆளான சிறிது நேரத்தில் (AP Photo/Rotofoto/Enrique Diaz) [AP Photo/AP] [AP Photo/AP]

இந்த ஆண்டுதினம் ஒரு 5 அல்லது 10 ஆண்டு இடைவெளியிலான நினைவுகூரலை குறிக்கவில்லை. இந்த வரலாற்றுரீதியான நிகழ்வின் பொதுவான நினைவுகூரல் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை வழங்குகின்றது. எவ்வாறாயினும், ட்ரொட்ஸ்கியின் மரணத்தை நினைவுகூருவதற்கு அடையாளரீதியான நியாயப்படுத்தல் தேவையில்லை. ட்ரொட்ஸ்கியின் 82வது ஆண்டு நினைவேந்தலின் முக்கியத்துவம், ஒரு மார்க்சிச தத்துவார்த்தவாதியாகவும், மூலோபாயவாதியாகவும், உலக சோசலிசப் புரட்சியின் தலைவராகவும் இருந்த அவரது வாழ்க்கையிலிருந்து உருவாகின்றது.

ஆகஸ்ட் 1940 இல் நிலவிய அசாதாரண அரசியல் நிலைமைகள் இன்றைய நிலைக்கு மிகவும் ஒத்தவையாக உள்ளது. அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டில், ட்ரொட்ஸ்கியின் பணி இரண்டாம் உலகப் போர் வெடித்ததையும் சர்வதேச தொழிலாள வர்க்கம், உலக சோசலிச இயக்கம் மற்றும் மனிதகுலத்தின் தலைவிதிக்கு அதன் தாக்கங்களையும் மையமாகக் கொண்டிருந்தது. அவரது காலத்தின் மிகவும் யதார்த்தமான அரசியல் சிந்தனையாளரான ட்ரொட்ஸ்கி, உலக நிலைமையை அழகான வர்ணத்தில் வரைவதற்கு விரும்பவில்லை. சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை வைத்திருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் அக்டோபர் புரட்சியைக் காட்டிக் கொடுத்ததன் விளைவாகவும், முதலாளித்துவ சார்பு சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான தொழிலாளர் அமைப்புகளின் முதுகெலும்பற்ற தன்மையின் விளைவாகவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட பேரழிவை, அவர் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கொண்டார்.

இது ட்ரொட்ஸ்கியின் அற்புதமான அரசியல் தொலைநோக்கு பார்வைக்கு மட்டுமன்றி, 1940 மற்றும் இன்றைய நிலைமைகளுக்கு இடையிலான ஒத்த தன்மைக்கும் சாட்சியமளிக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் தலைவிதிக்கும் ஐரோப்பா முழுவதிலும் உக்ரேனின் பங்கு குறித்தும் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்:

உக்ரேனிய கேள்வி உடனடி எதிர்காலத்தில் ஐரோப்பாவின் வாழ்க்கையில் ஒரு மகத்தான பங்கை வகிக்கும். 'பெரிய உக்ரேன்' (Greater Ukraine) உருவாக்கம் பற்றிய கேள்வியை ஹிட்லர் மிகவும் சத்தமாக எழுப்பியது ஒன்றும் சும்மா இல்லை, மேலும் அவர் இந்த கேள்வியை மீண்டும் பின்மறைவாக அவசர அவசரமாக கைவிட்டதும் சும்மா இல்லை. [1]

தேசிய சுயநிர்ணய உரிமைக்கான உக்ரேனிய மக்களின் அபிலாஷையின் நியாயத்தன்மையை ட்ரொட்ஸ்கி அங்கீகரித்தார். லெனினும் ட்ரொட்ஸ்கியும் இன்னும் ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்தபோது சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம், 1922 இல் போல்ஷிவிக் அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டபோது அது முற்றிலும் தன்னார்வமான தன்மையை அடிப்படையாகக் கொண்டதோடு, அதன் உக்ரேனிய பிரிவுகளை பெரு ரஷ்ய பேரினவாதத்தின் அழுத்தத்திற்கு அடிபணிய செய்யும் அனைத்து போக்குகளையும் எதிர்த்தது. டிசம்பர் 30, 1922 தேதியிட்ட ஒன்றியத்தின் பிரகடனமும், ஒன்றிய ஒப்பந்தம், சோவியத் ஒன்றியத்தை 'சமமான மக்களின் தன்னார்வரீதியிலான ஒன்றியம்' என்று வரையறுத்தது. இதன் ஸ்தாபிதம், 'உலக சோசலிச சோவியத் கூட்டமைப்பினுள் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு தீர்க்கமான படியாக' இருக்கும். [2]

1930களின் இறுதியில், பதினைந்து ஆண்டுகளான சோசலிச சர்வதேசியத்தின் மீதான அதிகரித்துவரும் மீறல்கள் மற்றும் அதிகாரத்துவ பயங்கரவாதமும் சர்வாதிகாரமும் சோவியத் ஒன்றியம் தொடர்பாக உக்ரேனிய மக்களிடையே ஆழ்ந்த விரோதப் போக்கை உருவாக்கி, மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் போக்குகளின் மீள் எழுச்சிக்கு ஒரு சமூக தளத்தை உருவாக்கியது. ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

கிரெம்ளின் மீதான மேற்கு உக்ரேனிய மக்களின் முன்னாள் நம்பிக்கை மற்றும் அனுதாபத்தின் எந்தவொரு தடயமும் இல்லை. உக்ரேனில் சமீபத்திய கொலைகார 'களையெடுத்தலுக்கு' பின்னர், சோவியத் உக்ரேனின் பெயரைத் தொடர்ந்து கொண்டிருந்த மேற்கில் யாரும் கிரெம்ளின் சத்ரபியின் (ஆளுகைக்குட்பட்ட) ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை. மேற்கு உக்ரேன், புக்கோவினா மற்றும் கார்பாதோ-உக்ரேனில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாய மக்கள் முழுமையான குழப்ப நிலையில் உள்ளனர்: அவர்கள் எதை நோக்கித்திரும்புவது? எதை கோருவது? இந்த சூழ்நிலையில், நிச்சயமாக, தலைமை மிகவும் பிற்போக்குத்தனமான உக்ரேனிய சிறுகுழுக்களின் கைகளில் விழுகிறது. அவர்கள் கற்பனையான சுதந்திரத்தின் வாக்குறுதிக்கு ஈடாக உக்ரேனிய மக்களை ஒன்று அல்லது மற்றொரு ஏகாதிபத்தியத்திற்கு விற்க முயற்சிப்பதன் மூலம் தங்கள் 'தேசியவாதத்தை' வெளிப்படுத்துகிறார்கள். இந்த துயரமான குழப்பத்தில்தான் ஹிட்லர் தனது கொள்கையை உக்ரேனிய கேள்விக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளார். அந்த நேரத்தில் நாங்கள் சொன்னோம்: ஸ்ராலின் இல்லாமல் (அதாவது ஜேர்மனியில் மூன்றாம் அகிலத்தின் பேரழிவான கொள்கை இல்லாமல்) ஹிட்லர் இருந்திருக்க மாட்டார். இதற்கு நாம் இப்போது சேர்க்கலாம்: ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் உக்ரேன் வன்முறைக்குட்படுத்தப்படாமல், ஹிட்லரின் உக்ரேனிய கொள்கை இருந்திருக்காது. [3]

அதன் பின்னர் கடந்து வந்த காலத்தையும், மாறிய சூழ்நிலையையும் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு இன்றுவரை தற்போதைய போரைப் புரிந்துகொள்வதற்கு ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று அடிப்படையாகவே உள்ளது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ரஷ்யாவில் ஒரு முதலாளித்துவ ஆட்சியை நிறுவுவதன் மூலம் மேற்கு உக்ரேனின் மக்களை ஈர்க்க முடியாது. முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட மனச்சோர்வடைந்த சூழலில், உக்ரேனின் அரசியல் நிலைமை -ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் சொல்வதானால்- 'இயற்கையாகவே தலைமையை மிகவும் பிற்போக்குத்தனமான உக்ரேனிய சிறுகுழுக்களின் [அதாவது, பொரோஷென்கோ, செலென்ஸ்கி மற்றும் நவ-நாஜி ஆயுதக்குழுக்கள்] கைகளுக்கு மாற்றுகிறது. கற்பனையான சுதந்திரத்தின் வாக்குறுதிக்கு ஈடாக உக்ரேனிய மக்களை ஒன்று அல்லது மற்றொரு ஏகாதிபத்தியத்திற்கு விற்க முயற்சிப்பதன் மூலம் தங்கள் 'தேசியவாதத்தை' வெளிப்படுத்துகிறார்கள்'. புட்டினின் திவாலானதும் பிற்போக்குத்தனமானதுமான கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் உக்ரேனில் தங்கள் கொள்கையை உருவாக்கி வருகின்றன.

ட்ரொட்ஸ்கி ஒரு சுதந்திர சோசலிச உக்ரேனை உருவாக்க அழைப்பு விடுத்தார். ஒரு முதலாளித்துவ அடிப்படையில், எந்தவொரு முற்போக்கான அர்த்தத்திலும், உக்ரேனிய சுதந்திரத்தை அடைய முடியும் என்ற அனைத்து கூற்றுகளையும் அவர் அவமதிப்புடன் நிராகரித்தார்:

தேசிய விடுதலைக்கான தவறான போராட்ட பாதைகளின் பரந்த அனுபவத்தை உக்ரேன் குறிப்பாக பாரியளவில் கொண்டுள்ளது. அங்கே அனைத்தும் முயற்சிக்கப்பட்டது: குட்டி-முதலாளித்துவ ராடா, ஸ்கோரோபாட்ஸ்கி, பெட்லியூரா, ஹோஹென்சோலெர்ன்களுடன் 'கூட்டணி' மற்றும் என்டென்டே உடன் சேர்க்கைகள். இந்த அனுபவங்கள் அனைத்துக்கும் பின்னர், அரசியல் சடலங்கள் மட்டுமே, தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமையாக உக்ரேனிய முதலாளித்துவத்தின் பிரிவுகளில் தொடர்ந்து தங்கள் நம்பிக்கையை வைக்க முடியும். உக்ரேனிய பாட்டாளி வர்க்கம் மட்டும் அடிப்படையில் புரட்சிகரமான பணியைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல், அதன் தீர்வுக்கான முன்முயற்சியையும் எடுக்கும் திறன் கொண்டது. பாட்டாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் மட்டுமே விவசாய மக்களையும், தன்னைச் சுற்றியுள்ள உண்மையான புரட்சிகர தேசிய புத்திஜீவிகளையும் அணிதிரட்ட முடியும். [4]

இன்று, உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமிப் போர் மிக கீழ்த்தரமான வகையான பிரச்சாரத்தால் நியாயப்படுத்தப்படுகிறது. முதலாளித்துவ பத்திரிகைகளின் வரலாற்று மறதி எழுத்தாளர்கள் தங்கள் தேசிய இரகசிய சேவைகளின் பொது சுருக்கெழுத்தாளர்களாகச் செயல்படுகிறார்கள். பெரும்பாலான கல்வியாளர்கள், உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் வரலாற்றைப் படித்தவர்கள் கூட போர் வெறியுடன் இணைகிறார்கள். இந்த புத்திஜீவித அண்டிப்பிழைப்போர் சுயாதீனமான சிந்தனையையோ, விமர்சன மதிப்பீட்டையோ காட்ட இயலாது. உக்ரேனில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்கும் மோசடி மற்றும் பாசாங்குத்தனமான நியாயங்களை வழங்கும், சோசலிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்டுகள் என்று தம்மை காட்டிக்கொள்ளும் போலி இடது அமைப்புகளின் வஞ்சகமான ஆதரவாளர்கள் அவர்களை விட சிறந்தவர்களும் அல்ல பெரும்பாலும் மோசமானவர்கள் ஆவர்.

ட்ரொட்ஸ்கி தனது காலத்தில் அரசியல் பிற்போக்குத்தனதிற்கு சரணடைந்த மனச்சோர்வடைந்த மற்றும் நேர்மையற்ற முதலாளித்துவ புத்திஜீவிகளுக்கு தனது அவமதிப்பை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவில்லை. அவரது அரசியல் ஊடுருவலானது வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகள் பற்றிய ஆழமான புரிதலிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றல் மீதான நம்பிக்கையுடனும் வேரூன்றியது. 'இன்று உலக வரலாறு சந்தேகத்திற்கு இடமின்றி பயங்கரமான விகிதாசாரத்தை எடுத்துள்ளது' என்று அவர் இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக எழுதினார். 'ஆனால் அதன் மூலம் அது மிகப் பெரிய புரட்சிகர நெருக்கடிக்கான களத்தை இவ்வாறு தயார் செய்துள்ளது.“

இந்த வார்த்தைகள் நம் காலத்திற்குரியதுபோல் எதிரொலிக்கின்றன. அவரது படுகொலைக்கு 82 ஆண்டுகளுக்குப் பின்னரும், கடந்த நூற்றாண்டின் வரலாற்றின் ஒரு மாபெரும் ட்ரொட்ஸ்கி, 21ம் நூற்றாண்டின் புரட்சிகரப் போராட்டங்களில் மகத்தான அறிவார்ந்த மற்றும் அரசியல் முன்னிலையில் இருக்கிறார்.

[1] Trotsky, Leon. “Problem of the Ukraine.” April 22, 1939. https://www.marxists.org/archive/trotsky/1939/04/ukraine.html.

[2] Wade, Rex A. Documents of Soviet History. Gulf Breeze, FL: Academic International Press, 1993. p. 445

[3] Trotsky, Leon. “Problem of the Ukraine.” April 22, 1939. https://www.marxists.org/archive/trotsky/1939/04/ukraine.html.

[4] ibid

Loading