சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்த வாரம், தொழில்கள், நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான இலங்கை அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற வரவு-செலவுத் திட்டத் தாக்குதல்கள் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பெருகிவரும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சிதறிய எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டு ஆகிய இரண்டு தொழிற்சங்கக் குழுக்களும், அத்துடன் இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), இலங்கை புகையிரத போக்குவரத்து, கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்கவிலும் பியகமவிலும் உள்ள இரண்டு முக்கிய பிரதான சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சங்கங்களும் டிசம்பர் 5, 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

20 டிசம்பர் 2021 அன்று நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை கோர எஸ்குவல் ஆடைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

தொழிற்சங்கங்கள், மதிய உணவு நேரத்தில் அல்லது வேலை நேரத்திற்குப் பின்னர் போராட்டங்களை திட்டமிடுவதன் மூலம், வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் செயல்பாடுகளை பாதிக்கக் கூடியவாறு எதுவும் செய்ய மாட்டோம் என்று அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் ஒரு தெளிவான சமிக்ஞையை கொடுத்துள்ளன. அதே சமயம், சர்வதேச நாணய நிதிய கோரிக்கைகளை ஆதரிக்கின்ற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.) சம்பந்தமாக மாயைகளையும் தொழிற்சங்கங்கள் வளர்த்து விடுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.) தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராட, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும் மற்றும் அயல்புறங்களிலும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலில் இருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம், பிரச்சினைகளை தங்கள் சொந்த கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது. கிராமப்புற உழைப்பாளர்களையும் அவ்வாறே செய்யுமாறு நாங்கள் அழைக்கின்றோம்.

அரசாங்கத்தின் சிக்கன திட்டத்தில் உழைக்கும் மக்கள் மீது அதிக வரிகளை விதிப்பதும் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் மற்றும் உரத்திற்கான விலை மானியங்களை நிறுத்துவதும் அடங்கும். கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவுகள் வெட்டித்தள்ளப்பட உள்ளன. மிகவும் இன்றியமையாத வெளிநாட்டு நாணயங்களை பெறுவதற்காக ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான சுற்றுலா ஹோட்டல்களும் விற்கப்படும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தார். இலங்கை மின்சார சபையை 15 நிறுவனங்களாக பிரித்து அதன் விற்பனையை எளிதாக்குவதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தனியார்மயமாக்கலானது உழைக்கும் மக்கள் மீதான இருமுனைத் தாக்குதலாகும். ஒருபுறம், தனியார் இலாபத்தை உறுதிப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மேலும் அதிகரிக்கப்படும். மறுபுறம், தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவதுடன் மீதமுள்ள மீண்டும் இலாபத்தை உயர்த்துவதன் பேரில் தொழிலாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கப்படும்.

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் தாக்கங்கள் குறித்து மௌனம் காத்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்தால் இப்போது போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டுள்ளனவே அன்றி, தொழில்கள் மற்றும் நிலைமைகள் சம்பந்தமாக அவற்றுக்கு எந்த அக்கறையும் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து இடம்பெற்ற தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மற்றொரு எழுச்சியை பற்றி அவை பீதியடைந்துள்ளன.

இந்த தொழிற்சங்கங்கள், குறிப்பாக முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி-இடது அமைப்புகளால் ஆதரிக்கப்படும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தொழிற்சங்கங்களதும் வெகுஜன அமைப்புகளினது கூட்டும், இராஜபக்ஷவுக்கு எதிரான வெகுஜன எழுச்சியைக் காட்டிக் கொடுப்பதில் தீர்க்கமான வகிபாகம் ஆற்றின. ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில் பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைகளை ஒரு நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தின. இந்த தொழிற்சங்கங்கள், இடைக்கால அரசாங்கத்திற்கான எதிர்க்கட்சிகளின் அழைப்பு உழைக்கும் மக்களுக்கு உதவும் என்று பொய்யாகக் கூறின.

இப்போது இதே தொழிற்சங்கங்கள், அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தை அதன் கடுமையான நடவடிக்கைகளைக் கைவிட நிர்ப்பந்திக்க முடியும் என்று கூறி மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிற்சங்கங்களதும் வெகுஜன அமைப்புகளினது கூட்டு, முதலாளித்துவ எதிர்க் கட்சிகள் மற்றும் முழு பாராளுமன்றக் கட்டமைப்பையும் நோக்கிய அதன் திசையமைவுக்கு இணங்க, வரவு செலவுத் திட்டம் இறுதியாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும் நாளான டிசம்பர் 8 அன்று தனது எதிர்ப்பை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

முதலாளித்துவ அமைப்பு மற்றும் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் கட்டமைப்பிற்குள் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. பொதுத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் இதேபோல் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை அணுகாததற்காக முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தை ஐ.ம.ச. விமர்சித்ததை தொழிலாளர்கள் நினைவுகூர வேண்டும். தான் அரசாங்கத்தில் இருந்தால் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மிகவும் விளைபயனுள்ள வகயில் செயற்படும் என்று ஜே.வி.பி. இப்போது வெளிப்படையாகக் கூறுகிறது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அதன் சொந்த சுயாதீனமான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவும் கிராமப்புற ஏழைகளை தனது பக்கம் அணிதிரட்டவும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி கோடிட்டுக் காட்டும் பின்வரும் கொள்கைகளை சூழ, தொழிலாளர்களதும் கிராமப்புற உழைப்பாளர்களினதும் நடவடிக்கைக் குழுக்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு அரசியல் போராட்டத்தை கட்டியெழுப்ப முடியும்:

  • சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்ட நிரலை நிராகரி! ஊதியத்தை வெட்டாதே! ஓய்வூதியத்தை வெட்டாதே!
  • வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்ணியமான ஊதியம் வேண்டும்! உயர் பணவீக்கத்தை எதிர்கொள்ள ஓய்வூதியத்தை ஒரு ஒழுக்கமான நிலைக்கு மேம்படுத்து!
  • பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு வேண்டாம்! அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்கச் செய்!
  • அனைத்து வெளிநாட்டு கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிராகரி! அதி செல்வந்தர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கு!

மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் பசி மற்றும் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் தொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மறுசீரமைக்க வேண்டும். ஏழை விவசாயிகளின் கஷ்டத்தை போக்க, அவர்களின் கடன்களை ரத்து செய்து, உர மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

விக்கிரமசிங்க, அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதன் மூலமும், இராணுவம் மற்றும் பொலிஸாரை நிலைநிறுத்துவதன் மூலமும், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து எழும் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதாக அச்சுறுத்தியுள்ளார். அவர் ஏற்கனவே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். இந்த வாரம் அவரது அரசாங்கம் வேலைநிறுத்தங்களை தடை செய்வதற்காக அரச நிறுவனங்களான இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையையும் உள்ளடக்கிய அத்தியாவசிய சேவைச் சட்டத்தை நீட்டித்தது.

சிக்கன நடவடிக்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் முன்னெடுக்கும் போராட்டம் அரசாங்கத்துடனும் அடக்குமுறை அரசு எந்திரத்துடனும் நேரடி மோதலுக்கு வரும். இந்த நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குவதற்கும் தொழிலாள வர்க்கம் பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசரமானது. உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரமானது அடிப்படை சமூக உரிமைகளுக்கான போராட்டத்துடன் இயல்பாகவே பிணைந்துள்ளது.

ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட ஒரு பிரதான அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கம் தனது பலத்தை திரட்டி, கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டி, சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்கான அரசியல் வழிவகைகளை வழங்க, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்க்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் இந்த மாநாடு கட்டியெழுப்பப்படும்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஆளும் வர்க்கத் தாக்குதலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு ஐக்கியத்தை உருவாக்க வேண்டும்.

தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது இதேபோன்ற தாக்குதலை எதிர்கொள்கின்ற உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களே இலங்கை தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகள் ஆவர். இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட, உலக அளவில் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கான வழிவகைகளை வழங்குகின்ற நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இணைய வேண்டும்.

இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.

Loading