இலங்கையில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக் குழுவானது (EC) ஜனவரி 18 மற்றும் 21 க்கு இடையில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என அறிவித்துள்ளது. தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடையும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க  [Photo: United National Party Facebook] [Photo: United National Party Facebook]

அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும்  விரோதத்தை எதிர்கொள்கின்றன.

இந்த வெகுஜன கோபம் ஒரு அவமானகரமான தேர்தல் தோல்வியில் வெளிப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில், விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் தேர்தலை நிறுத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்புள்ள போதிலும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கம் கடைசி நேர நகர்வுகளை மேற்கொள்ளும் என்பதை நிராகரிக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கடந்த பெப்ரவரியில் நடைபெறவிருந்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அப்போதைய ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தால் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 6 அன்று, தேர்தலை மீண்டும் தாமதப்படுத்தும் தெளிவான முயற்சியில், அரசியலமைப்பை மீறி, விக்கிரமசிங்க தேர்தல்கள்ஆணைக்குழுவின் அதிகாரிகளை தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

கூட்டத்தில் என்ன கலந்துரையாடப்பட்டது என்பது வெளிவராத போதிலும், கிடைக்கப்பெறும் செய்திகளின்படி, தேர்தலை நடத்துவதில் உள்ள 'நிதி சிக்கல்களை' விக்கிரமசிங்க மேற்கோள் காட்டியுள்ளார். 'அரசியலமைப்பு அல்லது நீதித்துறை நடவடிக்கையின் மூலமே தவிர, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதைத் தடுக்க வேறு வழி இல்லை' என்று தேர்தல் ஆணைக்குழு அவருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

விக்கிரமசிங்கவின் நடவடிக்கையானது தேர்தலை நிறுத்துவதற்கான ஜனநாயக விரோத தலையீடு ஆகும். இலங்கை அரசியலமைப்பின் கீழ், ஜனாதிபதிக்கு தேர்தலில் தலையிடவோ, தேர்தலை தடுக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ சட்டப்பூர்வ உரிமை கிடையாது.

ஜனவரி 9 அன்று, அமைச்சரவைக் கூட்டத்தில், இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மறுநாள், அமைச்சரவை செயலாளர் டொனால்ட் பெர்னாண்டோவின் எழுத்துப்பூர்வ உத்தரவின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து கட்டுப் பணத்தைப் பெற வேண்டாம் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகச் செயல்படுவார்கள்.

அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான பண்பு அம்பலமானதைத் தொடர்ந்து சுற்றறிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இலங்கை சட்டத்தின் கீழ், அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவின் முடிவொன்றை ஒரு பாராளுமன்ற சட்டம் அல்லது நீதிமன்ற முடிவின் மூலம் மட்டுமே இரத்து செய்ய முடியும்.

அதேநேரம், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விஜேசுந்தர தனது மனு தனிப்பட்ட முன்முயற்சி என்று கூறினாலும், இது விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் சார்பான ஒரு தெளிவான நடவடிக்கையாகும்.

விஜேசுந்தரவின் மனுவை நிராகரிக்கக் கோரி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) செயற்குழு உறுப்பினர் சுனில் வதகல; ஜே.வி.பி.யின் இளைஞர் பிரிவான சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் (SYU) தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர; மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விசாகேச சந்திரசேகரம் ஆகியோரால் இவை சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) தேர்தலை நிறுத்தும் அமைச்சரவையின் முயற்சிகளை எதிர்த்து தனியான மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

பாரிய வெகுஜன எதிர்ப்புக்களும் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடந்த மூன்று பொது வேலைநிறுத்தங்களும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற நிர்ப்பந்தித்த பின்னர், விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச மூலதனத்தின் நன்கு அறியப்பட்ட முகவரான விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி, பிரதானமாக இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் மூலம் அரசாங்கத்தை அமைத்தார்.

விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் இப்போது இரக்கமின்றி சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்றனர். அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீதான வரிகளை அதிகரித்தல், அரசாங்க வேலைகள் மற்றும் சம்பளங்களை அழித்தல் மற்றும் சமூக மானியங்களை வெட்டுதலும் இதில் அடங்கும்.

கொழும்பின் சிக்கன நடவடிக்கைகள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் தொழிலாளர்களின் வெகுஜன நடவடிக்கையின் மீள் எழுச்சியைக் காணும் என்பதை அது நன்கு அறிந்திருப்பதுடன் கொடூரமான ஒடுக்குமுறைக்கு அது தயாராகி வருகிறது.

வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு அவசரகாலச் சட்டங்களை பயன்படுத்தியும் பாதுகாப்புப் படைகளை அனுப்புவதன் மூலமும் அனைத்து எதிர்ப்பையும் நசுக்கப் போவதாக விக்கிரமசிங்க பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் அவநம்பிக்கையான முயற்சிகள், அனைத்து உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் பரந்த தாக்குதல்களின் வழியிலேயே அமைந்துள்ளன.

ஆளும் வர்க்கத்தை வாட்டி வதைக்கும் கடுமையான அரசியல் நெருக்கடியின் அறிகுறி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதலாளித்துவக் கட்சிகளால் இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள கூட்டணிகளில் பிரதிபலிக்கிறது.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட தமிழ் கட்சிகள், அத்துடன் பெருந்தோட்டங்களில் பிரதான கட்சி/தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சுமார் 12 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது.

நீண்டகால முதலாளித்துவக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) கடந்த ஆண்டு அப்போதைய ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யில் இருந்து பிரிந்த குழுக்களுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் உள்ளடங்கும்.

ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தியும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற, அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. இதன் மூலம் தேசிய பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றன. ஒவ்வொருவரும் விக்கிரமசிங்கவால் நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர்கள் கூறும் அதே சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு 'மக்கள் ஆணையுடன்' தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என நம்புகின்றனர்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை அரசாங்கம் தாமதப்படுத்துவதாகவும், நாட்டின் பொருளாதார நெருக்கடியை 'கடக்க' தேவையான 'பொருளாதார சீர்திருத்தங்களை' செயல்படுத்தவில்லை என்றும் ஐ.ம.ச. குற்றம் சாட்டுகிறது.

அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரதான கட்சிகளும் உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் மதிப்பிழந்துவிட்ட நிலையில், ஜே.வி.பி., முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்கக்கூடிய கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறது.

கடந்த ஒக்டோபரில், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, “சுவர்ணவாஹினி” பேச்சு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், “ஒரு முன்மாதிரியான குழுவின் ஆட்சியை”, அதாவது, தனது கட்சியின் ஆட்சியை வலியுறுத்தும் என்றும், சர்வதேசநாணய நிதிய வேலைத்திட்டத்திற்கான “செலவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கட்சிகள் எதனாலும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இவை அனைத்தும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் வெகுஜனங்களின் மீது சுமத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. விக்கிரமசிங்க-ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆட்சியைப் போலவே, இந்தக் கட்சிகளும் அனைத்து வெகுஜன எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்கும்.

முதலாளித்துவ ஆட்சிக்கும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பவும், முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் போராடுகிறது.

அதனாலேயே, அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, சோ.ச.க. அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது ஏஜண்டுகளில் இருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களை அடைப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்கிறது.

இலங்கை ஜனாதிபதி மேலும் சிக்கன நடவடிக்கைகளை கோருகிறார்

இராஜபக்ஷவின் அவசரகால நிலைக்கு எதிராக இலங்கை தொழிலாளர்களை பாதுகாத்திடுங்கள்!

இலங்கை: அரசாங்க - எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து! அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

Loading