இலங்கைக்கான தனது திட்டம் ஒரு "கொடூர பரிசோதனை" என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையானது, இலங்கை அரசாங்கத்திற்கு 2.9 பில்லியன் டொலர்  நான்கு ஆண்டு பிணை எடுப்பு கடன் ஒப்புதலை  திங்களன்று வழங்கியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர், இலங்கை மத்திய வங்கி அதனது முதல் தவணையாக 330 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டது.

கடந்த காலத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் பேர் போன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடனுக்கான அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சியடைந்தார். நாட்டு மக்களுக்கு அவர் விடுத்த விசேட அறிக்கையில், “இலங்கை இனி ஒரு வங்குரோத்து நாடாக கருதப்படாது” என்று அறிவித்தார்.

4 பெப்ரவரி 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப் படைகளின் தலைவர்களுடன். [Photo: Sri Lanka president’s media division]

ஒப்பீட்டளவில், அதன் கடன் சிறியதொகைநயாக இருந்தாலும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனையவற்றிடமிருந்து மேலும் 7 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு இது ஒரு ஊக்கியாக இருக்கும்,  என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

“சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு உயிர்நாடியை நீட்டித்துள்ளது” போன்ற தலைப்புச் செய்திகளால் இலங்கை ஊடகங்களும் மகிழ்ச்சியடைந்தன. பெருவணிக கருத்தாதரவு குழுக்களும் சர்வதேச நாணய நிதியத்தின் முடிவைப் பாராட்டி, அதை ஆதரிக்குமாறு அனைவரையும் அழைத்தன.

உண்மையில், சர்வதேச நாணய நிதிய கடன், முன்னெப்போதும் இல்லாத சிக்கன திட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது, இந்த சிக்கனத் திட்டம், சர்வதேச நிதி மூலதனத்தினுடைய  நிர்வாகத்தின் கீழ் நாட்டை விளைபயனுடன் வைக்கிறது.

செவ்வாயன்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர், 'ஆசியா-பசிபிக்கில், சர்வதேச நாணய நிதியத்தால் ஆளுகை கண்டறியும் பயிற்சிக்கு உள்ளாகும் முதல் நாடாக இலங்கை இருக்கும்,' என்று விளக்கினார். ஒரு லட்சியத்துடன் கூடிய, வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு, கடன் நிலைத்தன்மை மற்றும் சிறந்த நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மை உட்பட ஐந்து தூண்களில் இந்த பயிற்சி தங்கியுள்ளது, என அவர் கூறினார்.

கடனைப் பெறுவதற்காக, இலங்கை அரசாங்கம்    சமூக சேவைகள், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் ஆழமான வெட்டுக்களை ஏற்கனவே முன்னெடுக்க வேண்டியிருந்தது. ப்ரூயர் ஒப்புக்கொண்டது போல்: 'எந்தவொரு வெளிப்புற ஆதரவும் இல்லாமல், பொருளாதாரத்தை ஒரு சமநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது எந்தளவு கொடூரமான சோதனை என்பதை இது காட்டுகிறது.”

கடனை விடுவிப்பதற்கு முன், சர்வதேச நாணய நிதியமானத சிக்கன நடவடிக்கைகளின் ஒரு நீண்ட பட்டியலைக் கோரியது, அரசாங்கம் 15 இலக்குகளையும் அடைந்துவிட்டதாக விக்கிரமசிங்க பெருமையடித்துக் கொண்டார். ரூபாயின் பெரும் மதிப்பிழப்பு, இறக்குமதி குறைப்பு, பெறுமதி சேர் வரி (வட்) அதிகரிப்பு, பல தொழிலாளர்களுக்கு வருமான வரி விதிப்பு, எரிபொருள் விலை மற்றும் மின் கட்டண உயர்வு மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களும் இந்த வெட்டு நடவடிக்கையில் அடங்கும்.

உழைக்கும் மக்களின் சமூக நிலையில் இந்த அழிவுகரமான பாதிப்புகள், விலைவாசி உயர்வு மற்றும் அடிப்படை பொருட்களின் பரவலான பற்றாக்குறையை உருவாக்கிய, முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் விளைவுகளுக்கும் மேலாக திணிக்கப்படுகின்றன, 

பாதிக்கப்பட்ட மக்களின் எழுச்சி கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அது இறுதியில் ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்தித்தது. இலங்கை அரசியல் ஸ்தாபனமானது ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை சுமத்துவதற்காக ஜனநாயக விரோதமாக விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது.

இந்த வார கடன் ஒப்புதலை அடுத்து, 'கொடூரமான சோதனையின்' மேலும் பல நடவடிக்கைகள் வரிசையில் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் அல்லது வணிகமயமாக்குதல், இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியில் எஞ்சியிருப்பதையும் சுரண்டுதல் மற்றும் இலட்சக் கணக்கான அரச தொழில்களை வெட்டுவதும் அடங்கும்.

செவ்வாயன்று, அமைச்சரவை,   அரசுக்கு சொந்தமான ஏழு நிறுவனங்களின் அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்றுத் தள்ளுவதற்கு ஒப்புதல் அளித்ததுடன் அந்த செயற்பாடுகளை மேற்பார்வையிட ஒரு அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவை ஸ்தாபித்தது.

வியாழன் அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்ரமசிங்க, அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கிராண்ட் ஹயாட் மற்றும் ஹில்டன் ஹோட்டல்கள், லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லங்கா மருத்துவமனை கூட்டுத்தாபனம் ஆகியவை விரைவில் விற்கப்படும் என்றார்.

கேள்விகளுக்குப் பதிலளித்த விக்கிரமசிங்க, “அவை அனைத்தும் நஷ்டத்தை ஈட்டக்கூடியவை அல்ல. நாம் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது,” என்று அப்பட்டமாக அறிவித்தார். நஷ்டமடையாத அரச நிறுவனங்களை ஏன் இலங்கை விற்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அரசு ஏன் வணிகத்தில் ஈடுபடவேண்டும்? இது எங்கள் பொறுப்பு அல்ல,” என்று அவர் பதிலளித்தார்:

சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, தொழிலாளர்கள் மற்றும் தொழிலறிஞர்களின் மத்தியில் பரவலான கோபம் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில், தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட வருமான வரி உயர்வுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்கள் பற்றி இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு அவர் அளித்த பதிலானது, உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமைகள் சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

'வாழ்க்கைச் செலவில் நம்பமுடியாத அதிகரிப்பு... வேலை இழப்பு, வாழ்வாதார இழப்பு, எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் உண்மையில் மக்களைப் பெருமளவில் பாதித்துள்ள, குறிப்பாக ஏழைகளை மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களை பாதித்துள்ள உண்மையான வருமான வீழ்ச்சி உட்பட துன்பங்களை” தான் புரிந்துகொண்டதாக அறிவித்தே ப்ரூயர் தன் பதிலைத் தொடங்கினார்.

ஆனால் அவர் தெளிவுபடுத்தியது போல், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னுரிமை சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளால் தீர்மானிக்கப்பட்டது. 19.9 சதவீத செலவினங்களுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 சதவீத அளவான உலகிலேயே குறைந்த அளவிலான நிதி வருவாயையே இலங்கை சேகரிக்கிறது, என்று ப்ரூயர் முறைப்பாடு செய்தார்.

'வெளிப்புற கடன் வழங்குநர்கள் அந்த இடைவெளியை நிரப்ப தயாராக இல்லை, எனவே இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய வரி சீர்திருத்தங்கள் மிகவும் தேவையாக உள்ளது' என்று ப்ரூயர் அப்பட்டமாக அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் பொதுச் செலவினங்களுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவிகித வருவாய் பற்றாக்குறை இடைவெளியை 2025 இல் தொடங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகித உபரியாக மாற்ற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது. 'இது மிகவும் கடினமான இலக்காகும். ஆனால் மாற்று வழி என்ன?” என்று அவர் கேட்டார்.

இலங்கையின் பிரதான வர்த்தக ஆதரவுதேடும் குழுவான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தது. அதன் அறிக்கை, 'நீண்ட கால தாமதமான பொருளாதார சீர்திருத்தங்கள் நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு இன்றியமையாத உந்துதலாக உள்ளது' என்று அறிவித்தது. அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களும் 'சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நேர்மறையாக நோக்குமாறும் [அதற்கு] ஆதரவளிக்குமாறும்' வலியுறுத்தியது.

புதன்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விக்ரமசிங்க, ஏதேனும் மாற்றீடு இருந்திருந்தால் அதைக் காட்டுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார். எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களின் பெருகிவரும் அலையை எதிர்கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை முன்னிறுத்துவதில் தன்னுடன் சேருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில், அவர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறார்.

ஆசிரியர்கள் தன்னிச்சையான இடமாற்றங்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ள நிலையில், போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்வதற்காக கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி அச்சுறுத்தினார். புதன்கிழமை, நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டார். ஏற்கனவே, மின்சாரம், புகையிரதம், துறைமுகங்கள், தபால், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட பல அரசு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் போராட்டங்களை மட்டுப்படுத்தவும், தடம் புரட்டவும் விக்கிரமசிங்க தொழிற்சங்கங்களை நம்பியிருக்கிறார். வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்படும் போதெல்லாம், தொழிற்சங்கங்களோ, விட்டுக்கொடுப்புகளை செய்யுமாறு அரசாங்கத்துக்கு வீண் வேண்டுகோள்களை விடுப்பதன் பக்கம் போராட்டங்களை திசை திருப்பியுள்ளன. சிக்கன திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று விக்கிரமசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை. கடன் ஒப்புதலைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை வெளிப்படுத்துமாறு வெறுமனே அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஆண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பை விரைவில் அமுல்படுத்தாமைக்காக ஐ.ம.ச. அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.

கடந்த அக்டோபரில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, “ஸ்வர்ணவாஹினி” உரையாடல் நிகழ்ச்சியில், நாடு வெளிநாட்டுக் கடன்களை செலுத்தத் தவறியதை அடுத்து, இலங்கைக்கு “சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறினார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதில் தமது கட்சிக்கு ஆட்சேபனை இல்லை என மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தக் கட்சிகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தை ஆதரிப்பதானது, முதலாளித்துவ அமைப்பிற்குள் உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை சுமத்துவதைத் தவிர, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு மாற்றீடு அல்ல என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்கள் விஷயங்களை தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக்கொண்டு, பெரும் பணக்காரர்களின் இலாபங்களுக்காக அன்றி, .உழைக்கும் மக்களின் எரியும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவது மட்டுமே ஒரே மாற்றீடு ஆகும்

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே தொழிலாளர்களுக்கான அத்தகைய வேலைத் திட்டத்தை முன்வைக்கிறது: தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் அமைத்திடுங்கள், கிராமப்புற ஏழைகளுக்கும் அவர்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். அனைத்து கடன்களையும் நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருவதோடு அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகமும் உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளுக்கு எதிராக அணிதிரளவும், சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடவும், இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

இலங்கை அரசாங்கம் IMF இன் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதால் பொருளாதார அழிவு மோசமடைகிறது

Loading