இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் எஜமான் WSWS கட்டுரையை மேற்கோள் காட்டி, இணையத்தளங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டாம் என, தொழிற்சங்கத் தலைவர்களை எச்சரிக்கின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தன அலுத்கமகே, மே 30 அன்று வெளியான, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) 'இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்களை வேட்டையாடுவதை எதிர்த்திடு' என்ற தலைப்பிலான கட்டுரையை சுட்டிக் காட்டி, தொழிற்சங்கத் தலைவர்களை இணைய வெளியீடுகளுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என்று எச்சரித்திருப்பதை எமது வலைத் தளம் அறிந்துகொண்டது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 8 டிசம்பர் 2022 அன்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (இ.கா.கூ.) பல்வேறு தொழிற்சங்க அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அளுத்கமகே தனது ஜனநாயக விரோத கட்டளையை வெளியிட்டார். காப்புறுதிப் பொது ஊழியர் சங்கத்தின் (கா.பொ.ஊ.ச.) பொதுச் செயலாளர் திவாகர அதுகல, தொழிற்சங்கத்தின் ஊடகச் செயலாளர் நயோமி ஹெட்டியாராச்சிகே ஆகியோர் மீதான பழிவாங்கல் மற்றும் கட்டாய இடமாற்றம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டது.

WSWS கட்டுரையை சுட்டிக்காட்டிய, தலைமை நிர்வாக அதிகாரி, கா.பொ.ஊ.ச. பொதுச் செயலாளர் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கியதால், கொழும்பில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாணந்துறையில் இருந்து கொழும்பில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலவானை வரை அவரது ஒழுக்காற்று இடமாற்றம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.

ஹெட்டியாராச்சிகே பாணந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அலுவலர்கள் இருவரையும் கொழும்பு தலைமை அலுவலகத்திற்குள் நுழையாமல் தடுக்குமாறு இ.கா.கூ. நிர்வாகம் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

WSWS பெற்றுக்கொண்ட தகவலின்படி, கூட்டத்தில் இருந்த மற்ற தொழிற்சங்கங்களின் அதிகாரிகள் நிறைவேற்று அதிகாரியின் அச்சுறுத்தல்களை எதிர்க்கவில்லை. அவர்களது மௌனம், இந்த தொழிற்சங்கத் தலைவர்கள், தங்களுக்கும் மற்ற தொழிலாள வர்க்கத்துக்கும் உள்ள முக்கியமான அடிப்படை உரிமையான, தங்கள் வேலைத் தளங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பகிரங்கப்படுத்துதலை முன்னெடுத்து தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தயாராக இல்லை என்பதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கா.பொ.ஊ.ச அலவலர்களான அதுகல மற்றும் ஹெட்டியாராச்சியும், டிசம்பர் 8 மற்றும் மார்ச் 15 அன்று கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தொழிலாளர்களை அணிதிரட்டியதாலேயே வேட்டையாடப்பட்டுள்ளனர். இ.கா.கூ. நாட்டின் முன்னணி காப்புறுதி வழங்குநராக உள்ளதுடன் தற்போது 154 கிளைகளில் 2,500 பேர்களை வேலைக்கமர்த்தியுள்ளது.

காப்புறுதி பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திவாகர அதுகல, கொழும்பில் உள்ள இ.கா.கூ. தலைமையகத்திற்கு வெளியே ஜூன் 15 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.

அதுகல மற்றும் ஹெட்டியாராச்சிக்கும் 'தொழிற்சங்க விவகாரங்களுக்காக, நிறுவனத்தின் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியதாக' குற்றஞ்சாட்டப்பட்டு நடத்தப்ட்ட 'ஒழுக்காற்று விசாரணையின்' பின்னர், ஜூன் 5 அன்று கட்டாய இடமாற்றக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. நிறுவனத்தின் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துவது இ.கா.கூ. இல் இயங்கும் 15 வெவ்வேறு தொழிற்சங்கங்களின் பொதுவான நடைமுறையாகும்.

3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள பிரதான கோரிக்கைகளில் ஒன்றான நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துவதற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பு தீவு முழுவதும் அதிகரித்து வருகிறது.

இந்த நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் அரை மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களையும் அவர்களைச் சார்ந்திருக்கும் பல மில்லியன் கணக்கானவர்களையும் கடுமையாக பாதிக்கும். இலட்சக்கணக்கான தொழில்கள் அகற்றப்படுவதுடன், ஊதிய வெட்டும் ஓய்வூதியம் திணிக்கப்படுவதோடு வேலை நிலைமைகள் கடுமையாக இருக்கப்படும்.

இ.கா.கூ. நிர்வாகம் தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டுத்தாபன வளாகத்தில் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் நடத்துவது உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடை செய்துள்ளது. இது கொழும்பு தலைமை அலுவலகத்தை ஏறத்தாழ ஒரு சிறை முகாமாக மாற்றியுள்ளது. கா.பொ.ஊ.ச. தலைவர்களான அத்துகல மற்றும் ஹெட்டியாராச்சி மீது தொடரும் பழிவாங்கலானது, அதன் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்புகள் அனைத்தையும் நசுக்கும் முயற்சியில் அரசாங்கத்தாலும் அரச நிறுவன எஜமானர்களாலும் கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியதற்காகவும், ஊடகங்களுக்கு தகவல் வழங்கியதற்காகவும் தொழிற்சங்க அதிகாரிகளை இ.கா.கூ. வேட்டையாடுவது ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருப்பதோடு, இதை அனைத்து அரச நிறுவன தொழிலாளர்களும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் எதிர்க்க வேண்டும்.

இரண்டு இ.கா.கூ. தொழிற்சங்க அலுவலர்கள் பலிகடாக்கல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலின் உண்மையான இலக்கு முழு தொழிலாள வர்க்கமே ஆகும். இது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள், அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு நேர் எதிரானது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை குற்றமாக்குவதற்கு கொடூரமான அத்தியாவசிய சேவைகள் சட்டங்களை திட்டமிட்டு பயன்படுத்தியுள்ளது. அது பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களை நசுக்க பொலிஸை கட்டவிழ்த்து விட்டது.

மார்ச் மாதம், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸாரையும் களமிறக்கியது. தொழிற்சங்க அதிகாரிகள் உட்பட வேலைநிறுத்தம் செய்த 20 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டு, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். இந்த தொழிலாளர்களுக்கு ஜூன் 8 அன்று அவர்களின் சேவைகளை இடைநிறுத்துவதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு முற்பகுதியில், கோட்டாபய இராஜபக்ஷவின் முன்னைய அரசாங்கம், சுகாதார ஊழியர்களுக்கு பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதைத் தடைசெய்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

விக்கிரமசிங்க இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் அதே நேரம், சுகாதார சேவைக்கான நிதியைக் குறைத்து, மிகவும் இன்றியமையாத மருந்துப் பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்தார்.

கடந்த செப்டம்பரில், பொது நிர்வாக அமைச்சானது, “சமூக ஊடகங்களுக்கு தகவல் அளிக்கும் அரச அதிகாரிகள்” என்ற தலைப்பில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த உத்தரவை மீறும் எந்தவொரு தொழிலாளிக்கும் எதிராக ஸ்தாபனச் சட்டம் எனப்படுவதன் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது அச்சுறுத்தியது.

அந்த மாதம், மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ வைத்தியர் சங்கத்தின் தலைவரும், ஹம்பாந்தோட்டை பிராந்திய சுகாதார பணிப்பாளருமான வைத்தியர் சமல் சஞ்சீவவை, இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக “போலி” தகவல்களை ஊடகங்களுக்கு முன்வைத்ததன் மூலம் “அரசாங்கத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக” குற்றம் சாட்டி அரசாங்கம் இடைநிறுத்தியது. தெற்கில் ஹம்பாந்தொட்ட மாவட்டத்தில் பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து அவர் உட்பட மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டதற்காகவே அவர் வேட்டையாடப்பட்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. தனியார்மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள ஏனைய சிக்கனக் கோரிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

அந்த பிரச்சாரத்துக்கும் ஜூலை 6 அன்று கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்தவிருக்கும் பொதுக் கூட்டத்துக்கும் பரந்த அளவிலான தொழிலாளர்களிடம் இருந்து உற்சாகமான ஆதரவு கிடைத்து வருகின்றது.

அரசாங்கத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட தொழிலாள வர்க்கம் கடைப்பிடிக்க வேண்டிய வேலைத்திட்டத்தைப் பற்றி விரிவாகக் கூறி, எங்கள் மே 30 கட்டுரை கூறியதாவது:

'அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்ட நிரலையும் அதன் பரந்த சிக்கன நடவடிக்கைகளையும், முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான மற்றும் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் சவால் விடும் ஒரு அரசியல் மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும். இ.கா.கூ. ஊழியர்கள் உட்பட தொழிலாளர்கள், ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதோடு நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் மூலம் தங்கள் சர்வதேச சகோதர சகோதரிகளை அணுக வேண்டும்.

'ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்துள்ள முன்னோக்கிற்காக இலங்கை நடவடிக்கைக் குழுக்கள் போராட வேண்டும். தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட வேண்டிய இந்த மாநாடு, விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கும், சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் பாதுகாக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அடித்தளங்களை அமைக்கும்'

இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் எமது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் இ.கா.கூ. தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய அனைத்துப் பிரிவுகளையும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

திகதி மற்றும் நேரம்: 6 ஜூலை, வியாழன், மாலை 4 மணி.

இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு

கொழும்பில் சோ.ச.க./IYSSE பொதுக்கூட்டம்: இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! வேலை மற்றும் சம்பளத்துக்காகப் போராட தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!

'தொழில் சட்ட சீர்திருத்தம்' பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!

Loading