சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழு கூட்டம்: தனியார்மயமாக்கலை அனுமதிக்கும் கட்டண வாட்டு முறைமையை எதிர்த்திடுவோம்! இலவச சுகாதார சேவையை பாதுகாக்க சுகாதார ஊழியர்களது பொது நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவோம்!

சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழுவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழுவானது “தனியார்மயமாக்கலை அனுமதிக்கும் கட்டண வாட்டு முறைமையை எதிர்ப்போம்! இலவச சுகாதாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்ய சுகாதார ஊழியர்களினதும்  பொது மக்களதும்  நடவடிக்கை குழுக்களை உருவாக்குவோம்! என்ற தொனிப்பொருளில் ஜூன் 24 அன்று பிற்பகல் 12.30 மணி முதல் 2.30 மணி வரை கண்டி தேசிய வைத்தியசாலை மருத்துவ சங்க மண்டபத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோழர்களே, தோழிகளே;

அரச மருத்துவமனைகளில் பணம் பெற்றுக்கொண்டு சிகிச்சையளிக்கும் கட்டண வாட்டுப் முறைமையை தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். இந்தத் திட்டம், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் இதுவரையில் இருந்துவரும் இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வி உட்பட தொழிலாள வர்க்கம் போராட்டங்களின் மூலம் வென்றெடுத்த பொது நலச் சேவைகளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் .தனியார்மயமாக்கும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

ஜூலை 7, 2022 அன்று கொழும்பில் சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் ஒரு பகுதி

ஏற்கனவே கடுமையாக சரிந்து கிடக்கும் இலவச சுகாதார சேவையை பாழாக்கி சுகாதார சேவையை முழுவதுமாக தனியார்மயமாக்கி, அதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றுவதற்கான முதல் படியாக இது இருக்கும். 

மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்துகள் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் ஊழியர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. கண்டி வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் உள்ள இரண்டு வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று முற்றாக செயலிழந்துள்ளதாகவும் மற்றையது இன்னும் சிறிது காலத்தில் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 8024 இருதய நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பல பெரிய மருத்துவமனைகளில் ஸ்கேனர்கள் பழுதடைந்துள்ளன. பெரும்பாலான மருத்துவப் பரிசோதனைகளை தனியார் ஆய்வகங்களில் அதிக விலை கொடுத்து செய்துகொள்ளும் நிலைக்கும் மருந்துகளை வெளியில் விலைகொடுத்து வாங்கும் நிலைக்கும் நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 மற்றும் டெங்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சிகிச்சை செய்வதற்கும் போதுமான வசதிகள் இன்மையினால் பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மருந்துகள், மருத்துவ உபகரணங்களும்  பணியாளர்களதும்  பற்றாக்குறையால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், சுகாதார ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே தேவையற்ற மோதல்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீடு மேலும் மேலும் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளதோடு, இப்போது தற்போதைய அரசாங்கம், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியில் இலங்கையின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது  சுமத்துவதன் ஒரு பகுதியாக, இலவச சுகாதார சேவையை இல்லாதொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

ஆனாலும் தொழிற்சங்கங்கள் இதற்கு எதிராக எந்த போராட்டத்தையும் நடத்த மறுத்துவிட்டன. அரசாங்க தாதிமார் சங்கம் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினதும் தலைவர்கள், வெளிப்படையாக அரசாங்கத்தின் கையாட்களாக செயல்படுகின்றனர். தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் என்ற பதவிக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க தாதிமார் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய, சுகாதார சேவையில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளையும் நசுக்கும் சர்வதேச நாணய நிதிய சிக்கன வேலைத்திட்டத்தின் ஆதரவாளராவார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம், போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையிலான ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம், சுகாதார தொழிலறிஞர்கள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தை பற்றி ஆறிப்போன விமர்சனங்களை செய்வதோடு மட்டுப்படுத்திக்கொண்டுள்ளன. தொழிற்சங்கங்கள் எதுவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை எதிர்க்கவில்லை. அதுமட்டுமன்றி, கட்டண வாட்டுக்களை உருவாக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு, நமது சம்பளத்தை உயர்த்தவும், நோயாளிகளின் வசதிகளை மேம்படுத்தவும் முடியும் என்ற மாயையை சில தொழிற்சங்கங்கள் பரப்புகின்றன.

கல்வியைப் போலவே, மருத்துவமும் பொது மக்களின் உரிமையே தவிர, இலாபம் ஈட்டும் வணிகம் அல்ல. கட்டண வாட்டுகள் நிறுவப்பட்ட பிறகு, நோயாளிகளுக்கு இப்போது எஞ்சியுள்ள வசதிகளும் கூட கட்டண வாட்டுகளுக்கு திருப்பப்படும்.

சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தின் கீழ், அரச மற்றும் அரை-அரச துறைகளின் மறுசீரமைப்பு மூலம், அந்தத் தொழிலாளர்கள் தங்களது தொழில் மற்றும் ஊதியம் வெட்டப்படுவதோடு கடுமையான வேலை நிலைமைகள் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்வது போலவே, எங்களதும் வேலைகள், ஊதியங்கள் வெட்டப்படுவதோடு வேலை சுமைகளும் அதிகரிக்கப்படுகின்றன. கடுமையான பணிச்சுமை ஏற்கனவே நம் சக்திக்கு தாங்கமுடியாமல் உள்ளது. மேலதிக நேர வேலைக்கான ஊதியம் மட்டுப்படுத்தப்படுவது மற்றும் ஊதியத்தை ஒத்த வரியை அறவிடுவதன் மூலம், ஊதிய வெட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே தெரியும்.

அப்படியிருந்தும், சம்பளக் குறைப்பு மற்றும் வருமானத்தை ஒத்த வரிக்கு எதிரான சுகாதார ஊழியர்களின் சமீபத்திய போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டன.

சுகாதார ஊழியர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளும், பொதுவாக தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூலம் பாதுகாக்கப்பட முடியாது என்பதே இந்த அனுபவங்கள் நமக்கு கற்பித்துள்ள பாடம் ஆகும். முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளிமார்களின் நலன்களைப் பாதுகாக்கும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான தொழில்துறை பொலிஸாக செயல்படுவதால், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சாராமல், நமது ஜனநாயக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமட்ட அமைப்புகள் நமக்குத் தேவை.

அதற்கான மாற்று அமைப்பே நமது சுகாதார தொழிலாளர் நடவடிக்கைக் குழு ஆகும். அதை சுகாதார ஊழியர்களினதும் பொதுமக்களினதும் நடவடிக்கை குழுவாக விரிவுபடுத்தவும், அனைத்து மருத்துவமனைகள், பிற சுகாதார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற குழுக்களை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கவும் ஜூன் 24 அன்று நடைபெறும் கூட்டத்தில் எங்களுடன் சேர்ந்து கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். இந்த சந்திப்பை சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!

இலங்கை பொதுச் சுகாதார சேவைகள் முடக்க நிலையை எதிர்கொள்கின்றது

Loading