முன்னோக்கு

காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் வழி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டன், டி.சி.யில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நவம்பர் 4 அன்று இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்க்கும் பதாகைகளை வைத்திருக்கின்றனர். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட பதாகையின் முகப்பில், பைடெனும் நெதன்யாகுவும் போர்க் குற்றவாளிகள் என்று எழுதப்பட்டுள்ளது!

வார இறுதியில், காஸாவில், ஏகாதிபத்திய சக்திகளின் உடந்தையுடன் நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக இதுவரை நடந்த மிகப்பெரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உலகளாவிய எதிர்ப்புகள் வரலாற்று சிறப்புமிக்கவை. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க-நேட்டோ அச்சு அரசாங்கங்களின் முழு ஆதரவு இருந்தபோதிலும், ஊடகங்களில் இடைவிடாத அவதூறுகள் மற்றும் பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், கருத்துக் கூறுபவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான மக்கள் இனப்படுகொலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இரண்டாம் உலக யுத்த காலத்தின் இனப்படுகொலையின்போது, நாஜிக்கள் மில்லியன் கணக்கான யூதர்களை உலகம் அறியாமல் எரிவாயு அறைகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் இன்று, ​​உலகெங்கிலும் உள்ள மக்கள், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம், நிகழ்நேரத்தில் ஒரு இனப்படுகொலையைக் கண்டு, அவர்கள் செயலில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்காவில், ஏகாதிபத்திய போர் திட்டமிடலின் தலைமையகமான வாஷிங்டன் டி.சி.யில் 300,000ம் பேர் அணிவகுத்துச் சென்றனர். நியூயோர்க், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உட்பட பிற நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். சான் பிரான்சிஸ்கோவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கனடாவில், டொராண்டோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலிருந்து 40,000 பேர் பேரணியாக மாகாண சட்டமன்றத்திற்குச் சென்றனர்.

கடந்த வாரம் லண்டனில் 300,000 பேர் மேற்கொண்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 50,000 பேர் இந்த வார இறுதியில் லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர், மான்செஸ்டர், பர்மிங்காம், கிளாஸ்கோ, எடின்பேர்க், கார்டிஃப் மற்றும் பெல்பாஸ்ட் உட்பட ஐக்கிய இராச்சியம் முழுவதிலும் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்க ஜேர்மன் அரசாங்கம் முயற்சித்த போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் தெருக்களில் இறங்கினர். பேர்லினில் (20,000க்கும் அதிகமானோர்) மற்றும் டுசெல்டார்ஃப் (30,000) ஆகிய இடங்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஸ்டுட்கார்ட், முனிச் மற்றும் பிராங்பேர்ட் போன்ற பிற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் இணைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மில்லியன் கணக்கான மக்கள் ஒன்று கூடினர், சமூக ஊடகங்களில் சில மதிப்பீடுகள், இரண்டு மில்லியன் பேர்கள் இங்கு கூடியதாக தெரிவிக்கிறது. தெரெங்கானுவில் நிரம்பிய கால்பந்து மைதானம் உட்பட மலேசியாவில் நடந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜப்பானின் டோக்கியோவில் ஆயிரக்கணக்கானோரும், தென்கொரியாவின் சியோலில் நூற்றுக்கணக்கானோரும் பேரணி நடத்தினர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் மற்றும் ஆக்லாந்து உட்பட ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்புகளில் பங்கேற்றனர்.

மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் பதிலளித்தன. வெறுமனே இவற்றைப் புறக்கணிப்பதன் மூலம் அல்லது, இது சாத்தியமற்றது என்று அவர்கள் உணர்ந்தால், அவர்களின் அளவைப் பற்றி பொய் சொல்ல வேண்டும்.

நியூயோர்க் டைம்ஸ் ஒரு சுருக்கமான கட்டுரையை வெளியிட்டது. விரைவில் அதன் இணையதளத்தில் புதைக்கப்பட்ட அந்தக் கட்டுரையில், கால் மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் வாஷிங்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத்தைக் காட்டி, அமெரிக்காவில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் “பல்லாயிரக்கணக்கானோர்” பங்கேற்றதாகக் கூறியது. ஆளும் வர்க்கத்தின் கவலைகளை பிரதிபலிக்கும் பிரதான ஊடகங்கள், உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் உணர்வுகளை எதிர்க்கின்றன மற்றும் அதையிட்டு அஞ்சுகின்றன.

நடந்து வருகின்ற ஆர்ப்பாட்டங்கள், முதலில், ஒரு புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. அவர்கள் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். முக்கியமாக, அனைத்து தேசிய இனங்கள், வயது மற்றும் பாலினங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய உலகளாவிய இயக்கமாக இது வளர்ந்து வருகிறது. பெருகிவரும் யூத போராட்டக்காரர்கள், நெதன்யாகு அரசாங்கம் அவர்கள் சார்பாக செயல்படுகிறது என்று, இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் ஊக்குவிக்கப்பட்டுவரும் பொய்யை கண்டித்து வருகின்றனர்.

எல்லோரும் என்ன நினைக்கிறார்கள்: அடுத்து என்ன? இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு வளர்ப்பது?

முதலாவதாக, காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க நேட்டோ அச்சில் உள்ள அனைத்து ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும் இஸ்ரேல் பெற்றுள்ள ஆதரவு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகள் உட்பட, அதிகரித்துவரும் உலகளாவிய போருடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். ஏகாதிபத்திய சக்திகள் முழு உலக மக்களுக்கும் எதிரான போரில் ஈடுபட்டுள்ளன. பாலஸ்தீனிய மக்களின் படுகொலையானது, ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நோக்கங்களை அடைய எதிலும் நின்று விடமாட்டார்கள் என்ற செய்தியை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, ஏகாதிபத்தியம் உலகை மறுபங்கீடு செய்வதற்கு எதிரான, அரசியல் ஸ்தாபனத்தில் எந்தப் பிரிவும் இல்லை. வாஷிங்டன் டிசியில் உள்ள போராட்ட எதிர்ப்பாளர்களின் முழக்கங்கள், “இனப்படுகொலையாளி ஜோ” மற்றும் “பைடென் பைடென், நீங்கள் ஒழிந்துகொள்ள முடியாது, நீங்கள் இனப்படுகொலையாளி என்று உங்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்” என்று இருந்தன. பைடென் நிர்வாகத்தின் தீவிர ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நெதன்யாகு அரசாங்கம் இதனை செய்து கொண்டிருக்கவில்லை.

ஆனால், இதில் ஒரு தனிநபராக இருக்கும் பைடென் மட்டுமல்ல, ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக இருக்கும் ஜனநாயகக் கட்சியும் அம்பலமாகி உள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு இடதுசாரியாக, ஒரு “சோசலிஸ்டாகக்” காட்டிக்கொள்ளும் வெர்மான்ட் செனட்டரான பெர்னி சாண்டர்ஸின் வேட்புமனுவை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், வெகுஜன எதிர்ப்புக்களை வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில், சாண்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை CNN இன் (State of the Union) “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” பேச்சு நிகழ்ச்சியில் தோன்றி போர்நிறுத்தத்திற்கு தனது எதிர்ப்பை அறிவித்தார். “கொந்தளிப்பு மற்றும் குழப்பத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹமாஸ் போன்ற அமைப்புடன் நீங்கள் எப்படி போர்நிறுத்தத்தை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஹமாஸ் முடிய வேண்டும்” என்று சாண்டர்ஸ் கூறினார். இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஆதரிப்பதிலும், “இனப்படுகொலைக்கான ஜனநாயக சோசலிஸ்டுகள்” என்று அறியப்படும் ஒரு அரசியல் போக்கையும் சாண்டர்ஸ் வழிநடத்துகிறார்.

பல்வேறு வடிவங்களில், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையானது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் போலி-இடது ஆதரவாளர்களை அம்பலப்படுத்துகிறது. இவர்கள் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மூன்றாவதாக, இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் பரந்த ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கான சமூக அடித்தளம், உலக மக்கள்தொகையில் ஒரு பகுதியாக இருக்கும் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கம் ஆகும். முதலாளித்துவ அரசுகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளுக்கு முறையீடு செய்வதன் மூலம் இனப்படுகொலையை நிறுத்த முடியாது, மாறாக சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் இந்த சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இனப்படுகொலையை நிறுத்த முடியும்.

இஸ்ரேலுக்கு இராணுவ ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துவதற்கான தொழிற்துறை நடவடிக்கைக்கான பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் அழைப்பு, தொழிலாளர்களால் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள கப்பல்துறை தொழிலாளர்கள் உட்பட பலரால் எடுக்கப்பட்டுள்ளது. இதை உலகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். காஸா மீதான முற்றுகை உடனடியாக நிறுத்தபட்டு, இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். பட்டினியால் வாடும் மற்றும் படுகொலை செய்யப்படும் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளைக் கோரி, உற்பத்தியை நிறுத்துவதற்கான அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன், அது இணைக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தின் வளர்ச்சியானது முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச இயக்கமாக வளர்ச்சியடைய வேண்டும். காஸாவில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில், திட்டமிட்ட பட்டினி, குண்டுவெடிப்பு மற்றும் வெளியேற்றம் என்பன நெதன்யாகு ஆட்சியின் கொடூரமான குற்றவியல் மற்றும் அமெரிக்க-நேட்டோ அச்சிலுள்ள அதன் ஆதரவாளர்களின் விளைபொருள் மட்டுமல்ல ஆனால், இன்னும் அடிப்படையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறையின் விளைபொருளாக இருக்கிறது.

ஐந்தாவதாக, மிகவும் முக்கியமாக, புரட்சிகர தலைமை பற்றிய கேள்வியாகும். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட அதன் அறிக்கையில், “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரம் மற்றும் முந்தைய தசாப்தத்தில் சமூக எதிர்ப்பின் மகத்தான வளர்ச்சிக்கு கவனம் செலுத்தி, உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுத்தது. “வெகுஜனங்கள், போராட்டத்தின் போக்கில் அனுபவத்தை குவித்து, அவர்களின் சமூக மற்றும் அரசியல் நோக்குநிலையில், ஆழமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளனர். இந்த புரட்சிகர முன்னெடுப்பின் பின்னணியில்தான் சோசலிச நனவுக்கான போராட்டம் உருவாகும்” என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த அறிக்கை வெளிவந்ததிலிருந்து, மனித வாழ்க்கையை லாபத்திற்கு அடிபணியச் செய்ததன் காரணமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற உலகளாவிய தொற்றுநோயை உலகம் அனுபவித்தது. அத்துடன், அமெரிக்காவில் பாசிச சதி முயற்சி, உலகளாவிய அணுசக்தி யுத்தமாக அதிகரிக்கும் அச்சுறுத்தலை கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் வெடிப்பு, இப்போது காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை, ஆகிய அனைத்தும் முதலாளித்துவ அமைப்பின் ஆழமான நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.

உலகெங்கிலும் நடைபெற்று வெகுஜன எதிர்ப்புக்கள், முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளுக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் மோதலை வெளிப்படுத்துகின்றன. இந்த புறநிலை செயல்முறையை, சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுவதற்கு, தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிந்து, உலக அளவில் சோசலிசத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் தலைமையை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலகம் முழுவதும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளால் முன்வைக்கப்படும் முன்னோக்கு ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியில் சேர அல்லது உங்கள் நாட்டில் கட்சியை உருவாக்க, கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

Loading