மஸ்கெலியா பிரன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்கள் கொடூரமான வேலை நிலைமைகளையும் சம்பள வெட்டுக்களையும் எதிர்கொள்கின்றனர்

மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியாவில் உள்ள பிரன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்கள் வேலைச்சுமை அதிகரிப்பையும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களையும் எதிர்கொள்கின்றனர்.

அதிகரித்த வேலை இலக்கின் கீழ், தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். இலக்கை அடையத் தவறினால் அவர்களின் தினசரி ஊதியம் பாதியாக குறைக்கப்படும். தோட்டத்தில் கிட்டத்தட்ட 1000 தொழிலாளர்களுடன் 7 பிரிவுகள் உள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) செய்தியாளர்களிடம் தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகள் பற்றி விளக்கினர்: “எங்கள் தினசரி ஊதியம் 1000 ரூபாய் நாளொன்றுக்கு ஒரு வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை. நாங்கள் நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் வேலை செய்தாலும், இலக்கை அடையத் தவறினால், எங்கள் ஊதியம் பாதியாகக் குறையும், அதற்கேற்ப எங்களது ஓய்வூதிய நிதி பங்களிப்பும் பாதியாகக் குறையும்.”

தொழிலாளர்கள் முழு நாள் வேலை செய்தாலும் கூட, அவர்களால் இலக்கை முடிக்க முடியாவிட்டால் அவர்களின் வருகை நாட்களும் குறைக்கப்படும்.

கடந்த டிசம்பரில், தோட்ட முகாமையாளர், பல தொழிலாளர்களுக்கு மாதாந்திர வருகைப் பதிவேட்டில் 75 வீதத்தை பூர்த்தி செய்யாவிட்டால் தோட்டப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

தோட்ட தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு கிடைத்த கடிதத்தை காட்டினார். டிசம்பர் 6 ஆம் திகதி தோட்ட முகாமையாளர் அவரது மனைவிக்கு அனுப்பிய கடிதத்தில்: “தோட்ட நிர்வாகம் (மாதம்) வழங்கும் வேலை நாட்களில் உங்கள் வருகை விகிதம் 75 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கடிதம் தெரிவிப்பதுடன், வருகைதரத் தவறினால், தோட்டத்தை சரியாக நிர்வகிக்க முடியாது. உங்கள் வருகை விகிதம் 56.6 சதவீதமாக காணப்பட்டது. நீங்கள் வருகை தரும் நாட்களில் கவனம் செலுத்துமாறும், உங்கள் வருகை விகிதம் குறைந்தால், எந்த அறிவிப்பும் இன்றி உங்கள் பெயர் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்,” என அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் தனது மனைவியின் வேலை நாட்களைக் குறிக்கும் அட்டையைக் காட்டினார்: “இந்த அட்டையின்படி, அவர் டிசம்பர் மாதத்தில் 28 நாட்கள் வேலை செய்துள்ளார். இருந்தாலும் முகாமையாளர் தனது கடிதத்தில் 17 நாட்கள் மட்டுமே குறிப்பிடுகிறார். 18 கிலோவுக்கும் குறைவான தேயிலை கொழுந்து பறித்த நாட்களை அவர் அரை நாட்களாகக் கருதியுள்ளார். அதனால், அவள் 11 நாட்களுக்கான ஊதியத்தையும், அந்த நாட்களுக்கான ஓய்வூதிய நிதியையும் இழக்கிறாள். நிர்வாகத்தின் இந்த மோசடிக்கு தொழிற்சங்கங்களும் உடந்தையாக இருக்கின்றன”, என அந்த தொழிலாளி கூறினார்.

“இந்த நிலைமை குறித்து புகார் செய்ய நாங்கள் தொழிற்சங்க தலைவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் தொலைபேசிகள் முடக்கப்பட்டிருந்தன. இந்த தொழிற்சங்கங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை”, என தொழிலாளர்கள் மேலும் கூறினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), செங்கொடி சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் நேரடி ஆதரவுடன் இந்த கொடூரமான வேலை நிலைமைகளை நிறுவனம் நடைமுறைப்படுத்துகிறது.

மோசமான வேலை நிலைமைகள் மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை அவை தடுத்தன. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்பு வளர்ந்து வருவதால், தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்கவும், பிராந்திய தோட்டக் கம்பனிகளின் இலாப நலன்களுக்கு அவர்களை அடிபணியச் செய்யவும் மட்டுமே தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இ.தொ.கா. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 முதல் 23 வரை மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் 14 தோட்டங்களில் 1,000 ரூபாய் தினசரி ஊதியம் கோரியும் அதிகரித்த வேலைப்பளுவைக் குறைக்கக் கோரியும் இத்தகைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்த வேலை நிறுத்தத்தின் போது, இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அதன் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி உடனான இரகசிய கலந்துரையாடலின் பின்னர், நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது என்றும் இது ஒரு வெற்றி என்றும் கூறினர். ஆனால் கம்பனி ஊதிய உயர்வு கொடுக்கவுமில்லை வேலைச் சுமையை குறைக்கவும் இல்லை.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி பல வருடங்களாகப் போராடினார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் 2021 ஏப்ரல் மாதம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சட்டமூலமொன்றை நிறைவேற்றியது.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அதை எதிர்த்ததுடன் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. எவ்வாறெனினும், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பதிலுக்கு, கம்பனிகள் தினசரி வேலை இலக்கை 2 முதல் 4 கிலோ வரை அதிகரித்தன. பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களால் இந்த இலக்குகளை நிறைவேற்ற முடியாமல் போனதுடன் அவர்களது நாளாந்த வருமானம் 1,000 ரூபாவிற்கும் குறைந்துள்ளது. அதிகரித்த வேலைச்சுமைக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ந்தபோது, கம்பனிகளும் அரசாங்கமும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்புடன் அதை அடக்கின.

இலங்கையில் தேயிலை தொழில் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும் விக்கிரமசிங்க அரசாங்கமும் செயற்படுகின்றன. தற்போதைய வருகை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதிய மாதிரிக்கு பதிலீடாக, கலப்பின மாதிரி மற்றும் வெளியார் உற்பத்தி மற்றும் வருவாய் பகிர்வு மாதிரிகள் போன்ற, உற்பத்தித்திறன் அடிப்படையிலான மாதிரிகளை கம்பனிகள் அறிமுகப்படுத்துகின்றன.

கலப்பின மாதிரியின் கீழ் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளை முடித்த பிறகு அல்லது விடுமுறை நாட்களில் அல்லது வாரத்தில் பல நாட்கள் வேலை செய்ய வேண்டும். இந்த மாதிரியின் கீழ் தொழிலாளர்கள் வருகை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதிய மாதிரியின் கீழ் ஊதியம் பெறும் அதே நேரம், மற்ற நாட்களில் தான் பறித்த கொழுந்து கிலோவுக்கு ஏற்ப ஊதியம் பெறுகிறார்கள்.

சமீபத்தில், பிரன்ஸ்விக் தோட்ட நிர்வாகம் கலப்பின மாதிரியை அறிமுகப்படுத்தியது. இதில் தொழிலாளர்களுக்கு தாங்கள் பறிக்கும் பச்சை கொழுந்து கிலோவுக்கு 70 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இதற்காக மூன்று நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் ஆரம்பத்தில் அதை எதிர்த்தார்கள் ஆனால் உயரும் வாழ்க்கைச் செலவை நிர்வகிப்பதற்கு அவர்கள் அதை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பறித்த ஒரு கிலோ கொழுந்துக்கு 70 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. “எங்கள் தினசரி வருமானம் நாம் பறித்த கிலோவின் எண்ணிக்கையைப் பொறுத்தது. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கூலி வழங்கப்படுகிறது,’' என்றனர்.

மேலும் மேலும் தாங்க முடியாத வேலை நிலைமைகள் மற்றும் ஊதிய வெட்டுக்கு எதிராகப் போராட தொழிலாளர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.

Loading