மோடி அரசாங்கம் பாரியளவில் பாதுகாப்புப் படையினரை குவித்துள்ள நிலையில் இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாட்டின் தீவிர வலதுசாரி, இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்தால் வழிநடத்தப்பட்ட ஒரு பாரிய அரச பாதுகாப்பு படையின் ஒடுக்குமுறையை எதிர்கொண்டு, பல்லாயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் தங்கள் டில்லி சலோ (டெல்லிக்கு செல்வோம்) போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இந்தியா, புது டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ (125 மைல்) தொலைவில் உள்ள வடக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைப் பிரிக்கும் ஷம்பு எல்லைக்கு அருகில் போராடும் விவசாயிகள் 14 பெப்ரவரி 2024 புதன்கிழமை ஒன்று கூடினர். இந்திய விவசாயிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போலீசுடன் மோதினர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் விளைபொருட்களுக்கு உத்தரவாதமான பயிர் விலையைக் கோரி தலைநகர் புது டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். [AP Photo/Rajesh Sachar]

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இந்தியாவின் தேசிய தலைநகருக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்க, பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படையினர், செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் மைய இடமான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளில் தடுப்புகளை எழுப்பினர். ஹரியானா மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்கு இடையே உள்ள இரண்டு எல்லைக் கடக்கும் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குறைந்தபட்சம் நூறு விவசாயிகள் காயமடைந்துள்ளனர். படையினர் விவசாயிகளுக்கு எதிராக தடியடி, ரப்பர் தோட்டாக்கள், நீர்-பீரங்கி மற்றும் ஏராளமான கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

வியாழன் அன்று, ஹரியானா மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களிலும் அனைத்து செல்போன் மற்றும் மொபைல் இணைய சேவைகள் முடக்கமானது சனிக்கிழமை வரை நீட்டிக்கப்படும் என்று மாநில பா.ஜ.க. அரசாங்கம் உத்தரவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. மத்திய அரசாங்கம், விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை திட்டவட்டமாக நிராகரிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது, விவசாயிகள் தலைநகருக்கு அருகில் எங்கும் செல்வதைத் தடுக்க அரசின் முழு பலத்தையும் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளது.

2020-2021 விவசாயிகளின் போராட்டத்தின் போது, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்தனர். இதே போன்ற ஒன்று மறுமுறை நடக்குமாயின் இந்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களில் தொடர்ந்து மூன்றாவது ஐந்தாண்டு கால ஆட்சியை வெல்வதற்கான பா.ஜ.க.யின் பிரச்சாரத்தை அது சீர்குலைக்கக் கூடும் என்று மோடியும் அவரது பிரதான உதவியாளரான உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அஞ்சுகின்றனர்.

முந்தைய டெல்லி சலோ, மோடி அரசாங்கத்தை ஒரு தந்திரோபாய பின்வாங்கலைச் செய்யவும், சமீபத்தில் இயற்றப்பட்ட மூன்று வணிகச் சார்பு விவசாய 'சீர்திருத்த' மசோதாக்களை ரத்துச் செய்ய செய்யவும் நிர்ப்பந்தித்ததுடன் முடிவடைந்தது. எனினும், அதை ஒரு வருட காலமாக ஆர்ப்பாட்டக்காரர்களை பட்டினி போட்டு காய வைத்த பிறகே செய்ததுடன், இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டாதவாறு ஒரு வன்முறை மோதலில் அவர்களை விரட்ட முடியுமா என்றும் ஆய்வு செய்தது.

2020-21 போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடிப்படை பயிர்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) விவசாயிகளின் கோரிக்கையை ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அந்தக் குழு சுமார் மூன்று டஜன் முறை கூடியுள்ளது. எவ்வாறாயினும், அது எம்.எஸ்.பீ.யை செயல்படுத்தப்படுவதற்கு நெருக்கமாக வரவில்லை. அரசாங்கம் அதை 'கட்டுப்படியாகாது' என நிராகரித்தமையே இதற்கு காரணமாகும்.

இதற்கிடையில், (எரிபொருள் மற்றும் உரம் உட்பட) அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள், அடுத்தடுத்த தலைமுறைகளிடையே விவசாய நிலங்களை பங்கீடு செய்தல் மற்றும் பூகோளரீதியான விவசாய சந்தைகளின் மாறுபாடுகள் மற்றும் முதலாளித்துவ உந்துதலினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினாலும் விவசாய வருமானம் தொடர்ந்து துடைத்தழிக்கப்படுகிறது.

வியாழன் மாலை நிலவரப்படி, டெல்லியிலிருந்து 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் அமைந்துள்ள பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லைக் கடவையின் பஞ்சாப் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு நேர் எதிரில் ஒரு உண்மையான போர் மண்டலம் இருந்தது: ஆயிரக்கணக்கான பலத்த ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் பல அடுக்கு தடுப்புகள், பெரிய கருங்கற் பாறைகள், கனரக இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து கொள்கலன்கள் மற்றும் பெரிய துருத்தி முள்வேலி சுருள்கள் மற்றும் எந்த டிராக்டரின் டயர்களையும் குத்திக் கிழிக்கும் பெரிய கூர்முனைகள் அல்லது ஆணிகளும் நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டன.

அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவு வரும் வரை காத்திருக்குமாறு விவசாய சங்கத் தலைவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். செய்தி அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் அந்த பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தபோது, அரசாங்க மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இருவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறிய போதிலும், அவர்களின் கருத்துக்கள், அரசாங்கம் விவசாயக் கடன் தள்ளுபடியை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்றுக்கொண்டதை பற்றி குறிப்பிட்டதே தவிர, எம்.எஸ்.பீ.யை இயற்றுவது பற்றியது அல்ல. மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பேச்சுவார்த்தை 'மிகவும் சாதகமானது' என்றும், இரு தரப்பும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். கிசான் மஸ்தூர் மோர்ச்சா (விவசாய- தொழிலாளர் முன்னணி) ஒருங்கிணைப்பாளர் சர்வன் சிங் பந்தேர் கூறுகையில், “கூட்டத்தின் போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் செயல்பாட்டிற்கு வந்தால், அது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” என்றார்.

மிகவும் செல்வச் செழிப்பான மற்றும் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் இருந்து வந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள், மோடி அரசாங்கத்துடன் ஒரு தீர்வு காண முனைகிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதன் மூலம், அவர்கள் தங்கள் போராட்டத்தின் 'அரசியல் அல்லாத தன்மை' என்று கருதப்படுவதை வலியுறுத்துகின்றனர்.

இந்திய பெருவணிகம், அதன் பங்கிற்கு, விவசாயிகளின் எம்.எஸ்.பீ. கோரிக்கையை எதிர்ப்பதில் மோடி அரசாங்கத்தின் பின்னால் முழுமையாக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. சிறு விவசாயிகளின் இழப்பில் பெரிய விவசாய வணிகங்களை உருவாக்குவதன் மூலம், விவசாயத் துறையில் இருந்து இலாபம் கறப்பதை அதிகரிப்பதற்கான அதன் உந்துதலுக்கு இந்தக் கோரிக்கைகள் குறுக்கே நிற்பதாக அது கருதுகின்ற அதே நேரம், விவசாயிகளின் போராட்டங்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் இனிமேலும் பின்வாங்குவது, தொழிலாள வர்க்கத்தினுள் எதிர்ப்பு அதிகரிக்க உதவும் என்றும் அஞ்சுகிறது.

பெப்ரவரி 13 டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்க கட்டுரையில், 'எம்.எஸ்.பீ.க்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிப்பது ஒரு மோசமான யோசனை, அது ஒரேயடியாக புதைக்கப்பட வேண்டும்' என்று அப்பட்டமாக அறிவித்தது. அதற்குப் பதிலாக, அரசாங்கத்துக்கும் விவசாய சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான எந்தக் கூட்டமும் 'முந்தைய போராட்டங்களின் போது தாக்கல் செய்யப்பட்ட பொலிஸ் வழக்குகளைத் விலக்கிக்கொள்ளல், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை விடுவித்தல் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்' என்று பரிந்துரைத்தது.

வியாழன் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, எதிர்ப்புக்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களும், அவை எதிர்க்கட்சிகளின் கருவி என்றும் அதில் வன்முறையை நோக்கமாகக் கொண்ட சக்திகள் ஊடுருவியுள்ளன என்றும் கூறினர்.

மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்படுவதையும், பஞ்சாபுடனான எல்லை தடுக்கப்படுவதையும் நியாயப்படுத்திய ஹரியானா மாநில பா.ஜ.க. அரசாங்கம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில், விவசாயிகள் சங்கங்கள் வட இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு 'வரிந்து கட்டிக்கொண்டு' நிற்பதாகவும், விவசாயிகளின் போராட்டம் மாநிலத்தின் மக்கள் மத்தியில் ஒரு 'அச்ச உணர்வை' உருவாக்குவதாகவும் கூறியது.

'இது எதிர்ப்பு அரசியல் போல் தெரிகிறது,' என்று அரசாங்கத்தின் எம்.எஸ்.பீ. குழுவின் உறுப்பினரும், பா.ஜ.க.யுடன் இணைந்த பாரதிய கிசான் சங்கத்தின் தலைவருமான பிரமோத் சவுத்ரி கூறினார். “கடந்த முறை செங்கோட்டையில் நாம் பார்த்தது போலவே, வன்முறை பரவுவது பற்றிய கவலைகள் உள்ளன,' என்று அவர் தொடர்ந்தார். இந்த பின்குறிப்பு 2021 ஜனவரியில் டெல்லியில் விவசாயிகளுடன் பா.ஜ.க. அரசாங்கம் தூண்டிய மோதல் தொடர்பான கோபமூட்டும் கருத்தாகும். அது பின்னர் அந்த ஆர்ப்பாட்டம் (தனி சீக்கிய நாடு கோரும்) காலிஸ்தான் ஆதரவாளர்களினால் வழிநடத்தப்பட்டது, இல்லையென்றால் அவர்களால் கையாளப்பட்டது என்ற பொய்யை பரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

1960 களில் இருந்து, இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஒவ்வொரு வளரும் பருவத்திலும் 20க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு 'குறைந்தபட்ச' ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், எந்தவொரு நிகழ்விலும், அரசாங்க கொள்முதல்களுக்கு மட்டுமே பொருந்தும் எம்.எஸ்.பீ. ஆனது பெரும்பாலான பயிர்களுக்கு பெயரளவில் மட்டுமே உள்ளது. அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான டாக்டர். ரஞ்சித் குமான், தி இந்துவிடம் கூறுகையில், “பிரதானமாக கோதுமை, நெல் மற்றும் பருத்தி, சிலநேரம் பயறு வகைகள் ஆகிய மூன்று முதல் நான்கு பயிர்கள் மட்டுமே எம்.எஸ்.பீ.யில் கொள்முதல் செய்யப்படுவதாக கடந்த கால பதிவு காட்டுவதுடன் மீதமுள்ள பயிர்கள் எம்.எஸ்.பீ.க்கு கீழே தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அரசாங்கம் நியமித்த 2004-2006 தேசிய விவசாயிகள் ஆணையத்தின் உண்மையான குறைந்தபட்ச விலை உத்தரவாதத்தை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் 'பசுமைப் புரட்சியின்' தலைவராகக் கருதப்படும் புகழ்பெற்ற விவசாயியான மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் தலைமையிலான ஆணையம், எம்.எஸ்.பீ. ஆனது சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறியது. மேலும், 'உற்பத்திச் செலவு' என்பது அனைத்து இடுபொருட்களின் விலை, உழவருக்குச் சொந்தமானதாக இருந்தாலும் நிலத்தை வாடகைக்கு எடுப்பதற்கான 'செலவு' ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். அது C2+50 சதவிகித சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

மே 2004 தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான, ஸ்ராலினிச ஆதரவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் சுவாமிநாதன் கமிஷன் நிறுவப்பட்டது. ஆனால் தனியார்மயமாக்கல், கட்டுப்பாடு நீக்கம் மற்றும் பிற 'முதலீட்டாளர் சார்பு' சீர்திருத்தங்களை முன்னோக்கி நகர்த்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, எம்.எஸ்.பீ. பிரேரணை குறித்து குறுகிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி விவசாய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கே.வி. தாமஸ், அது 'சந்தையை உருத்திரிக்க முடியும்,' என்றும் மேலும், 'எம்.எஸ்.பீ. மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு எந்திரவியல் இணைப்பு, சில சந்தர்ப்பங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தலாம்' என்று கூறினார்.

திடீரென்று, இந்த வார விவசாயிகள் போராட்டத்தின் மத்தியில், காங்கிரஸ் கட்சி-தங்களின் தொய்வடையும் தேர்தல் அதிர்ஷ்டத்தை உயர்த்துவதற்கான வெளிப்படையான முயற்சியில்- இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை தாங்கள் அமைத்தால், சுவாமிநாதன் கமிஷன் விதிமுறையின் அடிப்படையில் எம்.எஸ்.பீ.க்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் அமல்படுத்துவோம் என்று அறிவித்தது.

இது வெளிப்படையாக ஒரு மோசடியாகும். இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி அல்லது INDIA எனப்படும் ஒரு வலதுசாரி தேர்தல் கூட்டணிக்கு இன்று தலைமை தாங்குகின்ற காங்கிரஸ் கட்சி, 'முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தம்' மற்றும் சீனாவிற்கு எதிரான இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய பங்காண்மைக்கு காட்டும் அர்ப்பணிப்பில், மோடி மற்றும் அவரது பா.ஜ.க.யை காட்டிலும் எந்த வகையிலும் குறைவில்லை. இது இந்துத்துவா மற்றும் பாசிசவாத சிவசேனாவின் கூட்டணியில் முக்கிய பங்கேற்பதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறவாறு, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்து வலதுசாரிகளுடன் ஒத்துழைக்கின்றன. இவை எதுவுமே, மூன்று ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பீ.எம்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பீ.ஐ.) மற்றும் மாவோயிஸ்ட் சி.பீ.ஐ. (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகியவை, தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற உழைப்பாளிகளையும் இந்தியா கூட்டணியின் பின்னால் திருப்பி முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை வழங்குவதற்கான அதன் முழு மூச்சான முயற்சிகளை தடுக்கவில்லை.

ஜனவரி மாதம் சி.பீ.எம். தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டீ.யூ.) விவசாய சங்கங்களுடன் இணைந்து, பெப்ரவரி 16 வெள்ளிக்கிழமை, கிராமிய பந்த் அல்லது கிராமப்புற முழு அடைப்பை நடத்தப்போவதாக அறிவித்தது. கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரமாண்ட சமூக நெருக்கடியை ஏதோ ஒரு வகையில் இந்த முழு அடைப்பு ஒரு தொடரான கோரிக்கைகளை ஜனரஞ்சகப்படுத்தும் என்று கருதப்படுகிறது. எம்.எஸ்.பீ. சட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் MGNREGA திட்டத்தின் விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்கும். இந்த MGNREGA ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திலும் ஒரு உறுப்பினருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் குறைந்தபட்ச கூலி உழைப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறப்பட்டாலும், சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மோடி அரசாங்கத்தால் அது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

2020-21 விவசாயிகள் இயக்கத்தின் போது செய்ததைப் போலவே, ஸ்ராலினிஸ்டுகள், தொழிலாளர்களை விவசாயிகளுக்கு “ஆதரவளிப்பதுடன்' மட்டுப்படுத்த முயல்கின்ற அதேசமயம், இந்தியா கூட்டணிக்கு வாக்குகள் திரட்டுவதற்கு தடுமாறுகின்றனர். ஸ்ராலினிஸ்டுகள் சிவப்புக் கொடிகளை அசைத்து, லெனின் மற்றும் மார்க்ஸின் உருவப்படங்களை தூக்கிப் பிடிக்கும் அதே வேளை, வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதில் இந்திய முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகின்றனர். அந்தவகையில், கடந்த மூன்று தசாப்தங்களாக பாரியளவில் விரிவடைந்த தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதையும், இந்தியாவில் மோடி அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு தாக்குதலில் விவசாயிகள் மற்றும் இன்னும் கொடூரமாக சுரண்டப்படும் விவசாயத் தொழிலாளர்களை, அந்த தொழிலாள வர்க்கத்தின் பின்னால் அணிதிரட்டுவதையும் அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மேலும் படிக்க