முன்னோக்கு

போர், இனப்படுகொலை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு மத்தியில், வெள்ளை மாளிகையின் நிருபர்களின் இரவு விருந்தில் "பத்திரிகை சுதந்திரம்" கொண்டாடப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமை இரவு வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் (WHCA) இரவு விருந்தானது, ஜனாதிபதி ஜோ பைடெனின் நிர்வாகத்திற்கு பெருநிறுவன ஊடகங்களின் கீழ்ப்படிதலின் அருவருப்பான காட்சியாக இருந்தது. இந்த சங்கமானது, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையில் முழு பங்காளியாக இருப்பதுடன், உலகை அணுவாயுத மூன்றாம் உலகப் போருக்கு நெருக்கமாக கொண்டு வரக்கூடிய, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் இரத்தம் தோய்ந்த பாத்திரத்தை மூடிமறைக்க முயல்கிறது.

அச்சு மற்றும் ஒளிபரப்பு பத்திரிக்கையாளர்கள் உட்பட, அவர்களின் பெருநிறுவன முதலாளிகள் மற்றும் வாஷிங்டன் மற்றும் ஹாலிவுட்டில் இருந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உட்பட சுமார் 2,600 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தோள்களை உரசிக் கொண்டனர். அங்கு ஜனாதிபதி ஜோ பைடென், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவர்களது துணைவர்கள் இருந்தனர். மேலும், பெருநிறுவன வணிகக் குழுக்கள், லாபிக்கள், பரப்புரையாளர்கள் மற்றும் தூதுவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்தோடு, அமெரிக்கத் தலைநகரில் செல்வாக்கு செலுத்தும் பங்கேற்பாளர்களால் நடத்தப்படும் விருந்துகள் மற்றும் வரவேற்புகள் உட்பட பல நாட்கள் கொண்டாட்டங்களின் மையப் பகுதியாக இந்த நிகழ்வு இருந்தது.

ஏப்ரல் 27, 2024 அன்று வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்தில் ஜனாதிபதி ஜோ பைடென் பத்திரிகையாளர் மத்தியில் பேசுகிறார். [AP Photo/Manuel Balce Ceneta]

WHCA விருந்து என்பது ஒரு வருடாந்தர நிகழ்வாகும். இதில் முக்கிய ஊடகங்கள் தங்கள் மரியாதைக்காக விலையுயர்ந்த விருந்துகளை நடத்துகின்றன. அதிகாரத்தில் உள்ள நிர்வாகத்துடனும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்துடனும் அதன் நெருங்கிய உறவுகளைக் கொண்டாடும் அதே வேளையில், பத்திரிகை சுதந்திரத்திற்கு அவ்வப்போது மகிமைப்படுத்துதல்களை அள்ளி வீசி, எப்போதும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் இவை ஒத்துப்போகின்றன.

இவ்வாறாக, ரஷ்ய சிறையில் ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச், 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கள நிருபர் ஆஸ்டின் டைஸ் குறித்தும் மிகுந்த கவலை அங்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல பத்திரிகையாளர் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சின் பெயரை யாரும் அங்கு உச்சரிக்கவில்லை.

இரவு உணவு விருந்தில், முக்கிய கௌரவ விருந்தினரான கலந்துகொண்ட ஜனாதிபதி பைடென், அசான்ஞ் சிறையில் அடைக்கப்பட்டதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்பதால், இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய உளவுச் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டப்பட்ட அவரை, அமெரிக்காவில் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அசான்ஞ் பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்பான பெல்மார்ஷ் சிறையில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விருந்து உபசாரத்தின் போது, WHCA தலைவரும் NBC நிருபருமான கெல்லி ஓ’டோனல், காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டார் - அவர் அந்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 100 என்று கூறினார், இருப்பினும் உண்மையான எண்ணிக்கை குறைந்தது 175-ஆக இருந்தபோதிலும், அந்த மரணங்களுக்கு பொறுப்பான அரசாங்கம் மற்றும் இராணுவத்தை அதாவது இஸ்ரேலில் உள்ள நெதன்யாகு ஆட்சி மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. அந்த ஊடகவியலாளர்களைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதங்களை வழங்கியவர் மேடையில் தனக்கு வலதுபுறம் சில மீட்டர்கள் தூரத்தில் மட்டுமே அமர்ந்திருந்தார் என்பதையும் அந்தப் பெண்மணி குறிப்பிடவில்லை.

இது ஒரு கவனக்குறைவு அல்ல. காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையில், டாக்டர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் உட்பட சுமார் 40,000ம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நவீன கலாச்சாரத்தில் இன்றியமையாத பங்கை வகித்துவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிறர், இந்த நடவடிக்கைகளை மூடிமறைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் லிமோசின் கார்கள் மற்றும் டாக்சிகளில் இருந்து இறங்கி வாஷிங்டன் ஹில்டனுக்குள் நுழைந்தபோது, ​​அவர்கள் நூற்றுக்கணக்கான இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டக்காரர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இஸ்ரேலின் குற்றங்களை மூடிமறைத்ததற்காக அமெரிக்க ஊடகங்களை நோக்கி “உங்களுக்கு அவமானம்!” என்று கண்டித்த அவர்கள், ஒரு கட்டத்தில், “மேற்கத்திய ஊடகங்கள், உங்களையும் நீங்கள் மறைக்கும் அனைத்து பயங்கரங்களையும் நாங்கள் காண்கிறோம்” என்று கூட்டத்தில் கோஷமிட்டனர்.

ஆனால், இந்த நடவடிக்கைகளின் போது வெளியில் இருந்த எதிர்ப்பாளர்கள் பற்றியோ அல்லது டசின் கணக்கான அமெரிக்க நகரங்களில் நடந்துவரும் பரந்த போராட்டங்கள் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. மற்றும் பல கல்லூரி வளாகங்களில், முக்கியமாக மாணவர்கள் மற்றும் பிற இளைஞர்கள், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையைக் கண்டித்து, பாசிச இஸ்ரேலிய ஆட்சிக்கு உத்தியோகபூர்வ ஆதரவை நிறுத்தக் கோரி, பாரிய கைதுகள் மற்றும் வெளியேற்றங்களையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

WHCA இரவு விருந்தைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்து “காஸாவிலுள்ள இரண்டு டசினுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள்” கடிதம் ஒன்றை அனுப்பியதாக தேசிய பொது வானொலி அறிவித்தது. அந்தக் கடிதம் பின்வருமாறு குறிப்பிட்டது:

பத்திரிக்கையாளர்களாகிய நமது கடமையை வெறுமனே நிறைவேற்றுவதற்கு நாம் கொடுக்கும் விலை அதிர்ச்சியளிக்கிறது. பத்திரிகை நேர்மையின் “குற்றத்திற்காக” நாங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் தடுப்புக்காவல், விசாரணை மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறோம்.

வாஷிங்டன் ஹில்டனில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களால் இந்தக் கடிதம் புறக்கணிக்கப்பட்டது.

காஸாவில் உள்ள பத்திரிகையாளர்கள் உட்பட, பாலஸ்தீனியர்கள் பாரியளவில் பசி பட்டினியை எதிர்கொள்கின்றபோது, WHCA இரவு விருந்தில் பங்கெடுத்தவர்கள் நான்கு வகையான ரோல்ஸ் மற்றும் தட்டையான ரொட்டிகள் மற்றும் “ரொட்டி விளக்கக்காட்சியுடன்” “ஜிகாமா, மாம்பழம், பெபிடாஸ் மற்றும் பேபி ஓக் சாலட்” போன்றவற்றை புசித்து பசியை போக்கினர்.

இதைத் தொடர்ந்து முதல் உணவாக: “புகைபிடித்த மிளகுத்தூள் தேய்க்கப்பட்ட மீன் துண்டு, தீவன காளான் ரகௌட், அரை பான்செட்டா மற்றும் காலா ஆப்பிள், வறுக்கப்பட்ட அலாஸ்கன் ஹாலிபுட், வெண்ணெய்க்கட்டி மஸ்கார்போன் க்ரிட்ஸ், தோலுரிக்கப்பட்ட அஸ்பேர்ஜ் மற்றும் சிறிதாக வறுத்த மிளகு தூவப்பட்ட காய்கறிகள்” என்று ஒரு கதை கூறுகிறது. மேற்குப் பகுதி திராட்சைத் தோட்டங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சார்டொன்னே மற்றும் கேபர்நெட் சாவிக்னான் ஒயின் பாணங்கள் மூலம் “பலவகையான இனிப்புகள்” அனைத்தும் தீர்ந்தன.

இந்த இரவு விருந்தில் பல விருதுகள் வழங்கப்பட்டன. அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து பைடெனின் இஸ்ரேல் பயணத்தைப் பற்றிய செய்தி வழங்கிய அச்சு மற்றும் ஒளிபரப்பு செய்தியாளர்களுக்கு இறுக்கமான காலக்கெடுவின் கீழ் அறிக்கை செய்ததற்காக கௌரவிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் உண்மையான சூழ்நிலைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பல ஆயிரம் பேர்களை ஏற்கனவே கொன்று குவிக்கப்பட்ட காஸா மக்களுக்கு எதிராக, பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது சக பாசிஸ்டுகளின் அரசாங்கம் நடத்தி வருகின்ற போருக்கு வெற்றுக் காசோலையை வழங்கவே பைடென் ஜெருசலேமுக்கு விரைந்தார்.

பைடென் இறுதியாக மேடைக்கு வந்து பேசியபோது, அவரது கருத்துக்கள் யூகிக்கக்கூடியவையாக இருந்தன. அவர் தனது வயது மற்றும் ட்ரம்பின் சட்ட சிக்கல்கள் பற்றிய முன்னரே தயாரிக்கப்பட்ட நகைச்சுவைகளுக்கு சில நிமிடங்களை அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் ஆபத்துக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் தனது கூட்டாளியான “சுதந்திர பத்திரிகை” க்கு பத்து நிமிட வெற்றி ஆரவாரத்தை வழங்கினார்.

“பொய்க்கு மேல் இருந்து உண்மையைச் சொல்லும்” ஊடகங்களின் “தேசப்பற்றுக்கும் வீரத்துக்கும்” அவர் வணக்கம் செலுத்தினார். இதனால்தான் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எனது மனமார்ந்த நன்றியுடன் இந்த மாலைப்பொழுதை நிறைவு செய்ய விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இது, காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான பல்கலைக்கழக வளாக ஆர்ப்பாட்டங்களின் கதையை மாற்றி, அவற்றை “யூத-எதிர்ப்பு” என்று எப்போதும் விவரிக்கின்ற, நிகழ்ச்சியில் பங்குபற்றிய பார்வையாளர்களுக்கு கூறப்பட்டது. இது, பைடென் நிர்வாகம் மற்றும் இரு கட்சிகளிலும் (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி) உள்ள பாராளுமன்ற பிற்போக்குவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு அவதூறாகும்.

“உங்கள் வேலையைச் செய்வதில் நீங்கள் உண்மையில் உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்கள், உங்கள் சக ஊழியர்கள் சிலர் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். மற்ற செய்தியாளர்கள் சுதந்திரத்தை இழந்துள்ளனர். பத்திரிகை என்பது ஒரு குற்றமல்ல, இங்கே இல்லை, அங்கே இல்லை, உலகில் எங்கும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், CIA மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு எதிராக ஜூலியன் அசான்ஞ் மற்றும் தகவலை வெளிப்படுத்துகிறவர்களுக்கும், காசாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் அரசின் குற்றங்களை ஆவணப்படுத்தும் துணிச்சலான செய்தியாளர்களுக்கும் இந்த உத்தரவாதம் இல்லை. பைடென் மற்றும் நெதன்யாகு போன்ற ஏகாதிபத்திய போர்வெறியர்களின் கூற்றுப்படி, அவர்கள் செய்ததும், செய்வதும் ஒரு குற்றமாகும். மேலும், இது மரண தண்டனைக்குரிய ஒன்றாகும்.

பைடெனைத் தொடர்ந்து சாட்டர் டே நைட் நேரடி நிகழ்ச்சியின் கொலின் ஜோஸ்ட்டின் முடிவில்லாத மட்டமான நகைச்சுவைகள் மற்றும் இழிவான நையாண்டிகள் போன்ற “பொழுதுபோக்கு” நிகழ்வுகள் அங்கு நடந்தன. காஸாவில் நடந்துவரும் அமெரிக்க-இஸ்ரேலிய பாரிய படுகொலைகள், அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் “யூத எதிர்ப்பு” என்ற அவதூறுகள், மற்றும் பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் கல்லூரி வளாகங்களில் போலீஸ் அடக்குமுறை ஆகியவற்றை ஜோஸ்ட் விடாமுயற்சியுடன் தவிர்த்தார்.

பைடெனுக்கு ஆழ்ந்த வணக்கத்தை செலுத்தி முடித்த ஜோஸ்ட், சமீபத்தில் இறந்த நீண்டகால தீயணைப்பு படையில் பணியாற்றியவரான அவரது தாத்தா, “ஒரு ஒழுக்கமான மனிதர் என்பதால்” 2020 இல் பைடெனுக்கு வாக்களித்ததாக அறிவித்தார். உணர்ச்சியற்ற முகத்துடன், ஜோஸ்ட் தொடர்ந்தார்:

அவர் கண்ணியத்திற்கு வாக்களித்தார். நாம் அனைவரும் இன்றிரவு இங்கே இருக்கக் காரணம் கண்ணியம்தான். இந்த இரவு நாம் அனைவரும் எப்படி இங்கே இருக்க முடியும் என்பதுதான் கண்ணியம். கண்ணியம் என்பது நாம் ஒருவரையொருவர் எப்படி கேலி செய்வது என்பதுதான், அதன்பிறகு நாம் யாரும் சிறைக்குச் செல்லக்கூடாது.

இத்தகைய அறிக்கைகளை உருவாக்கும் முதலாளித்துவ அரசின் முன் வேண்டுமென்றே அறியாமை மற்றும் அவமானகரமான சாஷ்டாங்கம் ஆகியவற்றின் சரியான கலவையைத் தீர்மானிப்பது கடினம். ஆனால், இந்த இழிவான விவகாரத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் என்றென்றும் கறை படிந்தவர்கள். உலக வரலாற்றுக் குற்றத்தின் முகத்தில், அவர்கள் அதைச் செயல்படுத்துபவரையும், கூட்டுச் சதிகாரரையும் புகழ்ந்து முகஸ்துதி செய்கின்றனர்.

காஸா இனப்படுகொலையையும், அதில் அமெரிக்காவின் பங்கையும் மூடி மறைப்பதன் மூலம், பெருநிறுவன ஊடகங்கள் ஒரு சாதனையாகச் செயல்படுகின்றன. சுயதிருப்தி கொண்ட பண்டிதர்கள் கூற விரும்புவது போல, இது ஒரு சுதந்திரமான “நான்காவது எஸ்டேட்” பாத்திரத்தை வகிக்காது, மாறாக, இது ஒரு தரகராக செயல்படுகிறது. ரஃபா மீதான இறுதித் தாக்குதல் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட அமெரிக்க மற்றும் நேட்டோ போர்த் துருப்புக்களை குவிப்பது உட்பட, இரத்தம் தோய்ந்த குற்றங்களைத் தயாரிக்கும் போது வெள்ளை மாளிகை அவர்களைப் புகழ்ந்து பேசும் ஒரு அரசவையாக செயல்படுகிறது.

பெருநிறுவன ஊடகங்களுக்கு மாற்றாக, உலக சோசலிச வலைத் தளத்தை வளர்த்து சோசலிசத்தை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த உண்மை எடுத்துக்காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் உண்மையைக் கூறுகிறது: புரட்சிகரப் பாதை மட்டுமே முற்போக்கான பாதை. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அமைதி, ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் உலக அளவில் ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவ வேண்டும்.

Loading