முன்னோக்கு

பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டெயின் கைது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டெயின் மீதான பொலிஸ் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உலக சோசலிச வலைத் தளம் கண்டிக்கிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரமான தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் கைது நடவடிக்கையானது, பைடென் நிர்வாகத்தால் இயக்கப்படுவதுடன், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஸ்டெய்ன் மற்றும் சமீபத்திய வாரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர், ஸ்டெய்னின் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் அரசியல்ரீதியாக ஒருங்கிணைந்த தன்மையையும், அமெரிக்கா மற்றும் அவர்களது கூட்டாளிகளால் நடத்தப்பட்டுவரும் போர்களுடனான அதன் தொடர்பையும் எடுத்துக்காட்டினார்:

நாடு தழுவிய போராட்டங்கள் மீதான தாக்குதல் பைடென் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் இரட்டைக் கட்சிகளான ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அதை ஆதரிக்கின்றனர்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், காஸாவில் இனப்படுகொலை மற்றும் சீனாவுடன் வளரும் மோதலுக்கு நிதியளிக்க கடந்த வார இறுதியில் பைடென் கையெழுத்திட்ட ஒரு பாரிய மசோதாவை நிறைவேற்ற இரு கட்சிகளும் கைகோர்த்தன.

உலகளாவிய ஏகாதிபத்திய போரின் தொடர்ச்சியானது, ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலாகும். சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை வளர்க்கப் போராடுகிறது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை ஏகாதிபத்தியப் போருக்கும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்போடு இணைக்கிறது.

. லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலைக்கு எதிரான முகாமை அகற்றும் முயற்சிகளை எதிர்க்கும் மாணவர்கள் மற்றும் பிற எதிர்ப்பாளர்களுடன் தனது கைகளை இணைத்திருந்த 73 வயது யூதப் பெண்ணான ​​ஸ்டெயின், ஒரு போலீஸ் அதிகாரியினால் மிதிவண்டியினால் நசுக்கப்பட்டார். நியூ யோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்திலுள்ள முகாமை தகர்க்க, ஏப்ரல் 18ம் தேதி வன்முறையான முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 100 பேரில் ஸ்டெய்னும் அவரது குழுவினரும் அடங்குவர். அவர்கள், வாஷிங்டன் பல்கலைக்கழகம், பென்டகன் ஒப்பந்த நிறுவனமான போயிங்கில் இருந்து விலகவும் இஸ்ரேலிய நிறுவனங்களை புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தனர். அவரது துணை பிரச்சார இயக்குனரான, கெல்லி மெர்ரில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மற்றொரு அதிகாரியால் வன்முறையாக தாக்கப்பட்டு, தரையில் வீசப்பட்டார். மேலும், பசுமைக் கட்சியின் பிரச்சார இயக்குனரான ஜேசன் கால் கைது செய்யப்பட்டு 7 மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பசுமைவாதிகளின் குழுவானது செயின்ட் லூயிஸில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து குறைந்தபட்சம் 10,000 கையொப்பங்களைச் சேகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் மிசோரியில் வாக்குப்பதிவை செய்வதற்காக, கடுமையான தேவைகளை கடக்க முயல்கின்றனர். ஸ்டெயினின் கைது முக்கியமாக குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்டபடி, மூன்றாவது கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் 'முழுமையான போரை' நடத்தி வருகின்றனர். பைடென் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு மாற்றுத் தெரிவுகளை வாக்கெடுப்பில் இருந்து விலக்கி வைக்க வேலை செய்யும் 'வழக்கறிஞர்களின் இராணுவத்திற்காக' மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன.

அத்துமீறி நுழைந்து ஒரு போலீஸ் அதிகாரியைத் தாக்கிய அபத்தமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஸ்டெயின், விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு ஆறு மணி நேரம் சிறையில் இருந்தார். தாக்குதல் குற்றச்சாட்டின் அளவைப் பொறுத்து, அவருக்கு 15 நாட்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

'இன்று என் விலா எலும்புகள் மிகவும் வேதனையாக உள்ளன, அவர்கள் தங்கள் மிதிவண்டியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியதால், எனக்கு விலா எலும்பு உடைந்திருக்கிறதா என்று பார்க்க அவசர சிகிச்சை அறைக்குச் செல்கிறேன்' என்று ஸ்டெய்ன் ஞாயிற்றுக்கிழமை NewsNation Prime இடம் கூறினார். 'அடிப்படையில் மிதிவண்டியின் கைப்பிடிகள் எங்கள் மார்பிலும், என் விலா எலும்புக் கூண்டிலும் மோதி நம்மை கவிழ்க்க முயன்றது. இந்தத் தாக்குதலில் இருந்து நான் தப்பித்துவிட்டேன். ஆனால், நான் அவரைத் தாக்கினேன் என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், இது முற்றிலும் கேலித்தமானது'.

ஒரு பிரபலமான எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மீது (ஸ்டெயின் கடைசியாக 2016ல் தேர்தலில் போட்டியிட்டபோது கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தார்) இத்தகைய தாக்குதல் சீனாவிலோ ரஷ்யாவிலோ நடந்திருந்தால், அது நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பிற செய்தித்தாள்களில் முதல் பக்க தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். மாறாக, இது ஒரு சிறிய சம்பவமாகக் கருதப்பட்டு, அமெரிக்கப் பத்திரிகைகளில் விரைவில் மறக்கடிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெயின் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் காஸா இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மீதான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். இந்த தாக்குதல், குடியரசுக் கட்சியில் உள்ள பாசிச வேட்டைக்காரர்களுடன் இணைந்து பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியால் இயக்கப்படுகிறது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல், யூத-எதிர்ப்பு என்று கூறப்படும் எழுச்சியை எதிர்த்துப் போராடுவதற்கும், வளாகங்களில் ஒழுங்கைப் பேணுவதற்கும் அவசியம் என்று அவர்கள் வாதிட்டனர். இதனையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக கல்லூரி வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்களன்று, முன்னாள் பாராளுமன்ற பெரும்பான்மை தலைவர் ஸ்டெனி ஹோயர் மற்றும் டிரம்ப் பதவி நீக்க மேலாளர் ஆடம் ஷிஃப் உட்பட காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிற்கு போலீஸ் தாக்குதல்களை முறியடித்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் ஒன்றை அளித்தனர்.

இந்த முகாம் 'யூத மாணவர்களுக்கு எதிரான, யூத-விரோத தாக்குதல்களுக்கு ஒரு செழித்துவளரும் இடம்' என்று ஜனநாயகவாதிகள் பொய்யாக கூறினர். வோல் ஸ்ட்ரீட் பில்லியனர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் வரிசையை உள்ளடக்கிய அறங்காவலர்களை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். 'பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது, நடவடிக்கைக்கான நேரம் இப்போது வந்துவிட்டது' என்று அக்கடிதம் மிரட்டுகிறது.

'கல்லூரி வளாகத்திலோ அல்லது நம் நாட்டில் எங்கும் முற்றிலும் இடமில்லாத, கண்டிக்கத்தக்க மற்றும் ஆபத்தான' யூத-விரோதத்தை கண்டித்து ஜனாதிபதி ஜோ பைடெனின் பிரகடனத்தை இது பின்பற்றுகிறது.

ஸ்டெயினின் கைது யூத-விரோதத்தின் 'பெரிய பொய்யை' வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான யூதர்களில் இவரும் ஒருவர். அமைதிக்கான யூத குரல் அமைப்பின் 300 உறுப்பினர்கள் கடந்த வாரம் புரூக்ளினில் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷூமரின் வீட்டிற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டனர்.

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் பிறருக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்தக் கோருவது மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் தலையிடுவது அவசியமாகும். போரை முடிவுக்குக் கொண்டுவரும் சக்தி கொண்ட ஒரே சமூக சக்தியாக மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும்.

Loading