சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது (ICC) போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களை தயாரித்து வரும் நிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் ரஃபா மீது குண்டுவீச அழைப்பு விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு அவரது துருப்புக்கள் ரஃபாவை தாக்கும் என்று உறுதியளித்தார், அங்கு 1.5 மில்லியன் நிராயுதபாணியான பாலஸ்தீனிய குடிமக்கள் இப்போது அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். காஸாவில் இஸ்ரேலிய அரசாங்கமும் ஹமாஸ் அதிகாரிகளும் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் எந்த சூழ்நிலையிலும் ரஃபாவை விட்டுவைக்க மாட்டேன் என்று அவர் மேலும் கூறினார்.

நாசர் மருத்துவமனையில் ஒரு வெகுஜன கல்லறை [Photo: Bisan Owda]

“போரின் அனைத்து நோக்கங்களையும் அடைவதற்கு முன்னர் நாங்கள் போரை நிறுத்துவோம் என்ற யோசனை ஒரு தெரிவல்ல” என்று நெத்தன்யாகு கூறினார். “நாங்கள் ரஃபாவுக்குள் நுழைவோம், முழு வெற்றியை அடைவதற்காக அங்குள்ள ஹமாஸ் பட்டாலியன்களை அழிப்போம் – ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும்.”

காஸா மீதான போர் உண்மையிலேயே கொடூரமான இறப்புகளின் எண்ணிக்கையை ஏற்படுத்தியுள்ளன. குறைந்தபட்சம் 34,535 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, குண்டுவீசப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் 10,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், 77,704 பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் உணவு, மருந்து மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்கான அணுகலை இஸ்ரேலியப் படைகள் துண்டித்ததால் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் நெத்தனியாகு காஸா மீதான இனப்படுகொலை தாக்குதலை நிறுத்துவதற்கான ஹமாஸின் முறையீடுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் தான் உடன்படப் போவதில்லை என்று அறிவித்தார்.

நெத்தனியாகு பின்வருமாறு கூறினார், “ஹமாஸ் ஒரு விடயத்தை வலியுறுத்துகிறது —போரின் முடிவிற்கு— ஆனால் அது அதைப் பெறாது. அதைக் கொடுக்க நான் தயாராக இல்லை. எனவே, நிலைமை இப்படி இருந்தால் - உண்மையில் இது, தற்போது- [ஒப்பந்தம்] நடக்காது. போரை முடித்துக் கொண்டு ஹமாஸ் திரும்ப வரட்டும் என்று சிலர் சொல்லலாம். அதை நான் ஏற்க மாட்டேன்” என்றார்.

ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது ஆணைகளைப் பிறப்பிக்க தயாரிப்பு செய்து வருகிறது என்ற செய்திகளுக்கு அவரது அரசாங்கம் அளித்த பதிலிறுப்பாக, ரஃபாவில் மில்லியன் கணக்கான நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது குண்டுவீசுவதற்கும் போரைத் தொடரவும் நெத்தனியாகு வாக்குறுதியளித்திருந்தார். காஸாவில் அதன் அட்டூழியங்களை பிரதான நேட்டோ சக்திகள் ஆதரிக்கின்றன என்பதை நன்கு அறிந்துள்ள அது, இனப்படுகொலை போர்க் குற்றங்களை இழைக்கும் அதன் நோக்கத்தை திமிர்த்தனமாக பிரகடனம் செய்து வருகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) அதிகாரிகள் பல மாதங்களாக இஸ்ரேலிய அதிகாரிகள் போரை நடத்தியது குறித்தும், குறிப்பாக ரஃபாவை அழிப்பதற்கான அவர்களின் அச்சுறுத்தல்கள் குறித்தும் விசாரித்து வருவதாக எச்சரித்துள்ளனர். “ரஃபாவில் இஸ்ரேலிய படைகளின் குண்டுவீச்சு மற்றும் சாத்தியமான தரைவழி ஊடுருவல் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்” என்று ICC வழக்கறிஞர் கரீம் கான் எக்ஸ் / ட்விட்டரில் எழுதினார்: “நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதைப் போல, சட்டத்திற்கு இணங்காதவர்கள் பின்னர் எனது அலுவலகம் அதன் ஆணைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கும்போது புகார் செய்யக்கூடாது.”

உண்மையில், நேட்டோ அதிகாரிகளே கூட ரஃபாவை தாக்குவது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக போர்க் குற்றங்களை இழைத்தல் என்ற பொருளைக் கொடுக்கும் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். நேற்று, பிரிட்டிஷ் துணை வெளியுறவு செயலர் ஆண்ட்ரூ மிட்செல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பின்வருமாறு கூறினார்: “ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளில் இதுபோன்றவொரு தாக்குதல் எவ்வாறு சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க முடியும் என்பதைப் பார்ப்பது எளிதல்ல.”

ஐ.நா. அதிகாரிகள் நெத்தனியாகுவின் கருத்துக்களைக் கண்டித்தனர், அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறினார்: “ரஃபாவை விட்டுவிடுமாறு உலகம் பல வாரங்களாக இஸ்ரேலிய அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறது, ஆனால் அங்கு ஒரு தரைவழி நடவடிக்கை மிக விரைவில் நடத்தப்படவுள்ளது. … மிக எளிமையான உண்மை என்னவென்றால், ரஃபாவில் ஒரு தரைவழி நடவடிக்கை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு துயரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. எந்த மனிதாபிமான திட்டமும் அதை முறியடிக்க முடியாது. மீதமுள்ளவை கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும்.

ஞாயிறன்று Le Monde பத்திரிகையானது ஹேக் ஆதாரங்களை மேற்கோளிட்டு, ICC வக்கீல்கள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கான கைது ஆணைகள் தொடர்பாக மூன்று ICC நீதிபதிகளின் கையெழுத்துக்களை பெற்றனர் என்று தகவல் கொடுத்துள்ளது. இந்தப் பிடியாணைகளை செல்லுபடியாக்குவதற்கான கடைசி கட்டம் இதுவாகும், அவற்றின் வெளியீடு இப்போது “உடனடியாக” உள்ளது என்று இந்த ஆதாரங்கள் Le Monde பத்திரிகைக்கு தெரிவித்தன. இந்த பிடியாணைகளில் நெத்தனியாகு, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) பொது ஊழியர்களின் தலைவர் ஹெர்ஸி ஹலேவி ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்குவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 124 நாடுகள், தங்கள் எல்லைக்குள் வரும் பிடியாணைகளில் பெயரிடப்பட்ட எந்தவொரு இஸ்ரேலிய அதிகாரிகளையும் கைது செய்ய சட்டப்படி கோரப்படும். இது இஸ்ரேலின் பங்கை மட்டும் அம்பலப்படுத்தாமல், நேட்டோ சக்திகளின் பங்கையும் அம்பலப்படுத்துகிறது. வெளிநாடுகளில் இஸ்ரேலிய அரசுக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவும், இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் மீதான அவர்களின் ஒடுக்குமுறையும் அரசியல் ரீதியில் குற்றமாகும்.

போரும் இனப்படுகொலையும் நேட்டோ சக்திகளுக்கு இன்னும் கூடுதலான அறிவொளி நிறைந்த கொள்கையை தொடர தார்மீக முறையீடுகள் செய்வதுடன் நிறுத்தப்பட முடியாது. உண்மையில், நெத்தனியாகுவுக்கு ஆதரவை இரட்டிப்பாக்குவதன் மூலமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சாத்தியமான போர்க் குற்ற குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கைகளை அவர்கள் மீண்டும் பயன்படுத்துகின்றனர். இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று, பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே ஜெருசலேம் வந்து சேர்ந்தார், பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் அம்மானில் ஜோர்டானிய முடியாட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தார்.

நெத்தனியாகுவுக்கு தொடர்ந்து பிரெஞ்சு ஆதரவு இருக்கும் என்று இஸ்ரேலிய சமதரப்பான இஸ்ரேல் காட்ஸுக்கு பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே உறுதியளித்தார். இஸ்ரேலுக்கு தனது “ஆதரவை” வலியுறுத்திய அதேவேளையில், ரஃபா மீது குண்டுவீசும் திட்டங்களுடன் குறிப்பிடப்படாத “கருத்து வேறுபாடுகள்” இருப்பதாகக் கூறி, செஜோர்னே காஸா மீதான ஐ.நா. சமாதானத் தீர்மானம் பற்றி விவாதித்தார். பிரெஞ்சு இராஜதந்திரிகள் AFP இடம் இந்த திட்டம் “அக்டோபர் 7 [இஸ்ரேலுக்கு எதிரான காஸா எழுச்சியை] பயங்கரவாதம் என்று அழைப்பது போன்ற இஸ்ரேலின் வலுவான கோரிக்கைகளை ஆதரிக்கிறது, அன்றைய தினம் நடந்த பாலியல் வன்முறையை வலியுறுத்துகிறது, ஆனால் மோதலுக்கு ஒரு அரசியல் தீர்வுக்கான அளவுருக்களை வழங்குகிறது.”

அம்மானில், இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஐ.நா அமைதித் தீர்மானத்திற்கான ஒரு பாதை என்று பிளிங்கன் கூறினார், மேலும் தீர்மானத்தை எதிர்த்ததற்காக ஹமாஸ் அமைதிக்கு ஒரு தடையாக இருப்பதாக கண்டனம் செய்தார். “இப்போது அது ஹமாஸ் மீது. இனி தாமதம் இல்லை, இனி சாக்குப்போக்கு இல்லை” என்று அவர் கூறினார்.

பிளிங்கனால் முன்மொழியப்பட்ட பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்ந்தாலும், ரஃபா மீது குண்டுவீசுவதாக நெத்தன்யாகு உறுதியளித்ததாக செய்தியாளர்கள் பிளிங்கனிடம் சுட்டிக்காட்டியபோது, பிளிங்கன் அவற்றைப் புறக்கணித்தார். போர் நிறுத்தம் என்பது, “துயரங்களை நிவர்த்தி செய்வதற்கும், உண்மையிலேயே நிலைத்து நிற்கக் கூடியதும், மிகவும் தீவிரமாக தேவைப்படும் மக்களுக்கு நீடித்த சமாதானத்தை ஏற்படுத்தக் கூடியதுமான ஒன்றை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னேறக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கும்” சிறந்த வழி, மிகவும் பயனுள்ள வழியாகும் என்று அவர் மீண்டும் கூறினார்.

பிளிங்கன் மற்றும் செஜோர்னே இன் அறிக்கைகள், சிடுமூஞ்சித்தனமாக ஒரு சமாதான திட்டமாக வேடமிட்டு, இஸ்ரேலிய போர் நோக்கங்களை ஆமோதிப்பதற்கு ஒப்பாகும். கடந்த மாதம் முன்மொழியப்பட்ட ஐ.நா. சமாதானத் தீர்மானத்தை ஹமாஸ் நிராகரித்தது, ஏனெனில் அது சர்வதேச சட்டத்தை மீறி காஸாவை இஸ்ரேல் நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நிலைமைகளை உருவாக்கியது. இஸ்ரேலிய துருப்புக்கள் காஸாவிலிருந்து வெளியேறும், குடிமக்கள் தங்கள் வீடுகளில் எஞ்சியிருக்கும் இடங்களுக்குத் திரும்பட்டும், அல்லது காஸாவிற்கு உணவு செல்ல அனுமதிக்கும் என்பதற்கு அது உத்தரவாதம் அளித்திருக்காது.

ரஃபா மீது குண்டுவீசி போரைத் தொடர வேண்டும் என்ற நெத்தனியாகுவின் அழைப்பு மறுக்கவியலாமல் தெளிவாக்குவது போல், போருக்கான பொறுப்பு ஹமாஸிடம் இல்லை, மாறாக இஸ்ரேலிய ஆட்சி மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளிடம்தான் உள்ளது. காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க நேட்டோ சக்திகள் பில்லியன் கணக்கான டாலர்களை அல்லது யூரோக்களை செலவிடுகின்றன. படுகொலைக்கு எதிரான போராட்டங்களை அவர்கள் வெறித்தனமாக தாக்குகின்றனர், ஏனென்றால் இஸ்ரேலிய கொள்கையில் அவர்கள் உடந்தையாக இருப்பதற்கு மட்டுமல்ல, மாறாக சமீபத்திய தசாப்தங்களில் கிழக்கு ஐரோப்பா மற்றும் எண்ணெய் வளம் செறிந்த மத்திய கிழக்கு முழுவதிலும் அவர்கள் நடத்தியுள்ள அத்தனை ஏகாதிபத்திய போர்கள் மீதும் பாரிய எதிர்ப்பைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்.

இஸ்ரேல் மீதான ICC இன் விசாரணையைக் கண்டித்து, திங்களன்று குடியரசுக் கட்சியின் அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சனின் சீற்றத்தில் இது வெளிப்பட்டது. “ ICC இன் நடவடிக்கை நேரடியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களைப் பலவீனப்படுத்தும்” என்று எச்சரித்த ஜோன்சன் தெரிவித்தார். “பைடென் நிர்வாகத்தால் சவால் செய்யப்படாவிட்டால், அமெரிக்க அரசியல் தலைவர்கள், அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பிக்க ICC இன் முன்னோடியில்லாத அதிகாரத்தை உருவாக்கி எடுத்துக் கொள்ளலாம், இதனால் நம் நாட்டின் இறையாண்மை அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்படும்.”

ஜோன்சன், பைடென் நிர்வாகத்தை “உடனடியாகவும் ஐயத்திற்கிடமின்றியும் ICC பதவி விலக வேண்டும்” என்றும், ICC பிடியாணைகளை வழங்குவதைத் தடுக்க “கிடைக்கக்கூடிய ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்தவும்” கோரினார். சிறிது நேரத்திற்குப் பின்னர், பைடென் வெள்ளை மாளிகை உண்மையில் ICC யைத் தாக்கியது, செய்தித் தொடர்பாளர் கரினே ஜீன்-பியர் கூறினார்: “நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு அதிகார வரம்பு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை” என்றார்.

இந்த சம்பவங்கள் ஏகாதிபத்தியத்தின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகின்றன, இது முழுக்க முழுக்க பிற்போக்குத்தனமாகும். காஸா இனப்படுகொலையை நிறுத்துவதற்கு, இனப்படுகொலைக்காக இஸ்ரேலிய அரசை ஆயுதபாணியாக்குவதை நிறுத்தவும் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசாங்கங்களை எதிர்க்கவும், ஒரு சர்வதேச, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் முழு பலத்தையும் அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading