ஹேமார்க்கெட் தியாகிகளும் மே தினத்தின் தோற்றமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2024 சர்வதேச மே தின இனையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

சிக்காகோவின் தொழிலாள வர்க்கத் தலைவர்களான ஹேமார்க்கெட் தியாகிகளுக்கான வரலாற்று நினைவுச் சின்னத்தின் அருகே நான் நிற்கிறேன். அவர்கள் சோடிக்கப்பட்ட மற்றும் செய்யாத குற்றத்திற்காக 1880களில் முதலாளித்துவ நீதிக் கட்டமைப்பினால் தண்டிக்கப்பட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாள வர்க்க ஒற்றுமைக்கான சர்வதேச தினமான மே தினத்தைக் கொண்டாடுகிறது. உள்நாட்டுப் போருக்குப் பின்பு, மே தினமும் எட்டு மணி நேர வேலை நாள் இயக்கமும் இங்கு ஹேமார்க்கெட்டில் இருந்தே எழுந்தது என்பது பல தொழிலாளர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

உள்நாட்டுப் போரின் போது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை கார்ல் மார்க்ஸ் முன்கணித்தார். 1864 இல், உள்நாட்டுப் போரின் மத்தியில், ஆபிரகாம் லிங்கன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதலாவது தொழிலாளர் அகிலத்தின் சார்பாக, வாழ்த்து தெரிவித்து மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்.

இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரையில் அடுக்கப்பட்டுள்ளன

“அமெரிக்க சுதந்திரப் போரானது மத்தியதர வர்க்கத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், அமெரிக்க அடிமைத்தனத்துக்கு எதிரான போர், தொழிலாள வர்க்கங்களுக்குக்காகவும் நடத்தப்படும் என ஐரோப்பிய தொழிலாளர்கள் உறுதியாக உணர்கிறார்கள்,” என மார்க்ஸ் எழுதினார்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஆபிரகாம் லிங்கன்

மார்க்சின் முன்கணிப்பு விரைவில் நிரூபிக்கப்பட்டது. “அடிமைத்தனத்தின் மரணத்திலிருந்து ஒரு புதிய வாழ்க்கை உடனடியாக எழுந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலன், அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை, நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரை, எட்டு மணி நேரப் போராட்டம் புயல் வேகத்தில் பரவியது,” என 1867 இல் மூலதனம் நூலில் அவரால் எழுத முடிந்தது.

அந்த ஆண்டுகளில், அமெரிக்க முதலாளித்துவத்தின் மகத்தான வளர்ச்சியையும், அதனுடன் இணைந்த தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியையும் சிக்காகோ சாராம்சப்படுத்தியது. குடியரசுக் கட்சி மாநாட்டில் லிங்கனின் ஜனாதிபதிக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட 1860 இல் அது சுமார் ஒரு இலட்சத்தில் இருந்து 1880 இல் 5 இலட்சமாக உயர்ந்தது. இது ஒரு சர்வதேச உழைப்பு சக்தியாகும். 1880 களில், நகரத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது வெளிநாட்டில் பிறந்தவர்களின் பிள்ளைகளாக இருந்தனர்.

1886 இல் இந்த தொழிலாளர்கள் மத்தியில், மீண்டும் ஒருமுறை எட்டு மணித்தியால வேலை நாளுக்காக கோரிக்கை மேலெழுந்தது: “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், நாம் விரும்புதைச் செய்வதற்கு எட்டு மணி நேரம்!” என்பதே அவர்களின் கோஷமாக இருந்தது.

மே 1 அன்று, நாடு முழுவதும் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. சிக்காகோவில், 80,000 பேரை உள்ளடக்கிய ஒரு பேரணி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 4 அன்று, ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த பேரணிமீது, பொலிஸ் வன்முறையாக தாக்கியது. அங்கே ஒரு குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு மற்றும் பொலிஸ் கைகலப்பு காரணமாக, ஏழு அதிகாரிகளும் நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

அதிகாரிகள், சிக்காகோவின் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களை ஒரு போலி விசாரணை மூலம் சிறைக்கு இழுத்துச் சென்றனர். பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் 1887 நவம்பர் 11 அன்று தூக்கிலிடப்பட்டனர்: ஜோர்ஜ் ஏங்கல், அடொல்ஃப் ஃபிஸ்சர், ஆல்பர்ட் பார்சன்ஸ், ஓகஸ்ட் ஸ்பைஸ் ஆகியோரே அவர்களாவர்.

தண்டனை பெற்றவர்கள், தாங்கள் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பிரான்ஸின் தேசிய கீதத்தினைப் பாடினர். “இன்று நீங்கள் நெரிக்கும் குரல்களை விட எங்கள் மௌனம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் நேரம் வரும்,” என்பது ஸ்பைஸின் கடைசி வார்த்தையாக இருந்தது.

ஐந்தாவது தியாகி, லூயிஸ் லிங், ஒரு நாள் முன்பு சிறையில் கொல்லப்பட்டார் அல்லது தற்கொலை செய்து கொண்டார்.

“கருப்பு வெள்ளிக்கிழமை”, போலிக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹேமார்கெட் தியாகிகள் தூக்கில் இடப்பட்ட போது. 11 நவம்பர் 1886

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு 1889 இல், பிரெஞ்சுப் புரட்சியின் 100 வது ஆண்டு நிறைவு நாளில், இரண்டாவது அகிலம் பாரிஸில் நிறுவப்பட்டது.

சமீபத்திய அமெரிக்க நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் மே தினத்தில் “ஒரு பெரிய சர்வதேச ஆர்ப்பாட்டத்தை” நடத்த வேண்டும் என ஒரு பிரெஞ்சு பிரதிநிதி தீர்மானத்தை முன்மொழிந்தார். 1890 இல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின், ஒவ்வொரு வருடமும் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ரஷ்ய தொழிலாளர்கள் முதன்முதலில் 1891 இலும் சீன தொழிலாளர்கள் 1927 இலும் இந்த நிகழ்வுகளை நடத்தினர்.

இது, சோசலிச மற்றும் சர்வதேசிய பாரம்பரியங்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டிய நேரமாகும்!

Loading